Thursday, February 11, 2021

திறக்கப்பட்டன

இன்றைய (12 பிப்ரவரி 2021) நற்செய்தி (மாற் 7:31-37)

திறக்கப்பட்டன

இன்றைய முதல் வாசகம் (காண். தொநூ 3:1-8) மற்றும் நற்செய்தி வாசகத்திற்குப் பொதுவாக இருக்கின்ற ஒரு வார்த்தை: 'திறக்கப்படுதல்.'

முதல் வாசகத்தில், கனியை உண்டதால் நம் முதற்பெற்றோரின் கண்கள் திறக்கப்பட்டன.

நற்செய்தி வாசகத்தில், இயேசுவிடம் கொண்டுவரப்பட்ட பேச்சற்ற ஒருவரின் காதுகள் திறக்கப்படுகின்றன.

முந்தையதன் விளைவு அவர்கள் ஓடி ஒளிந்துகொள்கிறார்கள்.

பிந்தையதன் விளைவு மக்கள் இயேசுவைக் குறித்து வியப்படைகிறார்கள்.

முந்தையதில் திறக்கப்பட்டவர் குற்றவுணர்வு கொள்கிறார்.

பிந்தையதில் திறக்கப்பட்டவர் இறைவனைப் புகழ்கின்றார்.

திறக்கப்படுதல் நலம்.

ஆனால், திறப்பவர் கடவுளாக இருந்தால் மட்டுமே விளைவு நேர்முகமாக இருக்கும்.

இன்றைய முதல் வாசகத்தில் நம் முதற்பெற்றோரின் கண்கள் திறக்கப்பட்டாலும், அவர்கள் காதுகள் மூடியிருந்தன. ஏனெனில், அவர்கள் இறைவனின் குரலுக்கும் அவருடைய கட்டளைக்கும் தங்கள் காதுகளை மூடிக்கொண்டனர்.

நம் முதற்பெற்றோர் தாங்கள் ஏற்கெனவே கடவுளின் சாயலில் இருக்கிறோம் என்பதை மறந்தனர். ஒருவர் தன் இயல்பை இருப்பது போல ஏற்றுக்கொண்டால், தன்னிருப்பில் நிறைவு கண்டால் அவர் மற்றவர்களின் ஏமாற்றுச் சொல்லில் வீழ்ந்துபோகமாட்டார்.

இன்று நம் வாழ்வில் திறக்கப்பட வேண்டிய வாசல்களும் ஜன்னல்களும் பல இருக்கலாம். அவற்றைத் திறக்குமாறு இறைவனிடம் செல்தலும், அவற்றை இறைவனே திறத்தலும் நலம்.

1 comment:

  1. முதல் பெற்றோரின் கண்கள் திறக்கப்படுதல்.......பேச்சற்ற ஒருவரின் காதுகள் திறக்கப்படுதல். தந்தையின் ஒப்பீடல் அழகு! திறப்பவர் கடவுளாக இருக்கும் பட்சத்தில் விளைவும் வேறாகிறது. முதல் பெற்றோரின் கண்கள் மூடியிருந்ததாலேயே காதுகள் திறந்திருந்தும் பயனில்லாமல் போயிற்று.தாங்கள் கடவுளின் தயவில் இருக்கிறோம் என்பதை மறந்து தங்களேயே கடவுளாகவும் நினைத்துவிட்டதன் விளைவே அவர்களை ஏதேன் தோட்டத்திற்கு அந்நியர்களாகிவிட்டது.

    நம்மில் திறக்கப்பட வேண்டியவை எவை? வாசல்களா? ஜன்னல்களா? இல்லை இரண்டுமேவா? இறைவனிடம் செல்வோம். அவரே பூட்டியதைத் திறக்கவும்...திறந்ததைப் பூட்டவும் வல்லவர்.

    நல்ல உணர்வுகள்.....அவை வரும் வழிமுறைகள்...அவற்றின் பயன்கள்......தன் முத்து முத்தான வார்த்தைகளால் மூடியிருக்கும் நம் உள்ளங்களை....உணர்வுகளைத் திறக்க வல்ல தந்தைக்கு வாழ்த்தும்...நன்றியும்......

    ReplyDelete