Sunday, February 21, 2021

பேதுருவின் தலைமைப்பீடம்

இன்றைய (22 பிப்ரவரி 2021) திருநாள்

பேதுருவின் தலைமைப்பீடம்

இன்று நம் தாய்த்திருஅவை, 'திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடம்' திருவிழாவைக் கொண்டாடி மகிழ்கிறது. 

நம் கத்தோலிக்க நம்பிக்கை அறிக்கையின் தலைமகனாக இருக்கின்ற பேதுரு இன்றைய கதாநாயகர். 'இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்' என்று ஆண்டவராகிய இயேசு பேதுருவிடம் சொல்கின்றார்.

பேதுரு தன் வாழ்வில் தொடக்கமுதல் இறுதிவரை இயேசுவுக்கு பிரமாணிக்கமாக இருந்தவர். இயேசுவை மறுதலித்தபோதும் உடனடியாக இயேசுவை நினைத்துக் கண்ணீர் விடுகின்றார்.

'கண்ணீர் விடும் பாறை' - இதுதான் பேதுருவைப் பற்றிய வரையறை என்றுகூடச் சொல்லலாம்.

நம் திருஅவையும் எளியவரோடு இணைந்து கண்ணீர் விடுகின்றது. பாறை போல உறுதியாக நிற்கின்றது.

தன்னை ஒரு மூப்பர் ('ப்ரஸ்பிடர்') என்று இன்றைய முதல் வாசகத்தில் அறிமுகம் செய்யும் பேதுரு, தன் சக மூப்பர்களிடம், 'ஊதியத்திற்காகச் செய்யாமல் விருப்போடு பணி செய்யுங்கள்' என அழைக்கிறார்.

பேதுருவின் தலைமைப்பீடத்தில் அமர்கின்ற நம் திருத்தந்தை தொடங்கி, ஒரு பங்கின் அருள்பணிப் பேரவைத் தலைமை வரை, 'பணி' எங்கும் பரந்து கிடக்கின்றது. ஆனால், பணிக்கான அல்லது பணி பற்றிய மனநிலைதான் சில நேரங்களில் பிறழ்வுபட்டு இருக்கிறது.

தான் செய்யும் அனைத்தையும் விருப்பத்தோடு செய்தார் பேதுரு.

இதுவே இன்று நாம் பேதுருவிடம் கற்கின்ற பாடம்.

மற்ற சீடர்களைவிட நெருக்கமாக இயேசுவை அறிந்தவர் பேதுரு. அந்த நெருக்கத்தில் அவர் இயேசுவின்மேல் விருப்பம் கொள்கிறார்.

இன்றைய பதிலுரைப்பாடலில் (திப 23), ஆண்டவரைத் தன் ஆயர் என அறிக்கையிடுகின்றார் திருப்பாடல் ஆசிரியர். இன்றைய நாளில் அனைத்துப் பணிநிலைகளில் இருப்பவர்களுக்கும், குறிப்பாக நம் திருத்தந்தை அவர்களுக்கும் இறைவேண்டல் செய்வோம்.

நம் கடவுளுக்கும், நம் திருஅவைக்கும், நம் அழைப்புக்கும் நாம் பிரமாணிக்கமாக இருப்பதே இன்றைய வாக்குறுதியாக இருக்கட்டும்.

1 comment:

  1. “கண்ணீர் விடும் பாறை”...... பேதுரு குறித்த தந்தையின் வர்ணனை நம் மனத்தையும் பிழிகிறது.தன் சக மூப்பர்களிடம் “ ஊழியத்திற்காகச் செய்யாமல் விருப்போடு பணி செய்யுங்கள்” என அவர் மொழியும் வார்த்தைகளை அவரின் வாரிசுகள் பின்பற்றினால் திரு அவை இன்னும் புனிதமாகும்.இயேசுவைப் பற்றி அதிகம் அறிந்தவரும், அவரை அதிகம் நேசித்தவருமான பேதுருவின் வழிவந்த நம் திருத்தந்தைக்காகவும்....அனைத்துப்பணிநிலைகளில் இருப்பவர்களுக்காகவும் நம் உள்ளத்தில் குரலெழுப்புவோம். அவரின் வழிவந்த திருஅவையும்....அதன் பணியாளர்களும் தங்களின் அழைப்பின் புனிதம் காக்க வேண்டுவோம்!

    தான் நிற்கும் இடத்திலிருந்தே தன்னவர்களுக்காக குரலெழுப்பும் தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete