Saturday, September 21, 2013

தலைமகனுரிமையால் எனக்கு என்ன பயன்?


ஒருநாள் யாக்கோபு சுவையான கூழ் சமைத்துக் கொண்டிருந்தபொழுது, ஏசா களைத்துப்போய் திறந்தவெளியிலிருந்து வந்தான். அவன் யாக்கோபிடம், 'நான் களைப்பாய் இருக்கிறேன். இந்த செந்நிறக் கூழில் எனக்குக் கொஞ்சம் கொடு' என்றான். அவனுக்கு 'ஏதோம்' என்னும் பெயர் வழங்கியதற்கு இதுவே காரணம். யாக்கோபு அவனை நோக்கி, 'உன் தலைமகனுரிமையை இப்போதே எனக்கு விற்றுவிடு' என்றான். அவன், 'நானோ சாகப்போகிறேன். தலைமகனுரிமையால் எனக்கு என்ன பயன்?' என்றான். (தொடக்கநூல் 25:29-32)

'எனக்கு இப்படி நடப்பது ஏன்?' என்று முறையிட்ட ரெபேக்காவிற்கு, 'அது அப்படித்தான். உன் வயிற்றில் இரண்டு இனங்கள் இருக்கின்றன. இளையவன் தன் அண்ணனையே மேற்கொள்வான்' என்று பதில் கூறுகிறார்.

கடவுள் சொன்னபடியே இரண்டு குழந்தைகள் பிறக்கின்றனர். முதலாவது பிறக்கின்ற மகன் ஏசா (முடி அடர்ந்தவன் என்பது பொருள்), இரண்டாவது மகன் யாக்கோபு (ஏமாற்றுபவன் என்பது பொருள்). இரண்டாவது மகன் தன் அண்ணின் குதிங்காலைப் பற்றிக் கொண்டு பிறந்தான் எனச் சொல்லப்பட்டுள்ளது. விவிலியத்தில் 'குதிங்கால்' என்பது அதிகாரத்திற்கு அடையாளம் (காண். தொநூ 3:15). பிறக்கும்போதே தான் முன்னுரைக்கப்பட்டவாறு தன் அண்ணனின்மேல் அதிகாரம் செலுத்துகிறான் யாக்கோபு. ஏசா வளர்ந்தபோது வேட்டையாடுபவராகிறான். யாக்கோபு வீட்டிலேயே 'பண்புள்ளவனாய்' வளர்கிறான் (ஏமாற்றுவதுதான் பண்பா!).

இன்றைய நம் கேள்வி இடம் பெறும் நிகழ்வு நடக்கும் இடம் சமையலறை. சமையல் செய்து கொண்டிருக்கிறான் யாக்கோபு. பசியாய் வருகின்றான் ஏசா. 'உணவு கேட்கின்றான்' அண்ணன். 'தலைமகனுரிமை' கேட்கின்றான் தம்பி. ஒருவனுக்கு வயிற்றுப் பசி. மற்றவனுக்கு உரிமைப் பசி. கடவுளை இந்த சீனில் இருந்து வெளியே எடுத்து விடுவோம். 'இது கடவுள் திட்டம்' என்றெல்லாம் இப்போது பேச வேண்டாம்.

ஒருவன் பசிக்காக தலைமகனுரிமையை விற்கின்றான். மற்றவன் அவனது பசியைப் பயன்படுத்தி தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்கிறான். இதில் எது சரி? எது தவறு? இரண்டுமே சரியா? இரண்டுமே தவறா?

முதலில் இளையவன், யாக்கோபின் செயலைப் பார்ப்போம். பசியால் வந்து உணவு கேட்கின்ற தன் அண்ணனிடம் உணவு வேண்டுமெனில், தலைமகனுரிமை கொடு என்கிறான். அப்படித் தலைமகனுரிமையில் என்ன இருக்கிறது? எபிரேய மரபில் தலைமகன் மட்டுமே தந்தையின் ஆசிரிலும், சொத்திலும், உரிமைப்பொருளிலும் முழு மற்றும் முதன்மை உரிமை பெறுபவன். 'சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்க' நினைக்கிறான் யாக்கோபு. இது யாக்கோபின் புத்திசாலித்தனமா? சந்தர்ப்பவாதமா? தன் சொந்த சகோதரனிடம் வியாபாரம் பேச வேண்டுமா?

இந்த நிகழ்வை வாசிக்கும்போது பாலாவின் 'பரதேசி' திரைப்படத்தின் ஒரு சீன் நினைவிற்கு வருகிறது. 'டீ எஸ்டேட்டில் எல்லோரும் காய்ச்சலால் செத்துக் கொண்டிருக்கின்றனர். அங்கே மருத்துவம் பார்க்க வருகிற ஒரு டாக்டர் நோயாளியைப் பார்த்து, 'நான் உனக்கு மருத்துவம் பார்க்கிறேன். ஆனால் நீ கிறிஸ்தவனாக மாறுகிறாயா?' எனக் கேட்கின்றார். உயிர்போகும் நிலையில் இருக்கும் நோயாளியும் சம்மதிக்கிறான்'. இதில் டாக்டர் புத்திசாலியா? சந்தர்ப்பவாதியா? அல்லது நோயாளி ஏமாளியா? கதியில்லாதவனா?

நான் சின்னப் பையனாக இருக்கும்போது வீட்டில் எங்க அப்பாவுக்கும், அம்மாவுக்கும் அடிக்கடி சண்டை வரக் காரணமாக இருந்தது 'கிறிஸ்தவ மதம்'. வாரம் முழுவதும் வேலை செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை மட்டும் வீட்டில் இருப்பார் எங்க அப்பா. வாரம் முழுவதம் சும்மா இருந்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை மட்டும் சர்ச்சுக்குப் போய்விடுவார் எங்க அம்மா. எங்க ஊரில் திருப்பலி கிடையாது. 12 கிமீ தள்ளி இருக்கின்ற சர்ச்சுக்கு பஸ் பிடித்துப் போய், பின் 20 நிமிடங்கள் நடந்து செல்ல வேண்டும். திருப்பலி 10 மணிக்கெல்லாம் முடிந்தாலும், எங்க அம்மா, 'இந்த மீட்டிங், அந்த மீட்டிங்,' 'பைபிள் கிளாஸ்,' 'மாதா சபை' என எல்லாம் முடிந்து சாயங்காலம் 6 மணிக்குத்தான் வருவார்கள். வீட்டில் காலை சமையல் கிடையாது. மதிய சமையல் கிடையாது. சாயங்காலம் வந்து ஏதாவது சமைப்பார்கள். சமையற்கட்டிலேயே சண்டை தொடங்கும். 'வீட்டில ரெண்டு பேர பட்டினி போட்டுட்டு (நானும் - நான் சின்ன வயசில சர்ச்சுக்குப் போனதே இல்லை, எங்க அப்பாவும்) என்ன வந்து கும்பிடுன்னு' உங்க சாமி சொல்லுதானு தொடங்கும் சண்டை. ஒவ்வொரு சண்டையிலும் எங்க அப்பா ஒரு வார்த்தை சொல்வார்: 'என்ன இருந்தாலும் உங்க தாத்தா பால்பவுடருக்காக கிறிஸ்தவர் ஆனவர்தான!'

இதன் அர்த்தம் எனக்கு கிறிஸ்தவ மிஷனரிகளின் வாழ்க்கையைப் படித்தபின்தான் தெரிந்தது. அதாவது எங்க ஊருக்கு வந்த கிறிஸ்தவ மிஷனரிகள் மேல்தட்டு மக்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். சாதாரண நிலையில் இருக்கின்ற, பசியால் வாடுகின்ற, எழுத்தறிவற்ற பாமர மக்களை மட்டும் தேடுவார்கள். 'நான் உங்களுக்குக் கோதுமை தருகிறேன், பால்பவுடர் தருகிறேன். நீங்க சர்ச்சுக்கு வாங்க!' என்று அழைத்துப் போவார்களாம். கொடுத்த உணவிற்குத் தகுந்த வேலையை முதலில் வாங்குவார்கள். பின் கழுத்தில் ஒரு செபமாலையைப் போட்டு அனுப்பிவிடுவார்களாம். இப்படி ஆனவர்களுக்குப் பெயர், 'வேதக்காரங்க!'. இன்றும் எங்கள் ஊரில் கிறிஸ்தவர்களை 'வேதக்காரங்க!' என்றே அழைக்கின்றனர். மிஷனரிகளின் வருகை ஒரு பக்கம் நம் மண்ணின் கல்வி, மருத்துவ முன்னேற்றத்திற்குக் காரணமாய் இருந்தது என்று சொன்னாலும், மற்றொரு பக்கம் அவர்கள் நம் கடவுள்களையெல்லாம் பேய்கள் என்று சொல்லி நம்மை ஏமாற்றி மூளைச்சலவை செய்துள்ளனர் என்பதும் உண்மை. 'நம்மைப் பயன்படுத்திக் கொண்டார்கள். நம் பசியைப் பயன்படுத்திக் கொண்டார்கள். நம் வறுமையைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.'

யாக்கோபும் தன் சகோதரனின் பசியைப் பயன்படுத்திக்கொள்கிறான். நான் எல்லீஸ் நகர் பங்கில் பணிபுரிந்த போது ஒரு இளம்பெண் வந்தார். சொந்த ஊர் மத்திய பிரதேசம் போபால் பக்கம் ஒரு சிற்றூர். மதுரையில் பாலங்கள் கட்டுவதற்காக அவரின் பெற்றோர் கான்ட்ராக்டில் அழைத்து வரப்பட்டார்களாம். பெற்றோர்கள் இறந்து விட்டனர். இவர் தன் உறவினர்களின் கூடாரத்தில் வளர்ந்திருக்கின்றார். தமிழ் நன்றாகப் பேசினார். 'எனக்கு 500 ரூபாய் அவசரமாக வேண்டும். எனக்கு ஏதாவது உங்க சர்ச்சில் வேலை கொடுங்க, நான் செய்றேன்' என்றார். 'இங்கு வேலை ஒன்றும் இல்லை. இன்னொரு நாள் பார்க்கலாம்' என்றேன். பெண் விடுவதாயில்லை. 'என்னைக் கூட நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். எனக்குப் பணம் ரொம்ப அவசரம்' என்றார். எனக்கு அழுகையே வந்து விட்டது.

இந்தப் பெண்ணை யாரும் எளிதாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் தானே! இன்றும் நாம் மற்றவரின் பசியைப் பயன்படுத்தி நம் வயிற்றை நிறைக்கத்தான் செய்கின்றோம். 'என்னை விட்டா நீ வேற எங்க போக முடியும்?' என்ற நிலையில் நாம் நமக்குக் கீழ் வேலைசெய்பவர்களைப் பயன்படுத்துவதில்லையா. இது இன்னும் சொஃபிஸ்டிகேட்டடாப் போய் நம் உறவுகளிலும் நாம் ஒருவர் மற்றவரை, அவர்களின் பசியை நம் மூலதனமாக்கிக் கொள்கிறோம். திருப்பூர் பனியன் கம்பெனி, கோவை நூல் கம்பெனியில் எல்லாம் 'சுமங்கலி திட்டம்' ஒன்று இருக்கிறது. 5 வருடங்கள் வேலை செய்தால் திருமணத்திற்குத் தேவையான நகைகளை வாங்குவதற்கு 1 இலட்சம் தருவார்களாம். இடையில் சம்பளம் கிடையாது. நல்ல உணவு, தங்குமிடம் கிடையாது. 5 வருடம் முடியப்போகும் நிலையில் பலரை 'உன் நடத்தை சரியில்லை' என்று பழி சுமத்தி வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். எங்க ஊரைச் சார்ந்த பலரும் இந்தத் திட்டால் பாழாய்ப்போயுள்ளனர். 'தன் திருமணத்திற்குப் பணம் கிடைக்கும்' என்று கானல்நீரையே கனவு கொண்டிருக்கும் இந்தப் பெண்களை இன்றும் முதலாளி வர்க்கம் பயன்படுத்தத்தானே செய்கின்றது. 'ஒருவன் பசியால் இருப்பது, வறுமையில் வாடுவது, தேவையில் உழல்வது, யாருமின்றித் தத்தளிப்பது, படிக்க வழியில்லாமல் இருப்பது' - இவையெல்லாம் யார் குற்றம்? இவர்களின் குற்றமா? அல்லது இவர்களை இப்படிப் படைத்த கடவுளின் குற்றமா?

ஆகவே, யாக்கோபு தன் சகோதரனின் பசியைப் 'பயன்படுத்திக்கொண்டது' குற்றமே!

