Friday, September 11, 2015

சஷ்டியில் இருந்தால்

நான் 10ஆம் வகுப்பு படித்தபோது எனக்கு வகுப்பெடுத்த தமிழாசிரியர், மாணவரிடம் பாடம் சார்பாக கேள்வி கேட்டு மாணவன் விடையளிக்காமல் விழித்தாலோ, அல்லது எழுத்து தேர்வில் ஒன்றும் எழுதாமல் இடம் விட்டிருந்தாலோ, 'சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்!' என்று பழமொழி சொல்வார். அதாவது, உள்ளுக்குள் இருந்தால்தான் வெளியில் வருமாம். அல்லது உள்ளே என்ன இருக்கிறதோ அதுதான் வெளியில் வருமாம்.

விடுமுறைக்குச் சென்றபோது என் வீட்டில் நான் இதே பழமொழியைப் பயன்படுத்த, வீட்டு வாசலில் தன் கூந்தலை உலர்த்திக்கொண்டிருந்த என் அய்யாமை (அப்பாவின் அம்மா), 'தம்பி! நீ சொல்லும் பழமொழி தவறு!' என்றார்கள். 'தவறா! அப்படின்னா சரியான பழமொழி என்ன?' என்று கேட்டேன்.

'சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்!' என்பதுதான் பழமொழியாம்.

அதாவது, திருமணம் ஆகியும் குழந்தைப்பேறு இல்லாத பெண்கள், முருகனை வேண்டி சஷ்டி விரதம் (கந்த சஷ்டி விரதம் - கந்தன் என்பது முருகனின் பெயர்) இருக்க வேண்டும். அப்படி சஷ்டியில் விரதம் இருந்தால், அகப்பையில், அதாவது கருப்பையில், குழந்தை வருமாம்!

இது காலப்போக்கில் மருவியதோடல்லாமல் பொருளும் மாறியிருப்பது ஆச்சர்யமே!

நாளைய நற்செய்தியில் (லூக்கா 6:43-49) இயேசுவின் சமவெளிப்பொழிவு தொடர்கிறது: 'மரம் எந்த இயல்பைக் கொண்டிருக்கிறதோ, அதே இயல்பைத்தான் கனியும் கொண்டிருக்கும்!' - ஆக, உள்ளே எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் வெளியேயும் இருக்கும்.

உள்ளத்தில் நன்மை இருந்தால், அது நன்மையாகவே வெளியே வரும். தீமை இருந்தால், அது தீமையாகவே வெளியே வரும்.

வெளியே தெரிவது வெறும் அறிகுறிதான். ஆனால், நோய் ஆழமாக உள்ளிருக்கக் கூடியது. இன்றைய மருத்துவத்தைப் பற்றி முன்னோர்கள் சொல்லும்போது, இன்றைய மருத்துவம் அறிகுறிகளைக் குணமாக்குகிறதே தவிர, நோயைக் குணமாக்குவது இல்லை என்பார்கள். உதாரணத்திற்கு, வாயில் புண் வருகிறது என்றால், அது வயிற்றின் உள்ளிருக்கும் புண்ணின் வெளிப்பாடு என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், பல நேரங்களில் நாம் வாயில் புண் ஆறிவிட்டால் எல்லாம் சரியாகிவிட்டது என மருந்து எடுப்பதை நிறுத்திக்கொள்கிறோம். பின் சில நாட்களில் மீண்டும் புண் வருகிறது. ஏன்? நாம் நமது மருந்துகளால் அறிகுறிகளைத்தான் குணப்படுத்தினோமே தவிர, புண்ணைக் குணப்படுத்தவில்லை.

ஒருவேளை நம் உள்ளத்தில் தீமைதான் இருக்கிறது என்றால் அது குறித்து கவலைப்பட தேவையில்லை. மாறாக, 'எல்லா பாவ நிலையையும் அகற்ற இயேசு இவ்வுலகிற்கு வந்தார்' என்று நம்பிக்கை தருகின்றார் பவுல் (1 திமொ 1:15-17). இயேசு நம்முள் வந்து எல்லாவற்றையும் அகற்றிவிட நம் உள்ளம் தூய்மை பெறுகிறது. அப்படி இயேசுவும், அவருடன் நன்மையும் உள்ளே வந்துவிட்டால் நம் சொற்களும், செயல்களும், அவற்றைப் பிரதிபலிக்க வேண்டும்தானே!



