இன்றைய (4 பிப்ரவரி 2021) திருநாள்
செம்மண் புனிதர்
இன்று மறவநாட்டு மாணிக்கம், செம்மண் புனிதர் என அன்போடு அழைக்கப்படும் புனித அருளானந்தர் திருநாளைக் கொண்டாடுகிறோம்.
மதுரையிலிருந்து கிழக்கு நோக்கி நாம் எந்தத் திசையில் பயணித்தாலும் இப்புனிதரின் கால்தடங்கள் அங்கே பதிந்திருக்கின்றன என்றும், அவருடைய மூச்சு அந்தக் காற்றில் கலந்திருக்கிறது என்பதையும் நம்மால் உணர முடியும்.
தன் சொந்த நாடு விட்டு வந்து, 'எல்லாருக்கும் எல்லாம் ஆனேன்' என்ற பவுலைப் போல, நம்மவர்க்கு நம்மவராக உடையிலும், உணவுப் பழக்கத்திலும் மாறி, நம்மைத் தன் மறைக்கு மாற்றியவர் இந்தப் புனிதர்.
'கிறிஸ்தவர்களிடமிருந்து என்னைப் பிரித்து, அரசரின் சகோதரராகிய ஓரியூர் தடியத்தேவனிடம் அனுப்பி வைத்தனர். கால தாமதமின்றி என்னைக் கொன்று விடுமாறு அவனுக்கு ரகசிய உத்தரவும் அனுப்பப்பட்டது. இங்கு நான் ஜனவரி 31ம் தேதி வந்து சேர்ந்தேன். பொறுமையின்றி நான் மரணத்தை எதிர் நோக்கி இருக்கின்றேன். அதுவே என்னுடைய லட்சியத்தை நிலை நிறுத்தக் கூடியது. இதுவரை நான் செய்து வந்த வேலைக்குக் கைமாறாக என் உயிரைத் தியாகம் செய்யக்கூடிய பொன்னான சந்தர்ப்பம் இப்போது வந்து விட்டது' (1693 பிப்ரவரி 3) - இவர்தான் அருளானந்தர் எழுதிய இறுதிக் கடிதத்தின் வரிகள்.
இந்தக் கடிதத்தில் உள்ள இரண்டு வார்;த்தைகள் நமக்கும் சவாலாக இருக்கின்றன.
(அ) அதுவே என்னுடைய லட்சியம்
தன் மரணமே தன்னுடைய லட்சியம் என்கிறார் அருளானந்தர். இறப்பிலும் தன் தலைவராகிய கிறிஸ்துவை ஒத்திருக்க விரும்புகிறார் அருளானந்தர். இன்று எனக்கு இலக்கு அல்லது லட்சியத் தெளிவு இருக்கிறதா?
(ஆ) என் வேலைக்குக் கைம்மாறாக வந்துள்ள சந்தர்ப்பம்
தன்னுடைய கொலையை அல்லது மறைசாட்சியத்தை தன் வேலைக்கான கைம்மாறு மற்றும் சந்தர்ப்பம் என்று அழைப்பதன் வழியாக, அதை எதிர்நோக்கியிருந்த அவருடைய மனத்திடம் நமக்கு ஆச்சரியம் தருகிறது.
இன்று மதுரை மற்றும் சிவகங்கை மறைமாவட்டங்கள் தங்களுடைய பாதுகாவலரை நினைத்துக் கொண்டாடுகின்ற வேளையில், மதுரை உயர்மறைமாவட்டம் எங்கள் அன்புப் பேராயரின் ஆயர் திருநிலைப்பாட்டு நாளையும் கொண்டாடுகின்றது. 'அன்பினில் சேவை மலர' என்னும் இலக்கு வாக்கியத்துடன் ஆயர் பணி செய்யும் எம் பாசமிகு பேராயருக்கு வாழ்த்துகளும் இறைவேண்டல்களும்.
மிக்க நன்றி,
ReplyDeleteஇவ்வரிய பதிவிற்கு.🙏
கடல் கடந்து,நாடுகடந்து வந்து “ எல்லோருக்கும் எல்லாம் ஆனேன்!” என்று இன்னொரு பவுலைத்தன்னில் கொண்டுள்ளார் இன்றைய நாளின் புனிதர் அருளானந்தர்.
ReplyDeleteதன்மரணமே தனது இலட்சியம் என்பதும், தன் வேலைக்கான சன்மானமக மறைசாட்சியத்தையும் மனமுவந்து ஏற்றுக்கொண்ட மாமனிதர். அவர் இரத்தம் சிந்திய அந்த செந்நீர் கலந்த மண்ணை சிறுவயதில் எங்கள் குடும்பங்களில் ஒரு புனித உணவாக உட்கொண்டது இன்னும் நினைவிருக்கிறது.
மறைமாவட்டத்தின் பாதுகாவலர் மட்டுமின்றி எங்கள் அன்பியத்தின் பாதுகாவலர் இந்தப் புனிதர் என்பது எமக்குக் கூடுதல் சிறப்பு. இந்நன்னாளில் புனித அருளானந்தரைப் பாதுகாவலராகப்பெற்ற மதுரை மற்றும் சிவகங்கை மறைமாவட்ட இறைமக்களுக்கும், தன் ஆயர்திருநிலைப்பாட்டு நாளைக்கொண்டாடும் மதுரைப் பேராயர் அந்தோணி பாப்புசாமி அவர்களைக்கும் வாழ்த்துக்களும்! செபங்களும்!
செம்மண் புனிதர் தந்தையை நிறைவாக ஆசீர்வதிப்பாராக! வாழ்த்துக்கள்!!!
ஆமென்!
ReplyDelete