Tuesday, February 2, 2021

அவர் வியப்புற்றார்

இன்றைய (3 பிப்ரவரி 2021) நற்செய்தி (மாற் 6:1-6)

அவர் வியப்புற்றார்

நம் வாழ்வில் முன்னேற நமக்கு இரு தடைகள் வருவதுண்டு: ஒன்று, inertia, இரண்டு resistance.

முதலாவது, நமக்குள்ளிருந்து வருவது.

இரண்டாவது, நமக்கு வெளியே இருந்து வருவது.

இரண்டாவது தடையை நாம் எப்படிக் கடப்பது என நமக்குச் சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

இயேசு தன் சொந்த ஊருக்கு வருகின்றார். சொந்த ஊருக்குத் திரும்புவதில் உற்சாகமும் இருக்கும், வருத்தமும் இருக்கும். இரண்டும் கலந்த உணர்வோடுதான் இயேசு தன் சொந்த ஊருக்கு வந்திருக்க வேண்டும். தொழுகைக்கூடத்தில் அவர் கற்பித்ததைக் கேட்ட மக்கள் வியப்புறுகின்றனர். அந்த வியப்பு சற்று நேரத்தில் இடறலாக மாறுகின்றது. 

'இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?' என்று கேட்கத் தொடங்கி, அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள்.

இங்கே எதிர்ப்பு பழக்கத்தினால் அல்லது நெருக்கத்தினால் வருகிறது. 

'என்னைப் போல அல்லது எங்களைப் போல இருக்கும் நீ எங்களைப் போலவே இரு! ஏன் நீ மாறி இருக்கிறாய்?' என்பதுதான் அவர்களுடைய கேள்வியாக இருந்திருக்கும்.

இந்த எதிர்ப்பை இயேசு எப்படிக் கையாளுகின்றார்:

(அ) எதிர்ப்பு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கின்றார் (acknowledging). அந்த எதிர்ப்பின் காரணம் என்ன என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். 'சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்பு பெறுவர்' என்று தான் ஏற்றுக்கொள்ளப்படாததற்கான காரணத்தை அவர்கள் அறிய அவர்களிடம் சொல்கின்றார்.

(ஆ) அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு வியப்புறுகின்றார் (wondering). இங்கே நன்றாகக் கவனிக்க வேண்டும். இயேசு அவர்கள்மேல் கோபம் கொள்ளவில்லை. மாறாக, வியப்படைகின்றார். 'இவன் எப்படி இப்படி இருக்கிறான்! என்று அவர்கள் வியந்த நேரத்தில், 'இவனுக ஏன் இப்படி இருக்குறானுக!' என்று இயேசுவும் வியந்தார். இது ஒரு நல்ல பாடம். இயேசு தன் வாழ்வில் ஓர் ஆல்ஃபா ஆணாகவே இருக்கிறார். அதாவது, எந்த நிலையிலும் தன் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுக்குள் வைத்திருக்கின்றார். அவர்கள் மேல் கோபப்பட்டு அவர்களைக் கடிந்தகொள்ளவில்லை. அவர்களை வெறுக்கவோ அல்லது கண்டுகொள்ளாமலோ இருக்கவில்லை. தன் சொந்த ஊரிலும் புதுமைகள் செய்கின்றார்.

(இ) சுற்றிலுமுள்ள ஊருக்குச் செல்கின்றார் (moving ahead). தன் சொந்த ஊராரின் ஏற்றுக்கொள்ளாமை அவரையும் அவருடைய பணியையும் முடக்கிவிடவில்லை. தொடர்ந்து பயணிக்கின்றார். பல நேரங்களில் நாம் ஒரு இடத்தில் எதிர்ப்பு வந்தால், இன்னொரு இடத்திற்குப் போவதற்குப் பதிலாக, அங்கே சோர்ந்து விழுந்துவிடுகின்றோம். 

ஆக, என் வாழ்வில் நான் எதிர்கொள்ளும் எதிர்ப்பை நான் மேற்காணும் மூன்று நிலைகளில் கையாள முடியும்:

(அ) எதிர்ப்பை அறிவது, உணர்வது, ஏற்றுக்கொள்வது.

(ஆ) எதிர்ப்பவரைக் கண்டு வியப்பது.

(இ) அடுத்த இடம் நோக்கி நகர்வது.

இங்கே நாம் இயேசுவின் சொந்த ஊராரைக் குறைசொல்லத் தேவையில்லை. நாமே அந்த இடத்தில் இருந்தால் அப்படித்தான் இருந்திருப்போம். நம் வாழ்வில் நமக்கு நெருக்கமானவர்கள் ஏதாவது நல்லது செய்தால் அல்லது வெற்றி பெற்றால் நம்மால்  அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லைதானே! நாமும் நம் முற்சார்பு எண்ணங்களால் அவரை அந்நியப்படுத்தவே விரும்புகிறோம். இன்று நம் நடுவில் அரசியல் தளத்தில் அல்லது சமூக நிலையில் எந்தவொரு இறைவாக்கினர் வந்தாலும், நாமும் அவருடைய பின்புலம் அனைத்தையும் தேடிக் கண்டுபிடித்து, அவரை ஒதுக்கிவிடவே நிற்கின்றோம்.

எடுத்துக்காட்டாக, கடந்த மாதம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரில் சாதனை படைத்தார் நடராஜ் என்றவுடன், கூகுளில் அதிகம் தேடப்பட்டது அவருடைய ஊர் மற்றும் சாதிப் பெயர்தான் என்று கூகுள் சொல்கிறது. நம்மிலிருந்து புறப்படும் ஒருவர் நம்மைவிட வித்தியாசமாக இருப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள இயலாதவாறு நம் நெருக்கம் தடுக்கிறது. 

தடுப்பவர்கள் முன் நின்று அவர்களை வியப்பதே நலம்!

3 comments:

  1. தடுப்பவர்கள் முன் நின்று அவர்களை வியப்பதே நலம்!

    நன்று. நன்றி🙏

    ReplyDelete
  2. “தச்சனின் மகனுக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?” அதிர்ச்சியா? அதிசயமா? இல்லை வெறுப்பா? அவர்கள் மீது கோபம் கொள்ளாத இயேசு அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்.” சொந்த ஊரிலும்,சுற்றத்திலும்,தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்பு பெறுவர்” எனும் கூற்றை உண்மையென மெய்ப்பிக்கிறார்.

    “ Familiarity brings contempt”.... கேள்விப்பட்டிருப்போம்; மற்றவருக்கு நாம் தெரிந்தவர்களெனும் ஒரே காரணத்திற்காகவே ஓரங்கட்டப்படுகையில் என்ன செய்ய வேண்டுமென்கிறார் தந்தை.எதிர்ப்பை உணர்ந்து ஏற்பதும்...எதிர்ப்பவரைக் கண்டு வியப்பதும்,அடுத்த இடம் நோக்கி நகர்வதுமே விவேகம் என்கிறார்.இது இறைவாக்கினருக்கு மட்டுமல்ல....தன் உழைப்பால்....முயற்சியால் உயரங்களைத் தொட நினைக்கும் யாருக்கு வேணாலும் நிகழலாம். நம் வியப்பையே அவர்களுக்குப் பரிசாகத் தரலாம்.

    “வாழ்க்கையின் எதார்த்தம்”....... படம் பிடித்துக்காட்டும் தந்தைக்கு நன்றியும்! வாழ்த்தும்!!!

    ReplyDelete