ஆண்டின் பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு
இரண்டு ஆண்டுகளுக்கு முன் புனித பவுல் இறையியல் கல்லூரியில் நடைபெற்ற அருள்பணியாளர்களுக்கான கூடுகையை நெறிப்படுத்த செங்கை மறைமாவட்ட அருள்பணியாளர் பேரருள்திரு பாக்கிய ரெஜிஸ் அவர்கள் வந்திருந்தார்கள். அறிவர் அம்பேத்கர் அவர்கள் 1942ஆம் ஆண்டு ஆற்றிய உரையில் பயன்படுத்தி அவருடைய ட்ரேட் மார்க் ஸ்லோகன் என உயர்ந்த, 'கற்பி – கலகம் செய் - ஒன்றுசேர்' என்னும் மூன்று சொல்லாடல்களை எடுத்து, அருள்பணியாளர்களின் 'எளிமை – கீழ்ப்படிதல் - கன்னிமை' என்னும் மூன்று வாக்குறுதிகளோடு இணைத்து மிக அழகான செய்தியைத் தந்தார்கள். 'எந்த வயிறும் சோறில்லாமல் காயக் கூடாது. எந்தக் கண்ணும் எழுதப்படிக்கத் தெரியாமல் இருக்கக் கூடாது' என்று தன் தாய் தன் குருத்துவ அருள்பொழிவு அன்று சொன்னதையும் அருள்பணியாளர் நினைவுகூர்ந்தார்.
'கற்பி – கலகம் செய் - ஒன்றுசேர்!' என்னும் சொல்லாடல்கள் முதன் முதலாக எஸ்.டி.எஃப் (சமூக சனநாயகக் கூட்டமைப்பு) என்ற அமைப்பின் இலச்சினையாக 1883ஆம் ஆண்டு வெளி வந்தது. 'கற்பி – ஏனெனில் நம் எல்லா அறிவும் நமக்குத் தேவை! கலகம் செய் - ஏனெனில் நம் எல்லா ஆர்வமும் நமக்குத் தேவை! ஒன்றுசேர் – ஏனெனில் நம் எல்லா ஆற்றுலும் நமக்குத் தேவை!' என்று இலச்சினையின் பொருள் விளக்கப்பட்டது. ஆக, அறிவு, ஆர்வம், மற்றும் ஆற்றலின் ஒருங்கியக்கமே மேற்காணும், 'கற்பி – கலகம் செய் - ஒன்றுசேர்' என்னும் சொல்லாடல்களின் உட்பொருளாக இருக்கின்றது.
அண்ணல் அம்பேத்கர் மேற்காணும் சொல்லாடல்களைத் தன் 1942ஆம் ஆண்டு உரையில் பின்வருமாறு பயன்படுத்துகின்றார்:
'என் இறுதி அறிவுரை வார்த்தைகள் இவையே: கற்பி – கலகம் செய் - ஒன்றுசேர்! உன்மேல் நீ நம்பிக்கை கொள்! நீதி நம் பக்கம் இருக்க, நாம் தோல்வியடைய முடியாது. என்னைப் பொருத்தவரையில் போராட்டம் என்பது மகிழ்ச்சி. போராட்டம் என்பது ஆன்மிகம். அது பொருள்வகையோ சமூகவகையோ அல்ல. நம் போராட்டம் பணத்திற்கோ அல்லது அதிகாரத்துக்கோ அல்ல. மாறாக, கட்டின்மைக்கு. நம் மனித ஆளுமையை மீட்டெடுப்பதற்கு!'
கற்பி – கலகம் செய் - ஒன்றுசேர்! என்னும் சொல்லாடல்கள் இன்றைய இறைவார்த்தை வழிபாட்டின் மூன்று வாசகங்களுக்கும் மிக அழகாகப் பொருந்துகின்றன. அறிவர் அம்பேத்கர் குறிப்பிடுவது போல, இவ்வார்த்தைகளில் ஒரு தனிமனிதர் ஆன்மிக எழுச்சியைக் காண முடியும் என்றால், இன்றைய இறைவார்த்தை வழிபாட்டோடு இணைத்துப் பார்ப்பதில் தவறில்லை.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மாற் 6:30-34), 'அவர்கள் (மக்கள் கூட்டத்தினர்) ஆயரில்லா ஆடுகளைப் போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்' என்று நிறைவு பெறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்தின் தொடர்ச்சியாக வரும் பகுதியில் இயேசு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்தளிக்கின்றார். வயிற்றுக்கு உணவு கொடுக்குமுன் செவிக்கு உணவு கொடுக்கின்றார் இயேசு. இயேசு எதைக் கற்பித்தார் என்பதைப் பற்றிய நற்செய்தியாளர் பதிவிடவில்லை. ஆனால், 'பலவற்றைக் கற்பித்தார்' என்று மாற்கு நற்செய்தியாளர் மிகவும் திருத்தமாக எழுதுகின்றார்.
'டிடாஸ்கெய்ன்' (கற்பித்தல்) என்ற கிரேக்கச் சொல்லாடல் புதிய ஏற்பாட்டில் 13 முறை வருகின்றது. அவற்றில் 4 முறை மாற்கு நற்செய்தியில் வருகின்றது. ஓரிடத்தில் இயேசு உவமைகள் வழியாக விண்ணரசு பற்றிக் கற்பிக்கின்றார். இன்னொரு முறை மானிட மகன் பட வேண்டிய துன்பங்கள் பற்றிப் பேசுகின்றார். இரு இடங்களில் வெறும் 'கற்பித்தல்' மட்டும் நடைபெறுகிறது. 'கற்பித்தல்' என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தி நற்செய்தியாளர் இயேசுவைப் பற்றிய மூன்று புரிதல்களைக் கொடுக்கின்றார்: (அ) முதல் ஏற்பாட்டில் மோசே ஆண்டவராகிய கடவுளின் திருச்சட்டத்தை இஸ்ரயேல் மக்களுக்குக் கற்பிக்கின்றார் (காண். இச 4). அவ்வகையில், இயேசு ஒரு புதிய மோசே என முன்மொழியப்படுகின்றார். மத்தேயு நற்செய்தியாளர் இந்தக் கருத்துருவை மிக நேர்த்தியாகக் கையளாளுகின்றார் (காண். மத் 5). (ஆ) இயேசுவின் சமகாலத்தில் ரபிக்கள் திருச்சட்டங்களைப் பற்றிய விளக்கவுரைகளை தங்கள் சீடர்களுக்குக் கற்பித்தனர். பெரிய அலெக்சாந்தரின் காலத்திற்குப் பின்னர் பாலஸ்தீனாவில் நிறைய தெருப் போதகர்கள் தங்களுக்கென சீடர்களைச் சேர்த்துக்கொண்டு போதித்து வந்தனர். இயேசுவை ஒரே நேரத்தில் ரபி என்றும், தெருப் போதகர் என்றும் காட்டுவதற்காக நற்செய்தியாளர்கள், 'கற்பித்தல்' என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். (இ) இயேசுவின் எளிய பின்புலம் அறிந்தவர்கள் அவருக்குக் கற்பிக்கத் தெரியாது என்று இடறல்பட்டனர். அக்கருத்தை எதிர்ப்பதற்காகவும் நற்செய்தியாளர்கள் இயேசு கற்பித்தார் எனப் பதிவு செய்கின்றனர்.
இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரு குழுவினருக்குக் கற்பிக்கின்றார்: முதல் குழுவினர் சீடர்கள். அவர்களுக்குத் தன் வார்த்தையால் கற்பிக்கின்றார். பணி முடிந்து வெற்றியோடு வந்தவர்களிடம், 'நீங்கள் சற்று ஓய்வெடுங்கள்!' என்று கற்பிக்கின்றார். இரண்டாம் குழுவினர் மக்கள். அவர்களுக்குத் தன் பரிவு என்னும் உணர்வால் கற்பிக்கின்றார். இவ்விரண்டிலுமே கற்பித்தல் என்பது ஒருவருடைய இருத்தலை அவருக்குச் சுட்டிக்காட்டுகிறது.
கற்பித்தலின் நோக்கம் இதுதான். 'நீ இப்போது இங்கே, இப்படி இருக்கிறாய்!' என்ற மெய்யறிவை நான் மற்றவருக்குத் தரும்போது அவருக்கு நான் கற்றுக்கொடுக்கிறேன். அந்த மெய்யறிவு அவருக்கு வந்தவுடன் அவர் அந்தநிலையிலிருந்து தன்னையே விடுவித்துக்கொள்வார். தங்கள் பணிகளோடு சீடர்கள் தங்களையே ஒன்றிணைத்துக்கொண்டு அதுவே தங்களுடைய அடையாளம் என நினைக்கின்றனர். ஆனால், பணி மட்டுமே அடையாளம் அல்ல. அதையும் தாண்டிய ஓய்வு இருக்கிறது என்று அவர்களுக்கு மெய்யறிவு அளிக்கின்றார் இயேசு. தாங்கள் யாவே இறைவனால் தேர்ந்தெடுத்த மக்கள் என்ற பெருமையில் இருந்தனர் இயேசுவின் சமகாலத்தவர். ஆனால், தங்களை உரோமையர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் என்பதை மறந்துவிட்டனர். அரசியல், பொருளாதாரம், மற்றும் சமய அடிமைத்தனங்களால் அல்லல்பட்டவர்களுக்குக் கற்பித்தலின் வழியாக அவர்களின் மெய்நிலையை உணரச் செய்கின்றார் இயேசு.
புனித அகுஸ்தினாரின் வாழ்வில், 'நான் இப்படி இருக்கிறேனே!' என்ற மெய்யறிவுதான் அவருடைய பழைய வாழ்க்கையை உதறிவிட அவருக்குத் துணைநிற்கிறது. ஆக, கற்பித்தல் என்பது வெளியிலிருந்து உள்ளேயோ, அல்லது ஒருவருக்கு உள்ளே புறப்பட்டு உள்ளேயே நகர்வதாகவோ இருக்கலாம்.
இரண்டாவதாக, கலகம் செய்.
அறிவர் அம்பேத்கரைப் பொருத்தவரையில் கலகம் செய் என்பது போராட்டம் செய்தல், அல்லது கிளர்ச்சி செய்தல் என்று பொருள் அல்ல. மாறாக, ஆர்வத்தை ஒருங்கிணைப்பது. கலகம் செய்தல் ஒவ்வொருவருடைய தனி மனிதருக்கு உள்ளே நடக்கின்ற செயல். மெய்யறிவு பெற்ற ஒருவர் தன்னிலை உணர்ந்தவுடன், தன் இருத்தலுக்கும் செல்ல வேண்டிய இடத்திற்கும் இடையே ஓர் இழுபறி நிலை உருவாகிறது. அதுவே 'கலகம்.' எடுத்துக்காட்டாக, இளைய மகன் பன்றிகள் மேய்த்துக்கொண்டிருக்கும்போது, அறிவு தெளிகின்றார். அது கற்பித்தல். 'என் தந்தையிடம் செல்வேன்' என்று தனக்குள்ளே பேச ஆரம்பிக்கின்றார். அதுதான் கலகம். யாக்கோபு தன் மாமனார் லாபானின் வீட்டிலிருந்து தப்பி ஓடி வந்தபோது ஆடவர் ஒருவர் அவருடன் இரவு முழுவதும் போரிடுகின்றார். அங்கே அந்தக் கலகம் யாக்கோபின் உள்ளத்தில் நிகழ்கிறது. ஆக, மெய்யறிவு பெற்ற ஒவ்வொருவரும் கலகத்தைத் தன் உள்ளத்தில் உணர்கின்றார்.
முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எரேமியா வழியாக ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேலின் ஆயர்களைச் சாடுகின்றார். எரேமியா பாபிலோனியப் படையெடுப்பு பற்றி எச்சரிக்கை விடுத்ததுடன், அப்படையெடுப்பை தானே நேருக்கு நேராகக் காண்கின்றார். இஸ்ரயேலின் அரசர்கள், குருக்கள், மற்றும் தலைவர்களின் சிலைவழிபாட்டால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்படுகின்றனர். நாடுகடத்தப்படுகின்றனர். 'ஆயர்கள் மந்தையைச் சிதறடித்தார்கள்' என்ற சொல்லாடல் இஸ்ரயேல் மக்கள் நாடுகடத்தப்பட்டதையே குறிக்கின்றது. மேலும், 'நான் மேய்ப்பர்களை நியமிப்பேன் ... யூதா விடுதலை பெறும் ... ஆண்டவரே நமது நீதி என்னும் பெயரால் நாடு அழைக்கப்பெறும்' என இறைவாக்குரைக்கின்றார் எரேமியா. இறைவாக்கினர் எரேமியாவின் இவ்வார்த்தைகள் எருசலேம் நகரில் ஒரு கலகத்தை ஏற்படுத்துகிறது. அரசர்கள், குருக்கள், மற்றும் மக்கள் தலைவர்களுக்கு நடுவே ஒரு சலசலப்பை ஏற்படுத்துகின்றார் எரேமியா. ஒரு பக்கம் ஆண்டவராகிய கடவுளுக்கு தாங்கள் கொண்டிருக்கின்ற பிரமாணிக்கம், இன்னொரு பக்கம் தங்களுடைய வேற்றுத் தெய்வ வழிபாடு என இவ்விரண்டுக்கும் நடுவே எதைத் தெரிவு செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் உள்ளத்தில் கலங்கித் தவிக்கின்றனர்.
'யாவே சித்கேனு – ஆண்டவரே நமது நீதி' என்பது இந்நகரின் பெயர் என்றால், நீதி என்னவாயிற்று? என்று தங்களுக்குள்ளே கேள்வி கேட்கின்றனர். இதுதான் கலகம் செய்தல். ஆக, கலகம் என்பது இங்கே பொதுவான ஓர் உணர்வாகத் தொடங்கி ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் அரங்கேறுகிறது.
ஆக, கலகம் செய்தல் என்பது மாற்றத்திற்கான வழியை முன்னெடுப்பதைக் குறிக்கின்றது.
மூன்றாவதாக, ஒன்றுசேர்.
எபேசு நகரத் திருஅவைக்கு எழுதுகின்ற பவுல், அவர்கள் கிறிஸ்து வழியாகப் பெற்ற மீட்பு என்னும் பேறு பற்றிப் பாராட்டிவிட்டு, கிறிஸ்து வழியாக ஏற்பட்ட ஒப்புரவு பற்றி எடுத்துரைக்கின்றார்: 'அவரே (கிறிஸ்து) இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார் (ஒன்று சேர்த்தார்).' அதாவது, மீட்பு என்பது யூதர்களுக்கு மட்டுமே என்று எண்ணி, புறவினத்தாரை ஒதுக்கி வைத்த, அல்லது தள்ளி வைத்த நிலையைத் தகர்த்தெறிகின்றார். யூதர்களும் புறவினத்தார்களும் கிறிஸ்துவில் ஒன்றுசேர்கின்றனர். இப்படி அவர்கள் ஒன்று சேர்வதால் பாவத்திலிருந்து மீட்பு அல்லது விடுதலை பெறுகின்றனர்.
ஆக, ஒன்று சேர்தல் என்பது தனிமனித விடுதலைக்கும் குழும விடுதலைக்கும் வழிகோலுகிறது.
இந்த ஒன்று சேர்தல் எப்படி நடக்கிறது? 'பல கட்டளைகளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை அழித்ததன் வழியாக' கிறிஸ்து மக்களை ஒன்றுசேர்க்கின்றார். அதாவது, பிரிக்கின்ற அனைத்தையும் தகர்க்கின்றார். இங்கே ஒருவருடைய ஆற்றல் இன்னொருவருடைய ஆற்றலோடு இணைகின்றது.
ஒன்று சேர்தல் என்பதை இங்கே, நாம் இரண்டு நிலைகளில் புரிந்துகொள்ளலாம்: ஒன்று, யூதர்களும் புறவினத்தார்களும் மீட்பில் ஒன்றுசேர்கின்றனர். இரண்டு, கிறிஸ்துவின் வழியாக இவர்கள் அனைவரும் கடவுளோடு ஒன்றுசேர்கின்றனர். மனிதர்கள் ஒருவர் மற்றவரோடு ஒன்றுசேர்தலே ஆற்றலின் குவியலாக இருக்கிறது என்றால், இறைவனோடு நாம் சேரும்போது நம் ஆற்றல் இன்னும் பெருகும் அல்லவா!
ஆக, இயேசு தன் சீடர்களுக்கு வார்த்தையும், தன்னைத் தேடி வந்த மக்களுக்கு பரிவு என்னும் உணர்வாலும் கற்பிக்கின்றார்.
எரேமியா, தன் சமகாலத்தவர்கள் நடுவே கலகம் செய்கின்றார். ஒருவிதமான பாதுகாப்பின்மையை உருவாக்குகின்றார்.
பவுல், கிறிஸ்து வழியாக மனுக்குலம் ஒன்றுசேர்ந்ததையும், இறைவனோடு அது ஒப்புரவாக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டுகின்றார்.
கற்பித்தல் - கலகம் செய்தல் - ஒன்று சேர்தல் என்னும் சொல்லாடல்கள் இன்று நம் ஆன்மிக வாழ்வுக்கு எப்படி சவால் விடுகின்றன?
(அ) கற்பி: இன்று நான் மெய்யறிவு பெற வேண்டிய தேவை என்ன? எதில் எனக்கு கற்பித்தல் தேவைப்படுகிறது? எதை நான் கற்க வேண்டும்? பரபரப்பான என் வாழ்விலிருந்து, பக்தி முயற்சிகளில் மட்டுமே மூழ்கிக் கிடந்து, 'பூசை பார்த்தேனா? செபமாலை செய்தேனா? நவநாள் செய்தேனா?' என்னும் செயல்பாடுகளின் பரபரப்பிலிருந்து விடுபட்டு, ஆண்டவர் தருகின்ற ஓய்வு பற்றிய மெய்யறிவைப் பெறுகின்றேனா? என்னைச் சுற்றி நிற்கும் மக்களின் கண்களின் வழியாக அவர்களுடைய இதயங்களை என்னால் கண்டு அவர்கள்மேல் பரிவு கொள்ள நான் கற்றுள்ளேனா?
(ஆ) கலகம் செய்: இறைவனுக்கு நான் கொடுக்க வேண்டிய அர்ப்பணம் மற்றும் பிரமாணிக்கத்திலிருந்து என்னைப் பிரித்து வைப்பது எது? என் உள்ளே எழும் பாதுகாப்பின்மை குறித்தும், அச்சம் குறித்தும் நான் கவனமாக இருக்கின்றேனா?
(இ) ஒன்றுசேர்: ஒருவர் மற்றவரோடு நான் ஒன்றுசேர்வதற்குத் தடையாக இருக்கின்ற காரணிகள் எவை? இறைவனிடமிருந்து நான் அந்நியப்பட்டுக் கிடந்தால் என் வாழ்வை நான் எப்படிச் சரி செய்வேன்?
இறுதியாக,
கற்பி – கலகம் செய் - ஒன்றுசேர் என்னும் சொல்லாடல்களின் ஊற்று நம் இறைவனே எனக் கற்றுக்கொடுக்கின்றது இன்றைய பதிலுரைப்பாடல் (காண். திபா 23).
'தம் பெயர்க்கேற்ப அவர் என்னை நீதி வழி நடத்துகிறார்' - இதுவே கற்பித்தல்!
'என் எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றார். என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றார்' - இதுவே கலகம் செய்தல்!
'உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள்நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும். நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்' - இதுவே ஒன்று சேர்த்தல்!