Monday, September 16, 2013

மகனைக் கூட்டிக் கொண்டு போகலாமா?


ஆபிரகாம் தன் அதிகாரியிடம், 'என் சொந்த நாட்டிற்குப் போய், என் உறவினரிடம் என் மகன் ஈசாக்கிற்குப் பெண்கொள்வாய் என்றும் சொல்' என்றார். அதற்கு அவர், 'ஒருவேளை பெண் என்னோடு வர மறுத்து விட்டால் தாங்கள் விட்டுவந்த அந்நாட்டிற்குத் தங்கள் மகனைக் கூட்டிக் கொண்டு போகலாமா?' என்று கேட்டார். அதற்கு ஆபிரகாம், 'அங்கே என் மகனை ஒருக்காலும் கூட்டிக்கொண்டு போகாதே. கவனமாயிரு' என்றார். (தொடக்கநூல் 24:4-6)

ஈசாக்கு வளர்ந்து பெரியவராகி விட்டார். அவருக்கு பெண் பார்ப்பதற்காக தன் அதிகாரியிடம் பொறுப்பை ஒப்படைக்கின்றார் ஆபிரகாம். 'உன் கையை என் தொடையின் மேல் வைத்து' என்று வாக்குறுதி கேட்கும் ஆபிரகாமின் வார்த்தைகள் நம் காதுகளுக்கு நெருடலாக இருக்கின்றன. 'தொடைகளுக்கு கீழ்' என்ற சொல்லாடல் 'விருத்தசேதனத்தைக்' (இஸ்லாமிய சகோதரர்களின் சுன்னத்து) குறிக்கிறது. கடவுள் தாம் இஸ்ராயேல் மக்களைத் தேர்ந்துகொண்டதன் அடையாளமாக விருத்தசேதனத்தை முன்வைக்கின்றார். விருத்தசேதனம் உடன்படிக்கையின் அடையாளம் மட்டுமல்ல. பாலைவன வாழ் மக்களின் தூய்மைச்சடங்காகவும் இது இருந்தது. 'தொடையின் கீழ்' வைத்துச் செய்யப்படும் வாக்குறுதி உயர்ந்த வாக்குறுதியாகக் கருதப்பட்டது.

எந்த நாட்டிலிருந்து பெண் வேண்டும்? தன் சொந்த நாட்டிலிருந்து. அதாவது மெசபதோமியா பகுதியிலருந்து. என்னதான் வெளியூரில் சென்று குடியேறினாலும், பெண் எடுக்க உள்ளுரையே விரும்புகின்றார் ஆபிரகாம். இன்றைய யூதர்களின் வாழ்க்கையிலும் இதைப் பார்க்கலாம். யூத இனம் தங்களையே தூய இனமாகக் கருதுகின்றது. மற்ற இனத்தோடு செய்யும் திருமண ஒப்பந்தங்கள் தங்கள் இனத்தின் தூய்மையைக் குறைத்துவிடும் என்பதற்காக அவர்கள் வேறு யாரோடும் திருமணம் செய்து கொள்ளவில்லை. மேலும் யூத சமூகம் தாய் வழிச் சமூகம். ஒரு தாய் யூதரென்றால், மகனும் யூதர். வேறு எந்த வகையிலும் ஒருவர் யூதராக மாற முடியாது. சாராவின் சொந்தக்காரர் பக்கம் பெண் பார்க்கச் சொல்கின்றார் ஆபிரகாம். இன்றும் நம் தமிழ் மரபில் தன் தாயுடன் பிறந்தவர்களையும், தாய்மாமனின் பிள்ளைகளையும் மணமுடிக்கும் பழக்கம் இருக்கின்றது. இதுவும் பண்டைக்கால எபிரேய – தமிழ் உறவின் வாசனையாக இருக்கலாம்.

நம் கேள்வி இப்போது வருகின்றது: 'ஒருவேளை அந்தப் பெண் வரவில்லையென்றால் உங்கள் மகனை நான் அங்கே கூட்டிக்கொண்டு போகலாமா?' கேட்கிறார் பணியாளர்.

'இல்லை!' ஒரே வார்த்தையில் பதில் தருகின்றார் ஆபிரகாம்.

ஏன் கூடாது?

'கலப்பையில் கை வைத்தவன் திரும்பிப் பார்க்கக் கூடாது' என்பதில் உறுதியாய் இருக்கின்றார்.

மனிதர்களாகிய நாம் நேரத்தால் இயக்கப்படுபவர்கள். நேரத்திற்கு 'கடந்த காலமும்' உண்டு, 'எதிர்காலமும்' உண்டு. ஒவ்வொரு மனிதருக்கும் இந்த இரண்டும் உண்டு: ஒரு கடந்த காலம். ஒரு எதிர்காலம். ஒவ்வொரு மண்ணுக்கும் உண்டு: ஒரு கடந்த காலம். ஒரு எதிர்காலம். தான் இப்போது இருக்கும் கானான் நாட்டிலிருந்து பின்நோக்கி நடக்க மறுக்கின்றார் ஆபிரகாம். 'தன் மகன் மறுபடியும் தன் சொந்த ஊர் சென்று தங்கிவிட்டால் கடவுளின் வாக்குறுதி என்ன ஆகும்!' என்பதில் கவனமாய் இருக்கின்ற ஆபிரகாம் தன் மகனை அழைத்துப் போவதை வேண்டாம் என்கின்றார்.

நாம் அனைவருமே கடந்தகாலத்தின் சுவடுகளைத் தாங்கிக் கொண்டுதான் இருக்கின்றோம். கடந்த காலம் சிலருக்கு இனிக்கின்றது. பலருக்குக் கசக்கின்றது. 'நன்றாக இருந்திருக்கலாமோ?' என்ற கலக்கத்தையும், ஏக்கத்தையும் தருகின்றது. 'இப்படி செய்து விட்டேனே?' என்ற குற்றவுணர்வையும் தருகின்றது. நல்லதோ, கெட்டதோ கடந்ததை நாம் கண்டிப்பாக விட்டுவிட வேண்டும்.

ஒரு சில நேரங்களில் நாம் கடந்த காலத்திலேயே வாழ நினைக்கின்றோம். பழகியவர்களிடமே பழகுகிறோம். சென்ற இடங்களுக்கே செல்கின்றோம். பார்த்த நபர்களையே பார்க்கின்றோம். பேசியவர்களோடேயே பேசுகிறோம். புதிய இடங்களைப் பார்ப்பதையும், புதிய இடங்களில் வாழ்வதையும் விரும்புவதில்லை. புதிய மனிதர்களைச் சந்திக்கப் பயமாக இருக்கின்றது. ஏன் இந்தப் பயம்?

பழமை நமக்கு மூன்று காரணங்களுக்காக மிகவும் பிடித்திருக்கின்றது:

1. கடந்த காலத்தில் வாழ்வது நமக்கு மிகவும் வசதியானது. It is convenient. 'ச்சே...எப்படி இருந்தோம் அன்னைக்கு!', 'அன்னைக்கு நல்லா இருந்துச்சல!', 'அந்த ஊரு நல்ல ஊரு!', 'அந்த டீக்கடை வடையை மாதிரி வேறு எங்கும் கிடைக்காது!' இப்படிப்பட்ட சொல்லாடல்கள் நம் நாக்கிலும் வந்து போகின்றன. 'அன்னைக்கு எல்லாம் நல்லா இருந்துச்சுல' அப்படின்னு நாம சொல்லும்போதே நம்ம ஆழ்மனம் நிகழ்காலத்தில் வாழ மறுக்கின்றது. எப்போதும் இறந்த காலத்தின் இனிமையையே தேடுகின்றது. 'தேனியில சாப்பிட்ட வடையை நான் ரொம்ப நாள் நினைச்சுகிட்டே இருந்ததால இங்க கிடைக்கும் 'குரோசட்டாவை' நான் பல நாட்கள் சுவைக்காமலேயே இருந்துவிட்டேன்.

2. கடந்த காலம் நமக்கு அறிமுகமானது. Living in the past is easy because we know it. நம் முதிர்ச்சி எப்பவுமே ஒரு ஸ்டெப் பிலோதான். 12ஆம் வகுப்பிற்கு வந்தவுடன் 10ஆம் வகுப்பு ஈஸியாகத் தெரிகின்றது. இன்றைய நாள் விடிந்தவுடன் நேற்றைய நாள் நன்றாகத் தெரிகின்றது.

3. கடந்த காலம் நமக்கு சவால்களைத் தருவதில்லை. Living in the past does not involve risks. தெரிந்த ரோடு. ஓட்டிய கார். நமக்குப் பயமில்லை. 'கண்ணை மூடிக்கொண்டு நாம் கடந்து விடுகிறோம்!'

ஆனால் கடந்த காலத்தையே பற்றிக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை. Life must go on.

எல்லாம் கடந்தால் தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும். நம்ம வாழ்க்கையில இதுவரைக்கு நடந்த எல்லாம் நம்ம நினைவில் இருக்கு என வைத்துக்கொள்வோம். நாம் குழம்பிப் போய்விடுவோம். காலம் ஒரு சிறந்த மருத்துவன். நாள்கள் கடக்க கடக்க நாம் முன்னே சென்றுகொண்டேயிருக்கின்றோம்.

நம் உடலின் பழைய செல்கள் இறந்தால்தான் நாம் புதிதாக வளர முடியும். நாம் பேசும்போது முதல் வார்த்தை இறந்தால்தான் அடுத்த வார்த்தை பிறக்க முடியும். நாம் நடக்கும் போது எடுத்து வைக்கும் முதல் அடி இறந்தால்தான் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும்.

கடந்த காலம் என்பது நம் வாகனத்தின் 'ரேர் மிரர்' போன்றது. 'ரேர் மிரர்' அவசியம்தான். ஆனால் ரேர் மிரரையே பார்த்துக்கொண்டிருந்தால் முன்னால் இருக்கும் ரோட்டை எப்போது பார்ப்பது?

அடுத்ததாக, 'கடவுள் ஒரு நாட்டை எனக்கு வாக்களித்து விட்டார். அதிலிருந்து நான் பின்னே செல்ல மாட்டேன்' என்று உறுதியாய் இருக்கிறார் ஆபிரகாம். தன் மகனின் மகிழ்ச்சியா? தன் கடவுளின் வாக்குறுதியா? என்ற இரண்டில் 'கடவுளின் வாக்குறுதியையே' தேர்ந்தெடுக்கிறார்.

இந்தக் கேள்வி நம் வாழ்விலும் கேள்வியை எழுப்புகின்றது. வாழ்வின் முக்கியமான கட்டங்களில் நம் சின்னஞ்சிறு சந்தோஷங்களைத் தேர்ந்தெடுக்கிறோமா? அல்லது கடவுளின் வாக்குறுதியைத் தேர்ந்தெடுக்கிறோமா?

ஒரு மாலை நேரம். ஹூக்ளி ஆற்றில் ஒரு படகில் பயணம் செய்து கொண்டிருக்கிறார் இரபீந்தரநாத் தாகூர். கொஞ்சம் கொஞ்சமாய் இருட்டிக் கொண்டிருக்கிறது. மெழுகுதிரி ஒன்றை ஏற்றி வைத்து அந்த வெளிச்சத்தில் கவிதை எழுத முனைகின்றார். கவிதை வருவதாக இல்லை. ஒரு கட்டத்தில் விரக்தியாகி மெழுகுதிரியை ஊதி அணைத்துவிடுகின்றார். அப்போதுதான் அழகு நிலவொளியைக் காண்கின்றார். இந்தச் சின்ன மெழுகுதிரி, பௌர்ணமி நிலவின் ஒளியை மறைத்து விட்டதே என நினைத்துக்கொண்டு கவிதை எழுதுவதைத் தொடர்கின்றார். உலகம் போற்றும் 'கீதாஞ்சலி' படைக்கின்றார்.

நம் வாழ்விலும் 'சந்தோஷங்கள்' என்னும் மெழுகுதிரிகள், 'வாக்குறுதி' என்னும் பௌர்ணமி ஒளியை மறைத்து விடலாம்!

தாங்கள் விட்டுவந்த அந்நாட்டிற்குத் தங்கள் மகனைக் கூட்டிக் கொண்டு போகலாமா?



No comments:

Post a Comment