Saturday, September 7, 2013

எப்படித் தெரிந்து கொள்வேன்?


அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, 'வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்' என்றார். ஆபிராம் ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார் ... அதற்கு ஆபிராம், 'என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்து கொள்வேன்?' என்றார். 

'எப்படித் தெரிந்து கொள்வேன்?'

யூத சமயத்திலும், சமூகத்திலும் ஒரு மனிதன் தனக்கென பிள்ளையும், தான் இறந்தபின் புதைப்பதற்கென கல்லறையும், வாழும்போது நீடிய ஆயுளையும் பெற்றிருந்தான் என்றால் அவன் இறைவனின் ஆசீர் பெற்றவராகக் கருதப்பட்டான். ஆபிரகாம் நீடிய ஆயுளோடு இருக்கின்றார். மம்ரே அருகில் மக்பேலாவில் தனக்கும், தன் குடும்பத்திற்குமென ஒரு கல்லறையை வாங்குகின்றார் (தொநூ 23:17). இப்போது அவருக்குக் குறையாக இருந்தது பிள்ளைப்பேறு மட்டுமே. இந்தக் குறையோடு வாழ்ந்து கொண்டிருந்த ஒருவருக்கு ஆண்டவராகிய கடவுள் நம்பிக்கை தருகின்றார். கடவுள் தரும் நம்பிக்கையைத் தனதாக்கிக் கொள்ள ஆபிரகாம் இறைவனை நம்புகின்றார். இறைவன் தரும் நம்பிக்கையும், இறைவன் மேலுள்ள நம்பிக்கையும் தான் இன்றைய கேள்வியின் பின்புலம்.

'உன் வழிமரபினர் வானத்து விண்மீன்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் இருப்பர்' என்ற இறைவனின் வாக்குறுதியின் மேல் நம்பிக்கை கொள்கின்றார் ஆபிரகாம். 'இந்த நம்பிக்கையை நான் எப்படிக் கண்ணால் கண்டுகொள்வேன்?' என்ற ஆபிரகாமின் கேள்விக்கு விடையாக கடவுள் ஆபிரகாமோடு உடன்படிக்கை செய்து கொள்கின்றார். 

முந்தைய பதிவில் உடன்படிக்கை உறவைப் பற்றி எழுதியிருந்தோம். உடன்படிக்கையின் வெளியடையாளம் இரத்தம். ஆடு அல்லது பசு அல்லது பறவைகளின் இரத்தம் உடன்படிக்கை செய்து கொள்ளும் இரு நபர்களின்மேலும் தெளிக்கப்படும். இருவர்மேல் தெளிக்கப்பட்ட இரத்தமும் ஒன்று என்பது போல் இருவரும் இனி ஒன்றாக இருப்பர் என்பதை இது குறித்தது. இஸ்ராயேல் மக்கள் இரத்தத்தில்தான் உயிர் தங்கியிருப்பதாக நம்பினர். இப்படியாக, இரத்தம் உடன்படிக்கைக்கு உயிர் கொடுக்கின்றது. மேலும் ஒரு புதிய அடையாளம் இப்பகுதியில் தரப்பட்டுள்ளது. ஆபிரகாம் உடன்படிக்கைக்காகக் கொண்டு வரும் பசு, வெள்ளாடு, செம்மறியாடு அனைத்தையும் இரண்டு துண்டுகளாக வெட்டி வைக்கின்றார். உடன்படிக்கையை மீறும் நபரும் இப்படி இரண்டு துண்டுகளாகக்கப்படுவார் என்பதையும் இது அடையாளப்படுத்துகின்றது.

ஆபிராமின் கேள்வியின் மையமாக இருக்கும் ஒரு வார்த்தை: 'நம்பிக்கை'. ஆபிரகாமை நம்பிக்கையின் தந்தை என அழைக்கின்றது விவிலியம். இஸ்லாமிய சகோதரர்களின் குரானில் இவர் 'இப்ராஹிம்' எனவும், யூதர்களின் தனாக்கிலும், கிறிஸ்தவர்களின் பைபிளிலும் இவர் 'ஆபிரகாம்' என அழைக்கப்படுகின்றார். புத்தகங்களின் மதங்கள் என அழைக்கப்படும் இந்த மூன்று மதங்களும் இவரின் நம்பிக்கையை வெகுவாகவே பாராட்டுகின்றன.

நம்பிக்கை என்றால் என்ன? 'நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை' (எபிரேயர் 11:1). 

நம் வாழ்வில் நாம் வைத்திருக்கக் கூடாத நம்பிக்கைகள் மூன்று:

1. மூடநம்பிக்கை

2. அவநம்பிக்கை

3. அதீத நம்பிக்கை

தேர்வுக்கு செல்லும் ஒரு மாணவன், தான் மேற்கு நோக்கிப் பார்த்திருக்கும் வகுப்பறையில் தேர்வு எழுதினால்தான் பாஸ் ஆவேன் என நினைப்பது மூடநம்பிக்கை. அதே மாணவன், நான் என்ன படித்தாலும் என்னால் பாஸ் ஆக முடியாது என நினைத்தால் அது அவநம்பிக்கை. அல்லது, நான் படிக்காமலே பாஸ் ஆவேன் என நினைத்தால் அது அதீத நம்பிக்கை.

இந்த மூன்று நம்பிக்கைகள் நம் முன்னேற்றத்திற்குத் தடையாகவே இருக்கின்றன.

இதற்கு மாறாக, நமக்குத் தேவையான நம்பிக்கைகள் மூன்று:

1. தன்னம்பிக்கை

2. பிறர்மேல் நம்பிக்கை

3. இறைமேல் நம்பிக்கை

நம்பிக்கை ஒரு பயணம். அது நம் உள்ளத்திலிருந்து தொடங்க வேண்டும். 'என்னால் முடியும்! எனக்கு இது நன்றாகவே நடக்கும்!' என நேர்மறையாக நாம் எண்ணும்போது நம் தன்னம்பிக்கை வலுப்பெறுகின்றது. எல்லோருக்கும் தன்னம்பிக்கை இருக்கத்தான் செய்கின்றது. சிலரின் தன்னம்பிக்கை 'கல்யாண் ஜூவல்லர்ஸ்' போல ஜொலிக்கிறது. சிலரின் நம்பிக்கை களிமண் பூசப்பட்ட புத்தர் சிலையாய் காய்ந்து போகின்றது. நமக்கு நாமே கொடுக்கும் வாக்குறுதிகளுக்கு நாம் பிரமாணிக்கமாய் இருக்கும்போது நம் தன்னம்பிக்கை வளர்கின்றது. 'நாளைக்கு காலைல நான் 5:30 மணிக்கு எழுந்திருப்பேன்' என இரவு தூங்கச் செல்லும்போது நமக்கு நாமே வாக்குறுதி கொடுக்கிறோம் என வைத்துக்கொள்வோம். 5:30 மணிக்கு அலாரமும் வைத்து விடுகின்றோம். அதிகாலை 5:30 மணிக்கு அலார்ம் அடிக்கின்றது. நாம் எழுகின்றோம். சில நேரம் எழுந்தவுடன் 'ஸ்நூஸ்' தட்டிவிட்டு இன்னும் ஒரு 5 நிமிடம் குட்டித் தூக்கம் போடுகின்றோம். அல்லது சில நேரங்களில் அலார்மைக் கண்டுகொள்வதில்லை. அலார்ம் அடித்தவுடன் எழாமல் இருப்பது சின்னக் காரியமா? இல்லை. ஒவ்வொரு முறையும் அலார்மைக் கண்டுகொள்ளாதபோதெல்லாம் நம் மனம் என்ன சொல்லும் தெரியுமா? ஒரு சாதாரண சின்ன வாக்குறுதியையே உன்னால கீப் அப் பண்ண முடியல. நீ எப்படி பெரியவைகளை சாதிப்பாய்? எனக் கேட்கும். நம் வாக்குறுதிகளை நாம் கீப் அப் பண்ணும்போது நம் தன்னம்பிக்கை ஓவியத்தில் வண்ணம் தீட்டுகின்றோம். நம் வாக்குறுதிகளிலிருந்து தவறும்போது நம் தன்னம்பிக்கை ஓவியத்தில் ஓட்டை போடுகிறோம்.

தன்மேல் உள்ள நம்பிக்கை பிறர்மேல் உள்ள நம்பிக்கையாகப் பயணம் செய்கின்றது. 'தன்னம்பிக்கை' உள்ள ஒருவன்தான் மற்றவரையும் நம்புவான். இன்று நம் வாழ்க்கை நம் சமுதாயத்தின் மேல் நாம் நம்பிக்கை இழந்துவிட்டதுபோலவே இருக்கின்றது. சொந்த வீட்டில் ஒருவர் மற்றவரை நம்புவதில்லை. படிக்கும் இடத்தில், வேலை பார்க்கும் இடத்தில், பயணம் செய்யும் போது என அனைத்து இடங்களிலும் மற்றவர் மேல் உள்ள நம்பிக்கை குறைந்து பயம் நம்மைத் தொற்றிக்கொண்டுவிட்டது.

தன்னம்பிக்கை வழிந்தோடி இறைவனிடம் சரணாகதியாகின்றது. இறைவனே எல்லாம் என்ற நிலைக்கு வருவதே நம்பிக்கையின் நோக்கம். இறைவன் மேல் உள்ள நம்பிக்கையை வளர்க்க நாம் பற்றுக்களை விடவேண்டும். சின்ன எடுத்துக்காட்டு: உயரம் தாண்டும் போட்டியில் கலந்து கொள்ளும் ஒருவர் ஒரு கம்போடு ஓடி வருகின்றார். ஓடி வந்து அந்தக் கம்பை வைத்து ஊன்றி மேலே எழும்புகின்றார். மேலே எழும்பும் அவர் ஒரு கட்டத்தில் அந்தக் கம்பை விடத் துணிந்தால்தான் அடுத்த பக்கத்திற்கு அடிபடாமல் கடந்து செல்ல முடியும். 'இல்லை. இந்தக் கம்புதான் என்னை உயரத்திற்குக் கொண்டு வந்தது. இதை நான் விட மாட்டேன்' எனச் சொல்வாராகில், ஒன்று அவர் கீழே விழுந்து விடுவார். அல்லது அளவிற்கான வைக்கப்படும் குச்சியைச் சரித்துவிடுவார். போட்டியில் தோல்வியடைவார். ஆபிரகாமிற்குத் தெரிந்தது தான் எந்த இடத்தில் கம்பைக் கைநழுவ விடவேண்டும் என்று. நமக்கு?

ஒரு கிராமத்தில் மழைக்காக பிரார்த்தனை செய்வதற்காக எல்லாரும் மாலை நேரம் ஒரு கோவிலில் கூடினார்களாம். ஆனால் ஒரே ஒரு சிறுவன் மட்டும்தான் குடையோடு வந்திருந்தானாம். அதுதான் நம்பிக்கை. 'நம்பிக்கை! அதானே எல்லாம்!'

'எப்படித் தெரிந்து கொள்வேன்?'


4 comments:

  1. Anonymous9/07/2013

    God who. Increased. the. descenda. OfAbraham. like the stars of heaven. &sands. of.beacĥ. is. Doing miracles. In. Our. Lives. Too. even. without. Ourknowłedge.
    Let's. hold. His hands. tīght. &walk the journey of life.Let's surrender oursełves. totally into His hands

    A word of appreciation to the Blogger

    ReplyDelete
  2. தம்பி கோடு போட்ட சட்டை!
    ரொம்ப அற்புதமா எழுதுறீங்க...

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. Anonymous9/08/2013

    தன்னம்பிக்கை இருப்பவனுக்குத்தான் பிறர் நம்பிக்கை இருக்கும் ஆகவே தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வோம் எனக்கு மிகவும் பிடித்த. விசுவாசத்தின் தந்தை அபியை நினைவு படுத்தியதற்கு எழுத்தாளருக்கு ஷொட்டுக்கள் .நன்றி
    எல்லோருக்கும் அன்னையின் திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete