Sunday, September 1, 2013

நீ எங்கே இருக்கின்றாய்?


மென்காற்று வீசிய பொழுதினிலே, தோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள் உலவிக்கொண்டிருந்த ஓசை கேட்டு, மனிதனும் அவன் மனைவியும் ஆண்டவராகிய கடவுளின் திருமுன்னிலிருந்து விலகி, தோட்டத்தின் மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டனர். ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, 'நீ எங்கே இருக்கின்றாய்?' என்று கேட்டார். (தொடக்கநூல் 3:8-9)

இன்றிலிருந்து விவிலியத்தில் ஒருவர் மற்றவரிடம் எழுப்பும் கேள்விகளைப் பற்றிச் சிந்திக்க விழைகிறேன். கேள்விக்குறி நம் வாழ்வின் அடையாளக்குறி. சில கேள்விகள் அச்சமூட்டுகின்றன. சில கேள்விகள் அன்பைக் காட்டுகின்றன. சில கேள்விகள் அறிவின் திறவுகோல்களாகின்றன. சில கேள்விகளுக்கு பல விடைகள் இருக்கும். சில கேள்விகளுக்கு விடைகளே கிடையாது. ஆனால் கேள்விக்குறிகளும், ஆச்சர்யக்குறிகளும் நிறைந்ததுவே வாழ்க்கை.

விவிலியத்தின் உள்ள கேள்விகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்:

1. பதில் தெரிந்தே கேட்கப்படும் கேள்வி. எடுத்துக்காட்டு: தன் சகோதரன் ஆபேலைக் கொலை செய்தவுடன் காயினைப் பார்த்து ஆண்டவராகிய கடவுள் கேட்கும் கேள்வி: 'உன் சகோதரன் எங்கே?' கடவுளுக்கு எல்லாம் தெரியும். இருப்பதும், இயங்குவதும் அவர் அறியாத ஒன்றல்ல. 'உன் சகோதரன் எங்கே?' என்று கடவுள் கேட்கும் போது அவர் பதிலுக்காக கேட்கவில்லை. மாறாக, உன் சகோதரன் எங்கே இருக்க வேண்டுமோ, அங்கே இல்லையே. அதற்கு நீ என்ன செய்தாய்? என்று காயினை மையப்படுத்திக் கேட்கப்படும் கேள்வியே இது. நம்ம கேர்ள்ப்ரண்ட்ஸ் நம்மைப் பார்த்துக் கேட்டும் கேள்விகளும் இப்படிப்பட்டவைதான். 'நேத்து ஈவினிங் எங்க போன?'ன்னு கேட்டாலும், 'இவ்வளவு நேரம் ஃபோன்ல யார்கிட்ட பேசிட்டு இருந்த?'ன்னு கேட்டாலும் உடனே சரண்டர் ஆயிடணும். ஏன்னா அவங்களுக்கு இந்த ரெண்டுக்குமே பதில் தெரியும்.

2. பதில் தெரிந்து கொள்வதற்காக கேட்கப்படும் கேள்வி. எடுத்துக்காட்டு: இயேசுவைக் காட்டிக் கொடுக்க விழையும் யூதாசு இஸ்காரியோத்து தலைமைக்குருக்களிடம் சென்று கேட்கும் கேள்வி. 'அவரைக் காட்டிக் கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?' இ;தற்கு அவர்கள் தரும் பதில்: 'முப்பது வெள்ளிக்காசுகள்'. சின்னக் குழந்தைகள் நம்மைப் பார்த்துக் கேட்கும் கேள்விகள் இவ்வகை: செடி ஏன் பச்சையா இருக்கு? யானை ஏன் பெருசா இருக்கு? இது என்ன? அது என்ன? 

இரண்டாம் வகைக் கேள்விகள் விவிலியத்தில் மிகக் குறைவு. இன்று நாம் சிந்திக்கும் கேள்வி முதல் வகைக் கேள்வி. ஏதேன் தோட்டத்தின் விலக்கப்பட்ட மரத்திலிருந்து பறித்த கனியை மனிதனும் (ஆதாமும்), அவன் மனைவியும் (ஏவாளும்) உண்கின்றனர். அவர்களின் கண்கள் திறக்கப்படுகின்றன. 'தாங்கள் தவறு செய்து விட்டோம்' என உணர்கின்ற அவர்கள் மரங்களுக்கிடையே ஒளிந்து கொள்கின்றனர்.

அங்கே அவர்களைத் தேடி வருகின்ற ஆண்டவராகிய கடவுள் கேட்கும் கேள்விதான்:

'நீ எங்கே இருக்கின்றாய்?'

இவர்கள் ஒளிந்திருக்கும் இடம் ஆண்டவருக்குத் தெரியும். 'நீ ஏன் இப்படிச் செய்துவிட்டாய்?' என்ற பொருளில்தான் இந்தக் கேள்வி அமைகின்றது.

'எங்க இருக்குற?' என்ற இந்தக் கேள்வியை நாமும் அடிக்கடிக் கேட்கிறோம். செல்போனில் பேசும் போது 'டேய் சரியா கேக்கலடா...எங்க இருக்குற?' என்றும், 'என்னடா புது நம்பரா இருக்கு...எங்க இருக்குற?' என்றும், நாம் ஒருவரையொருவர் நேரில் சந்திக்கும்போது, 'என்னடா ஆளயே காணோம்...எங்க இருக்குற?' என்றும், 'வீடு எங்க இருக்கு?', 'எங்க வேலை பாக்குறீங்க?' 'எங்க படிக்கிறீங்க?' என மறைமுகமாகவும் இந்தக் கேள்வியை நாமும் கேட்கத்தான் செய்கின்றோம். நம் அன்பிற்குரியவர்களைப் பார்த்து, 'எங்க இருக்குற?' என்று நாம் கேட்கும் போது அதில் ஒரு தேடலும், எதிர்பார்ப்பும் இருக்கிறது. நாம அவங்களுக்கு ஃபோன் பண்ணி எடுக்கவில்லையென்றாலும், 'எங்க போயிருப்பா?' என்று நமக்குள்ளும் நாம் கேட்கின்றோம்.

இந்தக் கேள்வி நம்மிடம் கேட்கப்பட்டால் நம் பதில் எப்படி இருக்கிறது? 'நான் மதுரையில இருக்குறேன்' என்றும் 'நான் பஸ்ல இருக்குறேன்' என்றும், 'நாம் ஆபிஸ்ல இருக்குறேன்' என்றும் கனிவோடு பதில் சொல்வோம். அல்லது 'நான் எங்க இருந்தா உனக்கு என்ன?' என்று எரிச்சல் படுவோம். அல்லது 'வீட்டிலேயே இருந்து கொண்டு வெளியே ஒரு வேலைக்காக வந்தேன்' என்று சொல்வோம். ஆனா ஒன்னு ஞாபகத்துல வச்சிக்கோங்க. உங்க செல்ஃபோனை வச்சு நீங்க எந்த ஏரியாவுல இருக்கீங்கண்ணும், உங்க ஸ்மார்ட்ஃபோன், ஐபேட், கம்ப்யூட்டரை வச்சு நீங்க எந்த இடத்துல இருக்கீங்கண்ணும் ரொம்ப ஈஸியா கண்டு பிடிச்சிடலாம்.

நாம் இருப்பது என்பது இடத்திற்கும், நேரத்திற்கும் கட்டுப்பட்டது. நம்மால் ஒரு இடத்தில், ஒரு நேரத்தில்தான் இருக்க முடியும். நான் இப்பொழுது காலை 10 மணிக்கு என் அறையில் இருக்கிறேன் என்றால் நான் இங்கு மட்டும்தான் இருக்க முடியும். நேரமும், இடமும் நம்மை வரையறுத்துவிடுகின்றன. ஆனால் கடவுள் நேரத்தையும், இடத்தையும் கடந்தவர். அனைத்து 'கடந்து' 'உள்ளவரைத்தான்' நாம் கடவுள் என்கிறோம்.

நாம் எங்கே இருக்கிறோம்? என்பது நாம் எங்கிருந்து வந்தோம்? நாம் எங்கே செல்கிறோம்? என்ற கேள்விகளையும் உள்ளடக்குகின்றது. நம் வாழ்க்கை ஒரு இயக்கம். ஒன்றிலிருந்து மற்றொன்றை நோக்கிச் சென்று கொண்டேதான் இருக்கின்றோம். நாம் இங்கிருந்துதான் வந்தோம் என்ற நம் வேர்களையும், இங்கு தான் செல்கிறோம் என்ற விழுதுகளையும் நினைவில் வைத்திருந்தால் நம் வாழ்க்கைப் பயணம் இனிதாகும்.

'நாம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோமா?' என்பது நாம் நம்மைப் பார்த்துக் கேட்க வேண்டிய அடுத்த கேள்வி. ஆதாம் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை. ஆகையால்தான் கடவுள் அவனைத் தேடுகின்றார். நாம் வளர்கிறோம் என்பது எப்படிப்பட்ட கைகளில் நாம் இருக்கிறோம் என்பதைப் பொறுத்ததே. 'நாம் சரியான கைகளில் இருக்கின்றோமா?' என்பதும் முக்கியம். நம் அன்பு மனைவியின் கையில் இருக்கின்ற நெருப்பு உணவைப் பக்குவமாய்ச் சமைக்கின்றது. மனநலம் சரியில்லாதவரின் கையில் இருக்கின்ற நெருப்பு காட்டையே கொளுத்தி விடுகின்றது. இரண்டு இடத்திலும் நெருப்பு ஒன்றுதான். ஆனால் அதன் பயன்பாடும், விளைவும் மாறுபடுகின்றது.

ஒரு மிருகக்காட்சி சாலையில் ஒரு தாய் ஒட்டகமும், ஒரு குழந்தை ஒட்டகமும் இருந்ததாம். குழந்தை தாயைப் பார்த்துக் கேட்டதாம்: 'அம்மா, நான் ஒரு சில கேள்விகள் கேட்கலாமா?' தாய்க்கு மகிழ்ச்சி. 'கேளம்மா! கேள். கேட்டால்தான் அறிவு வளரும்' என்றதாம். குழந்தை கேட்டது, 'நமக்கு ஏன் கால்கள் நீளமாகவும், பாதத்தின் குளம்புகள் வளைந்தும் உள்ளன?' தாய் சொன்னது: 'நாம் பாலைவனத்து விலங்குகள். பாலைவன மணலை எளிதாகக் கடப்பதற்காக நம் கால்கள் இப்படி அமைந்துள்ளன.' குழந்தை மீண்டும் கேட்டது, 'நமக்கு ஏன் முதுகு மிக உயரமாக கூன் விழுந்து உள்ளது?' தாய் சொன்னது: 'அதுவா. பாலைவனத்தில் பயணம் செய்யும் போது நம்மையே குளிர்வி;ப்பதற்கும், நாம் தாகத்தால் வறண்டு போகாமல் இருக்கவும் தேவையான தண்ணீரைச் சேர்த்து வைப்பதற்கே!'. குழந்தை மறுபடியும் கேட்டது: 'நம் கண்களுக்கு மேல் ஏன் இமைகள் இவ்வளவு பெரியதாக பார்வையையே மறைக்கும் அளவுக்கு உள்ளன?' தாய் சொன்னது: 'அவைகள்தாம் பாலைவனப் புயிலிலிருந்து நம் கண்களைக் காப்பாற்றுகின்றன!' 

சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு குழந்தை ஒட்டகம் சொன்னதாம்: 'நம் நீளமான கால்கள் பாலைவனத்தில் நடக்கவும், நம் உயரமான முதுகு பாலைவனப் பயணத்திற்குத் தண்ணீரைச் சேர்த்து வைக்கவும், நம் கண்இமைகள் பாலைவனப் புயலிலிருந்து நம்மைக் காக்கவும் என்றால், இவைகளையெல்லாம் வைத்துக்கொண்டு நாம் இந்த மிருகக்காட்சி சாலையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?'

ஆற்றல், திறமைகள், புலமைகள், உணர்வுகள், உறவுகள் என அனைத்தும் நம்மிடம் இருந்தாலும், நாம் சரியான இடத்தில் இருந்தால்தான் அவைகளால் பயன் உண்டு.

'நாம் எங்கே இருக்கின்றோம்?'

'நீ எங்கே இருக்கின்றாய்?'

1 comment:

  1. Anonymous9/01/2013

    நீ எங்கே இருக்கிறாய் என்று கேள்வி கேட்க ஒருவர் இருந்தால் தான் மனிதன் ஒழுங்காய் இருக்கின்றான். நல்ல சிந்தனை.

    ReplyDelete