Thursday, September 12, 2013

உனக்கு நிகழ்ந்தது என்ன?


தோற்பையிலிருந்த தண்ணீர் தீர்ந்தபின் அவள் புதர் ஒன்றின் அடியில் குழந்தையைக் கிடத்தினாள். பின்பு அவள் முன்புறம் சென்று அம்புஎறி தூரத்தளவில் உட்கார்ந்து கொண்டாள். 'குழந்தை சாவதைப் பார்க்கச் சகியேன்' என்று கூறி, முன்புறமிருந்து கொண்டே கூக்குரலிட்டு அழுதாள். அப்போது கடவுள் பையனின் அழுகுரலைக் கேட்டார். ஆண்டவரின் தூதர் வானத்தினின்று ஆகாரைக் கூப்பிட்டு, 'ஆகார்! உனக்கு நிகழ்ந்தது என்ன?' என்றார். (தொடக்கநூல் 21:15-17)

தொடக்கநூல் 16:7-10 ல் நாம் சந்தித்த ஆகார் இதோ இன்று மீண்டும் நம்மோடு. அன்று அவர் மட்டும் தனியாக. இன்று தன் குழந்தையோடு. ஆகார் இரண்டு முறை தன் தலைவி சாராவால் வீட்டைவிட்டுத் துரத்தப்படுகிறார். இன்று அவர் துரத்தப்படுவதற்குக் காரணம் அவரல்ல. மாறாக, அவரது குழந்தை. 'எகிப்தியளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்றெடுத்த மகன் (இஸ்மாயேல்) சிரித்து விளையாடுவதைச் சாரா கண்டு' (21:9) அவரை வீட்டை விட்டு வெளியேற்ற ஆபிரகாமிடம் கட்டளையிடுகிறார். தன் கணவருக்குக் கட்டளைகள் இடும் பெண்ணாகவே சாரா இருக்கின்றார். ஆச்சர்யம்! 'இந்தப் பய இப்படிச் சிரித்து ஜாலியா இருக்கிறானே!' என நினைத்துவிட்டார் போலும். இப்படித்தான் நம் சிரிப்பு பல நேரங்களில் நமக்கருகில் இருக்கும் வயிற்றெரிச்சலாக மாறிவிடுகிறது.

வீட்டுத் தலைவி – பணிப்பெண் என்ற உறவு பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இயல்பாய் இருக்கின்ற ஒரு உறவு. நாடோடிச் சமூகத்தில் தங்கள் மனைவியருக்கு எந்த நேரத்திலும் தீங்குகள் வரக்கூடாது என எண்ணுகின்ற கணவர்கள் பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்துவது வழக்கம். இந்தப் பணிப்பெண் வேலைக்குப் பிற இனத்தவர்களையே எடுப்பர். இவ்வாறு பணிப்பெண் வேலைக்கு வரும் பெண்கள் 'அடிமைகளாக' வாங்கப்படுவார்கள். ஒரு ஆட்டையோ, மாட்டையோ வாங்குவது போலத்தான் அடிமைகளை விலைக்கு வாங்குவர். அவர்களுக்கு எந்த உரிமையும் அளிக்கப்படாது. அவர்கள் தங்கள் தலைவரின், தலைவியின் உடைமைகளாக மட்டுமே கருதப்படுவார்கள். இதே நிலை இன்றும் தொடர்கிறது. என்ன ஆச்சர்யம் என்றால், 'நான் யூத இனம், நீ வேறு இனம்' என அன்றாடம் சாதி பார்க்கும் இவர்கள் எப்படி வீட்டு வேலைக்கு என்றால் சாதி பார்ப்பதில்லை. 'தங்களைவிட கீழானவர்களே' அடிமைகளாக வர வேண்டும் என நினைக்கும் இவர்கள் இதில் மட்டும் சாதி பார்ப்பதில்லை. இன்றும் இதே நிலை தொடர்வதை நாம் பார்க்கிறோம். இன்றும் இது பல்வேறு வடிவங்களில் நம் ஊரிலும் தொடர்கிறது. நம் ஊரில் மட்டுமல்ல. வெளிநாடுகளிலும் இருக்கின்றது. எல்லா நேரங்களிலும் 'கறுப்பு – வெள்ளை' பாகுபாடு பாராட்டும் வெள்ளை இனம் தங்கள் வீட்டு வேலைகளைச் செய்யவும், தங்களின் அலுவலக வேலைகளைச் செய்யவும், 'அவுட்சோர்சிங்' என்ற பெயரில் மூன்றாம் உலக நாடுகளின் (இது அவர்கள் கொடுக்கும் பெயர்! அணு ஆயுதத்தால் அவர்கள் முதல் உலக நாடுகள் என்றால், அறிவு ஆயுதத்தால் நாம் முதல் நாடுகள்) இரத்தத்தை உறிஞ்சுவதிலும், பாகுபாடு பாராட்டுவதில்லை. மீன் வித்த காசு நாறவா போகுது?!

அழுதுகொண்டே வழிநடந்த ஆகார், ஆபிரகாம் கொடுத்த தண்ணீர் தீர்ந்தவுடன் அல்லாடுகின்றார். அன்று தனக்காக அழுத ஆகார் இன்று தன் குழந்தைக்காக அழுகின்றார். அழுகுரல் விண்ணை எட்டுகின்றது. 'அழுகுரல் சம்பந்தப்பட்டவரை எட்டுமோ என்னவோ, கடவுளை எட்டும்' என்பதால் தான் என்னவோ எதற்கெடுத்தாலும் அழுதுவிடுகின்றோம். முதல்முறை ஆகாரை தூதர் சந்தித்த போது 'பார்த்தல்' என்ற வார்த்தை அதிகமாகப் பயன்படுத்துகின்றது. இரண்டாம் முறை 'கேட்டல்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது. 'இஸ்மயேல்' என்றால் 'இறைவன் கேட்டார் அல்லது கேட்பார்' என்பது பொருள். இந்த நிகழ்விலும் கடவுள் பையனின் அழுகுரலைக் கேட்கின்றார்.

கடவுள் எல்லாரையும் ஒன்றாகப் பார்க்கின்றார் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. வீட்டுத்தலைவியோ, அடிமைப்பெண்ணோ - இருவருமே இறைவனின் பார்வையில் ஒன்றுதான். 'வெள்ளிக்கிழமை அதுவுமா வீட்டை விட்டு ஓடிப்போயிட்டா' என்று புலம்பும் ஒரு தாயைப் பார்த்து 'அப்ப வியாழக்கிழமை ஓடிப்போனா பரவாயில்லையா!' என்பார் சந்தானம். கடவுள் பார்வையில் எல்லாக் கிழமையும் ஒன்றுதான். எல்லாக் கண்ணீரும் ஒன்றுதான். 'மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்' என்ற பாகுபாடு அவரிடம் இல்லை. இதில்தான் இறைவன் நம்மிலிருந்து வித்தியாசப்படுகின்றார். நாம் எப்போதும் பாகுபடுத்தியே பார்க்கப் பழகிவிட்டோம். பிறந்த குழந்தைக்கு எல்லாமே ஒன்றுதான். நாம்தான் பாகுபாட்டை விதைக்கின்றோம். இது அப்பா, இது அம்மா, இது நம்ம வீடு, அது வேற வீடு, இது நம்ம ஊர், அத வேற ஊர், இவங்க நம்ம ஆளுங்க, அவங்க வேற ஆளுங்க என்று கொஞ்சம் கொஞ்சமாக நாம் 'பிரித்துப் பார்க்கப் பழகிவிடுகின்றோம்!'. 

கடவுளின் தூதர் கேட்கும் கேள்வி கரிசணையாக இருக்கின்றது: 'ஆகார்! உனக்கு நிகழ்ந்தது என்ன?' பெயர் சொல்லி அழைக்கும் இடத்தில் நெருக்கம் இருக்கின்றது. ஆகாருக்கு நிகழ்ந்தது கடவுளுக்குத் தெரியாமல் இருப்பதால் இப்படிக் கேட்கவில்லை. 'உனக்கு நடந்து விட்டது. ஆனால் நான் உடனிருக்கிறேன்' என்ற செய்தியையே இக்கேள்வி உள்ளடக்கியிருக்கின்றது. 'நமக்கு நடக்கும் வரை நடக்கும் அனைத்தும் வேடிக்கைதான்' என்பார் கண்ணதாசன். அண்மையில் இணையத்தில் ஒரு போஸ்டர் ஒன்று பார்த்தேன். கடலில் ஒருவர் மூழ்கிக்கொண்டிருப்பார். அவரின் ஒரு கை மட்டும் தண்ணீருக்கு மேலே இருக்கும். கரையில் நிற்கும் ஒரு கூட்டம் அவரை தங்கள் ஸ்மார்ட்ஃபோனில் ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருக்கும். இதுதான் இன்றைய மனித நிலை. ஒருவரின் பிரச்சனை அடுத்தவரின் 'சாப்பாட்டு நேர விவாதப்பொருளாக' மட்டுமே இருக்கின்றது. 'உனக்கு என்ன பிரச்சினை? என்ன ஆச்சு?' என்று அடுத்தவர்களிடம் கேட்டால், அதற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டுமே! என்ற பயத்தாலும் நாம் கேட்காமல் இருக்கின்றோம். 'எல்லாருக்கும்தான் பிரச்சனை இருக்கு' என்று ஒரேயடியாகப் பூசி மெழுகி விடுகின்றோம்.

