Saturday, February 13, 2021

தாயினும் சாலப் பரிந்து

ஆண்டின் பொதுக்காலம் 6ஆம் ஞாயிறு

I. லேவியர் 13:1-2, 44-46 II. 1 கொரிந்தியர் 10:31 - 11:1 III. மாற்கு 1:40-45

தாயினும் சாலப் பரிந்து

'பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி, உலப்பிலா ஆனந்தம் ஆய' என்று தன் இறைவனை நினைத்து திருவாசகத்தில் உருகுகின்றார் மாணிக்கவாசகர். 

பரிவு என்பது இறைவனின் பண்பு என்பது இன்றைய நற்செய்தியில் இயேசுவின் வல்ல செயல் வழியாக வெளிப்படுகிறது. இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்களில் மையமாக இருக்கின்ற ஒரு வார்த்தை 'தொழுநோய்.' தொழுநோய் பிடித்தவர் 'நடைபிணம்' என்று அந்த நாள்களில் கருதப்பட்டார். தொழுநோயின் கொடுமையை நாம் 'ரத்தக்கண்ணீர்' போன்ற திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். தொழுநோயாளர் அன்றைய எபிரேய மற்றும் கானானிய சமூகத்தில் மூவகை துன்பங்களை அனுபவித்தார்:

(அ) உடல்சார் துன்பம்: தொழுநோய் பீடித்த உடல் புண்களால் நிறைந்து நாற்றமெடுக்கும். தோலின் நிறம் மாறும். தோல் தன் உணரும் தன்மையை இழக்கும். தோலுக்கு உணரும் தன்மை இல்லாததால் நாய் அல்லது பூனை புண்களை நக்கினாலும், எறும்புகள் அல்லது ஈக்கள் மொய்த்தாலும் உணர முடியாது. கை மற்றும் கால் விரல்கள் சூம்பிப் போகும். மருந்துகள் இல்லாத நிலையில் இறப்பு ஒன்றே இதற்கான மருந்து என்று கருதப்பட்டது.

(ஆ) உறவுசார் துன்பம்: தொழுநோய் ஒருவர் மற்றவருக்குப் பரவக் கூடிய நோய் என்பதாலும், மருந்துகள் அல்லது தடுப்பு மருந்துகள் இல்லாத நிலையில் சமூகப் பரவலைத் தடுப்பதற்காக, நோயுற்ற நபரைத் தொற்றொதுக்கம் செய்வது வழக்கம். இப்படியாக தொழுநோய் பீடித்த ஒருவர் அவருடைய குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து பிரித்துவைக்கப்பட்டதால் உறவுசார் துன்பத்தையும் அவர் அனுபவிக்க நேரிட்டது.

(இ) சமயம்சார் துன்பம்: ஒருவர் தான் செய்த பாவத்திற்கு கடவுள் தரும் தண்டனையே தொழுநோய் என்று கருதப்பட்டது. கடவுளால் மட்டுமே இதைக் குணமாக்க இயலும் (காண். நாமான் நிகழ்வு) என்ற நிலை இருந்ததால், இந்நோய் பீடிக்கப்பட்டவர் கடவுளின் சாபத்துக்கு ஆளானவராகக் கருதப்பட்டார்.

மேற்காணும் மூவகைத் துன்பங்கள் நமக்கு கோவித்-19 பெருந்தொற்றை நினைவூட்டுகின்றன. நம்மை விட்டு நீங்கியும் நீங்காமலும் சுற்றி நிற்கின்ற இந்தப் பெருந்தொற்றுக்காலத்தில், தொற்றுக்கு ஆளானவர் மேற்காணும் மூன்று துன்பங்களையும் அனுபவித்தார் என்பதை நாம் அறிவோம். பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களைப் புதைக்கவும் இடமில்லாமல், சுற்றத்தாரும் அவர்களைக் காண இயலாமல், போதிய மருத்துவ வசதி இல்லாமல் என நாம் அனுபவித்த துன்பங்கள் அளப்பரியவை.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். லேவி 13), தொழுநோய் பீடித்தவரை எப்படித் தொற்றொதுக்கம் செய்ய வேண்டும் எனவும், அவர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றியும் ஆண்டவர் மோசே மற்றும் ஆரோனுக்கு வலியுறுத்துகிறார். கடவுளிடமிருந்து வரும் பாவம் என்று கருதப்பட்டதால் குருக்களே இந்நோய் பற்றிய தொற்றொதுக்கத்தை அனுமதிப்பவர்களாகவும், மீண்டும் மக்களை ஊருக்குள் அழைப்பவர்களாகவும் இருக்கின்றனர். தொழுநோய் என்பது கடவுள் மோசேக்குத் தரும் அடையாளமாகவும், முணுமுணுத்த மிரியாமுக்கு அவர் வழங்கிய தண்டனையாகவும் இருக்கிறது.

இரண்டாம் வாசகத்தில், புனித பவுல் கொரிந்து நகரக் குழுமத்தில் எழுந்த உணவுசார்ந்த பிரச்சினை ஒன்றைப் பற்றி அவர்களுக்கு அறிவுறுத்துகின்றார். சிலைகளுக்குப் படைத்தவற்றை உண்பதா வேண்டாமா என்ற பிரச்சினை கொரிந்து நகரில் எழுகின்றது. கொரிந்து நகரில் இருவகையான நம்பிக்கையாளர்கள் இருந்தனர். முதல் வகையினர் தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருந்தனர். சிலைகளுக்குப் படைக்கப்பட்டதை உண்டதால் அவர்கள் தங்கள் நம்பிக்கை மறைந்து போகும் என்று எண்ணவில்லை. இரண்டாம் வகையினர் நம்பிக்கையில் வலுவற்று இருந்தனர். சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவு இவர்களைப் பொருத்தவரையில் ஓர் இடறலாகக் கருதப்பட்டது. நம்பிக்கையில் வலுக்குறைந்து நின்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் மற்ற குழுவினர் சிலைகளுக்குப் படைக்கப்பட்டதை உண்டனர். அவர்களுக்கு அறிவுறுத்துகின்ற பவுல், 'நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்ய வேண்டும் எனவும்,' மேலும் 'ஒருவர் மற்றவருக்குப் பயன்தருவதையே நாட வேண்டும்' என்றும் சொல்கின்றார். இவ்வாறாக, அவர்கள் மற்றவர்களைப் பற்றிய அக்கறை கொண்டிருக்க அழைக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில், தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வருகின்றார். அவர் இயேசுவை எங்கே சந்திக்கிறார் என்று தெரியவில்லை. தொழுநோயாளர் வசிக்கும் இடத்திற்கு இயேசு சென்றாரா, அல்லது 'தீட்டு, தீட்டு' என்று கத்திக்கொண்டே தொழுநோயாளர் இயேசுவிடம் வந்தாரா என்ற குறிப்பு இல்லை. மேற்காணும் இரண்டு நிலைகளிலும் இயேசு தன் சமகாலத்துச் சமூகத்தின் புரிதலைப் புரட்டிப் போடுகின்றார். 'நீர் விரும்பினால் எது நோயை நீக்க உம்மால் முடியும்' என்னும் தொழுநோயாளரின் வார்த்தைகளில் நம்பிக்கை தெரிவதோடு, இறைவிருப்பம் நிறைவேறுவதையே அவர் விரும்புகிறார் என்ற அவருடைய நல்லுள்ளமும் தெறிகிறது. 

இயேசுவின் வல்ல செயல் மூன்று நிலைகளில் நடந்தேறுகிறது: ஒன்று, தொழுநோயாளர்மேல் இயேசு பரிவு கொள்கின்றார். இரண்டு, அவரைத் தொட்டு நலம் தருகின்றார். மூன்று, அவரை மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்காக மோசேயின் கட்டளையை நிறைவேற்றுமாறு பணிக்கின்றார். 

ஆனால், அந்த நபர் இயேசுவைப் பற்றி எல்லாருக்கும் அறிவிக்க, கடைசியில் இயேசு ஊருக்குள் செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது. இயேசுவுக்கு அந்த நிலை ஏற்பட்டது ஏன்? தொழுநோயாளரைத் தொட்ட செய்தியை மக்கள் அறிந்ததால் அவரையும் தீட்டுப்பட்டவர் என நினைத்தார்களா? அல்லது இயேசு ஒதுக்கிவைக்கப்பட்டாரா? அல்லது மக்கள் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக இயேசு ஒதுங்கி நின்றாரா? நமக்குத் தெரியவில்லை.

இயேசுவின் பரிவுள்ளம் நமக்கான இன்றைய பாடமாக இருக்கிறது.

இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. 'வேலண்டைன் டே' என்று கொண்டாடப்பட்டது இன்று ஒரு வாரமாகக் கொண்டாடப்படுகிறது. ரோஸ் தினம், முன்மொழிதல் தினம், சாக்லேட் தினம், டெடி தினம், வாக்குறுதி தினம், தழுவல் தினம், முத்த தினம், இறுதியில் காதலர் தினம். அன்பே இந்த நாள்களில் முதன்மையாக இருக்கிறது. அல்லது இருக்க வேண்டும். 

நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடைய 'ஃப்ரத்தெல்லி தூத்தி' ('அனைவரும் உடன்பிறந்தோர்') என்னும் சமூகச் சுற்றுமடலில், பரிவு பற்றி மிக அதிகமாகப் பேசுகின்ற திருத்தந்தை அவர்கள், அன்பிற்கான முதற்படி பரிவு என்கிறார். மேலும், செயல்பாட்டில் காட்டப்படும் அன்பே பரிவு என்பதும் அவருடைய புரிதல்.

இன்று பல நேரங்களில் அன்பு என்பது வெறும் ஓர் உணர்வு அல்லது உணர்ச்சியாக மாறிவிட்டது. காதலர் தினக் கொண்டாட்டங்களிலும், திருமண உறவுநிலைகளிலும் இதே நிலைதான் பல நேரங்களில் நீடிக்கிறது.

ஆகையால்தான், நாம் மேலே குறிப்பிட்ட பாடலில், தாயினும் மிகுதியாக அன்பு செய்யும் கடவுள் என்று தன் கடவுளை அழைக்காமல், 'பரிவு கொள்ளும் இறைவனாகத்' தன் இறைவனை அழைக்கின்றார் மாணிக்கவாசகர்.

இயேசுவைப் போல பரிவுள்ளம் கொள்வது எப்படி?

(அ) பிறருக்கு உகந்ததையும் பயன் தருவதையும் நான் நாட வேண்டும்

இதுவே தன் விருப்பம் எனச் சொல்கிறார் பவுல். மேலும், கிறிஸ்து தன் வாழ்க்கையில் எப்போதும் பிறருக்கு உகந்ததையும், பயன் தருவதையும் நாடினார் என்பதும் பவுலின் புரிதல்.

(ஆ) வரையறைகளைக் கடப்பது

எபிரேய மொழியில் பரிவு காட்டுதல் என்னும் செயல், ஒரு தாய் தன் மடியில் கிடத்தப்பட்டுள்ள குழந்தையைக் குனிந்து பார்த்தலைக் குறிக்கிறது. தாய் தன் முகத்தைத் தாழ்த்தி குழந்தையின் முகத்தின் அருகில் கொண்டு வரும்போது அவர் தன்னையே வளைக்கின்றார். தாய் என்னும் தன் நிலையைத் தாண்டி குழந்தையின் எல்லையைத் தனதாக்கிக் கொள்கின்றார். இயேசு சமூகத்தின் வரையறைகளைக் கடந்ததால் மட்டுமே தொழுநோயாளருக்கு அருகில் செல்லவும், அவரைத் தொடவும் முடிந்தது.

(இ) பொறுத்துக்கொள்வது

இயேசுவின் வார்த்தைக்கு எதிர்மாறாக அந்த நலம் பெற்ற தொழுநோயாளர் செயல்பட்டாலும், அவருடைய செயலை இயேசு பொறுத்துக்கொள்கின்றார். 'அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்' (காண். 1 கொரி 13) என்பது இங்கே தெளிவாகிறது. 

இன்று நாம் அன்பைக் கொண்டாடினாலும், பெருந்தொற்றுக் காலத்திலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தாலும் நமக்குத் தேவையானது பரிவு. மேற்காணும் மூன்று வழிகள் வழியாக நாம் கடவுளின் பரிவுள்ளம் பெற்றால் நலம்.

கடவுளின் பரிவுள்ளம் நம் இன்னல்களினின்று நம்மை விடுவிக்கிறது என்கிறார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 32). நாம் ஒருவர் மற்றவருடைய இன்னல்களில் அவர்களுக்குத் துணை நிற்கும்போது நாமும் அதே பரிவுள்ளத்தைக் கொண்டிருக்கிறோம்.

3 comments:

  1. “ பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து” இறைவன் மேல் தனக்குள்ள பாசப்பிணைப்பை தனக்கே உரித்தான வரிகளில் குழைத்துத் தருகிறார் மாணிக்க வாசகர். ஒரு காலத்தில் அன்பு, பாசம் என்றெல்லாம் நாம் சொல்லி வந்த வார்த்தைகள் அர்த்தம் மறந்து போய், செல்லாக் காசாய் மாறி நிற்க...இந்த மானுடத்தின் மேல் இரக்கம் கொண்ட இறைவன் அதைத் தன் “ பரிவால்” நிறைக்கிறார். “பரிவு”.... சொல்லும் போதே ....கேட்கும் போதே ஒரு புரிதல். கொடுப்பவருக்கும்,எடுப்பவருக்கும் இடையே ஒரு நெருக்கத்தைத் தருகிறது. இந்தப் பரிவு பற்றி ....அது எப்படியெல்லாம் பகிரப்படவேண்டுமெனும் முறை குறித்து எடுத்தியம்புகின்றன இன்றைய வாசகங்கள்.
    இயேசுவின் பரிவுள்ளம் எவ்வாறு பகிரப்பட்டது என்பதைத் “ தொற்றுக்களின்” துணை கொண்டு விளக்குகிறார் தந்தை. “ இரத்தக்கண்ணீரை” மட்டுமே துணைக்கழைக்கிறார் தந்தை.ஆனால் அதை விட மனத்தாலும்,உடலாலும் மோசமான..கொடுமையான எத்தனையோ தொற்றுக்கள் நம்மைக் கவ்வக் காத்திருக்கின்றன.

    இயேசுவின் ‘ “பரிவுள்ளம்” இருந்தால் மட்டுமே இந்தத் தொற்றுக்களை மேற்கொள்ள இயலும் என்பதை “இயேசு பிறருக்கு உகந்ததைத் தந்து...வரையறைகளைக் கடந்து, அவர்கள் செய்வதைப் பொறுத்துக் கொண்டு” நமக்குப் பாடமாய் வாழ்ந்து சென்றிருக்கிறார். இங்கே “ வரையறைகளைக் கடப்பதைத் தன் குழந்தையைத் தொட தன்னையே வளைத்துக்கொடுக்கும் தாயை உதாரணமாகத் தந்தை காட்டியிருப்பது அழகு! பரிவுள்ளம் என்றால் என்ன? கேட்கிறது என்மனம்...” செயல்பாட்டில் காட்டப்படும் அன்பே பரிவு” என்கிறார் திருத்தந்தை. அந்தப் பரிவை எப்படிக் காட்டுவது? மீண்டும் கேட்கிறது என் மனம். திருப்பாடல் ஆசிரியர் சொல்லியிருப்பது போல் “ பிறரது இன்னல்களில் நாம் துணை நிற்கையில்” என்கிறது என்மனம் சளைக்காமல்.

    இப்பேர்பட்ட ‘பரிவு’ பற்றி எந்தப் புரிதலுமின்றி இந்நாளைக் காதலர் தினம்,,,,அந்த தினம்...இந்த தினம் என்கின்றனர் இன்றைய இளசுகள். இறைவனின் பரிவுள்ளம் அவர்களுக்கும் இன்றைய நாளின் புரிதலைத் தரட்டும்! அழகான ஒரு “ பரிவான புரிதல்” கலந்த மறையுரைக்காகத் தந்தைக்கு நன்றியும்....ஞாயிறு வணக்கங்களும்!!!

    ReplyDelete
  2. 'அனைவரும் உடன்பிறந்தோர்'

    'அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்'

    எனக்கு உறுதியூட்டுகின்ற வரிகள்..…🙏நன்றி.

    ReplyDelete