புளிப்பு மாவு
இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்' என்று எச்சரிக்கிறார் இயேசு. ஆனால், சீடர்கள், தங்களிடம் அப்பம் இல்லையே என்று ஒருவர் மற்றவரோடு பேசிக்கொண்டிருக்கின்றனர்.
'புளிப்பு மாவு' என்பது இயேசுவின் உவமையில் இறையாட்சி பற்றிய பதிவில் நேர்முகமாகப் பயன்படுத்தப்பட்டாலும், ஒட்டுமொத்த இறையியல் பின்புலத்தில், 'ஏற்றுக்கொள்ள இயலாத' அல்லது 'கெட்டுப் போன' அல்லது 'தவறான' ஒன்றையே குறிக்கிறது.
எடுத்துக்காட்டாக, கூடா ஒழுக்கம் பற்றிக் கொரிந்து நகரத் திருஅவைக்கு அறிவுறுத்துகின்ற புனித பவுல், 'சிறிதளவு புளிப்பு மாவு, பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா? எனவே, புளிப்புச் சத்துள்ள பழைய மாவைத் தூக்கி எறிந்துவிடுங்கள். அப்போது நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாயிருப்பீர்கள் ... பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும். தீமை, பரத்தைமை போன்ற புளிப்பு மாவோடு அல்ல. மாறாக, நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக் கொண்டாடுவோமாக!' (காண். 1 கொரி 5:6-8)
பரிசேயரின் 'புளிப்பு மாவு' என்று இயேசு அவர்களின் வெளிவேடத்தையே குறிப்பிடுகிறார்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 6), 'மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் காண்கின்ற ஆண்டவர்,' மனிதரை உருவாக்கியதற்காக உள்ளம் வருந்துகிறார்.
அல்லது, 'அனைத்தையும் நல்லதெனவும்,' 'மிகவும் நல்லதெனவும் கண்ட' ஆண்டவராகிய கடவுள், மனிதரின் இதயச் சிந்தனை தீமையை உருவாக்குவது கண்டு மனம் வருந்துகிறார்.
நம் இதயத்தின் தீய சிந்தனைதான் நாம் இன்று களைய வேண்டிய புளிப்பு மாவு.
நம் ஒவ்வொருவரிடத்திலும் ஏதோ கொஞ்சம் புளிப்பு மாவு ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது. நம் நல்ல இயல்பையும் அது காலப்போக்கில் மாற்றிவிடும் என்பதால் நாம் அதைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாய் இருந்து, அதை உடனே களைதல் அவசியம்.
நம் நடைமுறையைத் திருத்த வரும் ஒரு பதிவு.’படைத்தவரே தன் படைப்பைக் கண்டு வருந்துவது படைப்புக்கு ஒரு நாசக்கேடு’ என்ற புரிதலைத் தருகின்றன “மனிதரை உருவாக்கியதற்காக உள்ளம் வருந்துகிறார் ஆண்டவர்” எனும் வார்த்தைகள்.நல்லதை மட்டுமே படைத்த இறைவனின் படைப்பில் மனுக்குலம் மட்டும் தீயதாகிப் போனது எங்ஙனம்?
ReplyDeleteமனிதனால் மட்டுமே தீயதை சிந்திக்கவும்,சிந்தித்ததை செயல்படுத்தவும் முடிகிறது. இந்த தீய சிந்தனையே நாம் இன்று நம்மிடத்திலிருந்து களைய வேண்டிய ‘ புளிப்பு மாவு’ என்கிறார் தந்தை. எச்சரிக்கையாய் இருப்போம்...தீயதைக் களையும் விஷயத்தில்.
புளிப்புச் சத்துள்ள பழைய மாவைத்தூக்கி எறியவும்...புதிதாய்ப் பிசைந்த மாவாய் இருக்கவும் விடுக்கும் ஒரு அழைப்பு.( விண்ணக) த்தந்தையின் குரலுக்கு செவிமடுப்போம்! தந்தைக்கு நன்றிகள்!!!