Thursday, September 5, 2013

உன் சகோதரி என்று ஏன் சொன்னாய்?


ஆபிராம் எகிப்தை நெருங்கிய பொழுது தம் மனைவி சாராயிடம், 'நீ கண்ணுக்கு அழகானவள் என்பது எனக்குத் தெரியும். எகிப்தியர் உன்னைக் காணும்போது 'இவள் அவனுடைய மனைவி' எனச்சொல்லி என்னைக் கொன்று விடுவர். உன்னையோ உயிரோடு விட்டுவிடுவர். உன் பொருட்டு எனக்கு நல்லது நடக்கவும் உன்னால் என் உயிர் காப்பாற்றப்படவும் நீ என் சகோதரி எனச் சொல்லிவிடு' என்றார் ... பார்வோன் ஆபிராமை அழைத்து அவரிடம், 'நீ எனக்கு இப்படிச் செய்து விட்டாயே! அவள் உன் மனைவி என்று ஏன் என்னிடம் சொல்லவில்லை? அவள் உன் சகோதரி என்று நீ ஏன் சொன்னாய்?' என்றான். (தொடக்கநூல் 12:11-13,18-19)

மனுக்குலம் சொன்ன முதல் பொய்: 'இவள் என் மனைவியல்ல ... சகோதரி!'

இந்த நிகழ்வு மூன்று இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. 

நிகழ்வு 1: தொடக்கநூல் 12:10-20. 

நபர்கள்: ஆபிராம், சாரா, பார்வோன் மன்னன். 

இடம்: எகிப்து.

நிகழ்வு 2: தொடக்கநூல் 20:2-18. 

நபர்கள்: ஆபிரகாம். சாரா. கெரார் மன்னன் அபிமெலக்கு. 

இடம்: கெரார்.

நிகழ்வு 3: தொடக்கநூல் 26:6-11. 

நபர்கள்: ஈசாக்கு. ரெபேக்கா. கெரார் மன்னன் அபிமெலக்கு. 

இடம்: கெரார்.

இந்த மூன்று நிகழ்வுகளும் நடக்கும் இடங்களும், பங்கேற்கும் நபர்களும் வித்தியாசப்பட்டாலும், இவர்கள் அனைவரும் பேசிக்கொள்ளும் வார்த்தைகள் இரண்டுதான்: 'மனைவி, சகோதரி!'

இந்த நிகழ்வு என்னுள் எழுப்பும் கேள்விகள் பல:

1. ஆபிரகாம் சொன்னது பொய்யா? எதற்காக அவர் பொய் சொல்ல வேண்டும்?

2. மனைவி என்றால் ஆபிரகாமைக் கொல்ல நினைப்போர், சகோதரி என்றால் விட்டுவிடுவார்களா?

3. 'என்ட் டஸ் நாட் ஜஸ்டிஃபை தெ மீன்ஸ்' என்பது அறநெறிக் கோட்பாடு. தனக்குத் தேவையானதை நிறைவேற்றிக் கொள்வதற்காக என்ன வழிமுறைகளையும் பயன்படுத்தலாம் என்ற அறநெறிப் பிறழ்வுக்கு ஆபிரகாம் செல்கின்றாரா?

4. எதற்காக மூன்று நிகழ்வுகள்? இதில் எது உண்மை? ஏன் இரட்டடிப்புகள்?

5. ஆபிரகாமின் வாழ்வில் நடந்ததா? ஈசாக்கின் வாழ்வில் நடந்ததா? அல்லது பிற்காலத்தில் நடந்த ஒன்று இவர்கள் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்பட்டதா?

இந்தக் கேள்விகளையெல்லாம் விடுத்து...நம் பாரவோனின் கேள்விக்கு வருவோம்.

'அவள் உன் மனைவி என்று ஏன் என்னிடம் சொல்லவில்லை? 

அவள் உன் சகோதரி என்று நீ ஏன் சொன்னாய்?'

இதை வாசிக்கும்போது என் குருத்துவக் கல்லூரியில் நிகழ்ந்த நிகழ்வு நினைவுக்கு வருகிறது. என் உறவுக்காரப் பெண் ஒருவர் எனக்கு ஒருமுறை ஃபோன் செய்தார். அப்போது நாங்கள் வகுப்பில் இருந்தோம். குருத்துவக் கல்லூரி முதல்வர் ஃபோனை எடுத்திருக்கின்றார். எங்களுக்கு அன்றைய நாளில் அடுத்த வகுப்பு எடுக்கவிருந்தவரும் அவரே. வகுப்பு தொடங்குவதற்கு முன், 'உனக்கு ஒரு ஃபோன் வந்தது?' என்றார். 'யாரிடமிருந்து?' என்றேன். 'தங்கச்சின்னு சொல்லச் சொன்னாங்க!' என்றார் வெகுளியாக. அப்போது என் அருகில் இருக்கும் நண்பன் அவரைப் பார்த்து, 'ஃபாதர் தங்கச்சின்னு சொன்னாங்களா? அல்லது தங்கச்சின்னு சொல்லச் சொன்னாங்களா?' என்றான். எல்லோருமே சிரித்தோம். அந்த உறவுக்காரப் பெண் என் அத்தை மகள்.

ஒரு பையனும் பொண்ணும் பைக்ல ஒன்னாப் போனா நம்ம ஊர்க்காரங்க கேட்பதும் இதுதான்: 'யாரது?' 'சிநேகிதி' ன்னாலோ, 'கேர்ள்பிரண்ட்' என்றாலோ முகம் சுளிப்பர். அல்லது வம்பு இழுப்பர். அல்லது வன்முறையைக் கையாள்வர். அல்லது மனதிற்குள்ளேயே திட்டுவர். 'தங்கச்சி' என்றால், 'ஓ தங்கச்சியா?' என்று விலகிவிடுவர். 

'தங்கச்சி!' என்ற வார்த்தை இன்றும் காதலைக் காப்பாற்றும் சொல்லாகத்தான் பயன்படுத்தப்படுகின்றது. 'யாரடா அது உன் கூட நடந்து வந்தது?' என்ற கேள்விக்கு இன்றும் நம்ம பசங்க, 'அவளா...தங்கச்சி மாதிரி' என்று சொல்லத்தான் செய்றாங்க. அவங்க பொய் சொல்லக்கூடாதுன்னா, நாம கேள்வி கேட்கக் கூடாது! காதலியாய் நினைத்துப் பழகிய ஒரு பெண்ணிடம் தன் காதலைச் சொல்லப் போய், 'அண்ணா! நான் உங்களுக்குத் தங்கச்சி மாதிரி!' என்று தப்பித்துக் கொள்ளும் பெண்களும் உண்டு. மற்றொரு பெண் தன் காதலனின் தொலைபேசி எண்ணை 'ரீசார்ஜ் அண்ணா!' எனச் சேமித்து வைத்திருந்தாளாம்!

இதுல இருந்து என்ன சொல்ல வர்றோம்னா, 'தங்கச்சின்னா' ஸேஃப். 'காதலின்னா' டேன்ஜர். 'மனைவின்னா' ஓகே. இதுதான் நம்ம கலாச்சாரத்தின் எதிரொலி.

ஏறக்குறைய நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இப்படித்தான் இருந்திருக்கின்றது. நம் தமிழ் கலாச்சாரத்திற்கும், பண்டைய எகிப்திய மற்றும் மத்திய கிழக்குக் கலாச்சாரத்திற்கும் மிகுந்த தொடர்பு இருக்கின்றது. ஆபிரகாம் மெசபடோமியா பகுதியிலிருந்து புறப்படும் இடத்திற்குப் பெயர் 'ஊர்' என்று கொடுக்கப்பட்டுள்ளது. தமிழிலும் 'ஊர்' என்பது மக்கள் வாழுமிடம். நிறைய எபிரேய வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளோடு தொடர்புடையவையாகவே இருக்கின்றன. 'சாக்கு', 'மல்லாக்,' 'தல்' (ஏழை, ஒடுக்கப்பட்டவர், தலித்), 'ஆசீர்' (பணக்காரர், ஆசீர் பெற்றவர்), 'ரப்' (ரொம்ப!), 'நத்தா' (நட்டான்), 'அப்' (அப்பா), 'சாவ்' (சாவு, இறப்பு, வெறுமை), அரி (அரிமா, சிங்கம்), 'உம்ணாம்' (உண்மை!), 'அக்' (சகோதரி, அக்கா) மற்றும் பல. தமிழுக்கும், எபிரேயத்திற்கும் உள்ள உறவை மொழியியில் அடிப்படையில் ஆய்வு செய்வது என் நூறு கனவுகளில் ஒன்று!

கலாச்சார அடிப்படையில் ஆபிரகாம் செய்தது சரியே. 'மனைவி' என்று சொல்லுமிடத்தில் மற்றவருக்கு 'பொறாமை' வந்த விடுகிறது. 'தங்கை' என்று சொன்னால், அந்தத் தங்கையைக் கரெக்ட் பண்ணுவதற்காகவே ஆபிரகாமுடன் அனைவரும் நன்றாகப் பழகத் தொடங்குவர். இன்னைக்கும் நம்ம பசங்க ஏதாவது ஒரு பையனைச் சுத்திக்கிட்டே இருக்காங்கன்னா, அவனுக்கு அழகான தங்கச்சி இருப்பா என்று அர்த்தம். 'அப்புறம் மச்சி! வீட்டுக்கு கூப்பிடவே மாட்ற?' என அவனுக்கும், அவன் தங்கச்சிக்கும் வலைவீசத் தொடங்கும் நண்பர் கூட்டம்.

நம் புறநானூற்றில் அழகான ஒரு பாடல் உண்டு. பாடலின் உட்கருத்து இதுதான். தலைவனைப் பிரிந்து வாடுகின்ற தலைவி தனிமையில் இவ்வாறு புலம்புவாள்: 'என் அன்பே, எங்கே இருக்கிறாய்? உன்னை நான் என்று காண்பேன்? நான் உன் சகோதரியாய் இருந்தால் உன்னோடு இருந்து உன் அழகை இரசித்துக் கொண்டேயிருப்பேனே? உன் தங்கை கொடுத்து வைத்தவள். உன்னைக் கண்டுகொண்டே இருக்கும் பாக்கியம் பெற்றவள.;' இதையொட்டிய விவிலியப்பகுதியும் உண்டு: 'நீர் என் உடன்பிறப்பாக இருக்கக் கூடாதா! என் அன்னையிடம் பால் குடித்தவராக இருத்தலாகாதா! தெருவில் கண்டாலும் நான் உம்மை முத்தமிடுவேனே! அப்போது எவருமே என்னை இகழமாட்டார்!' (இனிமைமிகு பாடல் 8:1). காதல் பாசமாகக் கனிவதும் வாழ்க்கை எதார்த்தம்தான்!

பெண் ஒரு விந்தையான படைப்பு. பெண் என்றால் 'சார்பு'. அவள் ஒரு கொடி. பிறந்த வீட்டில் தன் பெற்றோரை, புகுந்த வீட்டில் தன் கணவரை, குழந்தையாய் இருக்கும்போது தந்தையை, வளரும்போது சகோதரனை, வளர்ந்தபின் காதலனை, கைபிடித்தபின் கணவனை, கம்பு ஊன்றும் போது தன் மகனை. (தயவு செய்து இதை ஆணாதிக்கம் என எண்ணிவிடாதீர்கள். என் நிலைப்பாட்டை நான் பின் விளக்குகிறேன்!) 'சார்பு' அவளின் பலவீனம் அல்ல. அவளின் பலம். நிலவும் தன் ஒளிக்குச் சூரியனைச் சார்ந்து நிற்பதால் தான் நிலவைப் பெண் என்கிறோமோ? பெண் சாயும் இடம் நிலைகுலைவதில்லை. மாறாக, நிலை பெறுகின்றது. நியூட்டனின் இரண்டாம் விதியும் இதுதான். ஆணைச் சார்ந்து நிற்கும் பெண் ஆணுக்கு வலு சேர்க்கிறாள். சாராவைப் பாருங்க. ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. 'தன் வலுவின்மையையும் வல்லமையாக மாற்றலாம்' என்பதற்கு எடுத்துக்காட்டு சாரா. 'அதெல்லாம் முடியாது. ஒய்ப்ன்னுதான் சொல்வேன்' என்று முரண்டுபிடிக்கவில்லை சாரா. 'நான் எப்படி இருந்தாலும் உன்னைக் கரம் பிடித்தவள்' என்ற திடமனம் பெற்றிருக்கின்றார் சாரா. 

ஆபிரகாமிடம் இருக்கும் ஒரு நல்ல குணம், அவர் அழகை இரசிக்கத் தெரிந்தவர். தன் மனைவி சாராவைப் பார்த்துச் சொல்கின்றார்: 'நீ கண்ணுக்கு அழகானவள் என்பது எனக்குத் தெரியும்!' வயது முதிர்ந்த, மாதவிடாய் நின்ற, 'கிழவி' என்று தன்னையே அழைத்துக் கொண்ட (தொநூ 18:11-13) சாராவைப் பார்த்து ஆபிரகாம், 'ஓய் அழகி!' என்கிறார். ஆச்சர்யம். ஆனால், சாரா என்றால் 'இளவரசி' என்று அர்த்தம். தன் வாழ்நாளின் இறுதிவரை தன் மனைவியை 'குட்டி இளவரசியாகப்' பார்த்தவர் அவர். 'ப்யூட்டி இஸ் ஸ்கின் டீப்' என்பார்கள். தோலையும் கடந்து ஒளிந்திருப்பதுதான் அழகு. உறவுகள் இன்று புளித்துப்போவதற்குக் காரணம் 'போரடிப்பதுதான்!'. ஒருவர் மற்றவரைப் பார்க்கவே நமக்கு 'போர்' அடிக்கின்றது. ஏன் நாம் வித்தியாச வித்தியாசமாக ஆடை அணிகிறோம். மற்றவர்களுக்கு 'போர்' அடிக்கக்கூடாது என்பதற்குத்தான். ஆபிரகாம் சாராவின் மனதை அன்பு செய்கின்றார். ஆகையால் அவருக்கு உடலின் வெளி மாற்றங்களும், சுருக்கங்களும் பெரிதாகத் தெரியவில்லை.

ஆனா ஆபிரகாம் சொன்னது பொய்தானே! பொய் மனிதர்கள் கண்டுபிடித்த ஒரு தற்காப்புக் கவசம். நம்மைப் பாதுகாக்க நாம் பொய் சொல்கிறோம். பொய்யை மறைக்க மற்றொரு பொய். 'பொய் பேசாதிருங்கள். நீங்கள் பலவற்றை நினைவில் வைத்துக்கொள்ளத் தேவையிருக்காது' என்பார்கள். நாம் சொன்ன ஒரு பொய் வெளியில் தெரியும் போது, நாம் சொல்லும் அனைத்து உண்மைகளும் சந்தேகத்திற்குட்படுகின்றன. 'யாருக்கும் தீமையில்லைனா' பொய் சொல்லலாமேன்னு திருவள்ளுவரை இழுக்காதீங்க! 

தன் சீடன் ஒருவன் எப்போதும் பொய் பேசிக்கொண்டும், புறணி பேசிக்கொண்டும் இருப்பதைக் காண்கின்ற ஒரு ஜென் துறவி அவனை அழைத்து ஒரு கூடை நிறையக் கோழி உரோமங்களைக் கொடுக்கின்றார். 'நீ இன்னைக்கு மாலை வீட்டுக்குப் போகும் போது வழியில் இதைப் கொட்டிக் கொண்டே போ! நாளை காலை வீட்டிலிருந்து வரும்போது எல்லாவற்றையும் பொறுக்கிக்கொண்டு வா!' எனச் சொல்லி அனுப்பி விடுகின்றார். காலையில் வெறுங்கூடையோடு வருகிறான் சீடன். 'என்னாச்சு? கோழி உரோமங்கள் எங்கே?' எனக் கேட்கின்றார் துறவி. 'என்னால சேகரிக்க முடியல. காற்று அனைத்தையும் பரப்பி விட்டது!' என்கிறான் சீடன். 'நீ பேசும் பொய்யும், புறணியும் இப்படித்தான். உன்னால் கொட்டத்தான் முடியும். அள்ள முடியாது!' அறிவுரை கூறினார் துறவி.

இன்னைக்கு பொய்க்குதான் மரியாதை. பொய் நடுவீட்டிற்குள் வந்து போகிறது. உண்மை வாயிற்படியிலேயே நின்று விடுகிறது. நாம் பார்க்கும் விளம்பரங்கள், கேட்கும் வாக்குறுதிகள், நாம் வளர்க்கும் பிளாஸ்டிக் குரோட்டன்ஸ் என பொய்கள் நம்மைச் சுற்றியே நிற்கின்றன. கார்லோ கொல்லோதி என்ற இத்தாலிய குழந்தைகள் கதை எழுத்தாளர் எழுதிய புதினம், 'தி அட்வென்ட்சர்ஸ் ஆஃப் பினோக்கியோ'. இந்தக் கதையின் படி பினோக்கியோ ஒவ்வொரு முறை பொய் பேசும்போது அவனது மூக்கு ஒரு இன்ச் வளரும். இந்தக் கதையே நிஜமானால் ... நம் மூக்குகள் எவ்வளவு நீளம் இருக்கும்...?

No comments:

Post a Comment