Sunday, September 20, 2015

நான் இவ்வளவுதான்!

நாளை மத்தேயு நற்செய்தியாளரின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

வங்கிகளில் பணிபுரிவோர், தணிக்கையாளர்கள், கணக்கர்கள் அனைவரின் பாதுகாவலர் இவர். இந்தப் பணிகளில் இருக்கும் அனைவருக்கும் நம் வாழ்த்துக்களும், செபங்களும்.

இயேசுவைப் பின்சென்ற பன்னிரு திருத்தூதர்களில் வெறும் ஐந்துபேரின் பணி பற்றி மட்டுமே நமக்குத் தெரிகிறது. அந்திரேயா, பேதுரு, யோவான், யாக்கோபு இந்த நால்வரும் மீனவர்கள். மத்தேயு வரிவசூலிப்பவர்.

யூத சமூகத்தில் வரிவசூலிப்பவர்கள் விபச்சாரம் செய்பவர்கள் என்ற அளவில்தான் நடத்தப்பட்டனர். அதாவது, தங்கள் நாட்டு மக்களின் பணத்தில் வாழ்ந்துவிட்டு, தங்களை ஆண்டுகொண்டிருக்கும் உரோமை நாட்டிற்கு பிரமாணிக்கம் காட்டியதால் அவர்கள் அவ்வாறு கருதப்பட்டனர். மற்றொரு பக்கம் இந்த வரிவசூலிப்பவர்களுக்கு இரண்டு பக்கமும் கஷ்டம்: வரி வாங்கப் போனால் தங்கள் சொந்த மக்களே அவர்களை தரக்குறைவாகப் பேசுவர். வரி வாங்கவில்லையென்றால் இவர்களுக்கு மேலிருக்கும் உரோமை அரசு இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும்.

இப்படி இரண்டு பக்கமும் அடி வாங்கிக் கொண்டிருந்ததால் என்னவோ, 'என்னைப் பின்பற்றி வா!' என்று இயேசு சொன்னவுடன், மத்தேயு உடனே எழுந்து சென்றுவிட்டார்போல!

மத்தேயுவின் உடனடி பின்பற்றுதல் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதை சிந்தித்துக் கொண்டிருக்கும்போது என் மனதின் ஓட்டம் என்னவென்றால் 14 வருடங்கள் குருமடப் பயிற்சி முடித்து, அருட்பொழிவு பெற்ற எனக்கு சில நேரங்களில் 'பின்பற்றுதல்' கடினமாக இருக்கிறது என்பதுதான். ஆனால், தன் குடும்பம், பிள்ளைகள், தன் வேலை, உடன் பணியாட்கள் என இருந்த மத்தேயு எப்படி உடனே சென்றுவிட்டார்?

நிற்க.

காலையில் இயேசு மத்தேயு அழைக்கும் நிகழ்வு நடக்கிறது. அதே நாள் மாலையில் மத்தேயுவின் இல்லத்தில் விருந்து ஒன்று நடக்கிறது. முதன்மை விருந்தினர் இயேசுதான். தன்னுடன் வேலை செய்தவர்கள், தன் நண்பர்கள், தன் உறவினர்கள் என அனைவரையும் விருந்திற்கு அழைத்திருக்கிறார் மத்தேயு.

ஒருவேளை இதுதான் மத்தேயுவின் பிரியாவிடை விருந்தோ?

அல்லது

இந்த விருந்தின் வழியாக மத்தேயு தன் உள்ளத்து மகிழ்ச்சியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள நினைத்தாரா?

அல்லது

இந்த விருந்தின் வழியாக, 'ஆண்டவரே! நான் இவ்வளவுதான்! என் குடும்பம், உறவுகள் இவர்கள்தாம்!' என இயேசுவுக்கு அறிமுகம் செய்துவைக்க விழைந்தாரோ?

