யோனாவின் அடையாளம்
'யோனா' என்றால் எபிரேயத்தில் 'புறா' என்று பொருள். சிறிய இறைவாக்கினர்களுள் ஒருவராக யோனா கருதப்பட்டாலும், இவருடைய நூல் மித்ராஷ் வகை வரலாற்று நூல் என்றும் அறியப்படுகின்றது.
'இரண்டாம் முறை யோனாவுக்கு' இறைவாக்கு அருளப்படுவதையும், யோனாவின் நற்செய்தி அறிவிப்பு நினிவே நகரில் ஏற்படுத்திய மாற்றத்தையும் இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது.
தன்னிடம் அடையாளம் கேட்பவர்களிடம் யோனாவின் அடையாளத்தைத் தரும் இயேசு, 'யோனாவை விடப் பெரியவர் இங்கிருப்பவர்!' என்கிறார்.
இதை எப்படி நாம் புரிந்துகொள்வது?
முதலில், அடையாளம்.
நினிவே நகரின் வாழ்க்கையை, 'யோனாவுக்கு முன்,' 'யோனாவுக்குப் பின்' என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். யோனாவின் அறிவிப்பினால் நினிவே நகரம் அழிவிலிருந்து தப்பிக்கின்றது.
ஆனால், யோனா இரண்டாம் முறையே தன் அழைப்பை ஏற்கின்றார். இயேசுவோ முதல் முறையிலேயே ஏற்றுக்கொள்கின்றார்.
யோனாவின் அறிவித்தல் ஏனோ தானோ என்று இருக்கின்றது. மூன்று நாள் கடக்கக் கூடிய தூரத்தை ஒரு நாளில் ஓட்டமும் நடையுமாய், வேண்டா வெறுப்பாய்க் கடக்கின்றார் யோனா.
மேலும், 'நினிவே நகர் அழிக்கப்படும்' என்னும் எதிர்மறையான செய்தியை யோனா தருகிறார். இயேசுவின் செய்தியோ அனைவருக்கும் வாழ்வு தருவதாக அமைகின்றது.
இந்த மூன்று நிலைகளில் யோனாவை விடப் பெரியவராக இயேசு இருக்கின்றார்.
நாம் இன்று கேட்க வேண்டிய கேள்விகள் இரண்டு:
ஒன்று, என் நம்பிக்கை இன்னும் அடையாளங்களை மையப்படுத்தியதாக இருக்கிறதா?
இரண்டு, யோனாவிலும் பெரிய இறைவாக்கினரை, சாலமோனிலும் பெரிய ஞானியை - அதாவது, இயேசுவை - இன்று நான் எப்படிப் புரிந்துகொள்கிறேன்?
“ யோனா” வின் அடையாளம் எனும் தலைப்பைப் படிக்கையில் முன்னொரு நாள் தந்தை அவரோடு இணைத்துப் பேசிய “ ஆமணக்குச் செடி” என் நினைவிற்கு வருகிறது. எனக்கு மிகவும் பிடித்த பகுதி அது. யோனாவை விடத் தான் பெரியவரென இயேசுவிற்குத் தெரிந்திருந்தும் அவரையும் ஒரு பொருட்டாக மதித்திருப்பது இயேசுவின் பெருந்தன்மை.
ReplyDeleteநிறைய பேருக்கு இரண்டாம் முறை இறைவாக்கு அருளப்படுவதில்லை. ஆனால் யோனாவிற்கு அது நடந்ததிலிருந்து சிறிய இறைவாக்கினரென்ன... பெரிய இறைவாக்கினர் என்று அழைக்கவே தகுதி பெற்றவர் அவர் என்று தெரிகிறது.
யோனாவிலும் பெரிய இறைவாக்கினரான... சாலமோனிலும் பெரிய ஞானியான இயேசுவை நான் எப்படிப்புரிந்து கொள்கிறேன்? ஒரு “ தெய்வ மகனோடு” ஒப்பிட்டுப் பேசப்படும் தகுதி ஒன்றே யோனாவை ஒரு பெரிய இறைவாக்கினர் என தம்பட்டம் அடிக்கப்போதுமானது. தந்தை எப்படிப் புரிந்து கொள்கிறாரோ தெரியவில்லை...இதுதான் என் புரிதல்.
எனக்கு மிகவும் பிடித்த யோனாவைப்பற்றியதொரு பதிவிற்காகத் தந்தைக்கு என் நன்றிகள் !!!