Tuesday, September 10, 2013

ஏன் இப்படிச் சிரித்தாள்?


பின்பு அவர்கள் (மூன்று மனிதர்) அவரை (ஆபிரகாமை) நோக்கி, 'உன் மனைவி சாரா எங்கே?' என்று கேட்க, அவர் 'அதோ கூடாரத்தில் இருக்கிறாள்' என்று பதில் கூறினார் ... எனவே, சாரா தமக்குள் சிரித்து, 'நானோ கிழவி. என் தலைவரோ வயது முதிர்ந்தவர். எனக்கா இன்பம்?' என்றாள். அப்போது ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, 'நான் வயது முதிர்ந்தவளாய் இருக்க, எனக்கு உண்மையில் பிள்ளை பிறக்குமா என்று சொல்லி சாரா ஏன் இப்படிச் சிரித்தாள்? ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ! ... சாராவோ, 'நான் சிரிக்கவில்லை' என்று சொல்லி மறுத்தார் ... அதற்கு ஆண்டவர், 'இல்லை, நீ சிரித்தாய்!' என்றார்... ஆபிரகாம் தமக்குப் பிறந்த, சாரா தமக்குப் பெற்றுக்கொடுத்த, மகனுக்கு 'ஈசாக்கு' (சிரிப்பவன்) என்று பெயரிட்டார் ... அப்போது சாரா, 'கடவுள் என்னைச் சிரிக்க வைத்தார் என்றும் இதைக் கேட்கும் அனைவரும் என்னோடு சேர்ந்து சிரிப்பர்' என்றும் சொன்னார். (தொடக்கநூல் 18:9,12-16, 21:3,7)

ஆபிரகாமிற்கு இறைவன் தந்த வாக்குறுதியின் அடுத்த கட்டம். இறைவனே மூன்று தூதர்கள் வடிவில் ஆபிரகாமைச் சந்திக்க வருகின்றார். 'மூவொரு இறைவன்' கொள்கைக்கான அடிப்படையை திருச்சபை இந்த நிகழ்வில் இருந்தே தொடங்குகின்றது. இது நடக்கும் இடம் தேவதாரு மரத்திற்கருகில். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் 'இது இந்த இடம்,' 'அது அந்த இடம்' என்ற பிரிவுகள் எல்லாம் கிடையாது. மரங்களையும், கற்குவியல்களையும் வைத்தே அவர்கள் இடங்களுக்கு அடையாளம் சொன்னார்கள். கருவாலி மரத்தருகில், தேவதாரு மரத்தருகில், பேரீச்சை மரத்தருகில் என நிறைய மரங்கள் இடங்களுக்கு  அடையாளங்களாக உள்ளன. இறையியல் அடிப்படையில் பார்த்தால் மரத்திற்கும் இறைப்பிரசன்னத்திற்கும் தொடர்பு இருக்கவே செய்கின்றது. ஏதேன் தோட்டத்தில் கடவுள் விலக்கி வைத்த மரம், ஆபிரகாமின் தேவதாரு மரம், யாக்கோபின் கருவாலி மரம், டெபோராவின் பேரீச்சை மரம், அபக்கூக்கின் அத்தி மரம், தொடர்ந்து புதிய ஏற்பாட்டில் நத்தனயேல் நின்ற அத்திமரம், சக்கேயு ஏறிய முசுக்கொட்டை மரம், இறுதியாக இயேசுவின் சிலுவை மரம் என மரங்கள், இறைவன் மனுக்குலத்தைச் சந்திக்க வரும் இணைப்புக் கோடுகளாகவே இருக்கின்றன. இன்று நாம் ஏறக்குறைய எல்லா மரங்களையும் வெட்டி கான்கிரீட் மரங்களை வைத்து விட்டோம். 'அந்த மரத்திற்கருகில்', 'இந்த மரத்தற்கருகில்' என்று சொல்லும் காலம் போய் இனி வரும் தலைமுறை, 'இதுதான் வேப்பமரம்,' 'இதுதான் புளியமரம்' என்று 'தாவரக்காட்சி சாலையில்' (மிருகக்காட்சி சாலை போல) காண வேண்டிய நாள் விரைவில் வந்துவிடும்!

தேவதாரு மரத்தருகே சந்திக்கின்ற மனிதர்களுக்கு விருந்தோம்பல் செய்கின்றார். எபிரேய சமூகத்தின் புண்ணியங்களின் பட்டியலில் முதலில் இருந்தது விருந்தோம்பல். விருந்தினரை மகிழ்விக்க எதுவும் செய்யலாம் என்று சொன்னது மிஷ்னா. 'நாம் இன்று யாரையாவது நம் வீட்டில் ஏற்றால்தான், நாளை நாம் ஒன்றுமில்லாமல் சுற்றித் திரியும்போது நம்மை யாராவது ஏற்றுக்கொள்வார்கள். ஏனெனில், நாம் விதைப்பதைத்தான் அறுவடை செய்வோம்' என்பது அவர்களின் எண்ணம். ஆபிரகாமின் விருந்தோம்பல் மிக தடபுடலாக இருக்கின்றது: அப்பங்கள், இளங்கன்று, வெண்ணெய், பால். இவையெல்லாம் ஒரே நாளில் செய்யக்கூடியவை அல்ல. ஏறக்குறைய 15 நாட்களாவது மூன்று மனிதர்கள் ஆபிரகாமோடு இருந்திருக்க வேண்டும். இந்த மூன்று மனிதர்களும் இறைத்தூதர்கள் அல்லது ஆண்டவர் என்பது அவர்கள் சாராவைத் தேடும்போதுதான் வெளிப்படுகிறது. ஏற்கனவே கடவுள் தான் ஆபிரகாமிற்குக் கொடுத்த வாக்குறுதியை மீண்டும் புதுப்பிக்கின்றார். இந்த வாக்குறுதியைக் கேட்டவுடன் கூடாரத்தில் இருந்த சாரா சிரிக்கின்றார். 

ஒன்னுமே படிக்காத பையனைப் பார்த்து ஒரு ஹெட்மாஸ்டர், 'தம்பி, இந்த வருடம் நீதான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்குவ!' என்று சொன்னா அவன் என்ன சொல்வான்? 'ஹலோ பாஸ், என்ன கிண்டலா?' என்று கேட்பான். தனக்குள் சிரித்துக் கொள்வான். 'யார் பெத்த பிள்ளையோ இப்படியெல்லாம் நம்மைப் பற்றிக் கனவு காணுது' என்று சொல்லியிருப்பான்.

சாராவின் வார்த்தைகளும் அப்படித்தான் இருக்கின்றன. 'பொம்பள சிரிச்சா போச்சு! புகையில விரிச்சா போச்சு' என்பார்கள் (இதைப்பற்றிய அலசல் மற்றொரு நாள்!). சாராவின் சிரிப்பு இறைவனின் கோபமாக மாறுகிறது. மறுபடியும், 'ஏன் சிரிச்ச?' என்று கேட்டவுடன் சாராவுக்கு பயம் வந்து விடுகிறது.

இதுல ஒரு நல்ல மேனேஜ்மன்ட் விதி இருக்கிறது. நாம எப்போ சிரிப்போம்? காமெடி புரோகிராம் பார்த்தா, யாராவது ஜோக் சொன்னா, ஏதாவது துணுக்கு வாசித்தா சிரிப்போம். இது போக நாம அடுத்தவர்களின் இயலாமையைப் பார்த்தும் சிரிப்போம். 'தத்தி தத்தி செல்லும் குழந்தை தடுக்கி விழுந்தால்,' 'மாமா' என்பதற்குப் பதிலாக 'ஆமா' என்றால், நம் தாய்மொழி தெரியாத ஒருவர் நம் தாய்மொழியில் பேச முயற்சித்தால், நமக்குத் தெரிந்த ஒன்று மற்றவர்களுக்குத் தெரியவில்லையென்றால். இதுபோன்ற நேரங்களில் நமக்கு சிரிப்பு வரும். இப்படிச் சிரிக்கும்போது நம் மனம் நமக்குள்ளே சொல்வது என்னவென்றால், 'எனக்கு எல்லாம் தெரியும்;!' என்பதுதான். சாராவின் மனமும் அப்படித்தான் சொல்லியிருக்க வேண்டும். யாராவது நம்ம இயலாமையைப் பார்த்துச் சிரிச்சா, அவங்களப் பார்த்து, 'ஏன்டா சிரிச்ச?' அப்படின்னு கேள்வியைக் கேளுங்க. அவங்க பயந்துடுவாங்க. அடுத்தவங்க நம்மள பார்த்துச் சிரிச்சா முதலில் நிலைகுலைவது நம் 'சுயமதிப்பு' (செல்ஃப் எஸ்டீம்). நாம் ஏன் நிலைகுலைய வேண்டும்? எதிர்த்து ஒரு கேள்வி கேட்டால் போதும். அவர்கள் பயந்த ஓடிவிடுவார்கள். இதுதான் சிறந்த செல்ஃப் ஹெல்ப்.

இன்றைய நம் விவிலியப் பகுதியில் 'சிரிப்பு' என்கிற வார்த்தை 7 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. 'இதெல்லாம் நடக்குமா?' என முதலில் ஆபிரகாம் சிரித்தார். பின் சாரா சிரித்தாள். 'நடந்துடுச்சு பார்த்தீங்களான்னு' கடவுள் சிரித்தார். 'பார்ரா இவளுக்கு வந்த வாழ்வ' என்று பக்கத்துவீட்டார் சிரித்தார்கள். 'நடக்குமா?' என்ற கேள்விக்கும், 'நடந்துடுச்சு' என்ற பதிலுக்கும் இடையே நிற்பதுதான் சிரிப்பு. ஈசாக்கு என்றால் 'அவன் சிரிப்பான்' அல்லது 'சிரிப்பவன்' என்பது பொருள். 

மனிதன் முதன் முதலாக எப்போது சிரித்திருப்பான் என்ற ஆராய்ச்சியில் முனைந்திருக்கிறது ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம். சிரிப்பு மனிதர்கள் மட்டும் பெற்றிருக்கும் உன்னதமான உணர்வு. மகிழ்ச்சியில் வரும் சிரிப்பு, மற்றவரின் இயலாமையிலும், தன் இயலாமையிலும் வரும் சிரிப்பு, ஆணவத்தின் சிரிப்பு, 'உதடுகள் சிரிக்கின்றன, ஆனால் என் கண்கள் அழுவதை நீ பார்க்கவில்லையா' என்ற சிரிப்பு, 'வாங்க...உங்களத்தான் நினைச்சிட்டிருந்தேன்'னு சிரிச்சுகிட்டே வரவேற்று, 'இவன் ஏன் வந்தான்?' என்று உள்ளம் கேட்கும் சிரிப்பு. 'அந்தப் பொண்ணு இன்னைக்கு என்னைப் பார்த்துச் சிரிச்சுச்சுடா' என்று தவமிருக்கும் சிரிப்பு. அந்தப் பொண்ணு மட்டுமா சிரிச்சுச்சு, ஊரே சிரிச்சுச்சு! 'அப்ப ஏன்ட்ட சிரிச்சி சிரிச்சி பேசுனதெல்லாம் நடிப்பா?' என்று கைவிடப்பட்ட காதலியரும், காதலரும் 'பிளாஷ்பேக்' பண்ணிப் பார்க்கும் சிரிப்பு.

'சிரிக்கக் கூடாத இடத்தில் ஒருத்தி சிரித்ததால் மகாபாரதம் வந்தது. சிரிக்க வேண்டிய இடத்தில் ஒருத்தி சிரிக்காததால் இராமாயணம் வந்தது' என்பார் வைரமுத்து. 

நம் முகம் சிரிக்க பயன்படுத்தும் தசைநார்கள் 3 மட்டுமே. ஆனால் கோபமாயிருக்க 23 தசைநார்கள் வேலை செய்யணுமாம். அப்படியிருக்க ஏன் நாம் சிரிக்கக் கூடாது. மிகவும் மலிவான, மிகவும் எளிதான, மிகவும் மேன்மையான பேஸியல் கிரீம் சிரிப்புதான். மகிழ்ச்சியாய் இருந்தால்தான் சிரிக்கணும் என்பது கிடையாது. நாம் சிரித்தாலே மகிழ்ச்சியாகிவிடுவோம்.

'நம்மால இந்த உலகத்துல எதையும் மாற்ற முடியாதுன்னு' தெரிஞ்சும் ஏன் மூஞ்சை 'உம்முன்னு' வைக்கணும். சிரிப்போம். சிரிப்பாய் உலகை வெல்வோம். வாய் விட்டுச் சிரிச்சா, நோய் விட்டுப் போகும்! 

யாருடைய இயலாமையைப் பார்த்துச் சிரிக்க வேண்டாம். நமக்கும் இயலாமைகள் ஏராளம். 'Smile is the shortest distance between two people'. சிரிப்பால் இணைவோம். 

The lesson for us is this. There is a beautiful dialogue in the film 'Gladiator'.

"Death smiles at everybody. But, only a few, only the brave smile back...."

Life also smiles at everybody. But, only a few, only the brave smile back...

Smile ... we have still miles to go...


'சாரா ஏன் இப்படிச் சிரித்தாள்?'

'நான் சிரிக்கவில்லை!'

'இல்லை. நீ சிரித்தாய்!'

No comments:

Post a Comment