இந்த மூன்று காரணங்களுமே இருந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் இந்த மூன்று காரணங்களிலும் முதன்மையான காரணம் என்னவாக இருக்குமென்றால், 'இதுதான் நான்!' என்று இயேசுவுக்கு அவர் சொல்ல விழைந்ததுதான்.

இன்று மாலை எங்கள் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றிய சேன்ட்லர் என்ற ஆஸ்ட்ரிய இறையியல் பேராசிரியர் உரையாற்றிவிட்டு அமர்ந்தார். மிக அழகாக உரையாற்றினார். கேள்வி நேரம் தொடங்கியது. அமர்ந்திருந்த பேராசிரியர்களில் ஒருவர் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். கேள்வி முடிவில் குறுக்கிட்ட சேன்ட்லர், 'எனக்கு கேட்பதில் குறைபாடு இருக்கிறது. யாராவது ஒருவர் என்னிடம் கேள்வியை எழுதிக் காட்டுவீர்களா?' என்று கேட்டார்.

எனக்கு ரொம்ப புல்லரித்துப் போனது. இவ்வளவு பெரிய கூட்டத்தின்முன், 'நான் இவ்வளவுதான்!' என்று சொல்லிவிட இவரால் எப்படி முடிந்தது?

எனக்கு அறிமுகமானவர்களிடம் அல்லது என் நண்பர்களிடம்கூட என் குறைகளை மறைக்க நான் அதிகம் முயற்சிகள் செய்கிறேன். 'நான் இப்படி அல்ல!' என்று சொல்வதிலேயே அல்லது என்னிடம் இருக்கும் குறையை மறைப்பதிலேயே ஆர்வமாயும் இருக்கிறேன். எனக்கு இன்று மத்தேயுவும், சேன்ட்லரும் சவால்களாய் இருக்கிறார்கள்.

நாளை என் மதுரை உயர்மறைமாவட்ட அருட்பணியாளர்கள் தங்கள் ஆயர்களோடு இணைந்து, ஆண்டு தியானத்தைத் தொடங்குகின்றனர். அவர்களுக்கு நம் செபங்களும், வாழ்த்துக்களும்.

'நான் இவ்வளவுதான்!' என்று இறைவனிடம், ஒருவர் மற்றவரிடமும் திறந்து காட்டும் மனநிலை இருந்தால் எத்துணை நலம்!


3 comments:

  1. பாசமுள்ள தந்தைக்கு புனித மத்தேயுவின் திருநாள் வாழ்த்துக்களும் வணக்கங்களும்! "நான் இவ்வளவுதான்"! என்ற பதிவை மிக அழகாகவும் ஆழமாகவும் படைத்தமைக்கு எனது நன்றிகள். தந்தையே இந்த பதிவு எனக்காகவே பதித்தது மாறி ஒரு உணர்வு . ஏனென்றால், மத்தேயுவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு என் வாழ்விலும் நடந்தது என்னவென்றால் நான் 1996-ல் காலையில் மதம் மாறினேன் மாலையில் கடவுள் என்னை நல்ல ஒரு வாழ்விற்கு அழைத்துக்கொண்டார் . அதாவது காலை திருப்பலியில் ஞானஸ்நானம் மற்றும் புதுநன்மை பெற்று இயேசுவின் உடலை உட்கொண்டேன்.இயேசு என்னில் வந்தார் நான் அவரை தொடர்ந்தேன் . என் பெற்றோரையோ, என் சகோதரிகளையோ பற்றி நான் கவலை படவில்லை. ஆனால் நான் ஜெபிக்க அமரும் நேரங்களில் எல்லாம் அவர்களை நினைத்து இன்றும் அழுது அவர்களுக்காக ஜெபிப்பது உண்டு. அறியாத வயதில் என்னை அழைத்த இயேசுவுக்கு நான் பிரமாணிக்கமாக பணியாற்ற அவர் அருள் என்னில் நிலைக்க வேண்டும் என்பதே என் ஜெபமும் கூட . இன்று நினைத்தால் கூட என் அழைத்தல் வாழ்வு எனக்கு ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது . ஏனென்றால் கடவுள் என்னை மிக அருமையாக ஆசிர்வதிதுள்ளார். அந்த ஆசிர்வாதம் என்னில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. ஆக, 'நான் இவ்வளவுதான்!' என்று இறைவனிடம், ஒருவர் மற்றவரிடமும் திறந்து காட்டும் மனநிலை இருந்தால் எத்துணை நலம்! இந்த வரிகளுக்கு தந்தைக்கு நன்றிகள்.எனவே, நமது அழைப்பும், அறிவிப்பும் பற்றிச் சிந்திப்போம். நாம் பாவிகளாய் இருந்தபோதே நம்மை அழைத்த இறைவனுக்கு நன்றி கூறுவோம். அழைப்பை ஏற்று நற்செய்தியாளர்களாய் வாழ்வோம். நமது வாழ்வே ஒரு நடமாடும் நற்செய்தி நூலாக அமையட்டும். நம்மையும், நமது பணியையும் பார்க்கிறவர்கள் இயேசுவின் மதிப்பீடுகளை நம்மிடமிருந்து கற்றுக்கொள்ளட்டும். இது நம்மேல் சுமத்தப்பட்ட கடமை என்று ஏற்றுக்கொள்வோமா? இந்த கடமையை எனக்கு புரிய வைத்த தந்தைக்கு எனது பாராட்டுக்கள்!..........

