மூன்று அடையாளங்கள்
இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவிடம் வருகின்ற சில பரிசேயர்கள், அவருடைய செயல்களை நம்புவதற்குத் தங்களுக்கு ஓர் அறிகுறி அல்லது அடையாளம் தருமாறு அவரிடம் வேண்டுகின்றனர். 'இத்தலைமுறை அடையாளம் கேட்பதேன்?' என அவர்களைக் கடிந்துகொள்கின்ற இயேசு அவர்களுக்கு அடையாளம் தர மறுக்கின்றார்.
ஆனால், இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 4:1-15,25) மூன்று கதைமாந்தர்களைப் பார்க்கின்றோம். இம்மூன்று கதைமாந்தர்களும் நம் வாழ்க்கையை நாம் எப்படி வாழ வேண்டும் என்று கற்பிக்கின்றனர்.
1. ஏவாள்
முதன்மையான கதைமாந்தர் இவர். இவர் நம் அனைவரின் தாய். அப்படித்தான் இவரை நமக்கு அறிமுகம் செய்கிறார் ஆசிரியர். ஏதேன் தோட்டத்திலிருந்து விரட்டப்பட்ட நம் முதற்பெற்றோர் சோர்ந்துபோய்விடவில்லை. மனித வாழ்வில் ஓர் ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றவர் மேல் கொண்டுள்ள ஈர்ப்பு பற்றிப் பேசுகின்ற புனித அகுஸ்தினார், 'நம் முதற்பெற்றோர் ஒரு வேளை ஏதேன் தோட்டத்திற்குள்ளேயே இருந்திருந்தால் ஒருவர் மற்றவர்மேல் இந்த அளவுக்கு ஈர்ப்பு கொண்டிருக்க மாட்டார்கள். ஏனெனில், அங்கே அவர்களுக்கு எல்லாமே கிடைத்துவிடுவதால் ஒருவர் மற்றவரின் தேவை அதிகமாக இருந்திருக்காது. வெளியேற்றப்பட்டதால்தான் அவர்கள் ஒருவர் மற்றவர்மேல் ஈர்ப்பு கொள்கின்றனர்' என்று நேர்முகமாக மனித ஈர்ப்பை விளக்குகிறார். ஆதாம் தன் மனைவி ஏவாள் மேல் கொண்ட ஈர்ப்பினால் அவருடன் கூடி வாழ, அவள் காயினைப் பெற்றெடுக்கிறாள். காயின் - இவர்தான் நம் மூத்த சகோதரர். இங்கே, ஏவாள், 'ஆண்டவர் அருளால் ஆண்மகன் ஒருவனை நான் பெற்றுள்ளேன்' என்று ஆண்டவரின் அருளை அடிக்கோடிடுகின்றார். என்ன ஓர் ஆச்சரியம்! தானும் தன் கணவனும் கடவுளால் வெளியே விரட்டப்பட்டாலும், தன் வறுமையிலும் கையறுநிலையிலும் ஆண்டவரின் அருளைக் கண்டுகொள்கின்றார் ஏவாள். மேலும், நிகழ்வின் இறுதியில், காயின் ஆபேல் மேல் பொறாமை கொண்டு அவரைக் கொன்றவுடன், இன்னொரு மகனைப் பெறும்போது, 'காயின் ஆபேலைக் கொன்றதால் அவனுடைய இடத்தில் இன்னொருவனைக் கடவுள் வைத்தருளினார்' என்று கடவுளின் கரத்தை அங்கே காண்கிறார் ஏவாள். ஏவாள் தன் வாழ்வில் எந்த நிலையிலும் குற்றவுணர்வால் வருந்தவோ, பயத்தால் அலைக்கழிக்கப்படவோ இல்லை. தன் தவற்றை நினைத்து அவர் வருந்திக்கொண்டே இருந்திருந்தால் கடவுளின் கரத்தை தன் வாழ்வில் காண அவரால் இயலாது.
இன்று பல நேரங்களில் நம் வாழ்க்கை குற்றவுணர்வு மற்றும் பயம் என்னும் இரண்டு தண்டவாளங்களில்தான் பயணிக்கிறது. அப்படிப்பட்ட பயணத்தில் நம்முடன் வரும் கடவுளின் அருளை நம்மால் கண்டுகொள்ள இயலாது. மேலும், தன் வாழ்வில் எதிர்மறை நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழ்ந்தாலும், தன் இளைய மகன் வன்முறைக்கு ஆளாகி இறந்து போனாலும், அதைக் கண்டு துவண்டு போய்விடவோ, வாழ்வின்மேல் கோபம்கொள்ளவோ இல்லை ஏவாள். வாழ்வின் நேர்வுகளைக் கண்டும், நாம் சந்திக்கும் நபர்களைக் கண்டும் பல நேரங்களில் நாம் எதிர்வினை ஆற்றிக்கொண்டே இருப்பதால் நம் வாழ்வை நம்மால் முழுமையாக வாழ இயலவில்லை. வாழ்வில் ஒருவகையான தேக்கநிலையை நாம் அடைந்துவிடுகிறோம். எதிர்வினை ஆற்றாத உள்ளம் கொள்தல் நம் வாழ்வின் முதல் அடையாளமாகட்டும்.
2. ஆபேல்
ஆபேலின் காணிக்கை கடவுளுக்கு ஏற்புடையதாக இருக்கின்றது. கடவுளுக்கு ஏற்புடையதாக அவர் என்ன செய்தார் என்பது பற்றிய குறிப்பு பாடத்தில் இல்லை. 'ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார்' என்று மட்டும் பதிவு செய்கிறார் ஆசிரியர். ஆபேலை இறக்குமாறு ஆண்டவர் ஏன் கையளித்தார்? என்பதே நம் கேள்வி. தான் கனிவுடன் கண்ணோக்கிய ஒருவரை ஆண்டவர் எச்சரித்திருக்கலாம்! அல்லது அவர் தன் சகோதரனின் வயலுக்குத் தனியாகச் செல்லாதவாறு தடுத்திருக்கலாம்! 'நன்மை செய்தால் உயர்வடைவாய் அல்லவா?' எனக் காயினிடம் கேட்கின்றார் கடவுள். ஆனால், இங்கே, நன்மை செய்த ஆபேல், கடவுளைத் தன் காணிக்கைகளால் மகிழ்வித்த ஆபேல் உயர்வடையவில்லையே! வயலில் காணாப்பிணமாக அல்லவா கிடக்கிறார்.
நன்மை செய்பவர்களின் நிலை பல நேரங்களில் ஆபேலின் நிலையாகத் தான் இருக்கிறது. ஆபேல் கதையாடலின் பின்புலத்தில்தான், அனைத்தையும் 'வீண்' (எபிரேயத்தில், 'ஹேபல்') என்கிறார் சபை உரையாளர். 'பலி செலுத்துவோருக்கும் பலி செலுத்தாதவர்களுக்கும் விதித்துள்ளபடிதான் நடக்கும்' என்கிறார் அவர்.
ஆபேல் என்னதான் நன்மை செய்தவராக இருந்தாலும், இயல்பறிவு அவரிடம் குறைந்திருப்பது போலத் தெரிகிறது. ஆபேல் ஆடு மேய்ப்பவர். காயின் வயலில் விவசாயம் செய்பவர். தன் அண்ணனை முழுமையாக நம்பிவிடுகிறார் ஆபேல். மேலும், 'வயல்' என்பது காயினின் பாதுகாப்பு வளையம். அந்த வளையத்துக்குள் தான் அழைக்கப்படும்போது தனியாகச் செல்லலாமா அவர்? தன் அண்ணணின் முகத்தைக் கண்டு அவருடைய அகத்தைக் காண ஆபேலால் இயலவில்லையா? பாவம்! ஆபேல்! தன்னைப் போலவே உலகில் உள்ள அனைவரும் நல்லவர் என்று எண்ணிவிட்டார்.
நாமும் பல நேரங்களில் மற்றவர்களை எளிதாக நம்பிவிடுகிறோம். 'மற்றவரை எளிதில் நம்பிவிடுபவர் கருத்தாழமற்றவர்' என்று எச்சரிக்கிறார் சீராக். நமக்கு வயது கூடக் கூட அடுத்தவர்களை எளிதில் நம்மால் எளிதில் நம்ப முடிவதில்லை. ஆபேல் சிறியவராக இருந்ததால் அனைவரையும் நம்பிவிடுகிறார்.
3. காயின்
'நான் என்ன என் சகோதரனுக்குக் காவலாளியோ?' என்று கடவுளிடமே கேட்டு, 'காவல் காப்பது உம் வேலை!' என்று கடவுளுக்கு நினைவூட்டியவர் காயின். பாவம் காயின்! அவருடைய காணிக்கைகளைக் கடவுள் கண்ணோக்கவில்லை. இங்கே, இஸ்ரயேல் மக்களின் அரசியலைப் புரிந்துகொள்ள வேண்டும். தொடக்கத்தில் இஸ்ரயேல் மக்கள் நாடோடிகளாகவும், ஆடு மாடுகள் மேய்ப்பவர்களாகவும் இருக்கின்றனர். தங்கள் தொழிலே சிறந்தது என்பதைக் காட்டவதற்காகவே, தங்கள் உழைப்பின் கனி ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும், விளைச்சலின் அல்லது விவசாயத்தின் கனிகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் சொல்கின்றனர். மேலும், தங்கள் தொழிலே மேன்மையானது என்று அவர்கள் சொல்லவும் விரும்புகின்றனர். 'எனக்குத் தெரியாது!' என்று ஆபேலைக் குறித்து காயின் சொல்கிறார். ஒரு பாவம் இன்னொரு பாவத்தைப் பெற்றெடுக்கிறது. பொறாமை கோபத்தையும், கோபம் வன்முறையையும், வன்முறை கொலையையும், கொலை பொய்யையும் பெற்றெடுக்கிறது. 'நீ நாடோடியாக அலைந்து திரிவாய்!' என்று கடவுள் அவரைத் தண்டித்தாலும் உடனடியாக அவர் கடவுளிடம் முறையிடுகிறார். ஆண்டவர் அவர்மேல் ஓர் அடையாளம் இடுகின்றார்.
தன் குற்றத்திற்குத் தான் கண்டிக்கப்பட்டாலும் கடவுளின் இரக்கத்தை வேண்டிப் பெறுகின்றார் காயின். நம் வாழ்விலும் நாம் தண்டிக்கப்பட்டதாக உணர்ந்தாலும், இன்னும் அருள்கொடைகளைக் கடவுளிடம் மன்றாடி நம்மால் பெற முடியும்.
நம் முதற்தாயும், நம் முதற்சகோதரர்களும் நம் வாழ்வியல் அடையாளங்களாகவே இருக்கின்றனர்.
எதற்கும் எதிர்வினை ஆற்றாமல் எல்லாவற்றையும் எதிர்கொள்ள ஏவாள் நமக்கு அடையாளம்.
நம் வாழ்வில் எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும் என்ற எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள ஆபேல் நமக்கு அடையாளம்.
எதிர்மறை நிகழ்வுகள் நடந்தாலும் கடவுளின் அருள் அங்கேயும் பிறக்கும் என்பதற்கு காயின் நமக்கு அடையாளம்.
Very good reflection Yesu
ReplyDeleteபரிசேயர்களுக்கு ஒரு அறிகுறி கொடுக்க மறுக்கும் இயேசு, நாம் வாழ்க்கையை வாழவேண்டிய முறைப்படி வாழ இங்கே மூவரை நமக்கு முன்னோடிகளாகக் காட்டுகிறார்.
ReplyDeleteதன் வாழ்வில் எதிர்மறை நிகழ்வுகள் அடுத்தடுத்துப் படையெடுத்திடினும்,தன் இளைய மகன் வன்முறைக்கு ஆளாகி இறந்து போயிடினும் எதிர்வினை ஆற்றாத உள்ளத்தை ஆயுதமாகக் கொண்ட ஏவாள்.....
தன்னைப் போலவே உலகில் அனைவரும் நல்லவர் என நம்பிய ஆபேல்.....
தன் குற்றத்திற்காகத் தான் தண்டிக்கப்பட்டாலும் கடவுளின் இரக்கத்தை வேண்டிப்பெறும் காயின்......இவர்களே அவர்கள்.
நல்லதோ தீயதோ...எதுவென்று தெரியாமலே பலபேரின் பல விஷயங்களைக் காப்பி அடிக்கும் நாம் இம்மூவரையும் நம் வாழ்வின் விடிவெள்ளிகளாகக் கொண்டால் நடக்கும் அனைத்தும் நல்லவையாகவே நடக்குமென்பதும்.....அப்படியே தீயது நடப்பின் கடவுளின் அருள் அங்கேயும் பிறக்கும் என்பதும் இன்றைய பதிவு நமக்குக் கற்றுத தரும் பாடங்கள்! கற்பித்த தந்தைக்கு நன்றிகள்!!!
எதிர்கொள்ள,
ReplyDeleteஏற்றுக்கொள்ள,
புரிந்துகொள்ள,
ஏவாள்,ஆபேல், காயின்...
Great!
I often used to think, whether fr.Yesu
writes what he profess,/ profess what he writes,
Or he just writes...
Now,at this moment,I completely root out this thought from me.
B' coz,I understand.
You helped me. Thank you.