Sunday, September 8, 2013

என்னைக் காண்பவரை கண்டேன் அல்லவா?



ஆண்டவரின் தூதர் அவளை நோக்கி, 'சாராயின் பணிப்பெண் ஆகார், நீ எங்கிருந்து வருகின்றாய்? எங்கே போகின்றாய்?' என்று கேட்டார். அதற்கு அவள், 'என் தலைவி சாராயிடமிருந்து நான் தப்பி ஓடுகிறேன்' என்றாள் ... அப்பொழுது, 'என்னைக் காண்பவரை நானும் இங்கே கண்டேன் அல்லவா?' என்று அவள் சொல்லித் தன்னுடன் பேசிய ஆண்டவரை, 'காண்கின்ற இறைவன் நீர்' என்று பெயரிட்டழைத்தாள். (தொடக்கநூல் 16:7-8,13)

பழைய ஏற்பாட்டு நூல்களில் ஒருவர் மற்றவரைப் பார்த்து அடிக்கடி கேட்கும் கேள்வி இதுதான்: 'நீ எங்கிருந்து வருகின்றாய்? எங்கே போகின்றாய்?' வெறும் வருவதையும், போவதையும் தாண்டி இந்தக் கேள்வியில் அர்த்தம் இருக்கத்தான் செய்கின்றது. நம் வாழ்வில் இந்த இரண்டு கேள்விகளுக்கான விடைகள் தெளிவாக இருந்தால் போதும். நம் வாழ்க்கைப் பயணம் இனிமையாக இருக்கும். இஸ்ராயேல் மக்கள் வாழ்வில் இருந்த ஒரு பெரிய பிரச்சினை அவர்களுக்கு இந்த இரண்டிற்குமே பதில் தெளிவானதாக இல்லை. ஆகையால் தான் கடவுளின் அரும்பெரும் செயல்களை மறந்து பாகால்களை (வேற்றுத் தெய்வங்களை) வழிபடத் தொடங்குகின்றனர்.

இந்தக் கேள்வியை பழைய ஏற்பாட்டில் முதன் முதலாக கடவுள் (கடவுளின் தூதர்) ஆகாரைப் பார்த்துக் கேட்கின்றார். ஆகார் ஆபிரகாமிடம் பணிபுரிந்த ஒரு எகிப்தியப் பணிப்பெண். தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள இயலாது என நினைக்கின்ற சாராய் தன் பணிப்பெண் ஆகாரைத் தன் கணவர் வழியாக குழந்தை பெற்றுத் தர வேண்டுகின்றாள். தான் கருவுற்றவுடன் தன் தலைவியை ஏளனமாய்ப் பார்க்கத் தொடங்குகிறாள் ஆகார். அவள் அப்படிப் பார்த்தாளா அல்லது அவள் அப்படிப் பார்த்ததாக சாராய் நினைத்தாளா என்பது கேள்விக்குறி. தன் அதிகாரத்தை அவள் மேல் காட்டுகின்றாள் சாராய். 'இதற்கு மேல் தாங்க முடியாது!' என நினைக்கின்ற ஆகார் சாராயிடமிருந்து தப்பி ஓடுகிறார். சாராய் அதிகாரம் செய்யும் போது ஆபிரகாம் என்ன செய்தார்? மனைவிக்குப் பயந்து கொண்டு இருந்தாரா? இந்தக் கேள்விகளுக்கு பெண்ணியவாதிகள் தான் பதில் சொல்ல வேண்டும். பழைய ஏற்பாட்டிலேயே அடங்கிப் போகும் இனம் ஆண் இனம்தான் என்பது கண்கூடு. 

தப்பி ஓடும் ஆகாரை பாலைநிலத்தில் ஒரு நீருற்றுக்கு அருகில் எதிர்கொள்கின்றார் கடவுளின் தூதர். கடவுளின் தூதர் மற்றும் கடவுள் என்ற வார்த்தைகள் ஒரே அர்த்தத்தில்தான் கையாளப்படுகின்றன. 'கடவுளின் தூதர்' மற்றும் 'வானதூதர்' என்ற சிந்தனையெல்லாம் பாபிலோனிய நாடுகடத்தலுக்குப்பின்தான் யூத சிந்தனைக்கே வருகின்றது. எதிர்கொள்கின்ற கடவுளிடம் முறையிடுகின்றார் ஆகார். முறையிடும் ஆகாருக்கு 'உன் மகனும் பெரிய இனமாவான்' என வாக்குறுதி கொடுக்கின்றார். அந்த வாக்குறுதியைக் கேட்டு ஆகார் எழுப்புவதும் ஒரு கேள்விதான்: 'என்னைக் காண்பவரை நானும் இங்கே கண்டேன் அல்லவா?'

