Saturday, September 28, 2013

ஒன்றும் வாங்காமல் வேலை செய்யலாமா?


அதன்பின் லாபான் யாக்கோபை நோக்கி, 'நீ என் உறவினன் என்பதற்காக ஒன்றும் வாங்காமல் எனக்கு வேலை செய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய்? சொல்' என்றான் ... யாக்கோபு ராகேலை விரும்பினார். எனவே அவர், 'உம் இளைய மகள் ராகேலுக்காக ஏழு ஆண்டுகள் உம்மிடம் வேலை செய்கிறேன்' என்றார். அப்படியே யாக்கோபு ஏழாண்டுகள் இராகேலை முன்னிட்டு வேலை செய்தார். ஆனால் அவர் அவள்மீது வைத்திருந்த அன்பின் மிகுதியால் அது அவருக்குச் சில நாட்களாகவே தோன்றியது. (தொடக்கநூல் 29:15,18,20)

யாக்கோபு தன் தாய்மாமன் வீட்டிற்கு வந்து விட்டார். விருந்து உபசாரங்கள், முத்தங்கள், ஆரவாரங்கள், குசலம் விசாரித்தல் அனைத்தும் முடிந்து விட்டன. எபிரேய மற்றும் தொடக்ககால மத்திய கிழக்கு வழக்கப்படி விருந்தினர்கள் மூன்று நாட்கள் மட்டும் இலவசமாகத் தங்கலாம். அதன்பின் அவர்கள் தங்க வேண்டுமெனில் அந்த வீட்டாரோடு வேலை செய்ய வேண்டும். யாக்கோபு ஒரு மாத காலம் தங்கிய போதே தன் தாய்மாமன் வீட்டில் வேலை பார்க்கத் தொடங்கியிருக்கலாம். இப்போது அவரின் உழைப்பைப் பார்க்கின்ற தாய்மாமன் அவருக்குத் தேவையான சம்பளத்தைக் கோருமாறு கேட்கின்றார். சம்பளமாக அவரின் மகளைக் கேட்கின்றார் யாக்கோபு. இதுதான் இன்றைய கேள்வியின் பின்புலம்.

'மருந்தும் விருந்தும் மூன்றுவேளை' என்பது நம் பழமொழி. ஆனால் முப்பது நாட்கள் விருந்தளிக்கிறார் லாபான். 'இவன் இங்க எதற்கு வந்தான்?' 'இன்னும் எவ்வளவு நாள் இருப்பான்?' 'ரெண்டு பொண்ணுங்க வேற இருக்காங்களே!' 'இவன்ட்ட இருந்து நம்ம பொண்ணுங்கள காப்பாத்தறதா?' அல்லது 'நம்ம பொண்ணுங்ககிட்ட இருந்து இவனக் காப்பாத்தறதா?' 'எந்நேரமும் கத்தியில நடக்கிற மாதிரியே இருக்கு!' 'இவன்ட்ட எப்படிக் கேட்பது?' – என அத்தனைக் கேள்விகளையும் மனசுக்குள்ளே கேட்டுக்கொண்டு, 'எவ்வளவு சம்பளம் வேண்டும்?' என்று மட்டும் வாயால் கேட்கிறான். 'எவ்வளவு நாள் இங்க இருப்பீங்க மாப்ள!' என்பதன் அழகுப்பதம்தான் 'எவ்வளவு சம்பளம் வேண்டும்?' என்ற கேள்வி. 

நம்ம வீடுகளிலும் பார்க்கலாம்;. தேவையில்லாத விருந்தினர் அல்லது உறவினர் வந்து விட்டால் அந்த வீட்டார் ஜாடை மாடையாகப் பல கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பர். நான் ஒருமுறை ஒரு பங்கில் ஹவுஸ் விசிட் என்ற அடிப்படையில் ஒவ்வொரு வீடாகச் சென்று கொண்டிருந்தேன். ஒரு குறிப்பிட்ட வீட்டிற்குச் சென்ற போது மணி மாலை 5:30. அப்பொழுதுதான் அவ்வீட்டுத் தலைவி தன் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பியிருப்பார் போலும். 'சாயங்காலம் பூசை இருக்கா ஃபாதர்?' என்றார். 'இருக்கு' என்றேன். 'எத்தனை மணிக்கு?' என்றார். '6:00 மணிக்கு' என்றேன் 'என்ன டீச்சர், நீங்க அடிக்கடி பூசைக்கு வருவீங்க. நீங்க புதுசா கேட்கிறீங்களே?'ன்னு கேட்கப் போகும்போது, என் மனசு சொன்னது: 'டேய் மாங்கா...அவங்க பூசைக்காக டைமிங் கேட்கல. நீ எப்போ கிளம்புவன்னு கேட்கறதுக்காக டைமிங் கேட்கறாங்க!' உடனே சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன்.

கேள்விகள் கேட்கப்படும்போது உடனே பதிலைச் சொல்லிவிடக் கூடாது. ஏன்? எதற்கு? என்று கொஞ்சம் கிரிமினலாக யோசிக்க வேண்டும். யாக்கோபும் யோசித்தே சொல்கின்றார். அக்கா இருக்கும்போதே தங்கச்சிக்கு கொக்கி போடுகின்றார். ராகேலைப் பற்றிச் சொல்லும் பைபிள் 'வடிவழகும், எழில்மிகு தோற்றமும்' உடையவள் என்கிறது. ஏதேன் தோட்டத்தில் விலக்கப்பட்ட மரத்தின் கனியைப் பற்றி விளக்கும் இடத்திலும் இதே வார்த்தைகள்தான் உள்ளன. விலக்கப்பட்ட கனி 'அழகும், எழில்மிகு தோற்றமும்' கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல் 'கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும்' இருக்கிறது. ஏற்கனவே சொல்லியிருக்கிறோம் - ஏதாவது 'கண்களுக்குக் களிப்பூட்டுவதாகத் தெரிந்தால்' – தம்பி, கொஞ்சம் கவனம். ஆழம் பார்த்துக் காலை விடுங்க!

யாக்கோபுக்குக் களிப்பூட்டுகிறது என்று தெரிந்து அதையே பயன்படுத்தி அவரை ஏமாற்றத் துணிகின்றார் லாபான். நம் மனித வரலாற்றில் நாம் இதுவரை கண்ட போர், இரத்தம், கண்ணீர், இறப்பு, நாடுகடத்தல், ஓட்டம், சிறை என அனைத்திற்கும் காரணம் இதுதான் - 'கண்களுக்குக் களிப்பூட்டியது!' 

யாக்கோபு தன் சம்பளமாக ராகேலைக் கேட்கின்றார். இதே நடைமுறை இன்றும் மத்திய பிரதேசத்தின் காண்டுவா என்ற நகருக்கருகில் வசிக்கும் ஒரு பழங்குடி இன மக்களிடம் உள்ளது. 'பெண் எடுக்க விரும்பும் மணமகன் பெண் எடுக்கும் வீட்டில் அந்தப் பெண்ணிற்காக மூன்று ஆண்டுகள் உழைக்க வேண்டும்'. இதுவும் ஒருவகையான 'வரன் தட்சணை' (வரதட்சணை) – குரு தட்சணை போல! தன் உழைப்பைக் கொடுத்துத் தன் மனைவியை உரிமையாக்கிக் கொள்ள விழைகிறார் யாக்கோபு. 

உழைப்பும், அன்பும் இணைவதே திருமணம் என்பதை யாக்கோபின் பதிலும், அவரின் செயலும் நமக்குச் சொல்கின்றது. 'ஆண்டுகள் நாட்களாகத் தெரிகின்றன!' – ஆல்பர்ட் ஐன்ஸ்டின் சில வருடங்களுக்கு முன் கண்டுபிடித்த 'தியரி ஆஃப் ரெலடிவிட்டியை', சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகக் கண்டுபிடித்து விட்டார் யாக்கோபு. 

ஆண்டுகள் நாட்களாகத் தெரிவது காதலில். 

நாட்கள் ஆண்டுகளாகத் தெரிவது காதலர்களின் பிரிவில்.

நாம் சிந்துகிற வியர்வைத்துளிகள் நாம் அன்பு செய்யும் ஒருவருக்காக என்றால் பெரிய கஷ்டங்களும் எளிதாகவே தெரிகின்றன. 

நம் வாழ்க்கையின் மீது நமக்கு அன்பிருந்தாலும் நம் வாழ்க்கை 'dragging' ஆக இருக்காது. அடுத்தடுத்துக் கடந்து போய்க்கொண்டே இருக்கும்.

வாழ்வையும், நம் வாழ்வின் வாழ்வாக இருப்பவர்களையும் அன்பு செய்வோம்.

அந்த அன்பே அனைத்தையும் வெல்லும்!

1 comment:

  1. Anonymous9/29/2013

    அன்பு செய்யத் தெரிந்தவர்களால் மட்டுமே அன்பைப்பற்றி இவ்வளவு தெளிவாக,அழகாக கூறமுடியும். மிக்க நன்று;

    ReplyDelete