Monday, September 7, 2015

நமக்கு பொண்ணு பொறந்திருக்கு!

'நமக்கு பொண்ணு பொறந்திருக்கு!' - இந்த வார்த்தைகளுடன்தான் மரியாளின் பிறந்தநாள் விடிந்திருக்கும் நாசரேத் மக்களுக்கு.

விவிலியம் 'ஆண்களின்' நூலாக மட்டுமே இருந்ததால் என்னவோ, ஆண்களின் பிறப்பை மட்டுமே அது பதிவு செய்கிறது. விவிலியத்தில் சொல்லப்பட்டுள்ள பிறப்பு கதையாடல்களை மூன்று தலைப்புக்களின்கீழ் பிரிக்கலாம்: அ. அற்புதமான பிறப்பு, ஆ. அசாதாரணமான பிறப்பு, மற்றும் இ. சாதாரண பிறப்பு, ஆனால் அற்புதமான மீட்பு

அ. அற்புதமான பிறப்பு: ஈசாக்கு (தொநூ 21:1-8), இம்மானுவேல் என்னும் எசேக்கியா (எசா 7:14), சிம்சோன் (நீத 13), சாமுவேல் (1 சாமு 1:19-23), திருமுழுக்கு யோவான் (லூக் 1:5-25, 57-66) மற்றும் இயேசு (லூக் 1:26-38, 2:1-7) ஆகியோரின் பிறப்பு கதையாடல்கள் 'கன்னி அல்லது கருவுற இயலாதவர் கருவுறுதல்' என்னும் 'மாதிரிக் காட்சி' (type-scene) இலக்கியப் பண்பைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த இலக்கியப் பண்பின் படி முதலில் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு வயது, மலட்டுத்தன்மை அல்லது கன்னிமை தடையாக இருக்கும் (ஆனால் எசேக்கியாவின் பிறப்பில் ஆகாசின் 'உள்ளத்தின் மலட்டுத்தன்மையான' நம்பிக்கையின்மை தடையாக இருக்கிறது). இரண்டவதாக, 'தடை நீங்கும்' என்ற வாக்குறுதி கிடைக்கும். மூன்றாவதாக, கருவுறுதலும், கதாநாயகனின் பிறப்பும் நடக்கும்.

ஆ. அசாதாரணமான பிறப்பு: ஏசா மற்றும் யாக்கோபு (தொநூ 25:19-26), யோசேப்பு (தொநூ 30:22-24), பெரேட்சு மற்றும் செராகு (தொநூ 39:27-30), ஓபேது (ரூத் 4:13-17) ஆகியோரின் பிறப்பு கதையாடல்கள் மேற்காணும் இலக்கிய பண்பைப் பெற்றிராவிட்டாலும், இவர்களின் பிறப்பு ஒரு அசாதரண முறையில்தான் நடந்தேறுகிறது.

இ. சாதாரண பிறப்பு, ஆனால் அற்புதமான மீட்பு: மோசேயின் பிறப்பு (விப 2:1-10) மிக சாதாரணமாக இருந்தாலும், அவர் எகிப்தின் பாரவோனின் கைகளிலிருந்து காப்பாற்றுப்படுதல் ஒரு அற்புதம் போல நடந்தேறுகிறது. இதில் விந்தை என்னவென்றால் பாரவோனின் வாளிலிருந்து மோசேயைத் தப்புவிக்கும் கடவுள் பாரவோனின் மகளின் மடியில் அவரை வளரச் செய்கின்றார்.

மரியாளின் பிறப்பு நிகழ்வு அல்லது கதையாடல் விவிலியத்தில் பதிவு செய்யப்படவில்லையென்றாலும், தொடக்கக் கிறித்தவர்களின் யாக்கோபின் முன்நற்செய்தி அல்லது முதல்நற்செய்தி (Protoevangelium of James) என்ற ஏற்றுக்கொள்ளப்படாத அல்லது ஐயத்துக்கிடமான நற்செய்தியிலும் (பிரிவு 5, எண் 2), இசுலாமியர்களின் திருக்குரானிலும் (3:33-36) பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாக்கோபின் முன்நற்செய்தியின்படி யோவாக்கீம்-அன்னா தம்பதியினர் தங்கள் முதிர்ந்த வயதில் மரியாளைப் பெற்றெடுக்கின்றனர். வானதூதர் ஒருவர் அன்னாவுக்கு மரியாளின் பிறப்பை முன்னறிவிக்க, அன்னாவும் தன் முதிர்வயதில் மரியாளைப் பெற்றெடுக்கின்றார். யோவாக்கீமுக்கும் இரண்டு தூதர்கள் வழியாக அன்னா கருவுற்றிருப்பதும், அதற்காக மாசற்ற பத்து இளம் ஆடுகளை அவர் காணிக்கையாகக் கொண்டு வர வேண்டும் என்பதும் தெரிவிக்கப்படுகிறது. 'மாசுமறுவற்ற ஆடுகளைக் காணிக்கையாக்குதல்' மரியாளின் மாசற்ற அமல உற்பவத்திற்கு உருவகமாக இருக்கிறது என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். 

திருக்குரானின்படி இம்ரான்-அன்னா தம்பதியினருக்கு மர்யாம் (மரியாள்) பிறக்கின்றார். மர்யாம் பிறந்தவுடன் தன் குழந்தைக்காக கடவுளுக்கு நன்றி செலுத்தும் அன்னா, அந்தக் குழந்தையின்மேல் சாத்தானின் நிழலே படாமல் இறைவன் காத்தருள வேண்டும் என்று மன்றாடுகின்றார்.

மரியாளின் பிறப்பு மேலே நாம் கண்ட மூன்று விவிலியப் பண்புகளையுமே கொண்டிருக்கிறது. பெற்றோர்களின் வயது தடையாக இருக்க, அந்தத் தடையைத் தகர்த்து, இறைவனின் வாக்குறுதியின் கனியாகப் பிறக்கின்றார் மரியாள். மற்றொரு பக்கம், மரியாளின் பிறப்பு சாதாரணமாகத் தெரிந்தாலும், அவர் அற்புதமான முறையில் பாவத்தின் நிழல் படாமல் பாதுகாக்கப்படுகின்றார்.

இந்தப் பெண் குழந்தையின் பிறப்பு நமக்குச் சொல்வது என்ன?

ஷேக்ஸ்பியர் தன் 'பன்னிரண்டாம் இரவு' (பகுதி 2, காட்சி 5) நாடகத்தில் மூன்று வகையான பிறப்பை அல்லது மனிதர்களைப் பற்றிச் சொல்கின்றார்:

'சிலர் பிறக்கும்போதே மேன்மையானவர்களாய்ப் பிறக்கின்றனர்,
சிலரின் மேல் மேன்மை திணிக்கப்படுகிறது,
சிலர் மேன்மையை தாங்களாகவே அடைகின்றனர்!'

சிம்சோன், சாமுவேல் போன்றோர் பிறக்கும்போதே மேன்மையானவர்களாய்ப் பிறக்கின்றனர். மோசே, எசேக்கியா, திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசுவின் மேல் மேன்மை திணிக்கப்படுகிறது. மரியாள் தானாகவே மேன்மையை அடைகின்றார்.

இதை அப்படியே சதுரங்க ஆட்டத்தின் உருவகமாக சொல்ல வேண்டுமென்றால், மேன்மையாகவே பிறப்பவர்கள் சதுரங்க ஆட்டத்தின் யானை, குதிரை, மந்திரி, இராணி போன்றவர்கள். இவர்கள் கட்டத்தின் எங்கும் தாங்களாகவே பாதையை அமைத்துக் கொண்டு செல்லலாம். மேன்மை தங்கள்மேல் திணிக்கப்படுபவர்கள் சதுரங்கத்தில் இராஜா போன்றவர்கள். இப்படி ஒரு கட்டம், அப்படி ஒரு கட்டம் என்றுதான் இவர்களால் நகர முடியும். ஆனால், இவர்கள் இல்லையென்றால் ஆட்டம் முடிந்துவிடும். மேன்மையை தாங்களாகவே அடைபவர்கள் சிப்பாய்கள் போன்றவர்கள். ஒவ்வொரு கட்டமாகத்தான் இவர்கள் முன்னேறிச் செல்ல முடியும். ஆனால், இப்படி முன்னேறும் அவர்கள் கட்டத்தின் அடுத்த முனையைத் தொட்டுவிட்டார்கள் என்றால் இவர்களைப்போல பலசாலிகள் சதுரங்க ஆட்டத்தில் வேறு யாரும் இல்லை.

தன் பிறப்பு, வளர்ப்பு, திருமணம், தாய்மை, இயேசுவோடு உடனிருப்பு, திருத்தூதர்களுக்குத் துணை என்று ஒவ்வொரு கட்டமாக நகர்ந்த மரியாள், விண்ணிற்கும், மண்ணிற்கும் அரசியாய் இன்று மேன்மையடைந்து நிற்கின்றார்.

நம் பிறப்பு ஒரு வரலாற்று விபத்து அல்ல. 'நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம்திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றவதற்கு முன்பே கடவுள் தம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்' (எபே 1:4). மரியாளைத் தெரிந்து கொண்ட கடவுள் நம்மையும் தெரிந்து கொண்டுள்ளார். நம் அழைப்பு நிலையில் நாம் நம் பிறப்பின் மேன்மையை அடைதலே நம் பிறப்பின் நோக்கம்.

நம் மேன்மையைக் காணும் கடவுள் நம்மைக் கரங்களில் ஏந்தியவாறு சொல்வார்:

'நமக்கு பையன் பொறந்திருக்கு!'

'நமக்கு பொண்ணு பொறந்திருக்கு!'


2 comments:

  1. தந்தைக்கு எனது அன்னையின் பிறப்பு விழா வாழ்த்துக்களும் வணக்கங்களும் !நமக்கு பொண்ணு பொறந்திருக்கு! என்ற தலைப்பை பார்த்தவுடன் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை நன்றாக சிரித்தேன்.பிறகு இந்த ஒரு அருமையான பதிவிற்கு தந்தைக்கு மனதிற்குள் நன்றி கூறினேன் .ஏனென்றால்,அன்னையோடு சேர்த்து பெண்ணினத்தை பெருமைபடுத்தியுள்ளார்கள் தனது பதிவில் தந்தைக்கு நன்றிகள். ஆக , அன்னையே நமது பெருமை !தந்தை அவர்கள் கூறியவாறு நாம் அழைப்பு நிலையில் நாம் நம் பிறப்பின் மேன்மையை அடைதலே நம் பிறப்பின் நோக்கமாக கொண்டு வாழ வேண்டும்.இவ்வாறு நம் மேன்மையைக் காணும் கடவுள் நம்மைக் கரங்களில் ஏந்தியவாறு சொல்வார். எனவே இறைவனைப்பற்றிக்கொள்ள சான்றுகள் தேவையில்லை. நம்பிக்கை போதும். அந்த நம்பிக்கைதான் நமது வாழ்வில் ஒளியேற்றப்போகிறது. அந்த நம்பிக்கைதான் நமக்கு மீட்பைப்பெற்றுத்தரப்போகிறது.ஆகையால்

    'நமக்கு பையன் பொறந்திருக்கு!'

    'நமக்கு பொண்ணு பொறந்திருக்கு!' என்று குடுகுடுப்பகாரர் மாதிரி தம்மட்டம் அடித்து எங்களுக்கு அன்னையின் மேல் பக்தியை அதிகரிக்க செய்ததற்கு நன்றிகள்.உங்களுக்கு எனது ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.ஜெபியுங்கள் ஜெபிக்கின்றோம் !

    மன்றாடுவோம்: உமது அன்னையை எங்களுக்கும் தாயாகத் தந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நன்றி கூறுகிறோம். மரியாவை தாயாக ஏற்க மறுக்கும் அனைவருக்காகவும் நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம். அவரைத் தாயாக ஏற்று மகிழும் நாங்கள், அந்தத் தாயின் மனம் குளிரும்படி, உம் வார்த்தைகளின்படி வாழ அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.



    ReplyDelete
  2. இன்று நாகை வேளாங்கண்ணி, வாடிப்பட்டி,மதுரை அண்ணாநகர்,மற்றும் அன்னை மரியாளுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட அத்தனை ஆலயங்களையும் நோக்கி பக்தர்கள் படையெடுக்கிறார்களே ஏன்? " ஒரு பொண்ணு பொறந்திருக்காம்". அப்படியெனில் பிறந்திருக்கும் இந்தப் பெண்ணுக்கும் மற்ற பெண்களுக்கும் என்ன வித்தியாசம்." மரியாள்" எனும் பெயர்கொண்ட அந்தப் பெண் பாவத்தின் நிழல்படாதவாறு பிறந்தவள் என்பது மட்டுமின்றி பிறக்கும்போதே அவள் மீது மேன்மை மேன்மையடைந்தவள்.தன் பிறப்பு,வளர்ப்பு,திருமணம்,தாய்மை,இறைவனின் உடனிருப்பு என ஒவ்வொரு கட்டமாக நகர்ந்த மரியாள் இன்று விண்ணுக்கும்,மண்ணுக்கும் அரசியாக மேன்மையடைந்து நிற்கிறார்.மரியாளைத்தேர்ந்து கொண்ட கடவுள் நம்மையும் தேர்ந்து கொண்டாரெனில் நாமும் நம் பிறப்பின் மேன்மையை அடைய அழைக்கப்படுகிறோம்.உண்மைதான்.நாமே நமக்காகத் தெரிந்துகொண்ட நம் 'மேன்மையை'யைக்காணும் இறைவனும் நம்மைத் தம் கைகளில் ஏந்தி ' நமக்கு ஒரு பொண்ணு பொறந்திருக்கு' எனக் கண்டிப்பாக முகம் மலர்வார்.இந்த நன்னாளில் மரியாளை நம்'அன்னையாய்ப் போற்றும் அனைவருக்கும்....முக்கியமாகத் தந்தைக்கும் என் திருநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete