இன்றைய (13 பிப்ரவரி 2021) நற்செய்தி (மாற் 8:1-10)
கேள்விகள்
இன்றைய முதல் வாசகம் (காண். தொநூ 3:9-24) மற்றும் நற்செய்தி வாசகத்தை இணைத்து நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். இரண்டு வாசகங்களிலும் மொத்தம் 6 கேள்விகள் உள்ளன:
1. 'நீ எங்கே இருக்கின்றாய்?' - கடவுள் ஆதாமைப் பார்த்துக் கேட்கும் கேள்வி.
2. 'நீ ஆடையின்றி இருக்கிறாய் என்று உனக்குச் சொன்னது யார்?' - மீண்டும் கடவுள் ஆதாமிடம்.
3. 'நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?' - மீண்டும் கடவுள் ஆதாமிடம்.
4. 'நீ ஏன் அவ்வாறு செய்தாய்?' - கடவுள் பெண்ணிடம் கேட்கும் கேள்வி.
5. 'இப்பாலைநிலத்தில் இவர்களுக்குப் போதுமான உணவு அளிப்பது எப்படி?' - சீடர்கள் இயேசுவிடம் கேட்கும் கேள்வி.
6. 'உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?' - இயேசு சீடர்களிடம் கேட்கும் கேள்வி.
மேற்காணும் கேள்விகளை நாம் இரண்டு குழுக்களாகப் பிரிக்கலாம்:
(அ) விடை தெரிந்தே கேட்கப்படும் கேள்வி
கேள்வி எண்கள் 1 முதல் 5 வரை உள்ள கேள்விகளை இவற்றுக்குள் அடக்கிவிடலாம். ஆதாம் எங்கிருக்கிறார் என்பதும், ஆடையின்றி இருப்பதை ஆதாமுக்குச் சொன்னது யார் என்பதும், உண்ணக்கூடாத மரத்திலிருந்து அவர்கள் உண்டனர் என்பதும், அவர்கள் ஏன் அவ்வாறு செய்தனர் என்பதும் கடவுளுக்குத் தெரியும். மேலும், பாலைநிலத்தில் போதுமான அளவு உணவு அளிக்க இயேசுவுக்குத் தெரியும் என்பதும் சீடர்களுக்குத் தெரியும்.
(ஆ) விடை வேண்டிக் கேட்கப்படும் கேள்வி
'உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?' என்னும் 6வது கேள்வியை இவ்வகை என்று சொல்லலாம். எத்தனை அப்பங்கள் தன் சீடர்களிடம் இருந்தன என்பதை இயேசு இக்கேள்வி வழியாக அறிந்துகொள்ள விரும்புகின்றார்.
முதல் வாசகத்தில், கேள்விகள் உணவை மையமாக வைத்துக் கேட்கப்படுகின்றன. அங்கே உணவு என்பது ஆசையை மையப்படுத்தியதாக இருக்கிறது. ஏனெனில், அவர்கள் பசிக்காக உண்ணவில்லை. மாறாக, ஆசைக்காக - கடவுளைப் போல ஆக வேண்டும், நன்மை தீமை அறிய வேண்டும் என்னும் ஆசைக்காக - உண்கின்றனர்.
இரண்டாம் வாசகத்திலும் கேள்விகள் உணவை மையமாக வைத்தே கேட்கப்படுகின்றன. இங்கே உணவு என்பது பசியை மையப்படுத்தியதாக இருக்கிறது. மூன்று நாட்களாக மக்கள் கூட்டத்தினர் இயேசுவைப் பின்தொடர்கின்றனர். அவர்கள் பட்டினியாக இல்லம் திரும்புவதை இயேசு விரும்பவில்லை.
ஆசையைக் கடிந்துகொள்கின்ற கடவுள், பசிக்கு உணவு தருகின்றார்.
முதல் வாசகத்தில், புல் தரையை விட்டு முதற்பெற்றோர் விரட்டப்படுகின்றனர்.
இரண்டாம் வாசகத்தில், புல் தரையில் மக்கள் அமரவைக்கப்படுகின்றனர்.
விலக்கப்பட்ட கனியை உண்டதால் மூன்று பிரச்சினைகள் நடக்கின்றன:
(அ) கடவுளின் திருமுன்னிலையிருந்து ஒளிகின்றனர். பாவம் குற்றவுணர்வையும், குற்றவுணர்வு பயத்தையும் பெற்றெடுக்கிறது. இந்த ஒளிதல் பற்றி எழுதுகின்ற புனித அகுஸ்தினார், 'காமத்திற்குத் தண்டனை எதுவும் இல்லை. காமமே காமத்திற்குத் தண்டனை' ('You are not punished for lust, you are punished by lust'). அதாவது, அவர்கள் விலக்கப்பட்ட கனியின்மேல் கொண்ட ஆசைக்குத் தண்டனை என்பது அதே ஆசையே: 'ஒழுங்கற்ற மனத்திற்கான தண்டனை ஒழுங்கற்ற மனமே.'
(ஆ) ஒருவர் மற்றவரிடமிருந்து அந்நியப்படுகின்றனர். 'இதோ என் எலும்பின் எலும்பும், சதையின் சதையும்' என்று தன் பெண்ணை அள்ளிக் கொண்டாடிய ஆண், 'என்னோடு இருக்குமாறு நீர் தந்த அந்தப் பெண்' என்று பெண்ணைத் தள்ளி வைக்கின்றான். தங்களின் நிர்வாணம் கண்டு அஞ்சுகின்றனர்.
(இ) நிலத்திலிருந்து அந்நியப்படுகின்றனர். இதுவரை தங்கள் கால்கள் நின்ற இடம் இனித் தங்களுக்குச் சொந்தமில்லை. தங்களுடைய காட்டிலிருந்து, விலங்குகளிடமிருந்து தள்ளிவைக்கப்படுகின்றனர். நிலம் அவர்களின் உழைப்பிற்கேற்ற பலனைக் கொடுக்காது.
மொத்தத்தில், விலக்கப்பட்ட கனியை உண்டதால் மனுக்குலத்திற்குப் பசி எடுத்தது. இறைவன்மேலும், ஒருவர் மற்றவர்மேலும், நிலத்தின்மேலும் அவர்கள் கொள்ளும் பசி இன்னும் அடங்கவில்லை.
அந்தப் பசியை அடக்குபவர் இயேசுவின் பரிவே.
அந்தப் பரிவுள்ளம் மீண்டும் நம்மைப் புல்தரையில் அமர வைக்கிறது.
பயந்து தப்பி ஓடிய கால்கள் இனி பதற்றமின்றி தரையில் அமரலாம்.
நிலத்தில் உழைத்து உண்ட மானுடம் இனி அவரின் கரங்களிலிருந்து தன் பசியாற்றலாம்.
இறைவன் நம்மைப் பார்த்துக் கேட்ட கேள்விகளுக்கு அவருடைய கேள்வியே விடையாகிறது.
விடை தெரிந்தே கேட்கப்படும் கேள்விகள்.....விடை வேண்டி கேட்கப்பட்ட கேள்விகள். பசுமை போர்த்திய ஏதேன் தோட்டமும்...அரை நிர்வாணத்தில் ஆதாம் -ஏவாளும், விலக்கப்பட்ட மரத்தின் கனியும்....பாலை நிலத்தில் பசிகொண்ட மக்களைக்கண்ட இயேசுவும்......பின் மக்கள் அமர்ந்து உண்ணும் புல் தரையும்........ தந்தையின் பதிவு முழுவதும் வார்த்தைகள் ஒன்றையொன்று ஆரத்தழுவிச்செல்கின்றன.
ReplyDelete“ஆசையைக் கடிந்து கொள்ளும் கடவுள் பசிக்கு உணவளிக்கிறார்”.....அருமை!... அன்று மனிதனுக்கு எடுத்த பசி இன்னும் அடங்கவில்லை. உணவின் மேல்.....உறவின் மேல்.....நீரின்மேல்..நிலத்தின் மேல்....இறைவன் மேல். அத்தனையும் அடங்காப்பசி. இந்த அடங்காப் பசியைத் தூண்டி விடுபவரும்.....அதை அடக்குபவரும் இறைவனே!....இறைவனின் பரிவே!! பசியோடு வந்த நம்மைப் புல் தரையில் அமரச்செய்வதும்....பயந்து ஓடிய கால்களை பதற்றமின்றி தரையில் அமரச்செய்வதும்,நிலத்தில் உழைத்து உண்ட மானுடம் இனி அவர் கரங்களிலிருந்து பசியாறவும் செய்வது அந்த “ இறையின் பரிவே! பராமரிப்பே!”
“ காமத்திற்குத் தண்டனை இல்லை; காமமே தண்டனை” இப்படி வார்த்தை ஜாலங்கள் ஒன்றோடு ஒன்று உரசி விளையாடும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு ஒரு சபாஷ்!!!
அந்தப் பசியை அடக்குபவர் இயேசுவின் பரிவே.
ReplyDeleteஅந்தப் பரிவுள்ளம் மீண்டும் நம்மைப் புல்தரையில் அமர வைக்கிறது.
பயந்து தப்பி ஓடிய கால்கள் இனி பதற்றமின்றி தரையில் அமரலாம்.
நிலத்தில் உழைத்து உண்ட மானுடம் இனி அவரின் கரங்களிலிருந்து தன் பசியாற்றலாம்.
ஆழமான வரிகள்....
குற்ற உணர்வு
களிலிருந்து விடுபட்டு
வாழ்விற்கு, வழி சொல்லும் வரிகள்...
நன்றி🙏 அருட்பணியாளரே,.
Super Yesu
ReplyDelete