Tuesday, September 8, 2015

கிறிஸ்துவே அனைத்துமாய்

நாளைய நற்செய்தியில் (காண். லூக்கா 6:20-26) லூக்கா நற்செய்தியாளரின் சமவெளிப்பொழிவை வாசிக்கின்றோம். மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவின் மலைப்பொழிவை (காண். மத் 5) பதிவு செய்கின்றார். மலைப்பொழிவின் தொடக்கத்தில் எட்டு வகையான மனிதர்களை பேறுபெற்றவர்கள் என அழைக்கின்றார் இயேசு.

லூக்கா நற்செய்தியின் இயேசு நான்கு பேரை பேறுபெற்றவர்கள் எனவும், நான்கு பேரை சபிக்கப்பட்டவர்கள் எனவும் அழைக்கின்றார்.

லூக்கா நற்செய்தியின் இயேசு இரக்கமே வடிவானவர். அப்படிப்பட்ட ஒருவர் எப்படி மனிதர்களை சபிக்கலாம்? மேலும், செல்வம் கொண்டிருப்பவர்கள், உண்டு கொழுத்திருப்பவர்கள், சிரித்து இன்புறுவோர், புகழ்ந்து பேசப்படுவோர் அனைவரும் சபிக்கப்பட்டவர்கள் என்கிறார் இயேசு.

செல்வம் கொண்டிருத்தலும், நல்ல சாப்பாடு சாப்பிடுவதும், சிரித்து மகிழ்ச்சியாக இருப்பதும், மற்றவர்கள் புகழும்படி நடந்து கொள்வதும் தவறா? இல்லை! பின் இயேசு எதற்காக இத்தகைய மனிதர்களைச் சாடுகின்றார். இந்த நான்கும் ஒருவரை தன்னை நோக்கி மட்டுமே கவனம் செலுத்த வைத்துவிட்டதென்றால் அது தவறான வழிமுறை. இந்த நான்கும் ஒருவரிடம் இருந்தாலும், அவர் தனக்கு அடுத்திருப்பவரையும், தனக்கு மேலிருப்பவரையும் நோக்கி தன் கண்களைப் பதிய வைக்க வேண்டும்.

இதைத்தான் நாளைய முதல் வாசகத்தில் (காண். கொலோ 3:1-11), 'நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள்!' என்கிறார். ஆக, செல்வம், உடல், மகிழ்ச்சி, புகழ் என எல்லாம் நம் வாழ்வில் உயர்கிறது என்றால், நாம் நம்மையே நோக்கக் கூடாது. மாறாக, நம் கண்களை மேல்நோக்க வேண்டும்.

கீழ்நோக்கி அல்லது தன்-நோக்கி நம் பார்வை திரும்பியது என்றால் வேற்றுமை, சினம், சீற்றம், ஒழுக்கக்கேடு உருவாகும்.

கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாய் இருந்தால் இந்த மேல்நோக்கும் முயற்சி எளிதாகும்.

2 comments:

  1. சிறிய கடுகு விதைதான் எனினும் காரம் குறையாத விதை.பொதுவாக ஒருவருக்கு வாழ்வில் ஏற்றம் வருகையில் அவர் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது மேலோர் கருத்து.காரணம் அப்பொழுதுதான் அனைவரின் கண்களும் அந்த ஒருவரை நோக்கியே இருக்கும்.நமக்கு ஏற்றம் வருகையில் கண்களை மேல் நோக்க வேண்டுமென்பதும்,தாழ்வு வரும்போது அதற்குக் காரணம் என்ன வென்று நம்மையே ஆராய்ந்து பார்ப்பதும் ஒழுக்கமுடையோரின் வாழ்வுமுறை.இந்த மேல் நோக்கு நம்மிடையே இருக்க கிறிஸ்துவே நமக்குள் அனைத்துமாயிருப்பாராக! இதைத்தான் கவிஞர் கண்ணதாசன் தனக்கே உரிய நடையில் " உயர்ந்த இடத்தில் இருந்துவிட்டால் உலகம் உன்னை மதிக்கும்; உன் நிலையில் கொஞ்சம் இறங்கிவந்தால் நிழலும் கூட சிரிக்கும்" என்று கூறியிருப்பாரோ! ஆம்...நம் நிழல் கூட நம்மை மதிக்க வேண்டுமெனில் நம் பார்வை மேல் நோக்கியே....இறைவனை நோக்கியே இருக்கட்டும்.நல்ல பதிவைத் தந்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்? என்பது, வாழ்கிற ஒவ்வொருவரின் கைகளில் இருக்கிறது. இப்படித்தான் வாழ வேண்டும் என்றும் வாழலாம். எப்படியும் வாழலாம் என்றும் வாழலாம். ஆனால், நிறைவான மகிழ்ச்சி நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால், இயேசு காட்டுகிற ”இப்படித்தான் வாழ வேண்டும்” என்கிற கொள்கை தான், நமக்கு வழிகாட்டியாக அமைந்திருக்கிறது.

    இந்த உலகத்தில் வாழக்கூடிய மனிதர்கள், அனைத்தையுமே ஒரே நேரத்தில் பெற்றுவிடத்துடித்துக் கொண்டிருக்கின்றனர். அனைத்தையும் பெற்றுவிட்ட பிறகு அதை எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்பது தெரியாமல் அலைந்து கொண்டிருக்கின்றனர். உதாரணமாக, பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அனைத்தையும் எவ்வளவு அதிகமாக சம்பாதிக்க வேண்டும், எவ்வளவு விரைவாக சம்பாதிக்க வேண்டுமோ அவ்வளவு விரைவாக சம்பாதித்தும் விடுகின்றனர். ஆனால், எந்த அளவுக்கு அதிகமாக, விரைவாகச் சம்பாதித்தார்களோ, அந்த அளவுக்கு அனுபவித்தார்களா? என்றால், நிச்சயமாக இல்லை. ஒரு பாத்திரத்தில் நமக்குப் பிடித்தமான உணவு இருக்கிறது. பல பேர் விருந்திற்கு வந்திருக்கிறார்கள். உடனடியாக, விரைந்து சென்று, நமக்குப்பிடித்த உணவை நமது தட்டில் நிரப்பி விடுகிறோம். நாம் நிரப்பிய அளவுக்கு, அதைச் சாப்பிட்டபோது, மகிழ்ச்சி அடைந்தோம் என்றால், நிச்சயமாக இல்லை. இயேசு காட்டுகிற வழி இதுவல்ல. அது நிறைவைத்தருகிற வழி. சுமையென்றாலும் சுகமான வழி. குறைவாக இருந்தாலும், நிறைவை உணரக்கூடிய வழி.

    இந்த உலகப்போக்கில் நாமும் பல நேரங்களில், உள்ளவற்றில் நிறைவடையாமல், இல்லாதவற்றிற்கு ஆசைப்பட்டு, உள்ள நிறைவையும் இழந்தவர்களாக இருக்கிறோம். இருப்பதில் நிறைவு காண, இயேசு விடுக்கும் அழைப்பை ஏற்று, மகிழ்ச்சியோடு வாழக் கற்றுக்கொள்வோம். ஆக, கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாய் இருந்தால் இந்த மேல்நோக்கும் முயற்சி எளிதாகும் என்ற வார்த்தையை நம்மில் விதைத்த தந்தைக்கு நன்றிகள் ! இயேசு சுட்டிக்காட்டும் எதார்த்தங்களை வாழ்வாக்குவோம். ஆசீர் பெற்ற வாழ்வு நமக்கு கிடைக்கும்.

    ReplyDelete