Wednesday, September 16, 2015

இளவல் திமொத்தெயு

இன்று மதியம் உணவறையில் என் மேசையில் உடன் அமர்ந்திருந்த அருட்பணியாளர் ஒருவர், 'புதிய ஏற்பாட்டில் யாராவது விஷனரி இருக்கிறார்களா?' என்று கேட்டார். எனக்கு உடனே பவுலின் பெயர்தான் நினைவிற்கு வந்தது. 'பவுல்' என்றேன். உடனே அவர், 'பவுல் ஒரு மிஷனரி, விஷனரி அல்ல!' என்றார். நான் உடனே நாளைய முதல் வாசகத்தை (காண். 1 திமொ4:12-16) மேற்கோள் காட்டினேன். பவுல் மிஷனரியாகப் போன இடங்களில் எல்லாம் திருஅவை வேகமாக வளர்கிறது. இப்போது அவரால் எல்லா இடங்களுக்கும் போக முடியாத நிலை. அங்கங்கே தலைவர்களை நியமிக்க வேண்டும். தலைவர்களைத் தெரிந்து கொள்வதும், அவர்களைத் தயார் செய்வதும்தான் ஒரு விஷனரியின் வேலை. திமொத்தேயு என்ற இளைஞரைத் தெரிவு செய்கிறார். திமொத்தேயு ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டபோது அவருக்கு ஏறக்குறைய 25 அல்லது 30 வயதுதான் இருந்திருக்கும். ஆனால், அவரைத் தெரிந்து கொண்டு, அவரைத் தயார் செய்யும் பவுலுக்கு நாம் ஆயிரம் சபாஷ் சொல்லலாம்.

நாளைய முதல் வாசகப் பகுதி மறைமாவட்ட அருட்பணியாளருக்கு எழுதப்பட்டதாகவே நான் எப்போதும் உணர்கிறேன்.

1. 'நீ இளைஞனாய் இருப்பதால் யாரும் உன்னைத் தாழ்வாகக் கருதாதிருக்கட்டும்.' உதவி அருட்பணியாளராக பங்குத்தளத்தில் இருக்கும் எந்த அருட்பணியாளருக்கும் 'தாழ்வாகக் கருதப்படும்' அனுபவம் நிச்சயம் இருக்கும். அங்கு ஏற்கனவே இருக்கும் பங்கு அருட்பணியாளரும் இவரைக் கண்டுகொள்ளமாட்டார். 'ஒருவருடம் தானே இருப்பார்!' என மக்களும் கண்டுகொள்ளமாட்டார். உதவிப் பங்குப்பணியாளர் என்பவர் ஓட்டலில் உணவு தீர்ந்தவுடன் தயார் செய்யப்படும் உப்புமா போல என நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன். பங்குத்தந்தை என்ற உணவைத் தேடி வருபவர்கள், அவர் இல்லாதபோது வேண்டா வெறுப்பாக சாப்பிட்டுச் செல்லும் உப்புமா இவர். ஆனாலும், இவர் மனம் தளர்ந்து போவதில்லை. இது இன்றைய பிரச்சினை மட்டுமல்ல. திமொத்தெயுவுக்கே இந்த பிரச்சினை இருந்திருக்கின்றது.

2. 'பேச்சு, நடத்தை, அன்பு, நம்பிக்கை, தூய்மை' - இந்த ஐந்திலும் நீ விசுவாசிகளுக்கு முன்மாதிரியாய் இரு. அதாவது ஒரு அருட்பணியாளரைப் பார்ப்பவர்கள் தாங்களும் அவரைப் போல பேச வேண்டும், நடக்க வேண்டும், அன்பு செய்ய வேண்டும், நம்பிக்கை கொள்ள வேண்டும், தூய்மையாக இருக்க வேண்டும் என நினைத்தால் எவ்வளவு நலம்! இன்று வகுப்பறையில் 'ஒரு கடவுள் நம்பிக்கை' பற்றி வாக்குவாதம் எழுந்தது. காரசாரமாக மாணவர்கள் விவாதித்தனர். 'நிறையக் கடவுளர்கள் இருக்கிறார்கள்!' என்றனர் சிலர். 'இல்லை நம் கடவுள் மட்டும்தான் கடவுள்' என்றனர் பலர். நான் இரண்டு பக்கமும் ஆதரவாகச் சொல்லி முடித்தேன். வெளியில் வரும்போது அறைக்கு வெளியே சுத்தம் செய்து கொண்டிருந்த லதா பானர்ஜி என்ற வேலைக்காரப் பெண்மணி தன் புதிய செபமாலையை ஆவலுடன் காட்டினார். 'இதுதான் நம்பிக்கை!' என நினைத்துக்கொண்டேன். இன்று நானே பல நேரங்களில் 'கடவுள் நம்பிக்கை' பற்றி அடிக்கடி விவாதம் செய்கிறேன். சில நேரங்களில் 'கடவுள் இருக்கிறார்' என ஏற்றுக்கொள்ளவும் அஞ்சுகிறேன். ஆனால், அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருப்பவர்கள் என் பங்கில் இருக்கும் இறைமக்கள். பவுல் சொல்லும் இந்த ஐந்து குணங்களிலும் நானும் மேலோங்க வேண்டும் என்பது என் செபம்.

3. 'மறைநூலைப் படித்துக் காட்டுவதில், அறிவுரை வழங்குவதில், கற்பிப்பதில் கவனம் செலுத்து.' இன்று பங்குத்தளங்களில் பல இடங்களில் ரெடிமேட் மறையுரைகள்தான் வைக்கப்படுகின்றன. சில ரெடிமேட் மறையுரையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பங்கும் தெரியாது. பங்கில் உள்ள பிரச்சினைகளும் தெரியாது. பங்கு மக்களையும் தெரியாது. ஆனாலும், அவர்கள் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் சிறப்பு திருப்பலிக்கு அழைக்கப்படுவார்கள். இந்த மறையுரை கேட்பதற்கு நன்றாக இருக்குமே தவிர, பங்கு மக்களை ஒருபோதும் தொடாது. இதுவே, பங்கு அருட்பணியாளர் தனக்கு தெரிந்ததை நாலு வார்த்தைகள் நல்ல வார்த்தையாகச் சொன்னால், அது மக்களை எளிமையாகச் சென்றடையும். இன்று மக்கள் அறிவுரை வேண்டியும் அருட்பணியாளரிடம் வருகிறார்கள். நல்ல மறையுரை, நல்ல அறிவுரை, நல்ல படிப்பினை - இந்த மூன்றும் அருட்பணியாளரின் கடமைகள்.

4. 'உனக்கு அளிக்கப்பட்ட அருள்கொடையைக் குறித்து அக்கறையவற்றனாய் இராதே!' ஒவ்வொரு அருட்பணியாளரும் தன் அருட்பொழிவு நிகழ்வை மனத்தில் வைத்து வாழ வேண்டும். பல அருட்பணியாளர்களின் அறையில், ஏன் என் அறையிலும், குருத்துவ அருட்பொழிவு நிழற்படம் இருக்கும். இது நமக்கு அந்த நாளை மட்டுமல்ல, அந்த நாளின் அருளையும் நினைவூட்டுகிறது. இறைமக்கள்முன் 'இதோ! நான் வருகிறேன்!' என்று சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காகத்தான் இன்று இறைமக்கள் நம்மை மதிக்கிறார்கள். நாம் யாருடைய வற்புறுத்தலின்பேரிலோ, அல்லது எந்தவித ஒப்பந்தத்தின் அடிப்படையிலோ இந்தப் பணியைத் தெரிந்துகொள்ளவில்லை. இதன் இன்ப-துன்பங்கள் நமக்குத் தெரிந்துதான், 'இதோ! வருகிறேன்!' என்று சொன்னோம். இப்படி அன்று சொல்லிவிட்டு, இன்று நான் முணுமுணுத்தால், அல்லது 'எல்லாரும்தான் இதைச் செய்றாங்க! நான் செய்வதில் என்ன?' என்று மதிப்பீடுகளில் சமரசம் செய்தால், நான் அருள்கொடையைக் குறித்து அக்கறையவற்றவனாய் ஆகவிட்டேன் என்றே அர்த்தம்.

5. 'நீ வளர்ச்சி அடைய வேண்டும். இந்த வளர்ச்சி உன் செயல்களில் இருக்க வேண்டும்!' ஒரு அருட்பணியாளரும், அவரின் பங்குத்தளமும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர வேண்டும். எல்லாவற்றிலும் வளர வேண்டும் - நிதி நிலைமையில், புதிய முன்னெடுப்புகளில், ஆன்மீகத்தில். என் வயதையொத்த குடும்பத் தலைவர் தன் குடும்பம் எப்படியெல்லாம் முன்னேற வேண்டும் என கணக்குப் போட்டு அதற்காக உழைக்கிறார். ஆனால், நான் மட்டும் ஏன் மறைமாவட்டம் அருட்பணியாளருக்கான உதவியைக் கூட்ட வேண்டும் என்றும், அல்லது மக்கள் வரி அதிகமாகக் கொடுக்க வேண்டும் எனவும் கணக்குப் போட வேண்டும்? என் ஆற்றலை நான் செலவழித்து என் வளத்தையும், என் பங்கின் வளத்தையும் நான் வளர்க்கலாமே!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் பவுலின் வார்த்தைகள் உந்துசக்தியாக இருக்கின்றன என்றால், அவர் ஒரு விஷனரிதான்.

நாளைய முதல் வாசகத்தில் நாம் காணும் இந்த இளவல் திமொத்தெயு என்னையும், என் போன்ற அருட்பணியாளர்களையும் தூண்டுவாராக!


2 comments:

  1. தந்தைக்கு என் வணக்கங்களும் வாழ்த்துக்களும்.இன்றைய பதிவில் மறைமாவட்ட அருட்பணியாளர்கள் வாழ்வு பற்றி மிகவும் சிறப்பாக கூறியுள்ளீர்கள்.என்னை தொட்ட வரிகள் 1.நீ இளைஞனாய் இருப்பதால் யாரும் உன்னைத் தாழ்வாகக் கருதாதிருக்கட்டும்.' 2. 'பேச்சு, நடத்தை, அன்பு, நம்பிக்கை, தூய்மை' - இந்த ஐந்திலும் நீ விசுவாசிகளுக்கு முன்மாதிரியாய் இரு. 3.'மறைநூலைப் படித்துக் காட்டுவதில், அறிவுரை வழங்குவதில், கற்பிப்பதில் கவனம் செலுத்து.'4.'உனக்கு அளிக்கப்பட்ட அருள்கொடையைக் குறித்து அக்கறையவற்றனாய் இராதே!'5.'நீ வளர்ச்சி அடைய வேண்டும். இந்த வளர்ச்சி உன் செயல்களில் இருக்க வேண்டும்!' ஆகவே,மேற்கூறிய ஏசுதந்தையின் ஐந்து கட்டளைகளின் படி எப்படிப்பட்ட சீடர்களாக,சீடத்திகளாக நமது பணிதலங்களில் இருக்கிறோம் என்று நம்மைக் கொஞ்சம் ஆய்வு செய்வோமா? நமது உடைமைகளை - பணம், திறமைகள், ஆற்றல்கள், நேரம், அன்பு- இத்தகைய உடைமைகளை நாம் இயேசுவுக்காக செலவழித்து அவருக்குப் பணிவிடை செய்கிறோமா? என்பதே இன்றைய வாசகங்கள் நமக்கு விடுக்கும் அறைகூவல். இயேசுவை விசுவசித்தால் மட்டும் போதாது, ஆண்டவர் என்று அறிக்கை இட்டால் மட்டும் போதாது, அவருக்குப் பணிவிடை செய்யவேண்டும். நமது உடைமைகள் என்று நாம் கருதும் அனைத்தையும் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்ய முயற்சி செய்வோம்.நாம் அனைவரையும் சிந்திக்க தூண்டிய தந்தைக்கு எனது பாராட்டுக்கள்!தந்தையுடன் சேர்த்து இளவல் திமொத்தெயு அனைவருக்காகவும் ஜெபிப்போம் ! ................

    ReplyDelete
  2. மிஷனரிக்கும்,விஷனரிக்குமுள்ள வித்தியாசத்தை உணரவைத்த தந்தைக்கு நன்றிகள்! அனைத்து அருட்பணியாளர்களின் நிலையை உரக்கச் சொல்லும் பதிவு.தந்தை தனது உதவி அருட்பணியாளர் கால கசப்பான அனுபவங்களை அசைபோடுவதாகத் தெரிகிறது.தந்தையே! யாராலும் விரும்பப் படாத கல் ஒன்று சிற்பி விரும்பும் வடிவத்தைப்பெற எத்தனை உளிகளின் அடியைப் பெறுகிறது என்பது நான் சொல்லியா தங்களுக்குப் புரியவேண்டும்? உளி தரும் வலியைப் பாராமல் அது பெறப்போகும் அழகு வடிவத்தை மட்டும் பாருங்கள்,இன்றையப் பதிவின் அனைத்து வரிகளுமே மனத்தைத் தொட்டாலும் என்னை அதிகம் ஈர்த்தவை இவைதான்..." நீ இளைஞனாய் இருப்பதால் யாரும் உன்னை இழிவாக்க் கருதாதிருக்கட்டும்."...." பேச்சு,நடத்தை,அன்பு,தூய்மை,நம்பிக்கை..இவற்றில் அனைத்து விசுவாசிகளுக்கும் முன் மாதிரியாயிருங்கள்."" உனக்கு அளிக்கப்பட்ட அருட்கொடை குறித்து அக்கறையற்றவனாய் இராதே!"... இவைதான்.தந்தையே! தங்களுக்கு மட்டுமல்ல..அனைத்து அருட்பணியாளர்களுக்கும் என் செபங்களும்,வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.தங்களோடு சேர்ந்து திமோத்தேயுவிற்கும் அவரைத் தயார் செய்த பவுலுக்கும், என்னுடைய 'சபாஷ்'ம் சேரட்டும்! அருமையான பதிவு தந்த தந்தைக்கும் ஒரு சபாஷ்!!!

    ReplyDelete