என்னைப் படுக்கையில் கண்ட ஆபிரகாமும் என்னை மறந்து விட்டார். சமையற்கட்டில் கண்ட சாராயும் என்னைத் துன்புறுத்துகின்றார். ஆனால் என்னை என்றென்றும் காண்கின்ற என் இறைவன் என்னை இன்றும் காண்கின்றார் என ஆகார் தன் உள்ளக்கிடக்கையை ஆச்சர்யத்தோடு வெளிப்படுத்துகின்றார். 'காண்கின்ற இறைவன் நீர்' (எல் ரோயி) என இறைவனுக்குப் பெயரிடுகின்றார். 

காண்பது என்றால் என்ன? 

ஹார்வர்ட் பிசினஸ் ரெவியூ தன் மார்ச் மாத இதழுக்கு 'தெ பிக் டேட்டா' எனப் பெயரிட்டது. இதன் அர்த்தம் என்ன? இன்றைய கலாச்சாரம் நம்மை வெறும் டேட்டாவாக மாற்றிவிட்டது. நாம் ஒரு டேட்டா. நம்மைச் சேமிக்கவும் முடியும். அழிக்கவும் முடியும். ஒவ்வொரு நொடியும் நாம் ஏதோ ஒரு வகையில் டேட்டாவை விடுத்துக்கொண்டே இருக்கின்றோம். நாம் அனுப்பும் மின்னஞ்சல், குறுந்தகவல், ஸ்கைப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் வழியாக பரிமாறிக் கொள்ளும் தகவல்கள், தரவுகள், நாம் சாலையில் செல்லும் போது நம்மை படமெடுக்கும் ரகசிய டிராஃபிக் கேமராக்கள், துணிக்கடை, நகைக்கடை, ஆலயம், விடுதி, ஓட்டல் என எல்லா இடங்களிலும் நம்மைப் பின் தொடரும் கேமராக்கள் இவை அனைத்திலும் நாம் டேட்டாவாகப் பதிந்து கொண்டேதான் இருக்கின்றோம். கூகுள் நிறுவனத்தின் கணக்கின்படி 2003ஆம் ஆண்டு வெறும் சில ஜி.பிக்களாக இருந்த டேட்டா 2013ஆம் ஆண்டில் பல மில்லியன் டி.பி.க்களாக மாறிவிட்டன. இந்த டேட்டாவை எப்படி பிராசஸ் செய்வது என்று பல ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த டேட்டாவை அழிப்பதா, மறுசுழற்சி செய்வதா, வானில் பதிவு செய்வதா என்ற கேள்விகளும் எழுந்து கொண்டே இருக்கின்றன. நாம் விரும்புகிறோமோ, இல்லையோ நம்மை சாவித்துவாரத்தின் வழியாய் யாரோ பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். நாம் கங்காருக்குட்டி போல தூக்கிக்கொண்டே திரியும் செல்ஃபோன்களும் நம்மை யாருக்கோ காட்டிக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. இன்று 'காண்கின்றவராக' நம்மோடு இருப்பது இந்தக் கேமராக்கள்தான்.

ஆனால் இந்தக் கேமராக்களுக்கும் 'ப்ளைன்ட் ஸ்பாட்' உண்டு. எந்தக் கோணத்தில் வைத்துக் கண்காணிக்க முயன்றாலும் கேமராக்கள் தோற்றுத்தான் போகின்றன. ஆனால் இறைவனின் பார்வைக்கு 'ப்ளைன்ட் ஸ்பாட்டே' கிடையாது. இறைவனின் இந்தப் பார்வையைப் பற்றி திருப்பாடல் ஆசிரியர் அழகாக எழுதுகின்றார்: 'என்னைப் பற்றிய உம் அறிவு எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது' (திபா 139:6). இறைவனை 'பிக் டேட்டாவாக' கண்டுகொள்கின்றாள் ஆகார். 

கண் ஒரு மிகப்பெரிய தகவல் பெறும் சாதனம். நாம் பார்க்கும் அனைத்தையும் நம் மூளை ஃபில்டர் செய்து 'தகவலாக' எடுத்துக் கொள்கின்றது. நம் பார்வை ஒன்றுபோல இருப்பதில்லை. உடல், மனம், கலாச்சாரம், சமூகம் என அனைத்த நிலைகளிலும் நம் பார்வை கட்டுப்படுத்தப்படுகிறது. இறைவன் அனைத்தையும் பார்க்கின்றார். அனைவரையும் பார்க்கின்றார். 'மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர். ஆண்டவரோ, அகத்தைப் பார்க்கின்றார்' (1 சாமுவேல் 16:7). இன்றைக்கு நம் பார்வையை நாம் விரிவுபடுத்துவோம். நம் கண்முன் நடக்கும் அனைத்தையும் ஒரு நிமிடம் நின்று பார்த்தாலே போதும். அதற்குக் தீர்வு கிடைத்து விடும். நம் கண்முன் நடப்பவைகளைக் காணவிடாமல் இன்று நம்மைத் தடுக்க பல பொருட்கள் இருக்கின்றன: டிவி, ஸ்மார்ட்ஃபோன், விளம்பரம், ஃப்ளக்ஸ் என அனைத்துமே நம் பார்வையைத் திசை திருப்புகின்றன.

