இன்றைய (11 பிப்ரவரி 2021) திருநாள்
புனித லூர்தன்னை
1858ஆம் ஆண்டு பிப்ரவரி 11 முதல் ஜூலை 16 வரை பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகரில் மஸபியெல் குகையில் பெர்னதெத் என்ற இளவலுக்கு அன்னை கன்னி மரியா காட்சி தந்தார். தன்னுடைய இறுதிக் காட்சியில், 'நாமே அமல உற்பவம்' என்று அவர் தன்னை வெளிப்படுத்தினார்.
'வெளிப்பாடும் நம்பிக்கையும்' என்ற ஒரு பாடம் இறையியல் வகுப்புகளில் உண்டு. அதாவது, கடவுள் தம்மை வெளிப்படுத்துகிறார். அவருடைய வெளிப்பாட்டைக் காணும் மனிதர்கள் அதற்கேற்ற பதிலிறுப்பைத் தருவது நம்பிக்கையும். வெளிப்பாடும் நம்பிக்கையும் இணைந்தே செல்கின்றன. இந்தப் பாடத்தின் இறுதியில், பல்வேறு நகரங்களில் மக்கள் காணுகின்ற காட்சிகள் பற்றிப் பேசப்படுவதுண்டு. இத்தாலிக்கு நாம் சென்றோமெனில், பல இடங்களில் அன்னை கன்னி மரியா தோன்றியதாகத் திருத்தலங்களும், ஆலயங்களும் உண்டு. சாலையில், வயலில், குகையில், ஆடு மேய்த்தவர்களுக்கு, பால் கறந்தவர்களுக்கு, பயிர் நட்டவர்களுக்கு என நிறையப் பேர் அன்னை கன்னி மரியாவைக் கண்டதாக அங்கே பதிவுசெய்யப்பட்டுள்ள எழுத்துகள் நமக்குச் சொல்கின்றன.
இன்றும் மஸபியல் குகையில் திரள்கின்ற மக்களே நம் அன்னையின் காட்சிக்குச் சான்று.
இந்த அன்னை இன்று நமக்குச் சொல்வது என்ன?
புனித லூர்தன்னை பெர்னதெத் இளவலுக்கு காட்சி தந்த நிகழ்வுகளை வாசித்துக்கொண்டிருந்த போது, அங்கே குறிப்பிடப்பட்டிருந்த ஒரு செய்தி எனக்கு வியப்பைத் தந்தது. இன்று நாம் லூர்தன்னையின் உருவத்தைப் பார்க்கின்றோமே, அந்த உருவத்தை வடித்த ஓவியரிடம் பெர்னதெத் சண்டை போடுகிறார்கள். 'நான் காட்சியி;ல் கண்டவர் இவர் இல்லை! அவருடைய முகம் இன்னும் அழகாக இருந்தது! அவருடைய உருவம் இதைவிட சற்றே சிறியது! செபமாலையின் மணிகள் வேறு மாதிரியாக இருந்தன' என்று அந்த ஓவியத்தை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றார். ஆனால், அந்த ஓவியர் வடித்த ஓவியமே பின் சிற்பமாக மாற்றப்பட்டு, இன்றும் மஸபியல் குகையில் உள்ளது.
இந்த இடத்தில் பெர்னதெத் சொல்லும் வார்த்தைகள் கவனிக்கத்தக்கவை: 'காட்சியைக் கண்ட நான் ஒருபோதும் அந்தக் காட்சியை யாருக்கும் விளக்க முடியாது. ஏனெனில், நான் எப்படி விளக்கினாலும் ஒவ்வொருவரும் தனக்கு எப்படிப் புரிகிறதோ அப்படித்தான் எடுத்துக்கொள்கிறார். இறைவனையும் அவருடைய அன்னையையும் ஒவ்வொருவரும் கண்டால் மட்டுமே அவர்களைப் புரிந்துகொள்ள முடியும்.'
இளவல் பெர்னதெத் பெற்றது ஓர் இறையனுபவம்.
இன்றும் இறையனுபவங்கள் நம் வாழ்வில் நடந்தேறுகின்றன.
அன்று போல இன்று பேரொளியோ, ஊற்றோ நம்மைச் சுற்றித் தோன்றாமல் இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு இறையனுபவம் தனித்துவமானது.
இன்றைய நாள் நமக்கு நினைவூட்டும் செய்தி இதுதான்: இறைவனின் மற்றும் இறையன்னையின் உடனிருப்பு. அவர்கள் என்றும் நம் உடன் நிற்கிறார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (வார நாளில் உள்ளபடி), சிரிய பெனிசிய இனத்துப் பெண் தன் மகளின் பேயை ஓட்டுமாறு இயேசுவை வேண்டுகிறார். அவரின் நம்பிக்கையைக் காணுகின்ற இயேசு, அவரைப் பாராட்டுவதோடு குழந்தைக்கும் நலம் தருகின்றார்.
நம்பிக்கை உள்ளவராக அவர் இருந்ததால் நாசரேத்து இயேசுவில் ஓர் இறைமகனை அவர் கண்டார். அவருடைய சீடர்களால் அப்படி எளிதாகக் காண முடியவில்லை.
அன்னை கன்னி மரியா இன்றும் நம்மோடு, நம் முன்!
லூர்தன்னையாக, திருச்சி அன்னையாக, மதுரை அன்னையாக!
ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் உலக நோயுற்றோர் நாளாகத் திருஅவையால் சிறப்பிக்கப்படுகின்றது. இந்த ஆண்டில் 29வது உலக நோயுற்றோர் நாள் செய்தியைத் தருகின்ற நம் திருத்தந்தை அவர்கள், நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்பதை நமக்கு நினைவூட்டி, நோயுற்ற நிலையில் நாம் அனுபவிக்கும் அச்சத்தையும், ஆற்றலின்மையையும் உடனிருப்பால் வெல்ல முடியும் எனச் சொல்கின்றார். நோயுற்றோர் அனைவருக்காகவும் இன்று சிறப்பாகச் செபிப்போம். நலமான மானுடம் அன்னையின் துணையில் என்றும் நடைபோடட்டும்!
அன்னையின் காட்சி பற்றிய பெர்னதெத்தின் வார்த்தைகள்....” காட்சியைக்கண்ட நான் ஒருபோதும் யாருக்கும் அந்தக் காட்சியை விளக்க முடியாது.ஏனெனில் நான் எப்படி விளக்கினாலும்,ஒவ்வொருவரும் தனக்கு எப்படிப்புரிகிறதோ அப்படித்தான் எடுத்துக்கொள்கிறார்.இறைவனையும்,அவரது அன்னையையும் ஒவ்வொருவரும் கண்டால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்!” இன்று இயேசுவின் தாய் லூர்தன்னை,வேளைநகர் அன்னை,பூண்டி அன்னை,குவார்டலூப் அன்னை...இப்படி எத்தனை பெயர்களில் அழைக்கப்பட்டாலும் அப்பெயர்கள் நமக்கு நினைவூட்டுவது அவரின் “ உடனிருப்பையே!”
ReplyDeleteநமக்கேற்படும் இறையனுபவங்கள் நம்மையும் அன்னை மற்றும் அவளின் மகனிடம் அழைத்துச் செல்லட்டும்! நோயுற்றோர் தினமாகக் கொண்டாடப்படும் இந்நாளில் “நாம் நோயில் விழுந்த நேரங்களில் இந்த அன்னையின் உடனிருப்பு நம் அச்சத்தையும்,ஆற்றலின்மையும் போக்கும் அருமருந்தாக அமையட்டும்!” என்று வேண்டுவோம். நோயின் கொடுமையில் இன்று சிக்கித்தவிக்கும் அனைவருக்காகவும் செபிப்பதோடு......தந்தைக்கும், மற்றும் அனைவருக்கும் லூர்தன்னையின் திருநாள் வாழ்த்துக்களையும் சமர்ப்பிக்கிறேன்!!!அன்புடன்....