Tuesday, September 17, 2013

எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தருவாயா?


இதோ ரெபேக்கா தம் தோள்மீது குடத்தை வைத்துக்கொண்டு வந்தார். அவர் எழில்மிக்க தோற்றமுடையவர். ஆண் தொடர்பு அறியாத கன்னிப்பெண். அவர் நீருற்றுக்குள் இறங்கிக் குடத்தை நிரப்பிக் கொண்டு மேலேறி வந்தார். ஆபிரகாமின் வேலைக்காரர் அவரைச் சந்திக்கச் ஓடிச்சென்று, 'உன் குடத்தினின்று எனக்குக் கொஞ்சம் தண்ணீர் குடிக்கத் தருவாயா?' என்று கேட்டார். உடனே அவரும் 'குடியுங்கள் ஐயா'என்று விரைந்து தம் குடத்தை தோளினின்று இறக்கி அவருக்குக் குடிக்கக் கொடுத்தார். (தொடக்கநூல் 24:15-18)

'உன் குடத்தினின்று எனக்குக் கொஞ்சம் தண்ணீர் குடிக்கத் தருவாயா?' கேள்வியைக் கேட்பவர் ஆபிரகாமின் வேலைக்காரர். கேட்கப்படுபவர் ரெபேக்கா, ஈசாக்கின் 'வுட்-பி'.

பழைய ஏற்பாட்டில் சந்திப்புக்கள் இரண்டே இடங்களில்தான் நடந்தன: 1. நகர வாயில். 2. கிணற்றடி. ஒரு ஆண் மற்றொரு ஆணைச் சந்திப்பது நகர வாயிலில் என்றால், ஒரு ஆண் மற்றொரு பெண்ணைச் சந்திப்பது கிணற்றடியில். ஒரு பெண் மற்றொரு பெண்ணைச் சந்திப்பது குறித்த பகுதியும் இல்லை. இடமும் இல்லை. பெண்கள் பொதுவிடத்தில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ள அனுமதி கிடையாது. ஆணாதிக்கம்!

பெண்பார்க்கும் படலம் கிணற்றடியில் நடப்பது இங்கு மட்டுமல்ல. யாக்கோபு மற்றும் மோசே வாழ்விலும் இதே போன்றுதான் நடக்கின்றது. யோவான் நற்செய்தியில் இயேசு சமாரியப் பெண்ணைச் சந்திக்கும் நிகழ்வு கிணற்றருகில் தான் நடக்கின்றது (யோவான் 4). இயேசுவின் கேள்வியும் இதுதான்: 'எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தருவாயா?' 

ரெபேக்காவைப் பார்ப்போம். 'ரெபேக்கா' என்றால் இறுக்கமாகக் கட்டுவது அல்லது பிடித்துக் கொள்வது என்று பொருள். பெண்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் பழைய ஏற்பாடு 'அடுக்குத்தொடரைப்' பயன்படுத்துகிறது. அடுக்குத்தொடர் என்றால் என்ன? கொஞ்சம் இலக்கணம்: ஒரே சொல் இரண்டு முறை பயன்படுத்தப்படுவதை இலக்கணம் 'இரட்டைக்கிளவி' எனவும், 'அடுக்குத்தொடர்' எனவும் அழைக்கிறது. 'அவள் கலகலவெனச் சிரித்தாள்' என்ற சொற்றொடரில் 'கலகல' என்பது இரட்டைக்கிளவி. 'அவள் விழுந்து விழுந்து சிரித்தாள்' என்ற சொற்றொடரில் 'விழுந்து விழுந்து' என்பது அடுக்குத்தொடர். இரட்டைக்கிளவியைப் பிரித்துப் பார்த்தால் பொருள் வராது – 'கல' என்பதற்கு பொருள் கிடையாது. ஆனால் அடுக்குத்தொடர் தனிச்சொல்லானாலும் பொருள் தரும் - 'விழுந்து' என்பது பொருள் தரும். அடுக்குத்தொடர் ஒரே சொல்லைக் கொண்டு மட்டுமல்ல, ஒரே பொருளைக் கொண்டும் அமையலாம்.

பெண்களின் அழகை வருணிக்கும்போது பழைய ஏற்பாடு (எபிரேயம்) ஒரே பொருள் தரக்கூடிய இரண்டு வார்த்தைகளை அடுத்தடுத்து பயன்படுத்துகிறது: 'எழில்மிக்க' 'தோற்றமுடையவர்' - இதில் இரண்டின் பொருளும் ஒன்றுதான். 'ஆண் தொடர்பு அறியாத' 'கன்னிப்பெண்' - இதிலும் இரண்டின் பொருளும் ஒன்றுதான். எதற்காக அடுக்குத்தொடர்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றி விவிலிய மொழியியில் ஆசிரியர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

'எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தருவாயா?' - இதுதான் வேலைக்காரர் ரெபேக்காவிடம் பயன்படுத்தும் 'ஐஸ்பிரேகர்'. நாமும் மற்றவர்களின் வீட்டிற்குச் செல்லும்போது, உரையாடலின் தொடக்கமாகப் பயன்படுத்தும் வார்த்தைகளும் இவைதான்: 'கொஞ்சம் தண்ணீர் தர்றீங்களா?' நம் வீட்டிற்கு வருபவர்களுக்கும் நாம் முதலில் தண்ணீர் கொடுக்கின்றோம். இன்று இதே கொஞ்சம் வளர்ந்து பவண்டோ, டொரினோ, ஃபேண்டா, டீ, காஃபி என மாறிவிட்டது – ஆனால் இதற்கெல்லாம் 'தண்ணீர்;' எவ்வளவோ மேல்!

இந்தக் கேள்வி கற்றுக் கொடுக்கும் முதல் பாடம்: 'எப்படி ஒரு அந்நியரோடு உறவாடுவது?' என்பதுதான். நாம் தினமும் நூற்றுக்கணக்கானவர்களைப் பார்க்கிறோம். இவர்களில் நமக்குத் தெரிந்தவர்கள் 20 சதவிகிதம் என வைத்துக் கொள்வோம். 80 சதவிகித மனிதர்கள் நம் கண்களில் படுகிறார்கள். ஆனால் நம் இதயத்தைத் தொடுவதில்லை. இதற்குக் காரணம் என்ன? நாம் அவர்களோடு பழகுவதில்லை. அவர்கள் நமக்கு அந்நியர்கள். அவர்களால் நமக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. மற்றொரு பக்கம் அவர்களைக் கண்டு பயம். எப்படிப் பேசுவது என்ற பயம். பேசினால் பதில் பேசாமல் போய்விடுவார்களா என்ற பயம். மற்றொரு வகையில் அந்நியர்கள் நம்மைப் பார்த்துச் சிரித்தாலோ, 'ஹலோ!' என்றாலோ, 'இவன் ஏன் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறான்?' என்ற கேள்வி மனத்தில் எழும். கூடவே பயம் தொற்றிக்கொள்ளும். 

பயத்தை போக்க, உரையாடலைத் துவக்க ஒரே வழி: 'நம் இரண்டு பேருக்கும் பொதுவானதில் தொடங்க வேண்டும்'. வேலைக்காரர் மிகவும் கெட்டிக்காரர். ரெபேக்காவுக்கும், இவருக்கும் முன்பின் அறிமுகம் இல்லை. ஆனால் இரண்டு பேருக்கும் பொதுவானது 'தாகம்' – ஒருவர் தாகமாயிருக்கிறார், மற்றவர் தாகம் தணிக்கிறார். முதல் உரையாடல் நமக்கு பொதுவானவைகளில் தான் துவங்க வேண்டும். அதை விடுத்து, 'ஆமா! நீங்க யாரு?' என்றாலோ, 'செக்கேமுக்கு வழி என்ன?' என்றாலோ உரையாடல் தொடங்கியிருக்க வாய்ப்பில்லை. நம் உரையாடல்களும் பல நேரங்களில் 'பொதுவானவைகளை விடுத்து' நம் தனிப்பட்ட அறிவையும், திறமையையும் முன்வைப்பதாகவே இருக்கின்றது. கோவிலுக்கு ஒரு பாட்டி வர்றாங்கன்னு வச்சுக்குவோம். முன்பின் தெரியாது. எப்படிப் பேசுவது? 'என்ன பாட்டி கோயிலுக்கு வந்தீங்களா?' அப்படின்னு கேட்டா, 'இல்ல. மீன் மார்க்கட்டுக்கு வந்தேன்' என்று சொல்லிவிடும். 'என்ன பாட்டி புதுசா ஐஃபோன் 5எஸ் வந்திருக்காமே?' என்றால் புது அறிமுகத்திற்கு வழியே இல்லை. நம் கிணற்றடிகளை நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

இரண்டாவதாக, ரெபேக்காவின் பெருந்தன்மை.

'உங்களுக்கும் தண்ணீர் தருகிறேன். உங்கள் கால்நடைகளுக்கும் தருகிறேன்!' ரெபேக்காவின் பெருந்தன்மையைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. முன்பின் தெரியாத ஒருவருக்கு இவ்வளவு பெருந்தன்மை காட்டுகிறார். 'ஐயோ எனக்கு நேரமில்லை' என்றோ, 'எனக்குக் கை வலிக்கும்' என்றோ ஒதுங்கிவிடவில்லை. ஆனால் நான் முன்பின் தெரியாதவர்களுக்கென்ன, நன்றாகப் பழகியவர்களிடமே பல நேரங்களில் பெருந்தன்மை காட்டுவதில்லை: 'எனக்கு நேரமில்லை!' 'நான் சீக்கிரம் தூங்கிட்டேன்!' 'எனக்கு டயர்டா இருக்கு' என்று போலிச் சாக்குகள் சொல்லத் துணிகிறேன். ஆனால் நம் வாழ்க்கையில் எவ்வளவோ ரெபேக்காக்கள் தினமும் வந்து போகின்றார்கள். 'தாங்கள் பெறுவதை விட அதிகம் கொடுப்பவர்கள்' இன்றும் இனியாக்களாக வலம் வருகின்றனர். 'எப்ப வேண்டுமானாலும் பேசு!' என்று தன் நேரம், திறன் என அனைத்தையும் அர்ப்பணிக்கத் துடிக்கும் ரெபேக்காக்கள் என் வாழ்விலும் இருக்கின்றனர். அவர்களுக்கு என் நன்றி! அவர்களைப் பார்த்தும் நான் பொறாமைப்படுகிறேன்!'

மூன்றாவதாக, தண்ணீர்:

மீட்பின் வரலாற்றில் தண்ணீருக்கு பெரிய பங்கு இருக்கின்றது. படைப்பின் தொடக்கத்தில் கடவுள் தண்ணீரை இரண்டாகப் பிரிக்கின்றார். இந்து சமய, கிரேக்க மற்றும் சுமேரிய – அக்காடிய புராணங்களும் 'பிரளயம்' என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகின்றன. கடவுளின் ஆவியானவர் தண்ணீரின் மேல் அசைந்தாடிக் கொண்டிருக்கிறார். நோவா காலத்து பெருவெள்ளம், இஸ்ராயேல் மக்களின் செங்கடல் கடத்தல், எலிசா காலத்து மழை, இயேசுவின் யோர்தான் திருமுழுக்கு, கானாவில் நடந்த முதல் அறிகுறி, பிலாத்து இயேசுவுக்குத் தரும் தண்டனைத் தீர்ப்பு என அனைத்திலும் தண்ணீர் இடம்பெறுகிறது. தண்ணீரை மையமாக வைத்தே பல திருப்பாடல்களும் இருக்கின்றன: 'அமைதியான நீர்நிலைகளுக்கு என்னை அழைத்துச் செல்வார்' (திபா 23), 'கலைமான் நீரோடைகளை ஆர்வமாய் நாடுவதுபோல' (திபா 42), 'பாபிலோனின் ஆறுகளருகே' (திபா 137).

மனுக்குல பிறப்பு வரலாற்றிலும் தண்ணீருக்கு மிகுந்த பங்கு உண்டு. அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையில் முதல் உயிர் தோன்றியது தண்ணீரில்தான். நாகரீகங்கள் வளர்ந்து தண்ணீர்ப் படுகைகளில்தான். மனிதனுக்கு மண்ணாசை என்கிறோமே. இந்த மண்ணாசை வெறும் மண்ணில்மேல் உள்ள ஆசையல்ல. மண்ணில் உள்ள தண்ணீரின்மேல் உள்ள ஆசைதான். பாலைவன மண்ணுக்கு யாரும் ஆசைப்படுவதில்லை.

நாம் குடிக்கும் தண்ணீர் நம் உயிரையே குடித்து விடுவதால் தண்ணீரைக் கண்டு நாம் பயப்படுகிறோம். தாயின் கருவறையில் பத்து மாதங்கள் தண்ணீரிலேயே மிதந்தோம். அன்று தொடங்கி வாழ்க்கை முழுவதும் தண்ணீர் நம் உடன் பயணம் செய்கிறது. இறப்புச் சடங்கில் 'நீர்மாலை' என்று தண்ணீர்க்குடம் நம்மேல் ஊற்றப்படுவதும், நம் கருவறைக்கும், கல்லறைக்கும் இடையே இணைப்புக்கோடாக தண்ணீர் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. உயிர் கொடுக்கும் தண்ணீரால் நம் உயிரை எடுக்கவும் முடியும். தண்ணீர் ஒரு ஆற்றல். தனக்கென்று எந்த ஒரு வடிவமும் இல்லை. எல்லா வடிவத்தையும் இது பெற்றுக்கொள்ளும். திட, திரவ, வாயு என அனைத்து நிலைகளிலும் இது பயணம் செய்ய முடியும். 

தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது என்பதை நம் பொய்யாமொழிப் புலவர் வள்ளுவர், 'நீரின்றி அமையா உலகு' என்கிறார். ஒரு பசுமைப்புரட்சி வீரரின் எச்சரிக்கை என்னவென்றால், 'முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் ஐரோப்பிய நாடுகளின் பேராசைப் பசியால் உருவானதென்றால், மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காகத்தான் நடைபெறும்!' கவிப்பேரரசு வைரமுத்துவின் 'மூன்றாம் உலகப்போர்' என்ற நூலும் தண்ணீரை மையமாக வைத்தே இருக்கின்றது. 

தண்ணீர் உயிரின் ஆதாரம். யாராலும் தண்ணீரை உற்பத்தி செய்ய முடியாது. இது இயற்கையின் கொடை. எந்தவொரு தேசத்தின், மாநிலத்தின், நபரின் தனிச்சொத்து அல்ல. அறநெறிக் கோட்பாட்டில் முக்கிமான ஒன்று 'பொதுநலன்'. என்னிடம் முள்வேலி இருக்கிறது என்பதற்காக என் வீட்டருகே இருக்கும் கண்மாய்க்கு வேலியிட எனக்கு உரிமையில்லை. அது 'பொதுநலனுக்கு' உகந்ததா என்பதும் அவசியம். இன்று நாம் முள்வேலிகளை விடுத்து, 'அணைகள்', 'பிளாஸ்டிக் பாட்டில்கள்' என வேலியிட்டுக் கொண்டிருக்கிறோம். 

தமிழன் தண்ணீருக்குப் படும்பாடு பெரும்பாடு. உள்நாட்டில் இருக்கும் தமிழன் தண்ணீர் இல்லாமல் சாகிறான். கடல் நீருக்குள் செல்லும் தமிழன் குண்டடி பட்டுச் சாகிறான். அண்மையில் ஒரு காணொளி பார்த்தேன். ஒரு இளம் பெண். மிக அழகாகப் பேசினார்: 'மலையாளி நம் ஊருக்குள் வருகிறான். ஓட்டைக குடிசை ஒன்றைப் போட்டு டீக்கடை வைக்கிறான். காற்றுக்குப் பறந்துவிடும் கடையை 'சாயா' கடை என்கிறான். இரும்பாய் நிமிர்ந்து நிற்கும் முல்லைப்பெரியாறு அணையை 'சாயும்' அணை என்கிறான். கர்நாடகத்தில் விழுந்து, தற்கொலை செய்து கொள்ளுமளவிற்கு விவசாயிகளுக்குத் தண்ணீர் இருக்கிறது. தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் பிணங்களைக் குளிப்பாட்டக் கூட தண்ணீர் இல்லை.' 

தண்ணீர் என்றால் 'டாஸ்மாக்' என தமிழன் நினைக்க வேண்டும் என்று விரும்பும் நம் தமிழக அரசு இன்று 'அம்மா தண்ணீர் பாட்டிலை' விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளது. 'மலிவுவிலைத் தண்ணீராம்!' இது மக்களுக்குச் செய்யும் பெரிய துரோகம். 'டாஸ்மாக்' தண்ணீரும் ஒழிய வேண்டும். 'பாட்டில்' தண்ணீரும் ஒழிய வேண்டும்.

'ஆக்வா ஃபினா' என்ற ஜப்பானிய மொழித் திரைப்படம் வந்தது. 'ஆக்வாஃபினா' பாட்டிலைக் காட்டுவார்கள் முதலில். பின் கேமரா ஒரு புத்த மடாலயத்தைப் பார்த்துத் திரும்பும். 'புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி!' எனப் பாடல் ஒலிக்கும். வழிபாடு முடிந்து ஒரு கூட்டம் வேகமாக வெளியேறி அருகிலிருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு வரும். நிறுத்தத்தில் இருக்கும் ஒரு கடையில் எல்லாரும் தண்ணீர் பாட்டில்கள் வாங்குவர். பேருந்து வரும். அடித்துப் பிடித்துக்கொண்டு ஏறுவர். சிலர் செல்ஃபோனில் பேசுவர். சிலர் நியூஸ்பேப்பர் வாசிப்பர். சிலர் வேடிக்கை பார்ப்பர். ஒரு குழந்தை பீறிட்டு அழும். 'அம்மா, தண்ணீர்!' என்று கேட்கும். அந்த கிராமத்து ஏழைத்தாய் தண்ணீர் எடுத்து வர மறந்திருப்பார். கொஞ்ச நேரம் கழித்து, 'தண்ணீர்!' என மறுபடியும் குழந்தை கத்தும். சுற்றுமுற்றும் பார்ப்பாள் தாய். எல்லோரும் தங்கள் ஆக்வாஃபினா பாட்டில்களை ஒளித்து வைப்பார். அழுதழுது வாடுகின்ற குழந்தை ஒரு கட்டத்தில் அழக்கூட திராணியில்லாமல் மயங்கி விடும். இறுதியில் ஒரு கேப்ஷன்: 'காசு கொடுத்து வாங்கிவிட்டோம் என்ற ஒரே காரணத்திற்காக, பகிர்ந்து கொள்ள விருப்பமில்லாத மனிதர்கள் நடுவிலா நாம் வாழ்கிறோம்?'

'உன் குடத்தினின்று எனக்குக் கொஞ்சம் தண்ணீர் குடிக்கத் தருவாயா?'

No comments:

Post a Comment