இந்தக் கேள்வி முதலில் நமக்கு ஆறுதலைத் தருகின்றது. யாரும் நம்மைக் கண்டுகொள்ளவில்லை என்ற கவலை வேண்டும். ஏனெனில் இறைவன் நம்மைக் காண்கிறார். இந்தக் கேள்வி ஒரு சவாலையும் முன்வைக்கின்றது: உன் கண்முன் அழுதுகொண்டிருப்பவரின் கண்ணீர் உனக்குத் தெரிகின்றதா?

'There is more to seeing than what meets the eye'. நம் கண்களுக்குத் தெரிவதை விட உலகம் பெரியது. நம் பார்வையைச் சுருக்கிக் கொள்ள வேண்டாம். நமக்கு நாமே வேலிகள் இட்டுக்கொள்ள வேண்டாம்.

'தெ ரோட் லெஸ் டிராவல்ட்' என்ற நூலில் அதன் ஆசிரியர் ஸ்காட் பெக் ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறார். ஒருநாள் ஒருவர் தன் வீட்டில் உள்ள புல்தரையை இயந்திரத்தால் டிரிம் செய்து கொண்டிருக்கிறார். அந்த வழியே சென்ற ஒருவர் நின்று அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார். டிரிம் செய்து கொண்டிருந்தவரும் இதைக் கவனிக்கிறார். வழிப்போக்கர் அவரிடம் கேட்கின்றார்: 'எனக்கும் ஒரு தோட்டம் இருக்கின்றது. என்னிடமும் சிறந்த மெஷின்கள் இருக்கின்றன. எனக்கும் டிரிம் செய்ய வேண்டும் என்ற ஆசை. ஆனால் என்னால் முடியவில்லை. ஏன்?' நம் நண்பர் பதிலுக்குச் சொல்கின்றார்: 'நீ அதற்கான நேரம் செலவழிக்கவில்லை. அதுதான் முடியவில்லை!' 

நாம் ஒன்றிற்கான நேரத்தை முழுமையாக அதற்குக் கொடுத்தால் எதையும் நம்மால் கற்றுக்கொள்ள முடியும். 

நம் நண்பர் ஒரு வீடு கட்டியிருக்கிறார். பால் காய்ச்சும் நிகழ்வுக்கு நம்மை அழைக்கின்றார். நாம், நம் மனைவி, நம் பிள்ளைகள் என அனைவரும் செல்கிறோம். சாயங்காலம் நம் வீடு திரும்புகின்றோம். இரவுச் சாப்பாட்டு நேரத்தின் போது அதைப்பற்றிப் பேசுகிறோம். என்ன பேசுவோம்? நாமும், நம் மனைவியும் பேசுவது அந்தப் புதுவீட்டிற்கான செலவைப்பற்றியும், அவர் வாங்கிய லோனைப் பற்றியும் இருக்கும். ஆனால் நம் குழந்தைகள், 'அப்பா அந்த பெயிண்ட் கலர் நல்லா இருந்துச்சுல. அந்தச் சாமி சிலை அழகா இருந்துச்சுல. மொட்டை மாடியில இருந்து பார்த்தா தென்னந்தோப்பெல்லாம் தெரிஞ்சுச்சுல. அவங்க கார்டன்ல மஞ்சள் கலர் பூ அழகா பூத்திருந்துச்சுல,' என்பார்கள். நாம் வளர வளர நம் பார்வை வெறும் 'கணக்கு வழக்காகவே' மாறிவிடுகிறது.

இன்று நாம் பார்க்கும் அனைத்தையும் முழுமையாகப் பார்ப்போம். நாம் பயன்படுத்தும் மொபைலின் பின்புறம் எந்தக் கலர் இருக்கு? நம் வீட்டின் பின்புறம் யார் வசிக்கிறா? நாம் சந்திக்கும் நபர் எந்தக் கலர் சட்டை அணிந்திருக்கிறார்? இன்றைக்குக் காலைல நம்மை விரட்டி வந்த நாய் எந்தக் கலர்? நாம் பார்த்தும் பார்க்காத விஷயங்கள் நிறையவே இருக்கு.

பார்ப்போம். பார்ப்பவர்களின் கண்களைப் பார்ப்போம். கண்களையும் தாண்டி உள்ளத்தைப் பார்ப்போம். ஏனென்றால்...

'என்னைக் காண்பவரை நானும் இங்கே கண்டேன் அல்லவா...?'

No comments:

Post a Comment