நம்ம அண்ணன் ஏசாவைப் பார்ப்போம். 'ஏன்ப்பா. பசிக்குதுன்னா ... அதுக்காக என்ன கேட்டாலும் செய்துடுவியா?' 'பசியென்றால் பத்தும் பறந்துவிடும்' என்பார்கள். இந்தப் பழமொழியை ஆராய்ந்து பார்த்தேன். இந்தப் பழமொழி முதலில், 'பசியென்றால் பற்றும் பறந்துவிடும்!' என்றுதான் இருந்தது. 'பற்று' என்பது பேச்சு வழக்கில் 'பத்து' என மாறிவிட்டது. அதாவது, பசியென்று ஒருவன் இருந்தால், வறுமையில் ஒருவன் இருந்தால் அவன் சொந்தக்காரர்கள், பற்றுடையோர் அவன் அருகில் வரமாட்டார்கள் என்பது முதல் பொருள். இரண்டாவதாக, பசி நம் எல்லாப் பற்றுக்களையும் மறக்கச் செய்து விடும் என்ற பொருள். ஆகையால் தான், பற்றற்ற முனிவர்கள் 'பசியை, நோன்பை' தங்கள் முதல் கடமையாகக் கொண்டிருந்தனர். ஏசாவின் பசி, தலைமகனுரிமையில் மேல் இருந்த பற்றே வேண்டாம் எனச் சொல்லிவிட்டது. 

Emotional Intelligence என்ற நூலின் வழியாக ஒரு புதிய intelligence-ஐ அறிமுகப்படுத்திய டேனியல் கோல்மென் என்ற உளவியல் அறிஞர், மனிதரின் மனமுதிர்ச்சிக்கான முதல் பண்பு என முன்வைப்பது: 'delaying the gratification' - 'உடனடி இன்பங்களைத் தள்ளிப் போடுவது'. இதை நிருபணம் செய்ய ஒரு ஆய்வை நடத்துகின்றார்: 'ஐந்து வயதிற்குட்பட்ட, 1ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் 50 குழந்தைகள் ஆராய்ச்சிக்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றனர். ஒருநாள் அவர்கள் வகுப்பறையில் இருக்கும்போது அவர்களின் வகுப்பறைக்குள் வருகின்ற ஆசிரியை வழக்கமாகக் கொண்டு வரும் சாக்பீஸ், நோட்புக்கிற்குப் பதில் ஒரு வாளியோடு வருகிறார். குழந்தைகள் மத்தியில் சலசலப்பு. வாளியை உற்றுப் பார்க்கின்றனர். வாளி நிறைய ஜிலேபி. ரொம்ப சந்தோஷம். வாளியை மேசையில் வைக்கின்ற ஆசிரியை குழந்தைகளைப் பார்த்து, 'இன்னைக்கு உங்களுக்கு பாடம் கிடையாது!' என்கிறார். 'கண்ணா லட்டு திண்ண ஆசையா!' என்பது போல கைதட்டுகின்றனர். (இன்னைக்கும் எந்த டீச்சர் தங்கள் பசங்களிடம் பாடம் இல்லைன்னு சொன்னாலும் பசங்க சந்தோஷப்படுகின்றனர். எங்க யுனிவர்சிட்டியும் விதிவிலக்கல்ல!) 'இன்றைக்கு உங்க எல்லாருக்கும் ஜிலேபி கொடுக்கப்போறேன்' என்கிறார் ஆசிரியர். 'கண்ணா, ரெண்டாவது லட்டு திண்ண ஆசையா!' என்பதுபோல் ஆர்வமாகின்றனர். எல்லாருக்கும் ஜிலேபி பாக்கெட் கொடுத்தாயிற்று. டீச்சர், 'எனக்கு பிரின்சிபல் அறையில் ஒரு சில்லறை வேலை இருக்கிறது. நான் வர 15 நிமிடங்கள் ஆகலாம். நீங்க ஜிலேபியை சாப்பிடனும்னு நினைச்சா சாப்பிடலாம். ஆனா, யார் நான் வரும் வரை சாப்பிடாம வச்சிருக்காங்கலோ அவர்களுக்கு நான் இன்னும் இரண்டு பாக்கெட் கொடுப்பேன்' என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். இந்தக் குழந்தைகளின் செயல்பாட்டை கேமராக்கள் வழியாகக் கண்காணிக்கின்றனர் உளவியல் நிபுணர்கள். குழந்தைகளோட ரியாக்ஷன் எப்படி இருந்திருக்கும்? சில குழந்தைகள் டீச்சர் வெளிய போன உடனே ஜிலேபியை சாப்பிட்டுவிடுகின்றனர். சிலர் ரொம்ப ரெஸ்ட்லஸ்ஸாக கிளாக்கைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றனர். சிலர் தங்கள் பைகளில் ஒளித்து வைத்துக்கொண்டனர். சிலர் பக்கத்தில் இருக்கும் குழந்தைகளோடு '50-50' என்று பேரம் பேசினர். மற்றும் சிலர் ஜிலேபியை சாப்பிடமால் இறுதிவரை வைத்திருந்தனர். இதே குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானதும் இவர்கள் படிக்கும் கல்லூரி. வேலை பார்க்கும் இடங்களைத் தேடிச் செல்கின்றனர் உளவியல் அறிஞர்கள். இப்போது அவர்கள் எடுக்கும் டெஸ்ட், 'உணர்வுகள் கையாளும் டெஸ்ட்'. நமக்கிருக்கும் கோபம், அன்பு, எரிச்சல், பசி போன்ற உணர்வுகளை எப்படிக் கையாளுகிறார்கள்? யாரெல்லாம் உடனே ஜிலேபியை சாப்பிட்டார்களோ அவர்கள் உணர்வு முதிர்ச்சியில் குறைந்தவர்களாகவும், யாரெல்லாம் கடைசி வரை சாப்பிடாமல் வைத்திருந்தார்களோ அவர்கள் உணர்வு முதிர்ச்சியில் மேம்பட்டவர்களாகவும் இருப்பதாகக் கண்டுபிடிக்கின்றனர். அவர்கள் சொல்லும் ஆய்வு முடிவு இதுதான்: உடனடி இன்பங்களைத் தள்ளிப்போடுவதன் வழியே நிலையான மகிழ்ச்சியை நாம் பெற முடியும்!

இன்றைக்கு நாம் இருக்கும் உலகம் உடனடி உலகம். எல்லாம் உடனடி. உணவு, காஃபி எனத் தொடங்கி இப்போ உடனடி உணர்வு, உடனடி உறவு, உடனடி திருமணம், உடனடி பிரிவு என வளர்ந்துவிட்டது. இந்த உலகமே நம் கைக்குள் அடங்கிவிட வேண்டும் எனத் துடிக்கிறோம். 

தாங்கள் iPad வாங்கத் தங்கள் பெற்றோர்கள் பணம் கொடுக்க இயலாததால் தங்கள் கிட்னிகளை விற்று iPad வாங்கிய இரண்டு சிறுவர்களை இப்போது கண்டுபிடித்துள்ளனர் சீனாவின் பெய்ஜிங்கில். iPadக்காக கிட்னி கொடுக்கத் துணிந்த சிறுவர்களைப்போலத்தான், ஒரு தட்டுக் கூழுக்காக தன் தலைமகனுரிமையை விட்டுக்கொடுக்கத் துணிகின்றான் ஏசா. வாழ்வில் நாம் அன்றாடம் 'எப்படியாவது வேண்டும்' என அனுபவிக்கத் துடிக்கும் சிற்றின்பங்களையும், ஆசைகளையும் விடுத்தால் மகிழ்ச்சி நம் மடியில் தவழும்.

'பசி இருக்கும் வரை பசியாய் இருப்பவர்களை விலைபேசும் யாக்கோபுக்களும், விலை இருக்கிறது என்பதற்காக எதையும் விற்கத் துணியும் ஏசாயுக்களும்' என்றும் இருந்துகொண்டேதான் இருப்பார்கள்.

'தலைமகனுரிமையால் எனக்கு என்ன பயன்?'

2 comments:

  1. Anonymous9/21/2013

    சிறந்த கருத்துள்ள கட்டுரை...
    வாழ்த்துகள் இனி

    ReplyDelete
  2. Anonymous4/23/2024

    சிந்திக்கவைத்த கட்டுரை
    அகத்தியன்
    9080490801

    ReplyDelete