Sunday, February 28, 2021

எந்த அளவையால்

இன்றைய (1 மார்ச் 2021) நற்செய்தி (லூக் 6:36-38)

எந்த அளவையால்

'நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்' என்கிறார் இயேசு.

வாழ்க்கையின் எதார்த்தம் பெரும்பாலும் இப்படி இருப்பதில்லை. இல்லையா?

'ஒரு தந்தையும் இரு மகன்களும்' (லூக் 15) எடுத்துக்காட்டில், இளைய மகன் தன் தந்தையின் சொத்துகளை அழிக்கிறார். ஆனால், தந்தை அதே அளவையால் அவரை அளக்கவில்லை. வெற்று அளவையாய் வந்தவனின் அளவையை நிரப்பி அமுக்கிக் குலுக்கி சரிந்து விழுமாறு செய்கிறார்.

'விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணுக்கு' ஏற்ற மோசேயின் அளவை 'கல்லால் எறிந்து கொல்லுதல்' என்றாலும், இயேசு ஒரு மாற்று அளவையையே பயன்படுத்துகிறார்.

தன்னை மும்முறை மறுதலித்த பேதுருவை, அதே அளவையால் அளக்கவில்லை நம் ஆண்டவர்.

இன்றைய நற்செய்தியில் வரும் 'அளவை' என்ற வார்த்தையை 'இரக்கம்' என்ற வார்த்தையோடு இணைத்துப் பார்த்தால் மேற்காணும் குழப்பங்கள் நமக்கு எழாது.

கடவுளின் அளவையின் பெயர் இரக்கம். அந்த ஒரே அளவையால்தான் அவர் அனைவரையும் அளக்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் தானியேல் இறைவாக்கினர், 'நாங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம். எங்கள் தலைவரும் கடவுளுமாகிய உம்மிடத்தில் இரக்கமும் மன்னிப்பும் உண்டு' என்று ஆண்டவராகிய கடவுளிடம் சரணடைகின்றார்.

இதையே இயேசு, 'உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்' என்கிறார்.

இந்த இரக்கம் எப்படி வெளிப்பட வேண்டும்?

யாரையும் தீர்ப்பளிக்காமல் இருப்பதில் ...

மற்றவர்களைக் கண்டனம் செய்யாமல் இருப்பதில் ...

மன்னிப்பதில் ...

நேரத்தை, ஆற்றலைக் கொடுப்பதில் ...

திருப்பாடல் ஆசிரியரும் (திபா 79), 'ஆண்டவரே, எம் பாவங்களுக்கு ஏற்றபடி எம்மை நடத்தாதேயும்!' என்கிறார்.

அவர் நம்மை நம் பாவங்களுக்கு ஏற்ப நடத்தாதபோது, நாம் ஏன் ஒருவர் மற்றவரை அவர்களின் பாவங்களுக்கு ஏற்ப நடத்த வேண்டும்.

Saturday, February 27, 2021

இறந்து உயிர்த்தெழுதல்

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு

I. தொடக்க நூல் 22:1-2,9-13,15-18 II. உரோமையர் 8:31-34 III. மாற்கு 9:2-10

இறந்து உயிர்த்தெழுதல்

'நீவிர் செய்ததை என்னென்போம்! உயிரோடிருந்த குழந்தைக்காக நீர் உண்ணாமல் அழுதீர். ஆனால், குழந்தை இறந்ததும் எழுந்து உணவு கொண்டீரே!' என்று தாவீதின் பணியாளர்கள் அவரிடம் கூறினர். 

'குழந்தை உயிரோடிருந்தபோது ஒருவேளை ஆண்டவர் இரங்குவார், அவனும் பிழைப்பான் என்று நினைத்து, நான் உண்ணா நோன்பிருந்து அழுதேன். இப்போது அவன் இறந்துவிட்டான். இனி நான் ஏன் உண்ணா நோன்பு இருக்க வேண்டும்? என்னால் அவனைத் திருப்பிக் கொண்டுவர முடியுமா? நான்தான் அவனிடம் செல்ல முடியுமே ஒழிய, அவன் என்னிடம் திரும்பி வரமாட்டான்' என்று தாவீது கூறினார். (2 சாமு 12:21-23)

மேற்காணும் விவிலியப் பகுதி நமக்கு அறிமுகமான பகுதியே. தாவீது பத்சேபாவுடன் உறவு கொள்கின்றார். தன் தவற்றை மறைக்க மும்முறை முயற்சிகள் எடுத்துத் தோற்றுப் போக, பத்சேபாவின் கணவரான உரியாவைக் கொலை செய்கின்றார். தாவீதின் இச்செயல் ஆண்டவரின் கண்களில் தீயதெனப்பட அவர் நாத்தான் இறைவாக்கினரை அனுப்பி, அவரைக் கடிந்துகொள்கின்றார். இந்த உறவில் பிறக்கும் குழந்தை இறக்கும் என்று தாவீதுக்குச் சொல்லப்படுகின்றது. தாவீது அக்குழந்தைக்காக நோன்பிருந்தாலும் குழந்தை இறந்துவிடுகிறது. இதுவே மேற்காணும் விவிலியப் பகுதியின் பின்புலம்.

தன் ஆட்சிக்கு உட்பட்ட இடத்தில் உள்ள பெண்ணும் தனதே, அந்தப் பெண்ணின் கணவருடைய உயிரும் தனதே, போர்க்களமும் தனதே, படைத்தளபதியும் தனதே என எண்ணிக்கொண்டிருந்தவர் முதன்முறையாக, குழந்தையை உயிரோடு வைப்பது தனதன்று என்றும், அது தனக்கு அப்பாற்பட்டது என்றும், அனைத்தையும் செய்ய வல்லவர் ஆண்டவர் என்றும் கண்டுகொள்கின்றார். இதுவே தாவீது அடைந்த உருமாற்றம்.

விவிலிய ஆசிரியர் மிகவும் ஆச்சர்யம் தருகிறார். இறக்கும் இந்தப் பெயரில்லாக் குழந்தையைப் பற்றி இவ்வளவு வரிகள் எழுதிவிட்டு, சாலமோன் அரசரின் பிறப்பை ஒற்றை வாக்கியத்தில் எழுதி முடிக்கின்றார். ஏனெனில், இப்பகுதி குழந்தையைப் பற்றியது என்றாலும் இங்கே தாவீதைப் பற்றியே நாம் நிறைய அறிந்துகொள்கிறோம்.

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு நற்செய்தி வாசகம் இயேசுவின் உருமாற்ற நிகழ்வை நம்முன் கொண்டுவருகின்றது. மாற்கு நற்செய்தியாளர், உருமாற்ற நிகழ்வின் இறுதியில், சீடர்களால் இந்நிகழ்வைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று பதிவு செய்கின்றார். மாற்கு நற்செய்தியாளரைப் பொருத்தவரையில், இயேசுவுக்கு அருகில் இருப்பவர்கள் அவரைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள், அல்லது புரிந்துகொள்ள இயலாமல் இருப்பார்கள். நற்செய்தி வாசகத்தின் இறுதியில், 'இறந்து உயிர்த்தெழுதல்' என்றால் என்ன என்று சீடர்கள் ஒருவர் மற்றவரோடு பேசிக்கொண்டிருக்கின்றனர்.

இறந்து உயிர்த்தெழுதல் - இவ்விரண்டு வார்த்தைகளையே இன்றைய நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

இயேசுவின் வாழ்வில் இறந்து உயிர்த்தெழுதல் என்பது ஒரு மீட்புச் செயல். இச்செயலின் வழியாகவே அவர் நம் பாவங்களிலிருந்து நமக்கு விடுதலை தந்தார்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 22), ஈசாக்கு பலியிடப்படும் (!) நிகழ்வை நாம் வாசிக்கின்றோம். ஈசாக்கு பலியிடப்பட்டாரா என்பது மறைபொருளாகவே இருக்கிறது. ஏனெனில், 'பையன் மீது கை வைக்காதே!' என்று ஆண்டவராகிய கடவுள் ஆபிரகாமைத் தடுக்கின்றார். ஆனால், 'பின் ஆபிரகாம் தம் வேலைக்காரரிடம் திரும்பி வந்தார். அவர்கள் ஒன்று சேர்ந்து பெயர்சேபாவுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கேயே ஆபிரகாம் வாழ்ந்து வந்தார்' (காண். 22:19) என்று குறிப்பிடுகின்றார் ஆசிரியர். ஆபிரகாமும் பணியாளர்களும் திரும்பி வந்தார்கள் என்றால், ஈசாக்கு என்ன ஆனார்?

ஆண்டவராகிய கடவுள் ஆபிரகாமைச் சோதிக்கும் நோக்குடன் அவருடைய ஒரே மகனான ஈசாக்கைப் பலியிடுமாறு சொல்கின்றார். ஆனால், பலியிட முயன்ற ஆபிரகாமைத் தடுக்கின்றார். இந்த நிகழ்வின் பின்புலத்தில் இருப்பது, குழந்தைகள் பலியிடப்படல் நிகழ்வு. கானான் நாட்டில் வழக்கத்திலிருந்த தெய்வ வழிபாட்டில் குழந்தைகள் பலியிடப்படுதல் ஒரு முக்கிய நிகழ்வாக இருந்தது. மழை, வறட்சி, குடும்பத்தில் செழிப்பு, போரில் வெற்றி போன்ற காரணங்களுக்காக குழந்தைகள் பலியிடப்பட்டனர் என்பதை தொல்பொருள் ஆராய்ச்சிகள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. கானான் நாட்டினரின் இந்தப் பழக்கத்தால் இஸ்ரயேல் மக்களும் ஈர்க்கப்பட்டனர். மனாசே அரசரின் காலம் வரை இந்தப் பழக்கம் இஸ்ரயேலில் இருந்தது. ஆனால், கானானியரின் இந்த வழக்கம் இஸ்ரயேல் மக்களிடையே பரவ விரும்பாத ஆசிரியர், ஈசாக்கு பலியிடப்படும் நிகழ்வு வழியாக, 'ஆண்டவராகிய கடவுள் விரும்புவது கீழ்ப்படிதலைத் தவிர, பலியை அல்ல' என உணர்த்துகிறார். ஏனெனில், ஆண்டவராகிய கடவுள் குறுக்கிட்டுத் தடுத்துவிடுகின்றார். ஆனால், இதையொத்த இன்னொரு நிகழ்வில், நீதித்தலைவர் இப்தா தன் ஒரே மகளை, கன்னி மகளைப் பலியிடும் நிகழ்வில் கடவுளின் குறுக்கீடு எதுவும் இல்லை என்பதை நாம் மனத்தில் வைத்துக்கொள்வோம் (காண். நீத 11:39). 

ஈசாக்கு பலியிடப்படும் நிகழ்வில், ஈசாக்கு இறந்து உயிர்த்தெழுகின்றார். அதாவது, பலியிடப்படுமாறு விறகுகளில் அமர்த்தப்பட்டவர் ஆண்டவராகிய கடவுளின் குறுக்கீட்டால் விடுவிக்கப்படுகின்றார். அதற்கும் மேலாக, ஆபிரகாம் தன் கீழ்ப்படிதலின் வழியாக, நம்பிக்கையில் உயிர்த்தெழுகின்றார். ஆபிரகாமுக்கு இது ஓர் இறந்து உயிர்த்தெழுகின்ற அனுபவமாக இருந்தது. 

மேலும், இது ஆபிரகாமிற்கு வைக்கப்பட்ட சோதனை என்று சொல்வதை விட கடவுளுக்கு வைக்கப்பட்ட சோதனை என்றே நாம் சொல்லலாம். ஏனெனில் இங்கே சோதிக்கப்படுவது கடவுள் தான். எப்படி? ஆபிரகாம் ஒருவேளை தன் மகனைப் பலியிட்டிருந்தால், கடவுள் ஆபிரகாமிற்குத் தந்த 'உன் சந்ததி பெருகும்' என்ற வாக்குறுதி (தொநூ 12:1-13) பொய்யாகிவிடும். ஆகவே, கண்டிப்பாக கடவுள் தலையிட்டு இந்த பலியை நிறுத்துவார் என்பது வாசகருக்கும், கடவுளுக்கும் தெரியும். ஆனால், ஆபிரகாமிற்குத் தெரியாது. அங்கே தான் வருகிறது ஆபிரகாமின் நம்பிக்கை. 'கடவுள் குறுக்கிடுவார்' என ஆபிரகாம் நம்பவில்லை. மாறாக, இந்தப் பலியினால் ஈசாக்கு இறந்து போனாலும், கடவுளால் புதிய சந்ததியைத் தரமுடியும் என கடவுளின் வல்லமையை நம்பினார். ஆக, ஆபிரகாமின் நம்பிக்கை குருட்டுத்தனமான நம்பிக்கை என்று சொல்ல முடியாது. இங்கே ஆபிரகாமின் மனம் மட்டும் வேலை செய்யவில்லை. மாறாக, அவரின் மூளைதான் அதிகம் வேலை செய்கிறது. ஆக, இந்த சோதனையினால் கடவுளும், ஆபிரகாமும் இன்னும் நெருக்கமாகின்றனர்.

இவ்வாறாக, ஆபிரகாம் இறந்து உயிர்த்தெழுகின்றார்.

இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 8:31-34), கடவுளின் அன்பு பற்றி உரோமை நகரத் திருஅவைக்கு எழுதுகின்ற பவுல், 'கடவுள் நம் சார்பாக இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்?' என்ற கேள்வியைத் தொடுத்து, அவரே விடையும் பகர்கின்றார். அதாவது, தன் மகனை நமக்காக ஒப்புவித்த கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்தார். அதாவது, இயேசு இறந்து உயிர்த்தெழுந்ததன் வழியாக நம்மோடு உடனிருக்கின்றார். இறப்பிலிருந்து உயிர்த்தெழச் செய்த, அதாவது, இறப்பின்மேல் வெற்றி கொண்ட கடவுள் நம்மோடு இருக்கும்போது எதுவும் நமக்கு எதிராக இருக்க முடியாது என்பது பவுலின் கருத்து. 'கடவுள் நம் சார்பாக இருக்கிறார்' என்ற சொல்லாடல் ஒரு 'மிலிட்டரி' சொல்லாடல். போருக்கும் செல்லும் நேரத்தில் மட்டும்தான் யார் யாரோடு இருக்கிறார்? யார் சார்பாக இருக்கிறார்? என்ற கேள்விகள் எழும். அவ்வகையில் எதிரியோடு போராடும் நம் சார்பில் கடவுள் இருக்கிறார் என அழுத்துமாகச் சொல்கிறார் பவுல்.

இன்றைய இரண்டாம் வாசகம் வெறும் நான்கு கேள்விகள் தாம்: (அ) நமக்கு எதிராக இருப்பவர் யார்? (ஆ) நமக்கு அருளாதிருப்பாரோ? (இ) யார் குற்றம் சாட்ட இயலும்? (ஈ) யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? விடை தெரிந்தே கேட்கப்படும் கேள்விகள் இவை. இக்கேள்விகளின் பதில், 'இல்லை' என்ற வார்த்தை மட்டுமே. 

பவுல் தன்னுடைய மனமாற்றத்திற்கு முன்பாக, தானே ஆண்டவருக்கு எதிராகப் புறப்பட்டுச் செல்கின்றார். அவரைத் தடுத்தாட்கொள்கின்ற ஆண்டவர் இப்போது தன்னோடு இருப்பதாகப் பவுல் எழுதுகிறார். பவுலைப் பொருத்தவரையில் இதுவே அவருடைய இறந்து உயிர்த்தெழுதல். ஆண்டவருக்கு எதிராக இருந்த சவுல், ஆண்டவரைத் தன் சார்பாகக் கொண்டவராக உயிர்த்தெழுகின்றார்.

இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வை உருமாற்ற நிகழ்வு என நற்செய்தியாளர்கள் பதிவு செய்துவிட்டனர் என்பதும், உருமாற்ற நிகழ்வு அவருடைய உயிர்ப்பு நிகழ்வின் முன்னோட்டம் என்றும் சில விவிலிய ஆசிரியர்கள் விளக்கம் தருகின்றனர். இஸ்ரயேல் மக்களைப் பொருத்தவரையில் இறப்பைத் தழுவாதவர்கள் மூன்று பேர்: ஏனோக்கு, எலியா, மற்றும் மோசே. 'மோசே இறந்துவிட்டார்' என்று நாம் இச 34இல் வாசித்தாலும், அவரின் கல்லறை எங்கிருக்கிறது என்று தெரியாததால் அவர் இறக்கவில்லை என்பதே பலருடைய கருத்து. 

இன்றைய நற்செய்திப் பகுதி 'வெளிப்பாடு' இலக்கிய நடையைக் கொண்டிருக்கிறது.இயேசு தன் சீடர்களுக்குத் தன்னை வெளிப்படுத்துகின்றார். 'வெள்ளை வெளேரன ஆடை' (தானி 7:9, 12:3), மலையில் வெளிச்சம், குரல் (விப 24:15-18), கூடாரம் (விப 33:7-11) என்னும் முதல் ஏற்பாட்டு நிகழ்வுகள் இங்கே எதிரொலிக்கின்றன. 

இந்த நிகழ்வில் இயேசு இறந்து உயிர்த்தெழுவது முன்னோட்டமாகக் காட்டப்பட்டாலும், அவருடைய சீடர்களே இறந்து உயிர்க்கின்றனர். உருமாற்ற நிகழ்வின் முதல் பகுதியில், எலியாவும் மோசேயும் சீடர்களுக்குத் தோன்றுகின்றனர். ஆனால், இறுதியில், 'தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.' இதற்கிடையில், பேதுரு, இயேசுவுக்கும் மோசேக்கும் எலியாவுக்கும் மூன்று கூடாரங்கள் அமைக்க விரும்புகின்றார். மேகத்தினின்று குரல் ஒலித்த போது திருத்தூதர்கள் இயேசுவைத் தவிர வேறு எவரையும் காணவில்லை. 

திருத்தூதர்கள் இந்நிகழ்வில் இறந்து உயிர்க்கின்றனர். அதாவது, இயேசுவைப் பற்றிய தங்களுடைய பழைய புரிதலுக்கு இறந்து புதிய புரிதலுக்கு உயிர்க்கின்றனர். ஆனால், அதைப் பற்றிய தெளிவில்லாமல் இருக்கின்றனர். 

'இறந்து உயிர்த்தெழுதலை' இன்று நாம் எப்படிப் புரிந்துகொள்வது?

தவக்காலத்தின் முதல் வாரத்தில் நாம் தனிமையில் இருந்தோம். பாலைவனத்தில் தனித்திருந்த இயேசு, தான் சோதிக்கப்படும் நிகழ்வில் தன்னுடைய தனித்துவத்தைக் கண்டுகொள்கின்றார். தனித்திருக்கும் நாம் தன்னிறைவில், தனிமைத்தவத்தில் நாம் யார் என்று நம்மை அடையாளம் கண்டுகொள்கின்றோம். 

தவக்காலத்தின் இரண்டாம் வாரத்தில், நம் தனிமையை நாம் இறைமையோடு இணைத்துக் கொள்கின்றோம். முதல் வாசகத்தில், தன் பணியாளர்களையும் கழுதைகளையும் மலைக்குக் கீழே விட்டுச் செல்கின்ற ஆபிரகாம் இறையனுபவம் பெறுகின்றார். நற்செய்தி வாசகத்தில் தனக்கு மிகவும் நெருக்கமான மூன்று திருத்தூதர்களை மட்டும் அழைத்துச் செல்கின்ற இயேசு அவர்கள்முன் தோற்றம் மாறுகின்றார். திருத்தூதர்கள் அங்கே இறைமையைக் கண்டுகொண்டு, இறைவனின் குரலையும் கேட்கின்றனர்.

இறந்து உயிர்த்தெழுதல் நம் வாழ்வில் நடைபெற நாம் என்ன செய்ய வேண்டும்?

1. இறை இணைப்பு

ஆண்டவராகிய கடவுளின் குரலுக்குச் செவிகொடுத்ததன் வழியாக அவருடன் தன்னை இணைத்துக் கொள்கின்றார் ஆபிரகாம். உருமாற்ற நிகழ்வில் திருத்தூதர்கள் வானகத்திலிருந்து வந்த குரல் வழியாக இறைவனுடன் தங்களை இணைத்துக்கொள்கின்றனர். புனித பவுல் தமஸ்கு நகர் செல்லும் வழியில் ஆண்டவரோடு இணைக்கப்படுகின்றார். இறை இணைப்பு நம் வாழ்வில் ஏதாவது ஒரு வழியில் வரலாம். தாவீது அரசருக்கு அது நாத்தான் இறைவாக்கினர் வாயிலாக வருகிறது. புனித அகுஸ்தினாருக்கு அது ஒரு குழந்தையின் குரலாக வருகிறது. இறைவனோடு தான் இணைந்துள்ளதை அறியும் அந்த நொடி மாந்தர்களின் வாழ்வு உயிர்ப்பு பெறுகிறது. ஏனெனில், உயிர்ப்பு என்பதே இறைவனில் இணைவது தானே.

2. நொறுங்குதல்

தன் குழந்தை தன் கண்முன்னே இறக்கக் காண்கின்ற தாவீது நொறுங்கிப் போகின்றார். தன் மகன் தன் கண்முன் பலியிடப்படக் கிடத்தப்படுவதைக் காண்கின்ற ஆபிரகாம் உடைந்து போகின்றார். 'இந்த இயேசு யார்?' என்று புரிந்துகொள்ள இயலாமல் திருத்தூதர்கள் உடைந்துகிடக்கின்றனர். புனித அகுஸ்தினாரும் தன் உடல்சார் இன்பம், பேரார்வம், இறுமாப்பு ஆகியவற்றால் நொறுங்கிக் கிடக்கின்றார். நொறுங்குதல் நடைபெறும்போது நாம் நமக்குள்ளே இறக்கின்றோம். ஒரு கோதுமை மணி போல மடிகின்றோம். மீண்டும் புத்துயிர் பெற்று எழுகின்றோம்.

3. குன்றா எதிர்நோக்கு

'இனி வாழ்க்கை இனிமையாகச் செல்லும்' என்ற நம்பிக்கையில் உருவாகும் காத்திருத்தலே எதிர்நோக்கு. எதிர்நோக்குவதற்கு இடம் இல்லாதது போலத் தெரிந்தாலும் ஆபிரகாம் எதிர்நோக்கினார் என்கிறார் பவுல். என் வாழ்வு மாற்றம் பெறும் என்னும் எதிர்நோக்கு என்னை உந்தித் தள்ளிக்கொண்டே இருத்தல் வேண்டும்.

இறுதியாக,

உருமாற்றம் என்பது நம் வாழ்விலும் நடக்கின்ற ஒரு நிகழ்வு. மாற்றம் நல்லதை நோக்கியதாக இருந்தால் நாம் இறந்து உயிர்க்கின்றோம். கெட்டதை நோக்கியதாக இருந்தால் இறந்துபோகின்றோம். இறந்து உயிர்த்தெழுதல் நம் வாழ்வில் நடக்கும் தருணங்கள் பல. தவறான பழக்கவழக்கங்கள், தாழ்வு மனப்பான்மை போன்ற எதிர்மறை உணர்வுகள் போன்றவற்றலிருந்து நாம் இறந்து உயிர்த்தல் நலம். அப்போது நாமும் திருப்பாடல் ஆசிரியர் போல, 'உயிர் வாழ்வோர் நாட்டில் நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்' என்று சொல்ல முடியும்.

Friday, February 26, 2021

நிறைவுள்ளவராய்

இன்றைய (27 பிப்ரவரி 2021) நற்செய்தி (மத் 5:43-48)

நிறைவுள்ளவராய்

'நிறைவு' என்பது 'இன்னும் கொஞ்சம்' என்பதன் முழுமை.

அந்த முழுமையை நோக்கி வாழ நம்மை அழைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

'பல நேரங்களில் என்னால் இவ்வளவுதான் செய்ய முடியும் என நாம் சொல்கிறோம். அந்த அளவையாவது நாம் செய்ய வேண்டும்' என்கிறார் கேம்யு என்கிற மெய்யிலாளர்.

'அடுத்திருப்பவருக்கு அன்பு, பகைவருக்கு வெறுப்பு' என்று சொல்லப்பட்ட மோசே கட்டளையை நீட்டுகின்ற இயேசு, 'பகைவருக்கும் அன்பு, துன்புறுத்துவோருக்கும் இறைவேண்டல்' என மொழிகின்றார். மேலும், இப்படிச் செய்வதால் சீடர்கள் விண்ணகத் தந்தையின் பிள்ளைகள் ஆவதாக வாக்களிக்கின்றார். ஏனெனில், ஆண்டவராகிய கடவுளே இப்படித்தான் அன்பு செய்கிறார்.

'எல்லாருக்கும் பெய்யும் மழையாக, எல்லார்மேலும் உதிக்கும் கதிரவனாக' இருக்கின்றார் கடவுள்.

இந்த நிலை நமக்கு எப்போது வரும்?

நம் விருப்பு-வெறுப்புகளை நாம் கடக்கும்போது.

நம் வாழ்க்கையின் நாள்கள் குறையக் குறைய இயல்பாகவே, நம் நட்பு வட்டம் சுருங்குகிறது, நாம் பொறுமையில் வளர்கிறோம், அடுத்தவர்கள்மேல் கோபம் வருவதற்குப் பதிலாக இரக்கம் வருகிறது. இப்படி நிறைய மாற்றங்கள் நம்முள் நடக்கின்றன. நாம் கட்டி வைத்த ஒவ்வொன்றையும் விட்டுச் செல்ல மனம் பக்குவப்படத் தொடங்குகிறது. எல்லாரும் ஒரே மாதிரி தெரிய ஆரம்பிக்கிறார்கள். வெள்ளிக் கிழமை இரவில் வெளியில் சென்று ஊர் சுற்றுவதை விட, கட்டிலில் படுத்துக்கொள்ள மனம் விரும்புகிறது. யாராவது சண்டையிட முன்வந்தால், 'சரி அப்படியே இருக்கட்டும்!' என அவர்களின் வாதத்தை ஏற்றுக்கொள்ளத் தூண்டுகிறது. குழந்தைகளைப் பார்த்தால் இயல்பாகவே உதடுகள் புன்னகைக்கின்றன. வயது முதிர்ந்தவர்களைக் கண்டால் கரம் உதவிக்கு இயல்பாக நீள்கிறது. சாலையில் ஆம்புலன்ஸ் கடந்து சென்றால் உதடுகள் செபத்தை முணுமுணுக்கின்றன. இப்படி, நாம் வாழ்வில் இன்னும் செய்ய வேண்டியவை, இன்னும் கொஞ்சம் நடக்க வேண்டியவை நிறையவே இருக்கின்றன. காலம் குறையக் குறைய நிறைவு கூடுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களுக்கு அறிவுறுத்துகின்ற மோசே, மக்கள் ஆண்டவராகிய கடவுளுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என வலியுறுத்துகின்றார். அதாவது, தாங்கள் கொடுத்த வாக்கை, கொஞ்சம் செயலாக்க வேண்டும். 

'இன்னும் கொஞ்சம் நடந்தால்தான் என்ன!' என நம்மை அழைக்கின்றன இன்றைய வாசகங்கள்.

இயேசுவின் பாடுகளோடு இன்னும் கொஞ்சம் நாம் நடந்தால், அவரின் உயிர்ப்பில் பங்கேற்க முடியும். அந்த உயிர்ப்பே நம் வாழ்வின் நிறைவு.

Thursday, February 25, 2021

விரைவாக உடன்பாடு

இன்றைய (26 பிப்ரவரி 2021) நற்செய்தி (மத் 5:20-26)

விரைவாக உடன்பாடு

இன்றைய நற்செய்திப் பகுதியில், 'கொலை செய்யாதே!' என்னும் கட்டளை பற்றிப் பேசுகின்ற இயேசு, கொலையின் தொடக்கமான கோபத்தைக் கட்டுக்குள் வைக்கச் சொல்கின்றார்.

மேலும், பிறரன்பில் நாம் எதிர்கொள்கின்ற மனத்தாங்கல், பகைமை உணர்வு பற்றியும் அறிவுறுத்துகின்றார்.

'எதிரியுடன் உடன்பாடு செய்துகொள்வது' பற்றிப் பேசுகின்ற இயேசு விரைவாக அதைச் செய்யுமாறு பணிக்கின்றார். இயேசுவின் சமகாலத்தில் நிலவிய நீதித்துறையின் போக்கு எப்படி இருந்தது என்பதை இங்கு நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் எசேக்கியேல் இறைவாக்கினர் வழியாகக் கடவுள் உடனடி மனமாற்றத்துக்கு மக்களை அழைக்கின்றார்.

Wednesday, February 24, 2021

கேளுங்கள்

இன்றைய (25 பிப்ரவரி 2021) நற்செய்தி (மத் 7:7-12)

கேளுங்கள்

இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் மலைப்பொழிவுப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. 'கேளுங்கள், தேடுங்கள், மற்றும் தட்டுங்கள்' என்னும் மூன்று விளித்தொடர்களாகத் தொடங்குகிறது நற்செய்திப் பகுதி.

எதற்காகக் கேட்க வேண்டும்?

(அ) கேட்பதால்தான் ஒருவர் பெற முடியும்.

(ஆ) கேட்கும் அனைவரும் பெற்றுக்கொள்கின்றனர்.

(இ) நம் தந்தை நன்மையே உருவானவர். அவர் தம்மிடம் கேட்பவருக்கு மிகுதியான நன்மைகள் அளிக்கிறார்.

'கேளுங்கள்' என்னும் இயேசுவின் போதனை அவருடைய முந்தைய போதனைக்கு முரணானதாக இருப்பது போலத் தெரிகிறது. இறைவேண்டல் பற்றிய போதனையில், 'நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் வானகத் தந்தை உங்கள் தேவையை அறிந்திருக்கிறார்' என்று சொல்லும் இயேசு, இங்கே, 'கேளுங்கள்' என்றும் 'கேட்பவரே பெறுகிறார்' என்றும் சொல்வது நமக்குக் குழப்பமாக இருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் இதற்கான விடை இருக்கிறது.

தன் நாட்டு மக்களுக்காகத் தன் அரசரிடம் பேசுவதற்குத் தயாராகின்றார் எஸ்தர் அரசி. அவர் அரசரிடம் செல்வதற்கு முன்பாகச் செய்யும் இறைவேண்டலே இன்றைய முதல் வாசகம். 

இந்த இறைவேண்டலில் எஸ்தர் இறைவனிடம் ஒரு பக்கம் வேண்டினாலும் இன்னொரு பக்கம், தன் வலுவின்மை மற்றும் வல்லமை அனைத்தையும் அவர் முன் திறந்து காட்டுகின்றார்.

ஆக, அவரைப் பொருத்தவரையில் இறைவேண்டல் என்பது அவரையே அவருக்கு அடையாளம் காட்டும் ஒரு கண்ணாடியாக இருக்கிறது.

இறைவேண்டல் செய்யும் நேரத்தில், நாம் நம்மையே இறைவன் முன் நிறுத்தும்போது, அவர் அப்படியே நம்மைத் திருப்பி நம் முன் நிறுத்துகின்றார். 

அவரின் கண்கள் வழியாக நம்மைக் காணுதலே இறைவேண்டல்.

Tuesday, February 23, 2021

யோனாவின் அடையாளம்

இன்றைய (24 பிப்ரவரி 2021) நற்செய்தி (லூக் 11:29-32)

யோனாவின் அடையாளம்

'யோனா' என்றால் எபிரேயத்தில் 'புறா' என்று பொருள். சிறிய இறைவாக்கினர்களுள் ஒருவராக யோனா கருதப்பட்டாலும், இவருடைய நூல் மித்ராஷ் வகை வரலாற்று நூல் என்றும் அறியப்படுகின்றது.

'இரண்டாம் முறை யோனாவுக்கு' இறைவாக்கு அருளப்படுவதையும், யோனாவின் நற்செய்தி அறிவிப்பு நினிவே நகரில் ஏற்படுத்திய மாற்றத்தையும் இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது.

தன்னிடம் அடையாளம் கேட்பவர்களிடம் யோனாவின் அடையாளத்தைத் தரும் இயேசு, 'யோனாவை விடப் பெரியவர் இங்கிருப்பவர்!' என்கிறார்.

இதை எப்படி நாம் புரிந்துகொள்வது?

முதலில், அடையாளம். 

நினிவே நகரின் வாழ்க்கையை, 'யோனாவுக்கு முன்,' 'யோனாவுக்குப் பின்' என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். யோனாவின் அறிவிப்பினால் நினிவே நகரம் அழிவிலிருந்து தப்பிக்கின்றது.

ஆனால், யோனா இரண்டாம் முறையே தன் அழைப்பை ஏற்கின்றார். இயேசுவோ முதல் முறையிலேயே ஏற்றுக்கொள்கின்றார்.

யோனாவின் அறிவித்தல் ஏனோ தானோ என்று இருக்கின்றது. மூன்று நாள் கடக்கக் கூடிய தூரத்தை ஒரு நாளில் ஓட்டமும் நடையுமாய், வேண்டா வெறுப்பாய்க் கடக்கின்றார் யோனா.

மேலும், 'நினிவே நகர் அழிக்கப்படும்' என்னும் எதிர்மறையான செய்தியை யோனா தருகிறார். இயேசுவின் செய்தியோ அனைவருக்கும் வாழ்வு தருவதாக அமைகின்றது.

இந்த மூன்று நிலைகளில் யோனாவை விடப் பெரியவராக இயேசு இருக்கின்றார்.

நாம் இன்று கேட்க வேண்டிய கேள்விகள் இரண்டு:

ஒன்று, என் நம்பிக்கை இன்னும் அடையாளங்களை மையப்படுத்தியதாக இருக்கிறதா?

இரண்டு, யோனாவிலும் பெரிய இறைவாக்கினரை, சாலமோனிலும் பெரிய ஞானியை - அதாவது, இயேசுவை - இன்று நான் எப்படிப் புரிந்துகொள்கிறேன்?

Monday, February 22, 2021

மிகுதியான சொற்களை

இன்றைய (23 பிப்ரவரி 2021) நற்செய்தி (மத் 6:7-15)

மிகுதியான சொற்களை

இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகங்கள் 'சொற்களை' மையமாக வைத்துச் சுழல்கின்றன. முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள், இறைவாக்கினர் எசாயா வழியாக, தன் வார்த்தையின் இயல்பைப் பற்றி எடுத்துரைக்கின்றார்.

இறைவனின் வார்த்தைகள் தாக்கத்தை ஏற்படுத்தாமல் அவரிடம் திரும்பிச் செல்வதில்லை.

நற்செய்தி வாசகத்தில், இறைவேண்டல் பற்றித் தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்ற இயேசு, மிகுதியான வார்த்தைகளைப் பேசுவதால் செபம் கேட்கப்படும் என நினைக்க வேண்டாம் என மொழிகின்றார். 

மேலும், வானகத் தந்தை அனைத்தையும் அறிந்தவராக இருப்பதால் வார்த்தையும் தேவையற்றவை என்கிறார் இயேசு.

தாக்கத்தை ஏற்படுத்தாத வார்த்தைகள் ஏற்புடையவை இல்லை - இறைவனுக்கு.

நேர்முகமான வார்த்தைகள் பேசுதல் நலம். ஏனெனில், நம் சொற்களே நம் செயல்களாகின்றன.

Sunday, February 21, 2021

பேதுருவின் தலைமைப்பீடம்

இன்றைய (22 பிப்ரவரி 2021) திருநாள்

பேதுருவின் தலைமைப்பீடம்

இன்று நம் தாய்த்திருஅவை, 'திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடம்' திருவிழாவைக் கொண்டாடி மகிழ்கிறது. 

நம் கத்தோலிக்க நம்பிக்கை அறிக்கையின் தலைமகனாக இருக்கின்ற பேதுரு இன்றைய கதாநாயகர். 'இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்' என்று ஆண்டவராகிய இயேசு பேதுருவிடம் சொல்கின்றார்.

பேதுரு தன் வாழ்வில் தொடக்கமுதல் இறுதிவரை இயேசுவுக்கு பிரமாணிக்கமாக இருந்தவர். இயேசுவை மறுதலித்தபோதும் உடனடியாக இயேசுவை நினைத்துக் கண்ணீர் விடுகின்றார்.

'கண்ணீர் விடும் பாறை' - இதுதான் பேதுருவைப் பற்றிய வரையறை என்றுகூடச் சொல்லலாம்.

நம் திருஅவையும் எளியவரோடு இணைந்து கண்ணீர் விடுகின்றது. பாறை போல உறுதியாக நிற்கின்றது.

தன்னை ஒரு மூப்பர் ('ப்ரஸ்பிடர்') என்று இன்றைய முதல் வாசகத்தில் அறிமுகம் செய்யும் பேதுரு, தன் சக மூப்பர்களிடம், 'ஊதியத்திற்காகச் செய்யாமல் விருப்போடு பணி செய்யுங்கள்' என அழைக்கிறார்.

பேதுருவின் தலைமைப்பீடத்தில் அமர்கின்ற நம் திருத்தந்தை தொடங்கி, ஒரு பங்கின் அருள்பணிப் பேரவைத் தலைமை வரை, 'பணி' எங்கும் பரந்து கிடக்கின்றது. ஆனால், பணிக்கான அல்லது பணி பற்றிய மனநிலைதான் சில நேரங்களில் பிறழ்வுபட்டு இருக்கிறது.

தான் செய்யும் அனைத்தையும் விருப்பத்தோடு செய்தார் பேதுரு.

இதுவே இன்று நாம் பேதுருவிடம் கற்கின்ற பாடம்.

மற்ற சீடர்களைவிட நெருக்கமாக இயேசுவை அறிந்தவர் பேதுரு. அந்த நெருக்கத்தில் அவர் இயேசுவின்மேல் விருப்பம் கொள்கிறார்.

இன்றைய பதிலுரைப்பாடலில் (திப 23), ஆண்டவரைத் தன் ஆயர் என அறிக்கையிடுகின்றார் திருப்பாடல் ஆசிரியர். இன்றைய நாளில் அனைத்துப் பணிநிலைகளில் இருப்பவர்களுக்கும், குறிப்பாக நம் திருத்தந்தை அவர்களுக்கும் இறைவேண்டல் செய்வோம்.

நம் கடவுளுக்கும், நம் திருஅவைக்கும், நம் அழைப்புக்கும் நாம் பிரமாணிக்கமாக இருப்பதே இன்றைய வாக்குறுதியாக இருக்கட்டும்.

Saturday, February 20, 2021

இரண்டாம் தொடக்கம்

தவக்காலம் முதல் ஞாயிறு

I. தொடக்கநூல் 9:8-15 II. 1 பேதுரு 3:18-22 III. மாற்கு 1:12-15

இரண்டாம் தொடக்கம்

ஒலிம்பிக் புகழ் ஓட்டப் பந்தய வீரர் உசேன் போல்ட் பற்றி ஒரு நிகழ்வு குறிப்பிடப்படுவதுண்டு. ஓட்டப் பந்தயத்தின் நம்பிக்கை நாயகராகக் களம் இறங்குகிறார் உசேன் போல்ட். ஒலிம்பிக்கின் இறுதிப் போட்டி. தங்கமா, வெள்ளியா என்பதைத் தீர்மானிக்கிற போட்டி. அந்தப் போட்டிக்கு ஓடத் தயாராக இருந்த வீரர்களில் ஒருவராக உசேன் போல்ட் இருக்கிறார். ஓடுவதற்குக் கொடுக்கப்படும் துப்பாக்கி ஒலி சமிக்ஞை கேட்பதற்கு முன் தன் காலை உயர்த்தியதால் அவர் அந்தப் போட்டியிலிருந்து நீக்கப்படுகின்றார். அரங்கம் அமைதி காக்கின்றது. ஒரு மாவீரனுக்கு நேர்ந்த இந்த நிலை குறித்து ஸ்தம்பித்துப் போகிறது. ஆனால் அவர் சிரித்த முகத்துடன் வெளியேறுகிறார். அடுத்து ஐந்து ஆண்டுகள் அவர் காத்திருக்க வேண்டிய சூழல் வருகிறது. மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார். 100 மீட்டர் தூரத்தை வெறும் 9 நொடிகளில் ஓடிக் கடக்கின்றார். அது அவருடைய வாழ்வின் இரண்டாம் தொடக்கமாக அமைகிறது.

தங்கள் வாழ்வில் முதல் தொடக்கத்தை இழந்துவிட்டு, இரண்டாம் தொடக்கத்தை இறுகப் பிடித்துக்கொண்ட மனிதர்கள் ஏராளம்.

தவக்காலம் நம் வாழ்வில் இரண்டாம் தொடக்கத்திற்கான வழியை ஏற்படுத்தித் தருகிறது. முதல் தொடக்கம் சரியாக இல்லையென்றால், நம் வாழ்க்கைப் பாதையில் தடைகள் வருகிறதென்றால், மீண்டும் ஒருமுறை அனைத்தையும் 'ரீஸெட்' செய்து புதியதாகத் தருகிறது வாழ்க்கை.

இன்றைய முதல் வாசகத்தில், ஒட்டுமொத்த படைப்பே தன் இரண்டாம் தொடக்கத்தைக் காண்கிறது. அனைத்தையும் நல்லதெனக் கண்ட கடவுள், மனிதர்களைப் படைத்தவுடன், மிகவும் நல்லதெனக் கண்ட கடவுள், மனித உள்ளத்திலிருந்த தீய சிந்தனையின் பொருட்டு ஒட்டுமொத்த படைப்பையும் அழிக்க விழைகின்றார். நோவாவும் அவருடன் இணைந்து சில விலங்குகளும் பறவைகளும் அவரால் காப்பாற்றப்படுகின்றன. 

முதல் வாசகம், பெருவெள்ளத்தைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வை நம் கண்முன் கொண்டு வருகிறது.

நற்செய்தி வாசகத்தில், இயேசு தூய ஆவியால் பாலை நிலத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார். அங்கே இயேசு சோதிக்கப்படும் நிகழ்வை மாற்கு நற்செய்தியாளர் மிகவும் சுருக்கமாகப் பதிவிடுகின்றார். ஆனால், முக்கியமான சில தரவுகளைத் தருகின்றார்.

இன்றைய முதல் மற்றும் நற்செய்தி வாசகங்களை இணைத்துப் பார்ப்போம்.

முதல் வாசகத்தில் நோவா தனியாக நிற்கின்றார். நற்செய்தி வாசகத்தில் இயேசு தனியாக நிற்கின்றார்.

அங்கேயும் அவரைச் சுற்றிக் காட்டு விலங்குகள் இருக்கின்றன. இங்கேயும் இயேசுவைச் சுற்றிக் காட்டு விலங்குகள் இருக்கின்றன.

அங்கே சுற்றிலும் தண்ணீர். இங்கே சுற்றிலும் பாலை.

அங்கே நோவாவுடன் உடன்படிக்கை செய்கிறார் ஆண்டவராகிய கடவுள். இங்கே இயேசுவுடன் உடனிருக்கிறார் ஆண்டவரின் தூதர்.

அங்கே படைப்பு இரண்டாம் தொடக்கம் பெறுகிறது. இங்கே இயேசு சோதிக்கப்படும் நிகழ்வு அவருடைய பணி வாழ்வின் இரண்டாம் தொடக்கமாக இருக்கிறது.

இரண்டாம் வாசகத்தில், பேதுரு, துன்புறும் தன் திருச்சபைக்கு ஆறுதல் சொல்லி, அவர்களை நம்பிக்கை வாழ்வு என்னும் இரண்டாம் தொடக்கத்திற்கு அழைத்துச் செல்கின்றார்.

நம் வாழ்வின் இரண்டாம் தொடக்கத்தை இன்று நாம் கண்டுகொள்ள என்ன செய்ய வேண்டும்?

இறைவன் நம்மை நினைவுகூர்கிறார் என்ற எண்ணத்தில் உறுதியாக இருப்பது.

சோதனைகள் நம் வாழ்வின் எதார்த்தங்கள் என ஏற்றுக்கொள்வது.

Friday, February 19, 2021

பாவிகளையே

இன்றைய (20 பிப்ரவரி 2021) நற்செய்தி (லூக் 5:27-32)

பாவிகளையே

இயேசு லேவியை அழைக்கும் நிகழ்வே இன்றைய நற்செய்தி வாசகம்.

தன் இலக்கு என்ன என்பதை இயேசு தெளிவாக அறிந்துள்ளார். அந்த இலக்கோடு எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமலும் இருக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில், சமரசம் செய்துகொள்ளாத வாழ்வே மேன்மையான வாழ்வு என மொழிகிறார் இறைவாக்கினர் எசாயா.

நம் வாழ்விலும் சமரசம் செய்துகொள்ளாத இலக்குகள் இருத்தல் நலம்.

ஏன் நோன்பு இருப்பதில்லை?

இன்றைய (20 பிப்ரவரி 2021) நற்செய்தி (மத் 9:14-15)

ஏன் நோன்பு இருப்பதில்லை?

இன்றைய இரண்டு வாசகங்களிலும் மையமாக இருக்கின்ற வார்த்தை 'நோன்பு.'

நோன்பு என்பது முதலில், நாமே விரும்பி ஏற்கும் பசி.

சில நேரங்களில் பசி நம்மேல் புகுத்தப்படுகின்றது. நாம் ஏழ்மையில் இருக்கும்போது, அல்லது நீண்ட பயணம் செய்யும் போது, உணவகம் இல்லாத ஊருக்குச் செல்லும்போது. அல்லது இறந்தவர் வீட்டிற்குச் செல்லும்போது.

சில நேரங்களில் பசி நமக்குப் பரிந்துரைக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, மருத்துவர் பரிந்துரைப்பது. அல்லது இரத்தப் பரிசோதனைக்கு முன்பாக வலியுறுத்தப்படும் பசி.

'பசி' என்ற ஓர் உணர்வில் நாம் ஒருவர் மற்றவருடன் கைகோர்க்கிறோம். பசி வந்துவிட்டால் மற்ற அடையாளங்கள் நம் கண்களை விட்டு மறைந்துவிடுகின்றன. 

உயிரைத் தக்கவைத்துக்கொள்வதற்காக உடல் கொடுக்கும் எச்சரிக்கை உணர்வே பசி. 

நாம் நோன்பு இருக்கும்போது நம் உயிரும் உடலும் வாழ இன்னொன்று தேவை என்பதை நாம் உணர்ந்து, அந்தத் தேவையை நிறைவு செய்ய நாம் கடவுள் அல்லது ஒருவர் மற்றவர் மேல் சாய்கின்றோம். ஆக, நோன்பில் நாம் சார்பு நிலையை, கையறுநிலையை, நொறுங்குநிலையை உணர்கிறோம்.

ஆனால், காலப்போக்கில் இது ஒரு சமயச் சடங்காக மாறிவிட்டது. 

நோன்பு இருப்பதற்கான காரணம் மறைந்து, நோன்பு என்னும் காரியம் மட்டும் நிலைத்துவிட்டது.

இப்படிப்பட்ட எந்திரத்தனமான சமயப் போக்கைக் கடிந்துகொள்கின்றார் இயேசு. 'மணமகன் தங்களோடு இருக்கும் வரை நோன்புக்கு இடமில்லை.' அல்லது நோன்பும் மணமகனும் இணைந்து செல்ல இயலாது. 

பசியைப் போக்க வந்த அட்சய பாத்திரம் கையில் இருக்கும்போது பசி எதற்கு? - இதுதான் இயேசுவின் மறைமுகமான கேள்வியாக இருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில், நோன்பு என்ற சமயச் சடங்கைக் கடைப்பிடித்துவிட்டு, சமூகம் மற்றும் தனிநபர் வாழ்வில் ஒடுக்குமுறையில் ஈடுபட்ட தன் மக்களை எசாயா இறைவாக்கினர் வழியாகக் கடிந்துகொள்கின்ற ஆண்டவராகிய கடவுள் உண்மையான நோன்பு என்றால் என்ன என்பதை எடுத்துரைக்கின்றார்.

மேலும், பகிர்வதும், வறுமை போக்குவதும், சோர்வு நீக்குவதும், உடுத்துவதுமே நோன்பு என முன்மொழியப்படுகிறது.

இத்தகைய நோன்பு இருப்போரின் ஒளி விடியல் போல எழும்!

இன்று தவக்காலத்தின் முதல் வெள்ளி. இன்று நாம் இருக்கும் நோன்பு இறைவன்மேல் நாம் கொண்டுள்ள சார்பு நிலையை உணர்த்துவதோடு, ஒருவர் மற்றவர்மேல் கொள்ள வேண்டிய பொறுப்புணர்வைத் தூண்டி எழுப்பினால் நலம்!

Wednesday, February 17, 2021

இழத்தலும் காத்தலும்

இன்றைய (18 பிப்ரவரி 2021) நற்செய்தி (லூக் 9:22-25)

இழத்தலும் காத்தலும்

இன்றைய முதல் வாசகத்தில் (காண். இச 30:15-20), மோசே வழியாக ஆண்டவர், மனிதரின் விருப்புரிமை பற்றிப் பேசுகின்றார். மனிதர் முன்பாக வாழ்வும் நன்மையும் சாவும் தீமையும் வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கின்ற மோசே, வாழ்வைத் தேர்ந்துகொள்ளுமாறு அழைக்கிறார்.

வாழ்வைத் தேர்ந்துகொள்தல் என்றால் என்ன என்பதை விளக்கும் விதமாக அமைந்துள்ளது இன்றைய நற்செய்தி வாசகம்.

தன் பாடுகளையும் இறப்பையும் முன்னுரைக்கின்ற இயேசு, வாழ்வு மூன்று நிலைகளில் உள்ளது எனத் தன் சீடர்களுக்கு எடுத்துரைக்கின்றார்:

(அ) தன்னலம் துறத்தலில்

(ஆ) தன் சிலுவை ஏற்றலில்

(இ) உயிரை இழப்பதில்

இழத்தலின் வழியாகவே காத்தல் நடக்கிறது என்பது இயேசுவின் பாடமாக இருக்கிறது.

நாம் எதைத் தெரிவு செய்தாலும் அதற்கான விளைவை நாம் அனுபவித்தே ஆக வேண்டும்.

Tuesday, February 16, 2021

திருநீற்றுப் புதன்

இன்றைய (17 பிப்ரவரி 2021) திருநாள்

திருநீற்றுப் புதன்

இந்த ஆண்டு தவக்காலத்திற்காக நம் மதிப்பிற்குரிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியே இன்றைய மறையுரைச் சிந்தனையின் பின்புலமும் ஊற்றும்.

'இதோ! நாம் எருசலேம் நோக்கிச் செல்கிறோம்!' (மத் 20:18)

தவக்காலம் - நம் நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் அன்பையும் புதுப்பிக்கும் காலம்

எருசலேம் என்பது இயேசுவுக்கும் அவருடைய சீடர்களுக்கும் மிக முக்கியமான நகரம். இயேசுவின் இறப்பும் உயிர்ப்பும் அங்கே நிகழ்கின்றன. அந்நிகழ்வுகளைத் தொடர்ந்து சீடர்கள் அவரின் இறையாட்சிப் பணியை ஏற்கின்றனர்.

பாஸ்காக் கொண்டாட்டத்திற்கான தயாரிப்பே தவக்காலம்.

மனமாற்றத்தின் காலமான இக்காலத்தில் நம் நம்பிக்கையைப் புதுப்பிப்போம், எதிர்நோக்கு என்னும் வாழ்வுதரும் தண்ணீரிலிருந்து பருகுவோம், திறந்த இதயத்தோடு கடவுளின் அன்பை ஏற்போம்.

நோன்பு, இறைவேண்டல், மற்றும் பிறரன்புச் செயல்கள் (காண். மத் 6:1-18) - இன்றைய நற்செய்தி வாசகம் - நம் மனமாற்றத்தை தூண்டுவனவாகவும் நம் மனமாற்றத்தின் வெளிப்பாடுகளாகவும் இருக்கின்றன. நோன்பின் வழியாக ஏழ்மை மற்றும் தன்மறுப்பின் பாதையிலும், பிறரன்புச் செயல்கள் வழியாக எளியவர்கள்மேல் கொள்ளும் அக்கறை மற்றும் கனிவன்பின் பாதையிலும், இறைவேண்டல் வழியாக தந்தையோடு குழந்தையின் உள்ளம் கொண்டு உரையாடும் பாதையிலும் நாம் வழிநடக்கிறோம்.

1. நம்பிக்கை: உண்மையை ஏற்கவும் அதைக் கடவுள் முன்னும் நம் சகோதரர் சகோதரிகள் முன்னும் அறிக்கையிடவும் அழைக்கிறது

- இறைவார்த்தைக்குத் திறந்த உள்ளத்துடன் செவிமடுப்பது
- நோன்பின் வழியாக நாம் நம் பசி அறிகிறோம். அந்தப் பசியில் நம் உண்மையான இயல்பை அறிகிறோம். அடையாளங்கள் அங்கே மறந்துபோகின்றன. நாம் ஒருவர் மற்றவருடன் அந்தக் கையறுநிலையில் பங்கேற்கிறோம். நோன்பு நம்மை வெளிநோக்கித் தள்ளுகிறது. நம் நம்பிக்கையின் வழியாகக் கடவுளை நம் நடுவில் மனுவுருவாக்குகிறோம். நம்மைக் கீழே இழுக்கும் காரணிகள் அனைத்திலிருந்தும் - நுகர்வுவெறி, தகவல்மோகம் போன்றவற்றிலிருந்து - நாம் விடுதலை பெறுகிறோம் நோன்பின் வழியாக. இவ்வாறாக, அருளும் உண்மையும் நிறைந்தவர்களாய் (காண். யோவா 1:14) நாம் நம் இறைமகனும் மீட்பருமான இயேசுவின் அருகில் செல்கிறோம்.

2. எதிர்நோக்கு: நம் பயணத்திற்கு ஊக்கம் தரும் வாழ்வு தரும் தண்ணீர்

சமாரியப் பெண்ணுக்கு இயேசு வாழ்வுதரும் தண்ணீரை வாக்களிக்கின்றார். ஆனால், அதை அவரால் புரிந்துகொள்ள இயலவில்லை. தூய ஆவியாரே இயேசு வாக்களிக்கும் தண்ணீர். மேலும், எதிர்நோக்கின் வழியாக அந்தப் பெண்ணின் இதயத்தைத் தந்தையின் இரக்கத்திற்குத் திறக்கிறார் இயேசு. இந்த நாள்களில் எல்லாமே வலுவற்றுக் காணப்படும் நிலையில் எதிர்நோக்கு மிகவும் அவசியமாகிறது. ஒப்புரவின் வழியாக எதிர்நோக்கை அடைய முடியும் என்பது பவுலின் புரிதல் (காண். 2 கொரி 5:20). தவக்காலத்தில் நாம் ஆறுதலின், வலிமையின், தேற்றுதலின், ஊக்கத்தின் வார்;த்தைகளைப் பேசுவோம். அடுத்தவரை மட்டம் தட்டும், வருத்தப்படுத்தும், கோபத்தைத் தூண்டும், ஏளனம் செய்யும் வார்த்தைகளைக் தவிர்ப்போம் (காண். 'அனைவரும் உடன்பிறந்தோர்' 223). அமைதியான இறைவேண்டலே எதிர்நோக்கின் தொடக்கம். அனைத்தையும் புதுப்பிக்கும் ஆண்டவர் முன் (காண். திவெ 21:1-6) நம்மையே சரணாகதியாக்குதலே அதன் தொடர்ச்சி.

3. அன்பு: கிறிஸ்துவின் பாதச்சுவடுகளில், அக்கறை கொண்டு அன்பிரக்கம் காட்டுவதன் வழியாக, நாம் நம் நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் வெளிப்படுகிறது

மற்றவர்கள் வளர்வதைப் பார்த்து அன்பு மகிழ்கிறது. மற்றவர்கள் துன்புறும்போதும் தனிமையில், நோயில், வீடற்றுத் தவிக்கும்போதும், தேவையில் இருக்கும்போதும் அது கண்டு வருந்துகிறது. அன்பு என்பது இதயத்தின் துள்ளல். அது நம்மை நம்மிடமிருந்து வெளியேற்றி பகிர்தல் மற்றும் பிணைப்புக்கு வழிவகுக்கிறது.

'சமூக அன்பு' என்பது வெறும் உணர்வு அல்ல. மாறாக, அது ஒருவர் மற்றவர்மேல் காட்ட வேண்டிய செயல் (காண். 'அனைவரும் உடன்பிறந்தோர்,' 183). அன்பு நம் வாழ்வுக்குப் பொருள் தருகிறது. தேவையில் இருப்பவர்களை நம் குடும்பத்தாராகவும் நண்பர்களாகவும் உடன்பிறந்தவர்களாகவும் பார்க்கத் தூண்டுவது அன்பே. அன்புடன் கொடுக்கப்படும் எதுவும் வாழ்வையும் மகிழ்ச்சியையும் தருகிறது (காண். 1 அர 17:7-16, மாற் 6:30-44). நம் பிறரன்புச் செயல்களும் தர்மம் செய்தலும் மகிழ்ச்சி தருகின்றன. 

பெருந்தொற்றால் அல்லலுறுவோருக்கும் தேவையில் இருக்கும் அனைவருக்கும் நம் உடனிருப்பைக் காட்ட இத்தவக்காலம் உதவ வேண்டும்.

நிற்க.

நம்பிக்கை, எதிர்நோக்கு, மற்றும் அன்பு என்னும் இறையியல் மதிப்பீடுகளைக் கொண்டு, நோன்பு, இறைவேண்டல், மற்றும் பிறரன்புச் செயல்கள் என்னும் மூன்று தவக்காலச் செயல்கள் நோக்கி நம்மை வழிநடத்துகிறார் திருத்தந்தை.

'தந்தையின் இதயத்தோடு' என்னும் தன் மடலில், அருளுக்கு மேலான அருளான மனமாற்றத்தை நாம் பெற புனித யோசேப்பு நம்மைத் தூண்டுவாராக! என்று அழைப்பு விடுக்கிறார் திருத்தந்தை.

இன்று நாம் அணியும் சாம்பல் நம் மனமாற்றத்தைக் குறிப்பதாகவும், வழிநடத்துவதாகவும், நிறைவுசெய்வதாகவும் இருக்கட்டும்.

இக்காலம் அருளின் காலமாக அமைய உங்களுக்கு என் வாழ்த்துகள்.

இன்று நாம் 'எருசலேம் நோக்கிச் செல்கிறோம்!' 

நம் பயணம் இனிய பயணமாகட்டும்.

Monday, February 15, 2021

புளிப்பு மாவு

இன்றைய (16 பிப்ரவரி 2021) நற்செய்தி (மாற் 8:14-21)

புளிப்பு மாவு

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்' என்று எச்சரிக்கிறார் இயேசு. ஆனால், சீடர்கள், தங்களிடம் அப்பம் இல்லையே என்று ஒருவர் மற்றவரோடு பேசிக்கொண்டிருக்கின்றனர்.