    ReplyDelete
  2. அழகானதொரு பதிவு.மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி என்பதுபோல தன் சக உறவுகளுக்கும்,தன்னை ஆள்பவர்களுக்குமிடையே நடந்த ஒரு போராட்டத்தில் கிடைத்த ஒரு 'விடிவெள்ளியாய்' வந்த இயேசு அழைத்தவுடன் அவரைப்பின் செல்கிறார் மத்தேயு.அன்றிரவே அவர் இயேசுவுக்கு கொடுத்த விருந்தோம்பலுக்குக் காரணம் கண்டிப்பாக 'நான் இவ்வளவு தான்; என் குடும்பம் இவ்வளவு தான்' என்று என்று தன்னைப் பற்றிய சுய விமரிசனத்திற்காகத்தான் இருக்க முடியும்.இந்நிகழ்வை தந்தை அழகாக தனக்குக் கிடைத்த சேன்டலரின் அனுபவத்தோடு இணைத்திருப்பது அழகு.நாம் இந்த சமூகத்தின் முன் என்னவாக இருப்பினும் இறைவனின் சந்நிதானத்தில் இருக்கும் பொழுதேனும் நாம் நம்மைத் துகிலுரிக்க அழைப்பு விடுக்கிறது இன்றையப் பதிவு.எந்த செயற்கைப் பூச்சுமின்றி நம் நிறை குறைகளோடு நாம் நாமாக இருக்கும் பொழுது நம்மை ஏற்றுக்கொள்பவர் அவர் ஒருவராக மட்டுமே இருக்க முடியும்.'நாம் இவ்வளவு தான்' என நம்மையே இறைவனிடமும்,நம்மைச்சார்ந்த மற்றவர்களிடமும் திறந்து காட்டும் மனநிலையைக் கொடுக்கும் படி இறைவனை இறைஞ்சுவோம்.இலவச இணைப்பாக திருத்தூதர்களின் தொழில் பற்றிய விஷயங்களையும் கொடுத்த தந்தைக்கு நன்றிகள்.நாளை தியானத்தைத் தொடங்கும் மதுரை மாவட்ட ஆயர் மற்றும் அருட்பணியாளர்களுக்கு என் செபங்களும்....வாழ்த்துக்களும்....

    ReplyDelete
  3. My prayers to Madurai Arch diocese Bishop and Priests who start their retreat today.

    ReplyDelete