2 comments:

  1. தந்தைக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும் ! "சஷ்டியில் இருந்தால்" தலைப்பை பார்த்தவுடன் தந்தையை போல எனக்கும் என் அப்பா பாட்டி ஞாபகம் தான் வந்தது. இந்த வார்த்தையை அவர்கள் எப்போதும் என் அப்பாவிடம் கூறுவார்கள்.அதாவது எங்க அப்பாவை பார்த்து உன் நல்ல எண்ணம் தான் உன் பிள்ளைகளுக்கு வரும் வரணும் இது போல் நீ என்றும் நல்ல இரு பூமி என்று என் அப்பாவை வாழ்த்தி கூறுவார்கள்.ஏனென்றால்,என் அப்பா வாயை திறந்து ஒரு கடும் சொற்கள் கூட பேசி நான் பார்ததில்லை.நல்லதையே பேசினார் அதனால் என்னவோ சீக்கிரம் கடவுள் அவரை தேர்ந்து கொண்டார்.இந்த ஒரு பதிவில் என் தந்தையை நினைவு கூறி என் சிந்தனையை தூண்டியதற்கு நன்றிகள். தந்தையின் பதிவில் என்னை தொட்ட வரிகள் உள்ளத்தில் நன்மை இருந்தால், அது நன்மையாகவே வெளியே வரும். தீமை இருந்தால், அது தீமையாகவே வெளியே வரும்.இந்த தீமை இருந்தால், அது தீமையாகவே வெளியே வரும் என்பதிற்கு பதிலாக வாயை திறக்காமல் இருப்பது சாலச் சிறந்தது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது தமிழ்ப் பொன்மொழி. அகத்தின் அழகு நம் வாய் பேசும் சொற்களில் இருக்கிறது என்கிறது விவிலியம். நல்ல மரம் நல்ல கனி கொடுக்கும். கெட்ட மரம் கெட்ட கனி கொடுக்கும். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும் என்கிறார் ஆண்டவர். நமது வாயிலிருந்து வரும் சொற்கள்தான் நமது உள்ளத்தின் நிறைவை, அல்லது குறைவைச் சுட்டிக்காட்டுகின்றன. நமது சொற்கள் குறைவுள்ளவையாக, கண்ணியம் குறைந்தவையாக, இழிவானவையாக, புண்படுத்துவனவாக இருக்கின்றனவா? அப்படியென்றால், அது நம் உள்ளத்தின் குறைவைத்தான் காட்டுகிறது.

    எனவே, நமது சொற்களின்மீது ஒரு கண் வைப்போமா? நல்ல சொற்களைப் பேசி நமது உள்ளத்தின் நிறைவை வெளிப்படுத்துவோம். நமது உள்ளத்தையும் நல்ல எண்ணங்களால் நிரப்பி, நிறைவு செய்வோம்.தந்தைக்கு எனது நன்றிகள்.இனிய வார்த்தைகளால் எங்கள் வாழ்கையை மாற்ற,பயணிக்க தந்தையே ஜெபியுங்கள்!ஜெபிக்க்ன்றோம் !

    ReplyDelete
  2. தந்தையின் இந்தப் பேரறிவாற்றலின் மூலம் எங்கிருந்து வந்தது என்று இன்றுதான் புரிந்தது." சட்டியிலிருந்தால் தானே அகப்பையில் வரும்" என்ற சொல்லாடலின் மூலம் தந்த தந்தையின் அய்யாமையைத்தான் குறிப்பிடுகிறேன்.கண்டிப்பாக தாயைப்போல பிள்ளை என்பதற்கேற்ப மரத்தைப்போன்றே தான் அதன் கனியும் இருக்கும்.நமது செயல்களும் நம் எண்ண ஓட்டங்களின் பிரதிபலிப்பாகவே இருக்க முடியும்.எண்ண ஓட்டம் தீயதாக இருப்பினும் சரி, நன்மையாக இருப்பினும் சரி....ஒத்துக்கொண்டுதானே ஆக வேண்டும்? எல்லா பாவ நிலையையும் அகற்ற வந்த இயேசு நம் பாவத்தையும் அகற்றி நம்மைத் தூய்மை நிலைக்கு கொண்டு செல்வார் என நம்புவோம்.தந்தைக்குப் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete