Saturday, February 27, 2021

இறந்து உயிர்த்தெழுதல்

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு

I. தொடக்க நூல் 22:1-2,9-13,15-18 II. உரோமையர் 8:31-34 III. மாற்கு 9:2-10

இறந்து உயிர்த்தெழுதல்

'நீவிர் செய்ததை என்னென்போம்! உயிரோடிருந்த குழந்தைக்காக நீர் உண்ணாமல் அழுதீர். ஆனால், குழந்தை இறந்ததும் எழுந்து உணவு கொண்டீரே!' என்று தாவீதின் பணியாளர்கள் அவரிடம் கூறினர். 

'குழந்தை உயிரோடிருந்தபோது ஒருவேளை ஆண்டவர் இரங்குவார், அவனும் பிழைப்பான் என்று நினைத்து, நான் உண்ணா நோன்பிருந்து அழுதேன். இப்போது அவன் இறந்துவிட்டான். இனி நான் ஏன் உண்ணா நோன்பு இருக்க வேண்டும்? என்னால் அவனைத் திருப்பிக் கொண்டுவர முடியுமா? நான்தான் அவனிடம் செல்ல முடியுமே ஒழிய, அவன் என்னிடம் திரும்பி வரமாட்டான்' என்று தாவீது கூறினார். (2 சாமு 12:21-23)

மேற்காணும் விவிலியப் பகுதி நமக்கு அறிமுகமான பகுதியே. தாவீது பத்சேபாவுடன் உறவு கொள்கின்றார். தன் தவற்றை மறைக்க மும்முறை முயற்சிகள் எடுத்துத் தோற்றுப் போக, பத்சேபாவின் கணவரான உரியாவைக் கொலை செய்கின்றார். தாவீதின் இச்செயல் ஆண்டவரின் கண்களில் தீயதெனப்பட அவர் நாத்தான் இறைவாக்கினரை அனுப்பி, அவரைக் கடிந்துகொள்கின்றார். இந்த உறவில் பிறக்கும் குழந்தை இறக்கும் என்று தாவீதுக்குச் சொல்லப்படுகின்றது. தாவீது அக்குழந்தைக்காக நோன்பிருந்தாலும் குழந்தை இறந்துவிடுகிறது. இதுவே மேற்காணும் விவிலியப் பகுதியின் பின்புலம்.

தன் ஆட்சிக்கு உட்பட்ட இடத்தில் உள்ள பெண்ணும் தனதே, அந்தப் பெண்ணின் கணவருடைய உயிரும் தனதே, போர்க்களமும் தனதே, படைத்தளபதியும் தனதே என எண்ணிக்கொண்டிருந்தவர் முதன்முறையாக, குழந்தையை உயிரோடு வைப்பது தனதன்று என்றும், அது தனக்கு அப்பாற்பட்டது என்றும், அனைத்தையும் செய்ய வல்லவர் ஆண்டவர் என்றும் கண்டுகொள்கின்றார். இதுவே தாவீது அடைந்த உருமாற்றம்.

விவிலிய ஆசிரியர் மிகவும் ஆச்சர்யம் தருகிறார். இறக்கும் இந்தப் பெயரில்லாக் குழந்தையைப் பற்றி இவ்வளவு வரிகள் எழுதிவிட்டு, சாலமோன் அரசரின் பிறப்பை ஒற்றை வாக்கியத்தில் எழுதி முடிக்கின்றார். ஏனெனில், இப்பகுதி குழந்தையைப் பற்றியது என்றாலும் இங்கே தாவீதைப் பற்றியே நாம் நிறைய அறிந்துகொள்கிறோம்.

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு நற்செய்தி வாசகம் இயேசுவின் உருமாற்ற நிகழ்வை நம்முன் கொண்டுவருகின்றது. மாற்கு நற்செய்தியாளர், உருமாற்ற நிகழ்வின் இறுதியில், சீடர்களால் இந்நிகழ்வைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று பதிவு செய்கின்றார். மாற்கு நற்செய்தியாளரைப் பொருத்தவரையில், இயேசுவுக்கு அருகில் இருப்பவர்கள் அவரைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள், அல்லது புரிந்துகொள்ள இயலாமல் இருப்பார்கள். நற்செய்தி வாசகத்தின் இறுதியில், 'இறந்து உயிர்த்தெழுதல்' என்றால் என்ன என்று சீடர்கள் ஒருவர் மற்றவரோடு பேசிக்கொண்டிருக்கின்றனர்.

இறந்து உயிர்த்தெழுதல் - இவ்விரண்டு வார்த்தைகளையே இன்றைய நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

இயேசுவின் வாழ்வில் இறந்து உயிர்த்தெழுதல் என்பது ஒரு மீட்புச் செயல். இச்செயலின் வழியாகவே அவர் நம் பாவங்களிலிருந்து நமக்கு விடுதலை தந்தார்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 22), ஈசாக்கு பலியிடப்படும் (!) நிகழ்வை நாம் வாசிக்கின்றோம். ஈசாக்கு பலியிடப்பட்டாரா என்பது மறைபொருளாகவே இருக்கிறது. ஏனெனில், 'பையன் மீது கை வைக்காதே!' என்று ஆண்டவராகிய கடவுள் ஆபிரகாமைத் தடுக்கின்றார். ஆனால், 'பின் ஆபிரகாம் தம் வேலைக்காரரிடம் திரும்பி வந்தார். அவர்கள் ஒன்று சேர்ந்து பெயர்சேபாவுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கேயே ஆபிரகாம் வாழ்ந்து வந்தார்' (காண். 22:19) என்று குறிப்பிடுகின்றார் ஆசிரியர். ஆபிரகாமும் பணியாளர்களும் திரும்பி வந்தார்கள் என்றால், ஈசாக்கு என்ன ஆனார்?

ஆண்டவராகிய கடவுள் ஆபிரகாமைச் சோதிக்கும் நோக்குடன் அவருடைய ஒரே மகனான ஈசாக்கைப் பலியிடுமாறு சொல்கின்றார். ஆனால், பலியிட முயன்ற ஆபிரகாமைத் தடுக்கின்றார். இந்த நிகழ்வின் பின்புலத்தில் இருப்பது, குழந்தைகள் பலியிடப்படல் நிகழ்வு. கானான் நாட்டில் வழக்கத்திலிருந்த தெய்வ வழிபாட்டில் குழந்தைகள் பலியிடப்படுதல் ஒரு முக்கிய நிகழ்வாக இருந்தது. மழை, வறட்சி, குடும்பத்தில் செழிப்பு, போரில் வெற்றி போன்ற காரணங்களுக்காக குழந்தைகள் பலியிடப்பட்டனர் என்பதை தொல்பொருள் ஆராய்ச்சிகள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. கானான் நாட்டினரின் இந்தப் பழக்கத்தால் இஸ்ரயேல் மக்களும் ஈர்க்கப்பட்டனர். மனாசே அரசரின் காலம் வரை இந்தப் பழக்கம் இஸ்ரயேலில் இருந்தது. ஆனால், கானானியரின் இந்த வழக்கம் இஸ்ரயேல் மக்களிடையே பரவ விரும்பாத ஆசிரியர், ஈசாக்கு பலியிடப்படும் நிகழ்வு வழியாக, 'ஆண்டவராகிய கடவுள் விரும்புவது கீழ்ப்படிதலைத் தவிர, பலியை அல்ல' என உணர்த்துகிறார். ஏனெனில், ஆண்டவராகிய கடவுள் குறுக்கிட்டுத் தடுத்துவிடுகின்றார். ஆனால், இதையொத்த இன்னொரு நிகழ்வில், நீதித்தலைவர் இப்தா தன் ஒரே மகளை, கன்னி மகளைப் பலியிடும் நிகழ்வில் கடவுளின் குறுக்கீடு எதுவும் இல்லை என்பதை நாம் மனத்தில் வைத்துக்கொள்வோம் (காண். நீத 11:39). 

ஈசாக்கு பலியிடப்படும் நிகழ்வில், ஈசாக்கு இறந்து உயிர்த்தெழுகின்றார். அதாவது, பலியிடப்படுமாறு விறகுகளில் அமர்த்தப்பட்டவர் ஆண்டவராகிய கடவுளின் குறுக்கீட்டால் விடுவிக்கப்படுகின்றார். அதற்கும் மேலாக, ஆபிரகாம் தன் கீழ்ப்படிதலின் வழியாக, நம்பிக்கையில் உயிர்த்தெழுகின்றார். ஆபிரகாமுக்கு இது ஓர் இறந்து உயிர்த்தெழுகின்ற அனுபவமாக இருந்தது. 

மேலும், இது ஆபிரகாமிற்கு வைக்கப்பட்ட சோதனை என்று சொல்வதை விட கடவுளுக்கு வைக்கப்பட்ட சோதனை என்றே நாம் சொல்லலாம். ஏனெனில் இங்கே சோதிக்கப்படுவது கடவுள் தான். எப்படி? ஆபிரகாம் ஒருவேளை தன் மகனைப் பலியிட்டிருந்தால், கடவுள் ஆபிரகாமிற்குத் தந்த 'உன் சந்ததி பெருகும்' என்ற வாக்குறுதி (தொநூ 12:1-13) பொய்யாகிவிடும். ஆகவே, கண்டிப்பாக கடவுள் தலையிட்டு இந்த பலியை நிறுத்துவார் என்பது வாசகருக்கும், கடவுளுக்கும் தெரியும். ஆனால், ஆபிரகாமிற்குத் தெரியாது. அங்கே தான் வருகிறது ஆபிரகாமின் நம்பிக்கை. 'கடவுள் குறுக்கிடுவார்' என ஆபிரகாம் நம்பவில்லை. மாறாக, இந்தப் பலியினால் ஈசாக்கு இறந்து போனாலும், கடவுளால் புதிய சந்ததியைத் தரமுடியும் என கடவுளின் வல்லமையை நம்பினார். ஆக, ஆபிரகாமின் நம்பிக்கை குருட்டுத்தனமான நம்பிக்கை என்று சொல்ல முடியாது. இங்கே ஆபிரகாமின் மனம் மட்டும் வேலை செய்யவில்லை. மாறாக, அவரின் மூளைதான் அதிகம் வேலை செய்கிறது. ஆக, இந்த சோதனையினால் கடவுளும், ஆபிரகாமும் இன்னும் நெருக்கமாகின்றனர்.

இவ்வாறாக, ஆபிரகாம் இறந்து உயிர்த்தெழுகின்றார்.

இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 8:31-34), கடவுளின் அன்பு பற்றி உரோமை நகரத் திருஅவைக்கு எழுதுகின்ற பவுல், 'கடவுள் நம் சார்பாக இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்?' என்ற கேள்வியைத் தொடுத்து, அவரே விடையும் பகர்கின்றார். அதாவது, தன் மகனை நமக்காக ஒப்புவித்த கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்தார். அதாவது, இயேசு இறந்து உயிர்த்தெழுந்ததன் வழியாக நம்மோடு உடனிருக்கின்றார். இறப்பிலிருந்து உயிர்த்தெழச் செய்த, அதாவது, இறப்பின்மேல் வெற்றி கொண்ட கடவுள் நம்மோடு இருக்கும்போது எதுவும் நமக்கு எதிராக இருக்க முடியாது என்பது பவுலின் கருத்து. 'கடவுள் நம் சார்பாக இருக்கிறார்' என்ற சொல்லாடல் ஒரு 'மிலிட்டரி' சொல்லாடல். போருக்கும் செல்லும் நேரத்தில் மட்டும்தான் யார் யாரோடு இருக்கிறார்? யார் சார்பாக இருக்கிறார்? என்ற கேள்விகள் எழும். அவ்வகையில் எதிரியோடு போராடும் நம் சார்பில் கடவுள் இருக்கிறார் என அழுத்துமாகச் சொல்கிறார் பவுல்.

இன்றைய இரண்டாம் வாசகம் வெறும் நான்கு கேள்விகள் தாம்: (அ) நமக்கு எதிராக இருப்பவர் யார்? (ஆ) நமக்கு அருளாதிருப்பாரோ? (இ) யார் குற்றம் சாட்ட இயலும்? (ஈ) யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? விடை தெரிந்தே கேட்கப்படும் கேள்விகள் இவை. இக்கேள்விகளின் பதில், 'இல்லை' என்ற வார்த்தை மட்டுமே. 

பவுல் தன்னுடைய மனமாற்றத்திற்கு முன்பாக, தானே ஆண்டவருக்கு எதிராகப் புறப்பட்டுச் செல்கின்றார். அவரைத் தடுத்தாட்கொள்கின்ற ஆண்டவர் இப்போது தன்னோடு இருப்பதாகப் பவுல் எழுதுகிறார். பவுலைப் பொருத்தவரையில் இதுவே அவருடைய இறந்து உயிர்த்தெழுதல். ஆண்டவருக்கு எதிராக இருந்த சவுல், ஆண்டவரைத் தன் சார்பாகக் கொண்டவராக உயிர்த்தெழுகின்றார்.

இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வை உருமாற்ற நிகழ்வு என நற்செய்தியாளர்கள் பதிவு செய்துவிட்டனர் என்பதும், உருமாற்ற நிகழ்வு அவருடைய உயிர்ப்பு நிகழ்வின் முன்னோட்டம் என்றும் சில விவிலிய ஆசிரியர்கள் விளக்கம் தருகின்றனர். இஸ்ரயேல் மக்களைப் பொருத்தவரையில் இறப்பைத் தழுவாதவர்கள் மூன்று பேர்: ஏனோக்கு, எலியா, மற்றும் மோசே. 'மோசே இறந்துவிட்டார்' என்று நாம் இச 34இல் வாசித்தாலும், அவரின் கல்லறை எங்கிருக்கிறது என்று தெரியாததால் அவர் இறக்கவில்லை என்பதே பலருடைய கருத்து. 

இன்றைய நற்செய்திப் பகுதி 'வெளிப்பாடு' இலக்கிய நடையைக் கொண்டிருக்கிறது.இயேசு தன் சீடர்களுக்குத் தன்னை வெளிப்படுத்துகின்றார். 'வெள்ளை வெளேரன ஆடை' (தானி 7:9, 12:3), மலையில் வெளிச்சம், குரல் (விப 24:15-18), கூடாரம் (விப 33:7-11) என்னும் முதல் ஏற்பாட்டு நிகழ்வுகள் இங்கே எதிரொலிக்கின்றன. 

இந்த நிகழ்வில் இயேசு இறந்து உயிர்த்தெழுவது முன்னோட்டமாகக் காட்டப்பட்டாலும், அவருடைய சீடர்களே இறந்து உயிர்க்கின்றனர். உருமாற்ற நிகழ்வின் முதல் பகுதியில், எலியாவும் மோசேயும் சீடர்களுக்குத் தோன்றுகின்றனர். ஆனால், இறுதியில், 'தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.' இதற்கிடையில், பேதுரு, இயேசுவுக்கும் மோசேக்கும் எலியாவுக்கும் மூன்று கூடாரங்கள் அமைக்க விரும்புகின்றார். மேகத்தினின்று குரல் ஒலித்த போது திருத்தூதர்கள் இயேசுவைத் தவிர வேறு எவரையும் காணவில்லை. 

திருத்தூதர்கள் இந்நிகழ்வில் இறந்து உயிர்க்கின்றனர். அதாவது, இயேசுவைப் பற்றிய தங்களுடைய பழைய புரிதலுக்கு இறந்து புதிய புரிதலுக்கு உயிர்க்கின்றனர். ஆனால், அதைப் பற்றிய தெளிவில்லாமல் இருக்கின்றனர். 

'இறந்து உயிர்த்தெழுதலை' இன்று நாம் எப்படிப் புரிந்துகொள்வது?

தவக்காலத்தின் முதல் வாரத்தில் நாம் தனிமையில் இருந்தோம். பாலைவனத்தில் தனித்திருந்த இயேசு, தான் சோதிக்கப்படும் நிகழ்வில் தன்னுடைய தனித்துவத்தைக் கண்டுகொள்கின்றார். தனித்திருக்கும் நாம் தன்னிறைவில், தனிமைத்தவத்தில் நாம் யார் என்று நம்மை அடையாளம் கண்டுகொள்கின்றோம். 

தவக்காலத்தின் இரண்டாம் வாரத்தில், நம் தனிமையை நாம் இறைமையோடு இணைத்துக் கொள்கின்றோம். முதல் வாசகத்தில், தன் பணியாளர்களையும் கழுதைகளையும் மலைக்குக் கீழே விட்டுச் செல்கின்ற ஆபிரகாம் இறையனுபவம் பெறுகின்றார். நற்செய்தி வாசகத்தில் தனக்கு மிகவும் நெருக்கமான மூன்று திருத்தூதர்களை மட்டும் அழைத்துச் செல்கின்ற இயேசு அவர்கள்முன் தோற்றம் மாறுகின்றார். திருத்தூதர்கள் அங்கே இறைமையைக் கண்டுகொண்டு, இறைவனின் குரலையும் கேட்கின்றனர்.

இறந்து உயிர்த்தெழுதல் நம் வாழ்வில் நடைபெற நாம் என்ன செய்ய வேண்டும்?

1. இறை இணைப்பு

ஆண்டவராகிய கடவுளின் குரலுக்குச் செவிகொடுத்ததன் வழியாக அவருடன் தன்னை இணைத்துக் கொள்கின்றார் ஆபிரகாம். உருமாற்ற நிகழ்வில் திருத்தூதர்கள் வானகத்திலிருந்து வந்த குரல் வழியாக இறைவனுடன் தங்களை இணைத்துக்கொள்கின்றனர். புனித பவுல் தமஸ்கு நகர் செல்லும் வழியில் ஆண்டவரோடு இணைக்கப்படுகின்றார். இறை இணைப்பு நம் வாழ்வில் ஏதாவது ஒரு வழியில் வரலாம். தாவீது அரசருக்கு அது நாத்தான் இறைவாக்கினர் வாயிலாக வருகிறது. புனித அகுஸ்தினாருக்கு அது ஒரு குழந்தையின் குரலாக வருகிறது. இறைவனோடு தான் இணைந்துள்ளதை அறியும் அந்த நொடி மாந்தர்களின் வாழ்வு உயிர்ப்பு பெறுகிறது. ஏனெனில், உயிர்ப்பு என்பதே இறைவனில் இணைவது தானே.

2. நொறுங்குதல்

தன் குழந்தை தன் கண்முன்னே இறக்கக் காண்கின்ற தாவீது நொறுங்கிப் போகின்றார். தன் மகன் தன் கண்முன் பலியிடப்படக் கிடத்தப்படுவதைக் காண்கின்ற ஆபிரகாம் உடைந்து போகின்றார். 'இந்த இயேசு யார்?' என்று புரிந்துகொள்ள இயலாமல் திருத்தூதர்கள் உடைந்துகிடக்கின்றனர். புனித அகுஸ்தினாரும் தன் உடல்சார் இன்பம், பேரார்வம், இறுமாப்பு ஆகியவற்றால் நொறுங்கிக் கிடக்கின்றார். நொறுங்குதல் நடைபெறும்போது நாம் நமக்குள்ளே இறக்கின்றோம். ஒரு கோதுமை மணி போல மடிகின்றோம். மீண்டும் புத்துயிர் பெற்று எழுகின்றோம்.

3. குன்றா எதிர்நோக்கு

'இனி வாழ்க்கை இனிமையாகச் செல்லும்' என்ற நம்பிக்கையில் உருவாகும் காத்திருத்தலே எதிர்நோக்கு. எதிர்நோக்குவதற்கு இடம் இல்லாதது போலத் தெரிந்தாலும் ஆபிரகாம் எதிர்நோக்கினார் என்கிறார் பவுல். என் வாழ்வு மாற்றம் பெறும் என்னும் எதிர்நோக்கு என்னை உந்தித் தள்ளிக்கொண்டே இருத்தல் வேண்டும்.

இறுதியாக,

உருமாற்றம் என்பது நம் வாழ்விலும் நடக்கின்ற ஒரு நிகழ்வு. மாற்றம் நல்லதை நோக்கியதாக இருந்தால் நாம் இறந்து உயிர்க்கின்றோம். கெட்டதை நோக்கியதாக இருந்தால் இறந்துபோகின்றோம். இறந்து உயிர்த்தெழுதல் நம் வாழ்வில் நடக்கும் தருணங்கள் பல. தவறான பழக்கவழக்கங்கள், தாழ்வு மனப்பான்மை போன்ற எதிர்மறை உணர்வுகள் போன்றவற்றலிருந்து நாம் இறந்து உயிர்த்தல் நலம். அப்போது நாமும் திருப்பாடல் ஆசிரியர் போல, 'உயிர் வாழ்வோர் நாட்டில் நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்' என்று சொல்ல முடியும்.

2 comments:

  1. அழகு...பேரழகு

    ஆழ்ந்த ஆன்மீகம்
    நிறைந்த சொல்வளம்
    செறிந்த விவிலிய ஞானம்
    இனிய,இன்பத்தமிழ் நடை

    GREAT Master🤝

    ReplyDelete
  2. “நீவீர் செய்ததை என்னென்போம்! உயிரோடிருந்த குழந்தைக்காக நீர் உண்ணாமல் அழுதீர்.ஆனால் குழந்தை இறந்ததும் எழுந்து உணவு உண்டீரே!” மன்னன் தாவீதை நோக்கி வேளாகப் பாய்ச்சிய வார்த்தைகளுடன் தொடங்கும் ஒரு மறையுரை. சீடர்களால் இறுதிவரை புரிந்து கொள்ள இயலாத இயேசுவின் உருமாற்றத்தோடு “இறந்து உயிர்த்தெழுதல்” எனும் வார்த்தை தரும் புரிதலை இன்றைய மறையுரையின் இறுதிவரை இன்னதென இயம்புகிறார் தந்தை.

    இன்றைய முதல் வாசகத்தில் தன் தந்தையின் பேச்சைக்கேட்ட தனயனாக ஈசாக்கும், தன் மகன் இறந்துபோனாலும் இறைவனால் புதிய சந்ததியைத்தரமுடியும் என நம்பிய அபிரகாமும் “:இறந்தும் வாழ்கிறார்கள்”.இரண்டாம் வாசகத்தில் “இயேசுவுக்கு எதிராகப் புறப்பட்டுச் சென்ற நேரம் தடுக்கப்படும் பவுலும், நற்செய்தியில் இயேசுவின் ‘ “உருமாற்றம்”’ நிகழ்வில் இயேசுவை மட்டுமே காண முடிந்த சீடர்களும் ‘இறந்து உயிர்த்தெழுகிறார்கள்’

    இந்த “ இறந்து உயிர்த்தெழுதல்” என் வாழ்விலும் நிகழ இறைவனின் குரலை நேரடியாக இல்லையெனிலும் அடுத்தவர் வாயிலாகத் தெரிந்து கொண்ட அபிரகாம் போல.... தாவீது போல....அகுஸ்தினார் போல நானும் தெரிந்து கொள்வதும், என் வாழ்வின் கையறு நேரங்களில் நான் ஒரு கோதுமை மணியாக மடிந்து பின் புத்துயிர் பெறுவதும், எதிர் நோக்கு வாழ்வில் ஏதுமே இல்லை என்று தோன்றும் நேரங்களிலும் “ என் வாழ்வு வளம்” பெறும் எனும் எதிர்நோக்கு என்னை உந்தித் தள்வதும், நாம் சந்திக்க வேண்டிய சம்பவங்கள்.

    நம் உயிர்த்தலும் ,இறத்தலும் நம் செய்கைகளை வைத்தே அமைகின்றன. தாழ்வு மனப்பான்மை போன்ற எதிர்மறை உணர்வுகளினின்று நான் “ இறந்து உயிர்க்கும்” நேரம் நானும் திருப்பாடலாசிரியருடன் இணைந்து “ “உயிர் வாழ்வோர் நாட்டில் நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்” எனச் சொல்ல முடியும் என அடித்துச் சொல்லும் தந்தைக்கு என் வாழ்த்துக்களும்! ஞாயிறு வணக்கங்களும்!!!
    !

    ReplyDelete