Friday, September 20, 2013

எனக்கு இப்படி நடப்பது ஏன்?


ஈசாக்கு மலடியாயிருந்த தம் மனைவிக்காக ஆண்டவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் அவர் மன்றாட்டைக் கேட்டருளினார். அவர் மனைவி ரெபேக்கா கருத்தரித்தார். ஆனால், அவருடைய கருப்பையில் இருந்த புதல்வர்கள் தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டனர். அதை உணர்ந்த அவர், 'எனக்கு இப்படி நடப்பது ஏன்?' என்று ஆண்டவரிடம் கேட்கச் சென்றார். (தொடக்கநூல் 25:21-22)

'எனக்கு இப்படி நடப்பது ஏன்?'

'ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதர் வாழ்ந்ததில்லை'

'ஏன்?' - இந்தக் கேள்வியை நாமும் கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றோம். 'ஏன் இப்படி?' 'ஏன் அப்படி?' என்று குழந்தைப்பருவத்தில் கேள்விகள் வழியாகவே நாம் உலகை அறிந்துகொள்ள முற்பட்டோம். வாழ்வின் எதார்த்தங்கள் பொருள்தராதபோதெல்லாம் நாம் இதே கேள்வியைக் கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றோம்.

இந்தக் கேள்வியை இன்று கேட்பவர் நம் ரெபேக்கா. இதன் சூழல் என்ன?

தன் தந்தையின் வீட்டிலிருந்து புறப்பட்டு காகோர் வந்த ரெபேக்கா ஈசாக்கை மணம் முடிக்கின்றார். தொடர்ந்து, நூற்றெழுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்த ஆபிரகாம் இறந்து விடுகின்றார். 'தம் மகன் ஈசாக்கிற்குத் தமக்குரிய செல்வங்கள் அனைத்தையும் கொடுத்து விடுகின்றார்' (தொநூ 25:5). ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு, மோசே, யோசுவா போன்ற முதுபெரும் தந்தையர்கள் இறந்த நிகழ்வுகளையெல்லாம் குறிப்பிடும்போது பைபிள் அவர்கள் தங்கள் சந்ததியினருக்கு அளித்த ஆசியுரைகளையும் குறிப்பிடுகின்றது. ஆனால் ஆபிரகாம் தன் மகனுக்கு ஆசிர் அளித்ததாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் தன் செல்வத்தை (எபிரேயத்தில்: ஆசிர்) விட்டுச்செல்கின்றார்.

ஆபிரகாமை அடக்கம் செய்யும் சடங்கில் இஸ்மயேலும் பங்கேற்கின்றார். ஆபிரகாம் அடக்கம் செய்யப்படும் இடம் மக்பேலா குகை. இந்த இடத்தைத்தான் அவர் எபிரோனிடமிருந்து விலைகொடுத்து வாழ்கின்றார். ஈசாக்கின் திருமண நிகழ்வு மீண்டும் ஒருமுறை எழுதுகின்றார் ஆசிரியர் (25:20). 

ரெபேக்கா மலடியாயிருக்கிறார். 20 ஆண்டுகளாக பிள்ளைப்பேறின்றி இருக்கிறார். அவரின் இடத்தில் வேறு யாரையும் வைத்துப் பார்க்க நினைக்காத ஈசாக்கு அவருக்காக இறைவனிடம் மன்றாடுகின்றார். இறைவன் அவரது செபத்தைக் கேட்கின்றார். ஒரு ஆண் ஒரு பெண்ணுக்காகச் செய்யும் செபம் இதுதான் முதல் மற்றும் இறுதி முறை. வெறுமையில் இருந்த ரெபேக்காவின் வாழ்க்கையில் வளமையைக் கொண்டு வருகின்றார் இறைவன். குழந்தையில்லாத நிலை போய் இரட்டைக்குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

இப்பொழுதான் பிரச்சினை. குழந்தைகள் இருவரும் வயிற்றினுள்ளே சண்டையிட்டுக் கொள்கின்றனர். 'ஏதோமுக்கும், இஸ்ராயேலுக்கும் பிற்காலத்தில் இருந்த சண்டை, சச்சரவுகளையும், போர்களைம்' முன்னோட்டமாக எழுதுகின்றார் ஆசிரியர். சண்டையிட்டுக் கொண்டிருக்கும் குழந்தைகளை நினைத்து வருந்துகின்ற ரெபேக்கா ஆண்டவரிடம் முறையிடுகின்றார்.

சமயம் தோன்றிய வரலாறு என்றும் வியப்பாகவே இருக்கின்றது. மனிதர் எப்போது கடவுளைத் தேடுகின்றனர்? தன் ஆற்றல் முடியும் இடத்தில்தான் கண்களை உயர்த்திப் பார்க்கின்றான். 'தன் ஆற்றலில் ஒன்றுமில்லை' என்று உணர்கின்ற ஈசாக்கு ஆண்டவரிடம் மன்றாடுகின்றார். 'தன்னால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை' என்று உணர்கிற ரெபேக்கா ஆண்டவரிடம் முறையிடுகின்றார். வாழ்க்கையில் நம் முன்னால் எப்போதும் ஒரு திரைச்சீலை தொங்கிக் கொண்டே இருக்கின்றது. திரைச்சீலைக்குப் பின் என்ன இருக்கும் என்று நமக்குத் தெரியாது. ஓரளவுக்கு ஊகித்துக்கொள்ளலாம். 'இப்படித்தான் - அப்படித்தான்!' என அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இந்தத் திரைச்சீலைக்குப் பின் என்ன இருக்கும்? என்ற ஆர்வம் தான் நம்மைக் கடவுளைத் தேடச் சொல்கிறது. 'இப்படி இருக்க வேண்டும்!' என சில நேரங்களில் கடவுளிடம் முறையிடுகின்றோம். 'இப்படி இருக்குமோ?' எனப் பயப்படுகின்றோம். 'இப்படி இருந்துவிட்டால் என்ன செய்வது? எனக் கலங்குகிறோம். மனிதர்கள் அனுபவிக்கும் உச்சகட்ட துன்பம் இதுதான். தன் அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தால் காலநிலையை முன்னறிவிக்கும் மனித மூளை, தனி மனிதரின் வாழ்க்கைநிலையை முன்னறிவிப்பதில் தோற்றுத்தான் போகின்றது. 'என்னவும் நடக்கலாம்!' என்ற மனநிலையிலேயே நம்மை வைத்திருக்கின்றது வாழ்க்கை. பாவம் மனிதர்கள்! 'ஒவ்வொரு முறை நாம் காலண்டரில் அப்பாய்ண்ட்மெண்ட் எழுதும்போதெல்லாம் கடவுள் சிரிப்பார்' என்று சொல்வார்கள்.

இந்த பரிதாப நிலையிலிருந்து வெளிவர ஒரே வழி இறைவனைச் சராணகதியடைவது. அதையே ரெபேக்கா செய்கின்றார். இறைவனும் உடனடியாகப் பதில் தருகின்றார். 'எனக்கு இப்படி நடப்பது ஏன்?' என்ற ரெபேக்காவின் கேள்வியைப்போலத்தான், புதிய ஏற்பாட்டில் மரியா கேட்கும், 'இது எங்ஙனம் ஆகும்?' என்ற கேள்வியும் இருக்கின்றது. 

'எனக்கு இப்படி நடப்பது ஏன்?' என்ற கேள்வியைப்போல நாம் கேட்கும் கேள்வி, 'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?' என்பதுதான்.

இரண்டு கேள்விகளுக்கும் வித்தியாசம் இருக்கின்றது. முதல் கேள்வியில் 'ஏன்?' என்ற வார்த்தை காரணத்தைப் பதிலாகத் தேடுகின்றது. ஆனால் இரண்டாம் கேள்வியில் மற்றவரோடு நாம் செய்யும் ஒப்பீடு ஒளிந்திருக்கிறது. 'எல்லாரும் நல்லா இருக்காங்க! நான் மட்டும் ஏன்?' என்ற பொறாமையும், விரக்தியும், கோபமும் இருக்கிறது. 

'ஏன்' என்ற வார்த்தைதான் நமக்கு அதிகமாக மன அழுத்தத்தைக் கொண்டு வருகின்றது. ஏனெனில் இந்தக் கேள்விக்குப் பல நேரங்களில் பதில்கள் இல்லை. அல்லது, நாம் விரும்பும் பதில்கள் கிடைப்பதில்லை. இன்றைக்கு எல்லாருமே மன அழுத்தம் பற்றிப் பேசுகின்றனர். எல்.கே.ஜி, யூ.கே.ஜி. படிக்கும் குழந்தைகளுக்குக் கூட 'மன அழுத்தத்திலிருந்து விடுதலை பெறுவது எப்படி' என்ற கருத்தமர்வுகளும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. 

ஏன் படிக்கணும்? ஏன் பள்ளிக்கூடம் போகணும்? ஏன் பரிட்சை எழுதணும்? ஏன் மார்க் வாங்கணும்? ஏன் வேலை பார்க்கணும்? ஏன் சம்பளம் வாங்கணும்? ஏன் கல்யாணம் முடிக்கணும்? ஏன் குழந்தை பெற்றுக்கொள்ளணும்? ஏன் கோயிலுக்குப் போகணும்? ஏன் சாமி கும்பிடணும்? ஏன் ஓட்டுப் போடணும்? ஏன் சாப்பிடணும்? ஏன் தூங்கணும்? ஏன் சொந்தக்காரங்க? ஏன் நண்பர்கள்? ஏன் சண்டை போடணும்? பின் ஏன் சமாதானம் பண்ணணும்? என்று நாம் கேட்கும்போதெல்லாம் நம்மையறியாமல் மன அழுத்தம் நம்மீது ஏறி அமர்ந்து கொள்கின்றது.

மனஅழுத்தத்திலிருந்து விடுதலை பெற முதல் வழி அது சம்பந்தப்பட்டவரிடம் பேசிவிடுவது. 'ஏன் வேலை செய்யணும்?' என்று புலம்புவதற்குப் பதில் 'நான் பார்க்கும் இந்த வேலையில் உள்ள பிரச்சனை என்ன? இதை நான் எப்படி சமாளிப்பேன்?' என்று நம்மை ஆராய்ந்தால் அல்லது நமக்கு வேலை கொடுத்தவரிடம் அமர்ந்து பேசிவிட்டால் அழுத்தம் குறைந்து விடும். 'தன் கேள்வி கடவுள் சம்பந்தப்பட்டது' என்பதால் கடவுளிடம் முறையிடுகிறார் ரெபேக்கா.

ஒரு வகுப்பறைக்குள் நுழைகின்ற பேராசிரியர் தன் கையில் ஒரு கிளாசில் தண்ணீர் கொண்டு போகின்றார். தன் கையில் கிளாசை ஏந்துகின்ற பேராசிரியர், 'என் கையில் இருப்பது என்ன?' என்று கேட்கின்றார். சிலர் கிளாஸ் என்கின்றனர். சிலர் தண்ணீர் என்கின்றனர். சிலர் கிளாசில் தண்ணீர் என்கின்றனர். 'இதன் எடை எவ்வளவு?' என மீண்டும் கேட்கின்றார். 20 கிராம் முதல் 500 கிராம் வரை என பதில்கள் வருகின்றன. பேராசிரியர் தொடர்ந்து சொல்கின்றார்: 'இதன் எடை ஒரு பொருட்டல்ல. இதை நான் எவ்வளவு நேரம் கையிலே பிடித்திருக்கின்றேன் என்பதுதான் முக்கியம். ஒரு நிமிடம் இதை வைத்திருந்தால் ஒன்றுமில்லை. ஒரு மணிநேரம் இப்படியே பிடித்திருந்தால் என் வலது கை வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுவதும் பிடித்திருந்தால் ஒரு ஆம்புலன்சை நீங்கள் கூப்பிட வேண்டியிருக்கும். நீண்ட நேரம் கையில் வைத்திருக்கும்போது அதன் எடையும் நீண்டுகொண்டே போகிறது.'

'இதுபோலத்தான் நம்மில் இருக்கும் மனஅழுத்தமும். எந்நேரமும் நாம் சுமைகளைத் தூக்கிக்கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் நாம் தூக்க இயலாமல் சோர்ந்து போய்விடுகிறோம். சுமைகளை எவ்வளவு சீக்கிரத்தில் இறக்கி வைத்துவிடுகின்றோமே அவ்வளவிற்கு நமக்கு நல்லது. இந்தக் கிளாசையும் ரிப்ரஷ் செய்து சுமந்தால் இது சுமையாகவே தெரியாது. இன்று வீட்டிற்குச் செல்லும்போது எதையும் சுமந்து செல்லாதீர்கள். கல்லூரியில் உள்ளதை கல்லூரியில் விட்டுவிடுங்கள். வீட்டில் உள்ளதை வீட்டிலேயே விட்டுவிடுங்கள். ரிலாக்ஸ். விட்டதைப் பின் சுமங்கள். வாழ்க்கை இனிதாகும். சுமை எளிதாகும்!'

இன்று ரெபேக்கா சொல்லும் பாடமும் இதுதான்:

சம்பந்தப்பட்டவர்களிடம் சம்பந்தப்பட்டதை இறக்கி வைத்து விடுங்கள். தூக்கிக் கொண்டே திரியாதீர்கள். இன்னும் நாம் செல்ல வேண்டிய மைல்கள் ஏராளம்!

'எனக்கு இப்படி நடப்பது ஏன்?'

No comments:

Post a Comment