இன்றைய (17 பிப்ரவரி 2021) திருநாள்
திருநீற்றுப் புதன்
இந்த ஆண்டு தவக்காலத்திற்காக நம் மதிப்பிற்குரிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியே இன்றைய மறையுரைச் சிந்தனையின் பின்புலமும் ஊற்றும்.
'இதோ! நாம் எருசலேம் நோக்கிச் செல்கிறோம்!' (மத் 20:18)
தவக்காலம் - நம் நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் அன்பையும் புதுப்பிக்கும் காலம்
எருசலேம் என்பது இயேசுவுக்கும் அவருடைய சீடர்களுக்கும் மிக முக்கியமான நகரம். இயேசுவின் இறப்பும் உயிர்ப்பும் அங்கே நிகழ்கின்றன. அந்நிகழ்வுகளைத் தொடர்ந்து சீடர்கள் அவரின் இறையாட்சிப் பணியை ஏற்கின்றனர்.
பாஸ்காக் கொண்டாட்டத்திற்கான தயாரிப்பே தவக்காலம்.
மனமாற்றத்தின் காலமான இக்காலத்தில் நம் நம்பிக்கையைப் புதுப்பிப்போம், எதிர்நோக்கு என்னும் வாழ்வுதரும் தண்ணீரிலிருந்து பருகுவோம், திறந்த இதயத்தோடு கடவுளின் அன்பை ஏற்போம்.
நோன்பு, இறைவேண்டல், மற்றும் பிறரன்புச் செயல்கள் (காண். மத் 6:1-18) - இன்றைய நற்செய்தி வாசகம் - நம் மனமாற்றத்தை தூண்டுவனவாகவும் நம் மனமாற்றத்தின் வெளிப்பாடுகளாகவும் இருக்கின்றன. நோன்பின் வழியாக ஏழ்மை மற்றும் தன்மறுப்பின் பாதையிலும், பிறரன்புச் செயல்கள் வழியாக எளியவர்கள்மேல் கொள்ளும் அக்கறை மற்றும் கனிவன்பின் பாதையிலும், இறைவேண்டல் வழியாக தந்தையோடு குழந்தையின் உள்ளம் கொண்டு உரையாடும் பாதையிலும் நாம் வழிநடக்கிறோம்.
1. நம்பிக்கை: உண்மையை ஏற்கவும் அதைக் கடவுள் முன்னும் நம் சகோதரர் சகோதரிகள் முன்னும் அறிக்கையிடவும் அழைக்கிறது
- இறைவார்த்தைக்குத் திறந்த உள்ளத்துடன் செவிமடுப்பது
- நோன்பின் வழியாக நாம் நம் பசி அறிகிறோம். அந்தப் பசியில் நம் உண்மையான இயல்பை அறிகிறோம். அடையாளங்கள் அங்கே மறந்துபோகின்றன. நாம் ஒருவர் மற்றவருடன் அந்தக் கையறுநிலையில் பங்கேற்கிறோம். நோன்பு நம்மை வெளிநோக்கித் தள்ளுகிறது. நம் நம்பிக்கையின் வழியாகக் கடவுளை நம் நடுவில் மனுவுருவாக்குகிறோம். நம்மைக் கீழே இழுக்கும் காரணிகள் அனைத்திலிருந்தும் - நுகர்வுவெறி, தகவல்மோகம் போன்றவற்றிலிருந்து - நாம் விடுதலை பெறுகிறோம் நோன்பின் வழியாக. இவ்வாறாக, அருளும் உண்மையும் நிறைந்தவர்களாய் (காண். யோவா 1:14) நாம் நம் இறைமகனும் மீட்பருமான இயேசுவின் அருகில் செல்கிறோம்.
2. எதிர்நோக்கு: நம் பயணத்திற்கு ஊக்கம் தரும் வாழ்வு தரும் தண்ணீர்
சமாரியப் பெண்ணுக்கு இயேசு வாழ்வுதரும் தண்ணீரை வாக்களிக்கின்றார். ஆனால், அதை அவரால் புரிந்துகொள்ள இயலவில்லை. தூய ஆவியாரே இயேசு வாக்களிக்கும் தண்ணீர். மேலும், எதிர்நோக்கின் வழியாக அந்தப் பெண்ணின் இதயத்தைத் தந்தையின் இரக்கத்திற்குத் திறக்கிறார் இயேசு. இந்த நாள்களில் எல்லாமே வலுவற்றுக் காணப்படும் நிலையில் எதிர்நோக்கு மிகவும் அவசியமாகிறது. ஒப்புரவின் வழியாக எதிர்நோக்கை அடைய முடியும் என்பது பவுலின் புரிதல் (காண். 2 கொரி 5:20). தவக்காலத்தில் நாம் ஆறுதலின், வலிமையின், தேற்றுதலின், ஊக்கத்தின் வார்;த்தைகளைப் பேசுவோம். அடுத்தவரை மட்டம் தட்டும், வருத்தப்படுத்தும், கோபத்தைத் தூண்டும், ஏளனம் செய்யும் வார்த்தைகளைக் தவிர்ப்போம் (காண். 'அனைவரும் உடன்பிறந்தோர்' 223). அமைதியான இறைவேண்டலே எதிர்நோக்கின் தொடக்கம். அனைத்தையும் புதுப்பிக்கும் ஆண்டவர் முன் (காண். திவெ 21:1-6) நம்மையே சரணாகதியாக்குதலே அதன் தொடர்ச்சி.
3. அன்பு: கிறிஸ்துவின் பாதச்சுவடுகளில், அக்கறை கொண்டு அன்பிரக்கம் காட்டுவதன் வழியாக, நாம் நம் நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் வெளிப்படுகிறது
மற்றவர்கள் வளர்வதைப் பார்த்து அன்பு மகிழ்கிறது. மற்றவர்கள் துன்புறும்போதும் தனிமையில், நோயில், வீடற்றுத் தவிக்கும்போதும், தேவையில் இருக்கும்போதும் அது கண்டு வருந்துகிறது. அன்பு என்பது இதயத்தின் துள்ளல். அது நம்மை நம்மிடமிருந்து வெளியேற்றி பகிர்தல் மற்றும் பிணைப்புக்கு வழிவகுக்கிறது.
'சமூக அன்பு' என்பது வெறும் உணர்வு அல்ல. மாறாக, அது ஒருவர் மற்றவர்மேல் காட்ட வேண்டிய செயல் (காண். 'அனைவரும் உடன்பிறந்தோர்,' 183). அன்பு நம் வாழ்வுக்குப் பொருள் தருகிறது. தேவையில் இருப்பவர்களை நம் குடும்பத்தாராகவும் நண்பர்களாகவும் உடன்பிறந்தவர்களாகவும் பார்க்கத் தூண்டுவது அன்பே. அன்புடன் கொடுக்கப்படும் எதுவும் வாழ்வையும் மகிழ்ச்சியையும் தருகிறது (காண். 1 அர 17:7-16, மாற் 6:30-44). நம் பிறரன்புச் செயல்களும் தர்மம் செய்தலும் மகிழ்ச்சி தருகின்றன.
பெருந்தொற்றால் அல்லலுறுவோருக்கும் தேவையில் இருக்கும் அனைவருக்கும் நம் உடனிருப்பைக் காட்ட இத்தவக்காலம் உதவ வேண்டும்.
நிற்க.
நம்பிக்கை, எதிர்நோக்கு, மற்றும் அன்பு என்னும் இறையியல் மதிப்பீடுகளைக் கொண்டு, நோன்பு, இறைவேண்டல், மற்றும் பிறரன்புச் செயல்கள் என்னும் மூன்று தவக்காலச் செயல்கள் நோக்கி நம்மை வழிநடத்துகிறார் திருத்தந்தை.
'தந்தையின் இதயத்தோடு' என்னும் தன் மடலில், அருளுக்கு மேலான அருளான மனமாற்றத்தை நாம் பெற புனித யோசேப்பு நம்மைத் தூண்டுவாராக! என்று அழைப்பு விடுக்கிறார் திருத்தந்தை.
இன்று நாம் அணியும் சாம்பல் நம் மனமாற்றத்தைக் குறிப்பதாகவும், வழிநடத்துவதாகவும், நிறைவுசெய்வதாகவும் இருக்கட்டும்.
இக்காலம் அருளின் காலமாக அமைய உங்களுக்கு என் வாழ்த்துகள்.
இன்று நாம் 'எருசலேம் நோக்கிச் செல்கிறோம்!'
நம் பயணம் இனிய பயணமாகட்டும்.
Yes,இனிய பயணமாகட்டும்...🙏
ReplyDelete“ தவக்காலம்”..... நாம் எருசலேம் நோக்கிப்பயணிக்கும் காலம்...... “நம்பிக்கை,எதிர்நோக்கு மற்றும் அன்பு” எனும் சுமைகளை (நற்செயல்களை) நம் முதுகின் மேல் சுமர்ந்தவர்களாய்!
ReplyDeleteதந்தையின் வரிகளில் என்னை மிகவம் கவர்ந்தது...” அமைதியான இறைவேண்டலே எதிர்நோக்கின் தொடக்கம்.அனைத்தும் புதுப்பிக்கும் ஆண்டவர் முன் சரணாகதியாவது அதன் தொடர்ச்சி.”..... ஆம் மற்றவை யாவும் இந்த வரிகளுக்குள் அடக்கம் என நினைக்கிறேன்.
“ தந்தையின் இதயத்தோடு” தனது இதயத்தையும் சேர்த்தே நம்மோடு இணைக்கும் திருத்தந்தை எருசலேம் நோக்கிய நம் பயணத்திற்கு நல்ல வழிகாட்டியாக இருக்கட்டும்.
இந்தப் பயணத்தை முன்மொழிந்தது மட்டுமல்ல... தன் நற்சிந்தைகளைப் பகிர்ந்து கொண்டு எம்மோடு உடன்வரும் தந்தை யேசுவுக்கும் இக்காலம் அருளின் காலமாக இருக்க என் வாழ்த்துக்கள்!!!