'புளிப்பு மாவு' என்பது இயேசுவின் உவமையில் இறையாட்சி பற்றிய பதிவில் நேர்முகமாகப் பயன்படுத்தப்பட்டாலும், ஒட்டுமொத்த இறையியல் பின்புலத்தில், 'ஏற்றுக்கொள்ள இயலாத' அல்லது 'கெட்டுப் போன' அல்லது 'தவறான' ஒன்றையே குறிக்கிறது.

எடுத்துக்காட்டாக, கூடா ஒழுக்கம் பற்றிக் கொரிந்து நகரத் திருஅவைக்கு அறிவுறுத்துகின்ற புனித பவுல், 'சிறிதளவு புளிப்பு மாவு, பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா? எனவே, புளிப்புச் சத்துள்ள பழைய மாவைத் தூக்கி எறிந்துவிடுங்கள். அப்போது நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாயிருப்பீர்கள் ... பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும். தீமை, பரத்தைமை போன்ற புளிப்பு மாவோடு அல்ல. மாறாக, நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக் கொண்டாடுவோமாக!' (காண். 1 கொரி 5:6-8)

பரிசேயரின் 'புளிப்பு மாவு' என்று இயேசு அவர்களின் வெளிவேடத்தையே குறிப்பிடுகிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 6), 'மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் காண்கின்ற ஆண்டவர்,' மனிதரை உருவாக்கியதற்காக உள்ளம் வருந்துகிறார்.

அல்லது, 'அனைத்தையும் நல்லதெனவும்,' 'மிகவும் நல்லதெனவும் கண்ட' ஆண்டவராகிய கடவுள், மனிதரின் இதயச் சிந்தனை தீமையை உருவாக்குவது கண்டு மனம் வருந்துகிறார்.

நம் இதயத்தின் தீய சிந்தனைதான் நாம் இன்று களைய வேண்டிய புளிப்பு மாவு.

நம் ஒவ்வொருவரிடத்திலும் ஏதோ கொஞ்சம் புளிப்பு மாவு ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது. நம் நல்ல இயல்பையும் அது காலப்போக்கில் மாற்றிவிடும் என்பதால் நாம் அதைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாய் இருந்து, அதை உடனே களைதல் அவசியம்.

Sunday, February 14, 2021

மூன்று அடையாளங்கள்

இன்றைய (15 பிப்ரவரி 2021) நற்செய்தி (மாற் 8:11-13)

மூன்று அடையாளங்கள்

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவிடம் வருகின்ற சில பரிசேயர்கள், அவருடைய செயல்களை நம்புவதற்குத் தங்களுக்கு ஓர் அறிகுறி அல்லது அடையாளம் தருமாறு அவரிடம் வேண்டுகின்றனர். 'இத்தலைமுறை அடையாளம் கேட்பதேன்?' என அவர்களைக் கடிந்துகொள்கின்ற இயேசு அவர்களுக்கு அடையாளம் தர மறுக்கின்றார்.

ஆனால், இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 4:1-15,25) மூன்று கதைமாந்தர்களைப் பார்க்கின்றோம். இம்மூன்று கதைமாந்தர்களும் நம் வாழ்க்கையை நாம் எப்படி வாழ வேண்டும் என்று கற்பிக்கின்றனர்.

1. ஏவாள்

முதன்மையான கதைமாந்தர் இவர். இவர் நம் அனைவரின் தாய். அப்படித்தான் இவரை நமக்கு அறிமுகம் செய்கிறார் ஆசிரியர். ஏதேன் தோட்டத்திலிருந்து விரட்டப்பட்ட நம் முதற்பெற்றோர் சோர்ந்துபோய்விடவில்லை. மனித வாழ்வில் ஓர் ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றவர் மேல் கொண்டுள்ள ஈர்ப்பு பற்றிப் பேசுகின்ற புனித அகுஸ்தினார், 'நம் முதற்பெற்றோர் ஒரு வேளை ஏதேன் தோட்டத்திற்குள்ளேயே இருந்திருந்தால் ஒருவர் மற்றவர்மேல் இந்த அளவுக்கு ஈர்ப்பு கொண்டிருக்க மாட்டார்கள். ஏனெனில், அங்கே அவர்களுக்கு எல்லாமே கிடைத்துவிடுவதால் ஒருவர் மற்றவரின் தேவை அதிகமாக இருந்திருக்காது. வெளியேற்றப்பட்டதால்தான் அவர்கள் ஒருவர் மற்றவர்மேல் ஈர்ப்பு கொள்கின்றனர்' என்று நேர்முகமாக மனித ஈர்ப்பை விளக்குகிறார். ஆதாம் தன் மனைவி ஏவாள் மேல் கொண்ட ஈர்ப்பினால் அவருடன் கூடி வாழ, அவள் காயினைப் பெற்றெடுக்கிறாள். காயின் - இவர்தான் நம் மூத்த சகோதரர். இங்கே, ஏவாள், 'ஆண்டவர் அருளால் ஆண்மகன் ஒருவனை நான் பெற்றுள்ளேன்' என்று ஆண்டவரின் அருளை அடிக்கோடிடுகின்றார். என்ன ஓர் ஆச்சரியம்! தானும் தன் கணவனும் கடவுளால் வெளியே விரட்டப்பட்டாலும், தன் வறுமையிலும் கையறுநிலையிலும் ஆண்டவரின் அருளைக் கண்டுகொள்கின்றார் ஏவாள். மேலும், நிகழ்வின் இறுதியில், காயின் ஆபேல் மேல் பொறாமை கொண்டு அவரைக் கொன்றவுடன், இன்னொரு மகனைப் பெறும்போது, 'காயின் ஆபேலைக் கொன்றதால் அவனுடைய இடத்தில் இன்னொருவனைக் கடவுள் வைத்தருளினார்' என்று கடவுளின் கரத்தை அங்கே காண்கிறார் ஏவாள். ஏவாள் தன் வாழ்வில் எந்த நிலையிலும் குற்றவுணர்வால் வருந்தவோ, பயத்தால் அலைக்கழிக்கப்படவோ இல்லை. தன் தவற்றை நினைத்து அவர் வருந்திக்கொண்டே இருந்திருந்தால் கடவுளின் கரத்தை தன் வாழ்வில் காண அவரால் இயலாது. 

இன்று பல நேரங்களில் நம் வாழ்க்கை குற்றவுணர்வு மற்றும் பயம் என்னும் இரண்டு தண்டவாளங்களில்தான் பயணிக்கிறது. அப்படிப்பட்ட பயணத்தில் நம்முடன் வரும் கடவுளின் அருளை நம்மால் கண்டுகொள்ள இயலாது. மேலும், தன் வாழ்வில் எதிர்மறை நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழ்ந்தாலும், தன் இளைய மகன் வன்முறைக்கு ஆளாகி இறந்து போனாலும், அதைக் கண்டு துவண்டு போய்விடவோ, வாழ்வின்மேல் கோபம்கொள்ளவோ இல்லை ஏவாள். வாழ்வின் நேர்வுகளைக் கண்டும், நாம் சந்திக்கும் நபர்களைக் கண்டும் பல நேரங்களில் நாம் எதிர்வினை ஆற்றிக்கொண்டே இருப்பதால் நம் வாழ்வை நம்மால் முழுமையாக வாழ இயலவில்லை. வாழ்வில் ஒருவகையான தேக்கநிலையை நாம் அடைந்துவிடுகிறோம். எதிர்வினை ஆற்றாத உள்ளம் கொள்தல் நம் வாழ்வின் முதல் அடையாளமாகட்டும்.

2. ஆபேல்

ஆபேலின் காணிக்கை கடவுளுக்கு ஏற்புடையதாக இருக்கின்றது. கடவுளுக்கு ஏற்புடையதாக அவர் என்ன செய்தார் என்பது பற்றிய குறிப்பு பாடத்தில் இல்லை. 'ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார்' என்று மட்டும் பதிவு செய்கிறார் ஆசிரியர். ஆபேலை இறக்குமாறு ஆண்டவர் ஏன் கையளித்தார்? என்பதே நம் கேள்வி. தான் கனிவுடன் கண்ணோக்கிய ஒருவரை ஆண்டவர் எச்சரித்திருக்கலாம்! அல்லது அவர் தன் சகோதரனின் வயலுக்குத் தனியாகச் செல்லாதவாறு தடுத்திருக்கலாம்! 'நன்மை செய்தால் உயர்வடைவாய் அல்லவா?' எனக் காயினிடம் கேட்கின்றார் கடவுள். ஆனால், இங்கே, நன்மை செய்த ஆபேல், கடவுளைத் தன் காணிக்கைகளால் மகிழ்வித்த ஆபேல் உயர்வடையவில்லையே! வயலில் காணாப்பிணமாக அல்லவா கிடக்கிறார்.

நன்மை செய்பவர்களின் நிலை பல நேரங்களில் ஆபேலின் நிலையாகத் தான் இருக்கிறது. ஆபேல் கதையாடலின் பின்புலத்தில்தான், அனைத்தையும் 'வீண்' (எபிரேயத்தில், 'ஹேபல்') என்கிறார் சபை உரையாளர். 'பலி செலுத்துவோருக்கும் பலி செலுத்தாதவர்களுக்கும் விதித்துள்ளபடிதான் நடக்கும்' என்கிறார் அவர்.

ஆபேல் என்னதான் நன்மை செய்தவராக இருந்தாலும், இயல்பறிவு அவரிடம் குறைந்திருப்பது போலத் தெரிகிறது. ஆபேல் ஆடு மேய்ப்பவர். காயின் வயலில் விவசாயம் செய்பவர். தன் அண்ணனை முழுமையாக நம்பிவிடுகிறார் ஆபேல். மேலும், 'வயல்' என்பது காயினின் பாதுகாப்பு வளையம். அந்த வளையத்துக்குள் தான் அழைக்கப்படும்போது தனியாகச் செல்லலாமா அவர்? தன் அண்ணணின் முகத்தைக் கண்டு அவருடைய அகத்தைக் காண ஆபேலால் இயலவில்லையா? பாவம்! ஆபேல்! தன்னைப் போலவே உலகில் உள்ள அனைவரும் நல்லவர் என்று எண்ணிவிட்டார். 

நாமும் பல நேரங்களில் மற்றவர்களை எளிதாக நம்பிவிடுகிறோம். 'மற்றவரை எளிதில் நம்பிவிடுபவர் கருத்தாழமற்றவர்' என்று எச்சரிக்கிறார் சீராக். நமக்கு வயது கூடக் கூட அடுத்தவர்களை எளிதில் நம்மால் எளிதில் நம்ப முடிவதில்லை. ஆபேல் சிறியவராக இருந்ததால் அனைவரையும் நம்பிவிடுகிறார்.

3. காயின்

'நான் என்ன என் சகோதரனுக்குக் காவலாளியோ?' என்று கடவுளிடமே கேட்டு, 'காவல் காப்பது உம் வேலை!' என்று கடவுளுக்கு நினைவூட்டியவர் காயின். பாவம் காயின்! அவருடைய காணிக்கைகளைக் கடவுள் கண்ணோக்கவில்லை. இங்கே, இஸ்ரயேல் மக்களின் அரசியலைப் புரிந்துகொள்ள வேண்டும். தொடக்கத்தில் இஸ்ரயேல் மக்கள் நாடோடிகளாகவும், ஆடு மாடுகள் மேய்ப்பவர்களாகவும் இருக்கின்றனர். தங்கள் தொழிலே சிறந்தது என்பதைக் காட்டவதற்காகவே, தங்கள் உழைப்பின் கனி ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும், விளைச்சலின் அல்லது விவசாயத்தின் கனிகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் சொல்கின்றனர். மேலும், தங்கள் தொழிலே மேன்மையானது என்று அவர்கள் சொல்லவும் விரும்புகின்றனர். 'எனக்குத் தெரியாது!' என்று ஆபேலைக் குறித்து காயின் சொல்கிறார். ஒரு பாவம் இன்னொரு பாவத்தைப் பெற்றெடுக்கிறது. பொறாமை கோபத்தையும், கோபம் வன்முறையையும், வன்முறை கொலையையும், கொலை பொய்யையும் பெற்றெடுக்கிறது. 'நீ நாடோடியாக அலைந்து திரிவாய்!' என்று கடவுள் அவரைத் தண்டித்தாலும் உடனடியாக அவர் கடவுளிடம் முறையிடுகிறார். ஆண்டவர் அவர்மேல் ஓர் அடையாளம் இடுகின்றார். 

தன் குற்றத்திற்குத் தான் கண்டிக்கப்பட்டாலும் கடவுளின் இரக்கத்தை வேண்டிப் பெறுகின்றார் காயின். நம் வாழ்விலும் நாம் தண்டிக்கப்பட்டதாக உணர்ந்தாலும், இன்னும் அருள்கொடைகளைக் கடவுளிடம் மன்றாடி நம்மால் பெற முடியும்.

நம் முதற்தாயும், நம் முதற்சகோதரர்களும் நம் வாழ்வியல் அடையாளங்களாகவே இருக்கின்றனர்.

எதற்கும் எதிர்வினை ஆற்றாமல் எல்லாவற்றையும் எதிர்கொள்ள ஏவாள் நமக்கு அடையாளம்.

நம் வாழ்வில் எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும் என்ற எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள ஆபேல் நமக்கு அடையாளம்.

எதிர்மறை நிகழ்வுகள் நடந்தாலும் கடவுளின் அருள் அங்கேயும் பிறக்கும் என்பதற்கு காயின் நமக்கு அடையாளம்.

Saturday, February 13, 2021

தாயினும் சாலப் பரிந்து

ஆண்டின் பொதுக்காலம் 6ஆம் ஞாயிறு

I. லேவியர் 13:1-2, 44-46 II. 1 கொரிந்தியர் 10:31 - 11:1 III. மாற்கு 1:40-45

தாயினும் சாலப் பரிந்து

'பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி, உலப்பிலா ஆனந்தம் ஆய' என்று தன் இறைவனை நினைத்து திருவாசகத்தில் உருகுகின்றார் மாணிக்கவாசகர். 

பரிவு என்பது இறைவனின் பண்பு என்பது இன்றைய நற்செய்தியில் இயேசுவின் வல்ல செயல் வழியாக வெளிப்படுகிறது. இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்களில் மையமாக இருக்கின்ற ஒரு வார்த்தை 'தொழுநோய்.' தொழுநோய் பிடித்தவர் 'நடைபிணம்' என்று அந்த நாள்களில் கருதப்பட்டார். தொழுநோயின் கொடுமையை நாம் 'ரத்தக்கண்ணீர்' போன்ற திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். தொழுநோயாளர் அன்றைய எபிரேய மற்றும் கானானிய சமூகத்தில் மூவகை துன்பங்களை அனுபவித்தார்:

(அ) உடல்சார் துன்பம்: தொழுநோய் பீடித்த உடல் புண்களால் நிறைந்து நாற்றமெடுக்கும். தோலின் நிறம் மாறும். தோல் தன் உணரும் தன்மையை இழக்கும். தோலுக்கு உணரும் தன்மை இல்லாததால் நாய் அல்லது பூனை புண்களை நக்கினாலும், எறும்புகள் அல்லது ஈக்கள் மொய்த்தாலும் உணர முடியாது. கை மற்றும் கால் விரல்கள் சூம்பிப் போகும். மருந்துகள் இல்லாத நிலையில் இறப்பு ஒன்றே இதற்கான மருந்து என்று கருதப்பட்டது.

(ஆ) உறவுசார் துன்பம்: தொழுநோய் ஒருவர் மற்றவருக்குப் பரவக் கூடிய நோய் என்பதாலும், மருந்துகள் அல்லது தடுப்பு மருந்துகள் இல்லாத நிலையில் சமூகப் பரவலைத் தடுப்பதற்காக, நோயுற்ற நபரைத் தொற்றொதுக்கம் செய்வது வழக்கம். இப்படியாக தொழுநோய் பீடித்த ஒருவர் அவருடைய குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து பிரித்துவைக்கப்பட்டதால் உறவுசார் துன்பத்தையும் அவர் அனுபவிக்க நேரிட்டது.

(இ) சமயம்சார் துன்பம்: ஒருவர் தான் செய்த பாவத்திற்கு கடவுள் தரும் தண்டனையே தொழுநோய் என்று கருதப்பட்டது. கடவுளால் மட்டுமே இதைக் குணமாக்க இயலும் (காண். நாமான் நிகழ்வு) என்ற நிலை இருந்ததால், இந்நோய் பீடிக்கப்பட்டவர் கடவுளின் சாபத்துக்கு ஆளானவராகக் கருதப்பட்டார்.

மேற்காணும் மூவகைத் துன்பங்கள் நமக்கு கோவித்-19 பெருந்தொற்றை நினைவூட்டுகின்றன. நம்மை விட்டு நீங்கியும் நீங்காமலும் சுற்றி நிற்கின்ற இந்தப் பெருந்தொற்றுக்காலத்தில், தொற்றுக்கு ஆளானவர் மேற்காணும் மூன்று துன்பங்களையும் அனுபவித்தார் என்பதை நாம் அறிவோம். பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களைப் புதைக்கவும் இடமில்லாமல், சுற்றத்தாரும் அவர்களைக் காண இயலாமல், போதிய மருத்துவ வசதி இல்லாமல் என நாம் அனுபவித்த துன்பங்கள் அளப்பரியவை.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். லேவி 13), தொழுநோய் பீடித்தவரை எப்படித் தொற்றொதுக்கம் செய்ய வேண்டும் எனவும், அவர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றியும் ஆண்டவர் மோசே மற்றும் ஆரோனுக்கு வலியுறுத்துகிறார். கடவுளிடமிருந்து வரும் பாவம் என்று கருதப்பட்டதால் குருக்களே இந்நோய் பற்றிய தொற்றொதுக்கத்தை அனுமதிப்பவர்களாகவும், மீண்டும் மக்களை ஊருக்குள் அழைப்பவர்களாகவும் இருக்கின்றனர். தொழுநோய் என்பது கடவுள் மோசேக்குத் தரும் அடையாளமாகவும், முணுமுணுத்த மிரியாமுக்கு அவர் வழங்கிய தண்டனையாகவும் இருக்கிறது.

இரண்டாம் வாசகத்தில், புனித பவுல் கொரிந்து நகரக் குழுமத்தில் எழுந்த உணவுசார்ந்த பிரச்சினை ஒன்றைப் பற்றி அவர்களுக்கு அறிவுறுத்துகின்றார். சிலைகளுக்குப் படைத்தவற்றை உண்பதா வேண்டாமா என்ற பிரச்சினை கொரிந்து நகரில் எழுகின்றது. கொரிந்து நகரில் இருவகையான நம்பிக்கையாளர்கள் இருந்தனர். முதல் வகையினர் தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருந்தனர். சிலைகளுக்குப் படைக்கப்பட்டதை உண்டதால் அவர்கள் தங்கள் நம்பிக்கை மறைந்து போகும் என்று எண்ணவில்லை. இரண்டாம் வகையினர் நம்பிக்கையில் வலுவற்று இருந்தனர். சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவு இவர்களைப் பொருத்தவரையில் ஓர் இடறலாகக் கருதப்பட்டது. நம்பிக்கையில் வலுக்குறைந்து நின்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் மற்ற குழுவினர் சிலைகளுக்குப் படைக்கப்பட்டதை உண்டனர். அவர்களுக்கு அறிவுறுத்துகின்ற பவுல், 'நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்ய வேண்டும் எனவும்,' மேலும் 'ஒருவர் மற்றவருக்குப் பயன்தருவதையே நாட வேண்டும்' என்றும் சொல்கின்றார். இவ்வாறாக, அவர்கள் மற்றவர்களைப் பற்றிய அக்கறை கொண்டிருக்க அழைக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில், தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வருகின்றார். அவர் இயேசுவை எங்கே சந்திக்கிறார் என்று தெரியவில்லை. தொழுநோயாளர் வசிக்கும் இடத்திற்கு இயேசு சென்றாரா, அல்லது 'தீட்டு, தீட்டு' என்று கத்திக்கொண்டே தொழுநோயாளர் இயேசுவிடம் வந்தாரா என்ற குறிப்பு இல்லை. மேற்காணும் இரண்டு நிலைகளிலும் இயேசு தன் சமகாலத்துச் சமூகத்தின் புரிதலைப் புரட்டிப் போடுகின்றார். 'நீர் விரும்பினால் எது நோயை நீக்க உம்மால் முடியும்' என்னும் தொழுநோயாளரின் வார்த்தைகளில் நம்பிக்கை தெரிவதோடு, இறைவிருப்பம் நிறைவேறுவதையே அவர் விரும்புகிறார் என்ற அவருடைய நல்லுள்ளமும் தெறிகிறது. 

இயேசுவின் வல்ல செயல் மூன்று நிலைகளில் நடந்தேறுகிறது: ஒன்று, தொழுநோயாளர்மேல் இயேசு பரிவு கொள்கின்றார். இரண்டு, அவரைத் தொட்டு நலம் தருகின்றார். மூன்று, அவரை மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்காக மோசேயின் கட்டளையை நிறைவேற்றுமாறு பணிக்கின்றார். 

ஆனால், அந்த நபர் இயேசுவைப் பற்றி எல்லாருக்கும் அறிவிக்க, கடைசியில் இயேசு ஊருக்குள் செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது. இயேசுவுக்கு அந்த நிலை ஏற்பட்டது ஏன்? தொழுநோயாளரைத் தொட்ட செய்தியை மக்கள் அறிந்ததால் அவரையும் தீட்டுப்பட்டவர் என நினைத்தார்களா? அல்லது இயேசு ஒதுக்கிவைக்கப்பட்டாரா? அல்லது மக்கள் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக இயேசு ஒதுங்கி நின்றாரா? நமக்குத் தெரியவில்லை.

இயேசுவின் பரிவுள்ளம் நமக்கான இன்றைய பாடமாக இருக்கிறது.

இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. 'வேலண்டைன் டே' என்று கொண்டாடப்பட்டது இன்று ஒரு வாரமாகக் கொண்டாடப்படுகிறது. ரோஸ் தினம், முன்மொழிதல் தினம், சாக்லேட் தினம், டெடி தினம், வாக்குறுதி தினம், தழுவல் தினம், முத்த தினம், இறுதியில் காதலர் தினம். அன்பே இந்த நாள்களில் முதன்மையாக இருக்கிறது. அல்லது இருக்க வேண்டும். 

நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடைய 'ஃப்ரத்தெல்லி தூத்தி' ('அனைவரும் உடன்பிறந்தோர்') என்னும் சமூகச் சுற்றுமடலில், பரிவு பற்றி மிக அதிகமாகப் பேசுகின்ற திருத்தந்தை அவர்கள், அன்பிற்கான முதற்படி பரிவு என்கிறார். மேலும், செயல்பாட்டில் காட்டப்படும் அன்பே பரிவு என்பதும் அவருடைய புரிதல்.

இன்று பல நேரங்களில் அன்பு என்பது வெறும் ஓர் உணர்வு அல்லது உணர்ச்சியாக மாறிவிட்டது. காதலர் தினக் கொண்டாட்டங்களிலும், திருமண உறவுநிலைகளிலும் இதே நிலைதான் பல நேரங்களில் நீடிக்கிறது.

ஆகையால்தான், நாம் மேலே குறிப்பிட்ட பாடலில், தாயினும் மிகுதியாக அன்பு செய்யும் கடவுள் என்று தன் கடவுளை அழைக்காமல், 'பரிவு கொள்ளும் இறைவனாகத்' தன் இறைவனை அழைக்கின்றார் மாணிக்கவாசகர்.

இயேசுவைப் போல பரிவுள்ளம் கொள்வது எப்படி?

(அ) பிறருக்கு உகந்ததையும் பயன் தருவதையும் நான் நாட வேண்டும்

இதுவே தன் விருப்பம் எனச் சொல்கிறார் பவுல். மேலும், கிறிஸ்து தன் வாழ்க்கையில் எப்போதும் பிறருக்கு உகந்ததையும், பயன் தருவதையும் நாடினார் என்பதும் பவுலின் புரிதல்.

(ஆ) வரையறைகளைக் கடப்பது

எபிரேய மொழியில் பரிவு காட்டுதல் என்னும் செயல், ஒரு தாய் தன் மடியில் கிடத்தப்பட்டுள்ள குழந்தையைக் குனிந்து பார்த்தலைக் குறிக்கிறது. தாய் தன் முகத்தைத் தாழ்த்தி குழந்தையின் முகத்தின் அருகில் கொண்டு வரும்போது அவர் தன்னையே வளைக்கின்றார். தாய் என்னும் தன் நிலையைத் தாண்டி குழந்தையின் எல்லையைத் தனதாக்கிக் கொள்கின்றார். இயேசு சமூகத்தின் வரையறைகளைக் கடந்ததால் மட்டுமே தொழுநோயாளருக்கு அருகில் செல்லவும், அவரைத் தொடவும் முடிந்தது.

(இ) பொறுத்துக்கொள்வது

இயேசுவின் வார்த்தைக்கு எதிர்மாறாக அந்த நலம் பெற்ற தொழுநோயாளர் செயல்பட்டாலும், அவருடைய செயலை இயேசு பொறுத்துக்கொள்கின்றார். 'அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்' (காண். 1 கொரி 13) என்பது இங்கே தெளிவாகிறது. 

இன்று நாம் அன்பைக் கொண்டாடினாலும், பெருந்தொற்றுக் காலத்திலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தாலும் நமக்குத் தேவையானது பரிவு. மேற்காணும் மூன்று வழிகள் வழியாக நாம் கடவுளின் பரிவுள்ளம் பெற்றால் நலம்.

கடவுளின் பரிவுள்ளம் நம் இன்னல்களினின்று நம்மை விடுவிக்கிறது என்கிறார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 32). நாம் ஒருவர் மற்றவருடைய இன்னல்களில் அவர்களுக்குத் துணை நிற்கும்போது நாமும் அதே பரிவுள்ளத்தைக் கொண்டிருக்கிறோம்.

Friday, February 12, 2021

கேள்விகள்

இன்றைய (13 பிப்ரவரி 2021) நற்செய்தி (மாற் 8:1-10)

கேள்விகள்

இன்றைய முதல் வாசகம் (காண். தொநூ 3:9-24) மற்றும் நற்செய்தி வாசகத்தை இணைத்து நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். இரண்டு வாசகங்களிலும் மொத்தம் 6 கேள்விகள் உள்ளன:

1. 'நீ எங்கே இருக்கின்றாய்?' - கடவுள் ஆதாமைப் பார்த்துக் கேட்கும் கேள்வி.

2. 'நீ ஆடையின்றி இருக்கிறாய் என்று உனக்குச் சொன்னது யார்?' - மீண்டும் கடவுள் ஆதாமிடம்.

3. 'நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?' - மீண்டும் கடவுள் ஆதாமிடம்.

4. 'நீ ஏன் அவ்வாறு செய்தாய்?' - கடவுள் பெண்ணிடம் கேட்கும் கேள்வி.

5. 'இப்பாலைநிலத்தில் இவர்களுக்குப் போதுமான உணவு அளிப்பது எப்படி?' - சீடர்கள் இயேசுவிடம் கேட்கும் கேள்வி.

6. 'உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?' - இயேசு சீடர்களிடம் கேட்கும் கேள்வி.

மேற்காணும் கேள்விகளை நாம் இரண்டு குழுக்களாகப் பிரிக்கலாம்:

(அ) விடை தெரிந்தே கேட்கப்படும் கேள்வி

கேள்வி எண்கள் 1 முதல் 5 வரை உள்ள கேள்விகளை இவற்றுக்குள் அடக்கிவிடலாம். ஆதாம் எங்கிருக்கிறார் என்பதும், ஆடையின்றி இருப்பதை ஆதாமுக்குச் சொன்னது யார் என்பதும், உண்ணக்கூடாத மரத்திலிருந்து அவர்கள் உண்டனர் என்பதும், அவர்கள் ஏன் அவ்வாறு செய்தனர் என்பதும் கடவுளுக்குத் தெரியும். மேலும், பாலைநிலத்தில் போதுமான அளவு உணவு அளிக்க இயேசுவுக்குத் தெரியும் என்பதும் சீடர்களுக்குத் தெரியும்.

(ஆ) விடை வேண்டிக் கேட்கப்படும் கேள்வி

'உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?' என்னும் 6வது கேள்வியை இவ்வகை என்று சொல்லலாம். எத்தனை அப்பங்கள் தன் சீடர்களிடம் இருந்தன என்பதை இயேசு இக்கேள்வி வழியாக அறிந்துகொள்ள விரும்புகின்றார்.

முதல் வாசகத்தில், கேள்விகள் உணவை மையமாக வைத்துக் கேட்கப்படுகின்றன. அங்கே உணவு என்பது ஆசையை மையப்படுத்தியதாக இருக்கிறது. ஏனெனில், அவர்கள் பசிக்காக உண்ணவில்லை. மாறாக, ஆசைக்காக - கடவுளைப் போல ஆக வேண்டும், நன்மை தீமை அறிய வேண்டும் என்னும் ஆசைக்காக - உண்கின்றனர்.

இரண்டாம் வாசகத்திலும் கேள்விகள் உணவை மையமாக வைத்தே கேட்கப்படுகின்றன. இங்கே உணவு என்பது பசியை மையப்படுத்தியதாக இருக்கிறது. மூன்று நாட்களாக மக்கள் கூட்டத்தினர் இயேசுவைப் பின்தொடர்கின்றனர். அவர்கள் பட்டினியாக இல்லம் திரும்புவதை இயேசு விரும்பவில்லை.

ஆசையைக் கடிந்துகொள்கின்ற கடவுள், பசிக்கு உணவு தருகின்றார்.

முதல் வாசகத்தில், புல் தரையை விட்டு முதற்பெற்றோர் விரட்டப்படுகின்றனர்.

இரண்டாம் வாசகத்தில், புல் தரையில் மக்கள் அமரவைக்கப்படுகின்றனர்.

விலக்கப்பட்ட கனியை உண்டதால் மூன்று பிரச்சினைகள் நடக்கின்றன:

(அ) கடவுளின் திருமுன்னிலையிருந்து ஒளிகின்றனர். பாவம் குற்றவுணர்வையும், குற்றவுணர்வு பயத்தையும் பெற்றெடுக்கிறது. இந்த ஒளிதல் பற்றி எழுதுகின்ற புனித அகுஸ்தினார், 'காமத்திற்குத் தண்டனை எதுவும் இல்லை. காமமே காமத்திற்குத் தண்டனை' ('You are not punished for lust, you are punished by lust'). அதாவது, அவர்கள் விலக்கப்பட்ட கனியின்மேல் கொண்ட ஆசைக்குத் தண்டனை என்பது அதே ஆசையே: 'ஒழுங்கற்ற மனத்திற்கான தண்டனை ஒழுங்கற்ற மனமே.'

(ஆ) ஒருவர் மற்றவரிடமிருந்து அந்நியப்படுகின்றனர். 'இதோ என் எலும்பின் எலும்பும், சதையின் சதையும்' என்று தன் பெண்ணை அள்ளிக் கொண்டாடிய ஆண், 'என்னோடு இருக்குமாறு நீர் தந்த அந்தப் பெண்' என்று பெண்ணைத் தள்ளி வைக்கின்றான். தங்களின் நிர்வாணம் கண்டு அஞ்சுகின்றனர்.

(இ) நிலத்திலிருந்து அந்நியப்படுகின்றனர். இதுவரை தங்கள் கால்கள் நின்ற இடம் இனித் தங்களுக்குச் சொந்தமில்லை. தங்களுடைய காட்டிலிருந்து, விலங்குகளிடமிருந்து தள்ளிவைக்கப்படுகின்றனர். நிலம் அவர்களின் உழைப்பிற்கேற்ற பலனைக் கொடுக்காது.

மொத்தத்தில், விலக்கப்பட்ட கனியை உண்டதால் மனுக்குலத்திற்குப் பசி எடுத்தது. இறைவன்மேலும், ஒருவர் மற்றவர்மேலும், நிலத்தின்மேலும் அவர்கள் கொள்ளும் பசி இன்னும் அடங்கவில்லை.

அந்தப் பசியை அடக்குபவர் இயேசுவின் பரிவே.

அந்தப் பரிவுள்ளம் மீண்டும் நம்மைப் புல்தரையில் அமர வைக்கிறது.

பயந்து தப்பி ஓடிய கால்கள் இனி பதற்றமின்றி தரையில் அமரலாம்.

நிலத்தில் உழைத்து உண்ட மானுடம் இனி அவரின் கரங்களிலிருந்து தன் பசியாற்றலாம்.

இறைவன் நம்மைப் பார்த்துக் கேட்ட கேள்விகளுக்கு அவருடைய கேள்வியே விடையாகிறது.

Thursday, February 11, 2021

திறக்கப்பட்டன

இன்றைய (12 பிப்ரவரி 2021) நற்செய்தி (மாற் 7:31-37)

திறக்கப்பட்டன

இன்றைய முதல் வாசகம் (காண். தொநூ 3:1-8) மற்றும் நற்செய்தி வாசகத்திற்குப் பொதுவாக இருக்கின்ற ஒரு வார்த்தை: 'திறக்கப்படுதல்.'

முதல் வாசகத்தில், கனியை உண்டதால் நம் முதற்பெற்றோரின் கண்கள் திறக்கப்பட்டன.

நற்செய்தி வாசகத்தில், இயேசுவிடம் கொண்டுவரப்பட்ட பேச்சற்ற ஒருவரின் காதுகள் திறக்கப்படுகின்றன.

முந்தையதன் விளைவு அவர்கள் ஓடி ஒளிந்துகொள்கிறார்கள்.

பிந்தையதன் விளைவு மக்கள் இயேசுவைக் குறித்து வியப்படைகிறார்கள்.

முந்தையதில் திறக்கப்பட்டவர் குற்றவுணர்வு கொள்கிறார்.

பிந்தையதில் திறக்கப்பட்டவர் இறைவனைப் புகழ்கின்றார்.

திறக்கப்படுதல் நலம்.

ஆனால், திறப்பவர் கடவுளாக இருந்தால் மட்டுமே விளைவு நேர்முகமாக இருக்கும்.

இன்றைய முதல் வாசகத்தில் நம் முதற்பெற்றோரின் கண்கள் திறக்கப்பட்டாலும், அவர்கள் காதுகள் மூடியிருந்தன. ஏனெனில், அவர்கள் இறைவனின் குரலுக்கும் அவருடைய கட்டளைக்கும் தங்கள் காதுகளை மூடிக்கொண்டனர்.

நம் முதற்பெற்றோர் தாங்கள் ஏற்கெனவே கடவுளின் சாயலில் இருக்கிறோம் என்பதை மறந்தனர். ஒருவர் தன் இயல்பை இருப்பது போல ஏற்றுக்கொண்டால், தன்னிருப்பில் நிறைவு கண்டால் அவர் மற்றவர்களின் ஏமாற்றுச் சொல்லில் வீழ்ந்துபோகமாட்டார்.

இன்று நம் வாழ்வில் திறக்கப்பட வேண்டிய வாசல்களும் ஜன்னல்களும் பல இருக்கலாம். அவற்றைத் திறக்குமாறு இறைவனிடம் செல்தலும், அவற்றை இறைவனே திறத்தலும் நலம்.