Friday, February 19, 2021

ஏன் நோன்பு இருப்பதில்லை?

இன்றைய (20 பிப்ரவரி 2021) நற்செய்தி (மத் 9:14-15)

ஏன் நோன்பு இருப்பதில்லை?

இன்றைய இரண்டு வாசகங்களிலும் மையமாக இருக்கின்ற வார்த்தை 'நோன்பு.'

நோன்பு என்பது முதலில், நாமே விரும்பி ஏற்கும் பசி.

சில நேரங்களில் பசி நம்மேல் புகுத்தப்படுகின்றது. நாம் ஏழ்மையில் இருக்கும்போது, அல்லது நீண்ட பயணம் செய்யும் போது, உணவகம் இல்லாத ஊருக்குச் செல்லும்போது. அல்லது இறந்தவர் வீட்டிற்குச் செல்லும்போது.

சில நேரங்களில் பசி நமக்குப் பரிந்துரைக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, மருத்துவர் பரிந்துரைப்பது. அல்லது இரத்தப் பரிசோதனைக்கு முன்பாக வலியுறுத்தப்படும் பசி.

'பசி' என்ற ஓர் உணர்வில் நாம் ஒருவர் மற்றவருடன் கைகோர்க்கிறோம். பசி வந்துவிட்டால் மற்ற அடையாளங்கள் நம் கண்களை விட்டு மறைந்துவிடுகின்றன. 

உயிரைத் தக்கவைத்துக்கொள்வதற்காக உடல் கொடுக்கும் எச்சரிக்கை உணர்வே பசி. 

நாம் நோன்பு இருக்கும்போது நம் உயிரும் உடலும் வாழ இன்னொன்று தேவை என்பதை நாம் உணர்ந்து, அந்தத் தேவையை நிறைவு செய்ய நாம் கடவுள் அல்லது ஒருவர் மற்றவர் மேல் சாய்கின்றோம். ஆக, நோன்பில் நாம் சார்பு நிலையை, கையறுநிலையை, நொறுங்குநிலையை உணர்கிறோம்.

ஆனால், காலப்போக்கில் இது ஒரு சமயச் சடங்காக மாறிவிட்டது. 

நோன்பு இருப்பதற்கான காரணம் மறைந்து, நோன்பு என்னும் காரியம் மட்டும் நிலைத்துவிட்டது.

இப்படிப்பட்ட எந்திரத்தனமான சமயப் போக்கைக் கடிந்துகொள்கின்றார் இயேசு. 'மணமகன் தங்களோடு இருக்கும் வரை நோன்புக்கு இடமில்லை.' அல்லது நோன்பும் மணமகனும் இணைந்து செல்ல இயலாது. 

பசியைப் போக்க வந்த அட்சய பாத்திரம் கையில் இருக்கும்போது பசி எதற்கு? - இதுதான் இயேசுவின் மறைமுகமான கேள்வியாக இருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில், நோன்பு என்ற சமயச் சடங்கைக் கடைப்பிடித்துவிட்டு, சமூகம் மற்றும் தனிநபர் வாழ்வில் ஒடுக்குமுறையில் ஈடுபட்ட தன் மக்களை எசாயா இறைவாக்கினர் வழியாகக் கடிந்துகொள்கின்ற ஆண்டவராகிய கடவுள் உண்மையான நோன்பு என்றால் என்ன என்பதை எடுத்துரைக்கின்றார்.

மேலும், பகிர்வதும், வறுமை போக்குவதும், சோர்வு நீக்குவதும், உடுத்துவதுமே நோன்பு என முன்மொழியப்படுகிறது.

இத்தகைய நோன்பு இருப்போரின் ஒளி விடியல் போல எழும்!

இன்று தவக்காலத்தின் முதல் வெள்ளி. இன்று நாம் இருக்கும் நோன்பு இறைவன்மேல் நாம் கொண்டுள்ள சார்பு நிலையை உணர்த்துவதோடு, ஒருவர் மற்றவர்மேல் கொள்ள வேண்டிய பொறுப்புணர்வைத் தூண்டி எழுப்பினால் நலம்!

3 comments:

  1. இன்று நாம் இருக்கும் நோன்பு இறைவன்மேல் நாம் கொண்டுள்ள சார்பு நிலையை உணர்த்துவதோடு, ஒருவர் மற்றவர்மேல் கொள்ள வேண்டிய பொறுப்புணர்வைத் தூண்டி எழுப்பினால் நலம்!
    நன்றி🙏

    புதிய பொறுப்பிற்கு,...
    இனிய ஆசீர்வாதத்திற்கு,...

    எளியேனின் அகம் நிறை வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. “நோன்பு” இதில் நம் சார்பு நிலையை,கையறுநிலையை உணர்கிறோம்.ஆனாலும் காலப்போக்கில் நோன்புக்கான காரணம் மறைந்து காரியம் மட்டும் ஒட்டிக்கொண்டதை உணர்கிறோம். பசியைப்போக்க வந்த அட்சய பாத்திரமே நம் கையிலிருக்கிறது என்பதை உணராதவர்கள் இயேசுவைச் சுற்றியிருந்தனர்.

    உண்மையான நோன்பு என்பது பகிர்வதும்,வறுமை போக்குவதும், சோர்வு நீக்குவதும்,உடுத்துவதுமான நோன்பே! இத்தகைய நோன்பிருப்போரின் ஒளி விடியல் போல எழும் என்கிறது இன்றையப்பதிவு.

    தவக்காலத்தின் முதல் வெள்ளியான இன்று இறைவன் மேல் நாம் கொண்டுள்ள சார்பு நிலையையும்,நாம் ஒருவர் மற்றொருவரோடு கொண்டுள்ள பொறுப்புணர்வையும் உணர்ந்து பார்ப்போம்.தட்டி எழுப்பிய தந்தைக்கு நன்றிகள்!!!

    வலைப்பூ வாசகர்களுக்கு ஒரு நற்செய்தி

    நம் அன்பிற்கும் பாசத்திற்கும் உரித்தான தந்தை யேசு கருணாநிதி அவர்கள் “ இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் விவிலியப் பணிக்குழு செயலராக” நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை பெருமையோடும்,பேருவகையோடும் தெரிவிக்கிறேன். இச்சிறு வயதில் பெரிய பொறுப்பு. இறைவனின் உடனிறுப்பும், அவரது கடின உழைப்புமே அவரை இந்த இடத்திற்குக் கொண்டு சேர்த்துள்ளது என்பதில் ஐயமில்லை.வரப்போகும் காலங்களிலும் இறைவன் இவரின் கைபிடித்து,அவரின் உடல்,உள்ள சுகம் காத்து பல நல்ல காரியங்களுக்கு அவரைத் தம் கருவியாக உபயோகிக்க வேண்டுகிறேன். வாசகர்கள் அனைவரின் பெயரால் எங்களது வாழ்த்துக்களும்,அன்பும்,செபமும் உம்மை என்றும் காக்கும் என்று கூறுவதில் பெருமிதம் கொள்கிறேன்.அன்புடன்......

    ReplyDelete
  3. Congratulations Yesu. We deem it a great honour. God bless you and your ministry. Way to go...

    ReplyDelete