ஆகாரின் கண்ணீரை நம்பிக்கையாக மாற்றுகின்றார் கடவுள். 'அவன் ஒரு பெரிய இனத்திற்குத் (இன்றைய அராபியர்கள்) தலைவனாவான்' என்று பாசிட்டிவ் அவுட்லுக் கொடுக்கின்றார் அவர். இன்னைக்குப் பெட்ரோல் சந்தையில் அராபியர்கள்தாம் தலைவர்கள். என்ன ஒரு கான்ட்ராஸ்ட். அன்றைக்குப் பாலைவனத்துல தண்ணீர் இல்லையேன்னு கத்தின குழந்தை இன்று 'தண்ணீர் இல்லை. பெட்ரோல்தான் இருக்கிறது!' என்று உலகிற்கே விலை பேசுகிறது. இறைவன் படைப்பில் எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கத்தான் செய்கின்றது. 

இந்தக் கேள்வி நமக்கு விடுக்கும் சவால்கள் என்ன?

நாம் ஒருவர் மற்றவரை சமம் என்று பார்க்கின்ற மனப்பக்குவம் பெற்றிருக்கிறோமா? அல்லது ஆண்டான் - அடிமை பேதத்தை நம் உறவுநிலைகளிலும் வைத்திருக்கின்றோமா?

அடுத்தவர்களுக்கு நம்மால் எதுவும் செய்ய முடியவில்லையென்றாலும் 'என்ன நிகழ்ந்தது?' என்ற கேள்வி கேட்கும் மனநிலையாவது இருக்கின்றதா? இந்தப் கேள்வி கேட்கும் மனநிலை 'குயூரியாசிட்டியாக' இருக்கக்கூடாது. பரிவும், கனிவும் கொண்டதாக இருக்க வேண்டும்.

இன்றைக்கு நாம பஸ்ல டிராவல் பண்ணும்போது அதிகமாகக் கேட்கும் வார்த்தைகள் இவைதாம்: 'டேய் சத்தமா பேசுடா! எனக்குக் கேட்கல!' என்ற செல்ஃபோன் உரையாடல்கள். 'மற்றவர்கள் மெதுவாகப் பேசுவதால்தான் நமக்குக் கேட்பதில்லை' என்பது உண்மையல்ல. அந்தக் கேட்டலுக்குக் தடையாக மற்றவைகளும் இருக்கலாம்: நம் மூடிக்கொண்ட காதுகள். நம் சூழல். 'இதத்தான சொல்ல வர்ற' என்ற நம் முற்சார்பு எண்ணம் கொண்ட வார்த்தைகள் இவை அனைத்துமே தடைகளாக இருக்கலாம். ஒருவர் மற்றவருக்குக் கரம் கொடுக்க முடியவில்லையென்றாலும் காது கொடுப்போம்.

'கோபப்படும்போது ஏன் ஒருவர் மற்றொருவர் சத்தம் போட்டு பேசுகின்றனர்?' என்று விவேகானந்தரிடம் கேள்வி கேட்கின்றார் ஒருவர். விவேகானந்தர் சொல்கிறார்: 'கோபப்படும்போது ஒருவர் மற்றவரின் இதயம் ரொம்ப தூரத்தில் இருக்கும். ஆகையால் அவர்கள் சத்தம் போட்டுப் பேசினால் தான் மற்றவருக்குக் கேட்கும். காதல் செய்யும் இருவரைப் பாருங்கள். மிகவும் மெதுவாகப் பேசுவார்கள். ஏனெனில் அங்கே இதயங்கள் அருகருகே இருக்கின்றன'.

கடவுளின் இதயம் ஆகாருக்கு மிக நெருக்கமாகவே இருந்தது. 

ஆகையால் அவர் கேட்டார்:

'ஆகார், உனக்கு நிகழ்ந்தது என்ன?'


No comments:

Post a Comment