கேளுங்கள்
இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் மலைப்பொழிவுப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. 'கேளுங்கள், தேடுங்கள், மற்றும் தட்டுங்கள்' என்னும் மூன்று விளித்தொடர்களாகத் தொடங்குகிறது நற்செய்திப் பகுதி.
எதற்காகக் கேட்க வேண்டும்?
(அ) கேட்பதால்தான் ஒருவர் பெற முடியும்.
(ஆ) கேட்கும் அனைவரும் பெற்றுக்கொள்கின்றனர்.
(இ) நம் தந்தை நன்மையே உருவானவர். அவர் தம்மிடம் கேட்பவருக்கு மிகுதியான நன்மைகள் அளிக்கிறார்.
'கேளுங்கள்' என்னும் இயேசுவின் போதனை அவருடைய முந்தைய போதனைக்கு முரணானதாக இருப்பது போலத் தெரிகிறது. இறைவேண்டல் பற்றிய போதனையில், 'நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் வானகத் தந்தை உங்கள் தேவையை அறிந்திருக்கிறார்' என்று சொல்லும் இயேசு, இங்கே, 'கேளுங்கள்' என்றும் 'கேட்பவரே பெறுகிறார்' என்றும் சொல்வது நமக்குக் குழப்பமாக இருக்கிறது.
இன்றைய முதல் வாசகத்தில் இதற்கான விடை இருக்கிறது.
தன் நாட்டு மக்களுக்காகத் தன் அரசரிடம் பேசுவதற்குத் தயாராகின்றார் எஸ்தர் அரசி. அவர் அரசரிடம் செல்வதற்கு முன்பாகச் செய்யும் இறைவேண்டலே இன்றைய முதல் வாசகம்.
இந்த இறைவேண்டலில் எஸ்தர் இறைவனிடம் ஒரு பக்கம் வேண்டினாலும் இன்னொரு பக்கம், தன் வலுவின்மை மற்றும் வல்லமை அனைத்தையும் அவர் முன் திறந்து காட்டுகின்றார்.
ஆக, அவரைப் பொருத்தவரையில் இறைவேண்டல் என்பது அவரையே அவருக்கு அடையாளம் காட்டும் ஒரு கண்ணாடியாக இருக்கிறது.
இறைவேண்டல் செய்யும் நேரத்தில், நாம் நம்மையே இறைவன் முன் நிறுத்தும்போது, அவர் அப்படியே நம்மைத் திருப்பி நம் முன் நிறுத்துகின்றார்.
அவரின் கண்கள் வழியாக நம்மைக் காணுதலே இறைவேண்டல்.
நன்று.
ReplyDeleteநன்றி🙏
“கேளுங்கள்.அப்பொழுதுதான் உங்களுக்குக் கிடைக்கும்” என்பதும், “நீங்கள் கேட்குமுன்னரே உங்கள் தேவை என்னவென்று அறிந்தவர் உங்கள் விண்ணகத் தந்தை” என்பதும் ஒன்றுக்கொன்று முரணாகப்படுவதாக தெரிவிக்கிறார் தந்தை.பின் எஸ்தர் அரசியை உதாரணமாகக் காட்டி தெளிவு படுத்துகிறார். நாம் விரும்பும் ஒரு காரியத்தைத் தொடங்குமுன் ‘ இறை வேண்டல்’ செய்வது எத்தனை முக்கியமானது என்ற புரிதலைத் தருகின்றது இன்றையப் பதிவு. இறைவனிடம் என்னைத் திறந்து காட்டுமுன் என்னை நானே துகிலுரிதலே இறைவண்டல் என்ற புரிதலையும் தருகிறது. இறைவேண்டல் என்னுடைய வலிமையை மட்டுமின்றி வலுவின்மையையும் சேர்த்தே எனக்குக் காட்டுகிறது. அதைத்தான் “ அவரின் கண்கள் வழியாக நம்மைக் காணுதல்” என்று உணர்த்தப்படுகிறோம். நாம் எளிதாகப் புரிந்து கொள்ளும் பல விஷயங்களுக்கு இடையே பரிந்து கொள்ள முடியா சில விஷயங்களும் உள்ளன...... கசப்பான மருந்தை கொஞ்சம் இனிப்பாக்குவது போல். தந்தையின் முயற்சிக்கு நன்றிகளும்! பாராட்டும்!!!
ReplyDelete