Friday, February 26, 2021

நிறைவுள்ளவராய்

இன்றைய (27 பிப்ரவரி 2021) நற்செய்தி (மத் 5:43-48)

நிறைவுள்ளவராய்

'நிறைவு' என்பது 'இன்னும் கொஞ்சம்' என்பதன் முழுமை.

அந்த முழுமையை நோக்கி வாழ நம்மை அழைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

'பல நேரங்களில் என்னால் இவ்வளவுதான் செய்ய முடியும் என நாம் சொல்கிறோம். அந்த அளவையாவது நாம் செய்ய வேண்டும்' என்கிறார் கேம்யு என்கிற மெய்யிலாளர்.

'அடுத்திருப்பவருக்கு அன்பு, பகைவருக்கு வெறுப்பு' என்று சொல்லப்பட்ட மோசே கட்டளையை நீட்டுகின்ற இயேசு, 'பகைவருக்கும் அன்பு, துன்புறுத்துவோருக்கும் இறைவேண்டல்' என மொழிகின்றார். மேலும், இப்படிச் செய்வதால் சீடர்கள் விண்ணகத் தந்தையின் பிள்ளைகள் ஆவதாக வாக்களிக்கின்றார். ஏனெனில், ஆண்டவராகிய கடவுளே இப்படித்தான் அன்பு செய்கிறார்.

'எல்லாருக்கும் பெய்யும் மழையாக, எல்லார்மேலும் உதிக்கும் கதிரவனாக' இருக்கின்றார் கடவுள்.

இந்த நிலை நமக்கு எப்போது வரும்?

நம் விருப்பு-வெறுப்புகளை நாம் கடக்கும்போது.

நம் வாழ்க்கையின் நாள்கள் குறையக் குறைய இயல்பாகவே, நம் நட்பு வட்டம் சுருங்குகிறது, நாம் பொறுமையில் வளர்கிறோம், அடுத்தவர்கள்மேல் கோபம் வருவதற்குப் பதிலாக இரக்கம் வருகிறது. இப்படி நிறைய மாற்றங்கள் நம்முள் நடக்கின்றன. நாம் கட்டி வைத்த ஒவ்வொன்றையும் விட்டுச் செல்ல மனம் பக்குவப்படத் தொடங்குகிறது. எல்லாரும் ஒரே மாதிரி தெரிய ஆரம்பிக்கிறார்கள். வெள்ளிக் கிழமை இரவில் வெளியில் சென்று ஊர் சுற்றுவதை விட, கட்டிலில் படுத்துக்கொள்ள மனம் விரும்புகிறது. யாராவது சண்டையிட முன்வந்தால், 'சரி அப்படியே இருக்கட்டும்!' என அவர்களின் வாதத்தை ஏற்றுக்கொள்ளத் தூண்டுகிறது. குழந்தைகளைப் பார்த்தால் இயல்பாகவே உதடுகள் புன்னகைக்கின்றன. வயது முதிர்ந்தவர்களைக் கண்டால் கரம் உதவிக்கு இயல்பாக நீள்கிறது. சாலையில் ஆம்புலன்ஸ் கடந்து சென்றால் உதடுகள் செபத்தை முணுமுணுக்கின்றன. இப்படி, நாம் வாழ்வில் இன்னும் செய்ய வேண்டியவை, இன்னும் கொஞ்சம் நடக்க வேண்டியவை நிறையவே இருக்கின்றன. காலம் குறையக் குறைய நிறைவு கூடுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களுக்கு அறிவுறுத்துகின்ற மோசே, மக்கள் ஆண்டவராகிய கடவுளுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என வலியுறுத்துகின்றார். அதாவது, தாங்கள் கொடுத்த வாக்கை, கொஞ்சம் செயலாக்க வேண்டும். 

'இன்னும் கொஞ்சம் நடந்தால்தான் என்ன!' என நம்மை அழைக்கின்றன இன்றைய வாசகங்கள்.

இயேசுவின் பாடுகளோடு இன்னும் கொஞ்சம் நாம் நடந்தால், அவரின் உயிர்ப்பில் பங்கேற்க முடியும். அந்த உயிர்ப்பே நம் வாழ்வின் நிறைவு.

2 comments:

  1. “எல்லாருக்கும் பெய்யும் மழையாக, எல்லார் மேலும் உதிக்கும் கதிரவனாக” இருக்கிறார் கடவுள். நமக்கும் நாம் விருப்பு வெறுப்புகளை நாம் கடக்க நினைக்கும் போது இந்த நிலை வரும் என்கிறார் தந்தை.

    நம் வாழ்க்கையின் நாட்கள் குறையக் குறைய நமக்குள் நடக்கும் மாற்றங்களை ஒரு ‘வாழ்ந்து முடிந்து விட்டவரின்’ அனுபவத்தோடு தந்தை அணுகி இருப்பது மெய் சிலிர்க்க வைக்கிறது. பாதி கிணறே தாண்டியிருப்பினும் அவரின் ஒவ்வொரு வரியும் “ அட ஆமால்ல! “ என மெய்சிலிர்க்க வைக்கின்றன. இன்னும் செய்ய வேண்டியவை, இன்னும் கொஞ்சம் நடக்க வேண்டியவை நிறையவே இருந்தாலும், காலம் குறையக்குறைய நிறைவு கூடுகிறது...... உண்மை!

    நாம் மேற்கொள்ளும் வாழ்க்கைப்பயணத்தில் நாம் எப்பொழுதும் நினைவிலிருத்த வேண்டியது.... “ இன்னும் கொஞ்சம் நடந்தாலென்ன!” இயேசுவின் உயிர்ப்பில் பங்கேற்க நம்மைத் தகுதியாக்கும் வார்த்தைகள்.

    எந்த ஒளிவு- மறைவுமின்றி உள்ளத்திலிருந்து ஊடுருவி வரும் வார்த்தைகள். தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete