Monday, February 8, 2021

மரபின் பொருட்டு

இன்றைய (9 பிப்ரவரி 2021) நற்செய்தி (மாற் 7:1-13)

மரபின் பொருட்டு

இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் மனிதரை ஆணும் பெண்ணுமாகப் படைக்கிறார். நற்செய்தி வாசகத்தில், மனிதர்கள் தங்களுக்கெனப் படைத்துக் கொண்ட மரபுகளைச் சாடுகின்றார் இயேசு. கடவுளின் படைப்பை காலப்போக்கில் மறந்துவிடுகின்ற மனிதர்கள் தங்கள் மரபுகளையே மேன்மையாகப் பிடித்துக்கொண்டிருக்கின்றனர் எனக் கடிந்துகொள்கின்றார் இயேசு.

இஸ்ரயேல் மக்களின் சமூகம், 'தூய்மை - தீட்டு' என்னும் கருத்தியலை மையமாகக் கொண்டு கட்டப்பட்ட சமூகமாக இருந்தது. தங்களுக்கு வெளியே இருக்கும் அனைத்தும் தீட்டு என்று கருதிய அவர்கள், புறவினத்து மனிதர்கள் வாழும் இடங்களிலிருந்து வரும் காய்கறிகள், கனிகள், சந்தைப் பொருள்கள் என அனைத்தையும் கழுவினர். வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியவுடன் மேற்கொள்ள வேண்டிய பல தூய்மைச் சடங்குகளும் இருந்தன. இவர்கள் வெளியில் தூய்மையைப் பேணும் அளவுக்கு உள்ளத்தில் தூய்மையைப் பேணவில்லை என்கிறார் இயேசு. ஏனெனில் இவர்கள் தங்களுக்குச் சாதகமாக உள்ளவற்றை மட்டும் செய்துவிட்டு மற்றவற்றை விட்டுவிட்டனர்.

தந்தை தாயை மதித்தல் என்னும் கட்டளையையும் அவர்கள் தங்கள் மரபை முன்னிலைப்படுத்தி ஓரங்கட்டிவிட்டனர்.

இன்றைய முதல் வாசகத்தின் பின்புலத்தில் இம்மரபுகளைப் புரிந்துகொள்வோம்.

உலகனைத்தையும் படைத்த கடவுள், 'அனைத்தும் நல்லதெனக் காண்கிறார்.' மனிதர்களைப் படைத்தவுடன், 'அவர் மிகவும் நல்லதெனக் கண்டார்.' இறைவனின் படைப்பில் மிகவும் நல்லவர்களாக இருந்த, மற்றும் இருக்கும் நாம், நமக்குள்ளே தூய்மை-தீட்டு பார்த்து ஒருவர் மற்றவரிடமிருந்து விலகி இருப்பது ஏன்?

இன்று பல இடங்களில் மரபுகளால் மனிதர்கள் அநியாயமாக அழிக்கப்படும் நிலை இருந்துகொண்டே இருக்கிறது.

சாதியம் என்ற உணர்வு மரபு வழியாக நாம் கற்றதே. இந்த உணர்வால் நாம் எத்துணை பிரிவினை பாராட்டுகிறோம்?

மரபுகள் தேவைதாம் சில நேரங்களில். ஆனால், மரபுகள் எழுந்ததன் நோக்கம் மற்றும் அவற்றின் ஊற்றாகிய இறைவனை மறந்துவிடுதல் கூடாது.

1 comment:

  1. உலகனைத்தையும் படைத்த கடவுள் “ அனைத்தும் நல்லதெனக் காண்கிறார்’.மனிதர்களைப்படைத்தவுடன் ‘ அவர் மிகவும் நல்லதெனக் கண்டார்.’ ஆனால் இறைவன் கண்களில் தூய்மையாகத்தெரியும் இந்த மானுடம் தனக்குள்ளே தூய்மை- தீட்டு பார்த்து ஒருவர் அடுத்தவரிடமிருந்து விலகி இருப்பதேன்? யாரால் தர முடியும் இக்கேள்விக்குப் பதிலை?

    மனிதரையே மனிதரிடமிருந்து பிரிக்கும் மரபுகள் நம்மை இறைவனிடமிருந்து பிரித்து விடக்கூடாது என்பதில் கவனம் காப்போம்.மனிதனுக்கு மரபா? மரபுக்கு மனிதனா? யாருக்காக யார் பலிகடா ஆவது? யோசிக்க வைத்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete