Friday, November 30, 2018

ஆண்டின் இறுதிநாள்

இன்றைய (1 டிசம்பர் 2018) முதல் வாசகம் (திவெ 22:1-7)

ஆண்டின் இறுதிநாள்

இன்றைய நற்செய்தி வாசகம் (லூக் 21:34-36) வருகின்ற ஞாயிறு (டிசம்பர் 2) நற்செய்தியாக அமைவதால் அதை விடுத்து, முதல் வாசகத்தைப் பற்றிச் சிந்திப்போம்.

இன்று திருவழிபாட்டு ஆண்டின் இறுதிநாள்.

நாள்காட்டி ஆண்டின் இறுதிநாள், கல்வி ஆண்டின் இறுதிநாள், நிதி ஆண்டின் இறுதிநாள் போலவே, வழிபாட்டு ஆண்டும் முக்கியமான நாள் என நினைக்கிறேன். கிறிஸ்தவர்களாகிய நமக்கு, கிறிஸ்தவ நம்பிக்கையே வழிபாடு சார்ந்ததாகவே இருக்கிறது. கடந்து செல்லும் இந்த வழிபாட்டு ஆண்டு என்னில் எத்தகையை நம்பிக்கை வளர்ச்சியை விட்டுச்செல்கிறது? இந்த ஓர் ஆண்டில் என் ஆன்மீக முதிர்ச்சி எப்படி இருக்கிறது? என் வழிபாடுகள் கூடி ஆன்மீகம் குறைந்திருக்கிறதா? இப்படி நம்மையே ஆராய்ந்து பார்க்கும் நாளாக இதை எடுத்துக்கொள்வோம்.

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் யோவான் காணும் இறுதிக் காட்சியை வாசிக்கின்றோம். எசேக்கியேல் இறைவாக்கினரின் இறுதிக் காட்சி போலவே இருக்கிறது யோவானின் காட்சியும். எசேக்கியேலைப் போலவே (காண். எசே 47:1-12) யோவானும் வாழ்வளிக்கும் தண்ணீர் ஓடும் ஆற்றைக் காட்சியில் காண்கின்றார். அங்கே ஆலயத்திலிருந்து புறப்படுகிறது தண்ணீர். இங்கே ஆட்டுக்குட்டியின் அரியணையிலிருந்து புறப்படுகிறது தண்ணீர்.

இந்த ஓர் ஆண்டில் நாம் ஆண்டவரின் இல்லத்திலிருந்து வந்த தண்ணீரை அருளாகவும், இரக்கமாகவும், கருணையாகவும் அள்ளிப் பருகியிருக்கின்றோம். இன்றைய முதல் வாசகத்தில் காணும் பசுமை, நிறைவு, மகிழ்ச்சி என் வாழ்வில் இருக்கிறதா?

- என் வழிபாட்டின் மையமாக இறைவன் இருந்தாரா? அல்லது நான் இருந்தேனா?

- நகரின் நடுவே பாய்ந்தோடியது தண்ணீர். நான் வாழும், பணி செய்யும், படிக்கும் இடத்தின் நடுவில் நான் எப்படி இருந்தேன்? என் பிரசன்னம் மற்றவர்களை நனைத்ததா? அல்லது வெற்று ஓடையாக நான் கிடந்தேனா?

- என் ஆளுமை, குடும்பம், உடல்நலம், பணி, உறவுநிலைகள் ஆகிய மரங்கள் கனி தந்தனவா? இவற்றில் வாழ்வு இருந்ததா?

- என் இலைகள் - என் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் மற்றவர்களை குணமாக்குபவையாக இருந்தனவா?

- என்னிடம் உள்ள என் சாபங்கள் - கோபம், பொறாமை, சீற்றம், அடிமைத்தனம், சிறுமை போன்றவற்றை - நான் அகற்ற முயன்றேனா?

- என் நடுவில் இறைவன் இருக்கிறாரா? அவரின் முகத்தை நான் எந்நேரமும் என் கண்முன் வைத்துள்ளேனா? அவருடைய பெயர் என் நெற்றியில் இருக்கிறதா? அவரின் ஒளி என்மேல், என்னில், என் வழியாக ஒளிர்கிறதா?

- இறைவார்த்தையை வாசிக்க, தியானிக்க, வாழ்வாக்க நான் முயற்சி செய்தேனா?

- இந்த ஆண்டு என் குடும்பத்தில் நடந்த அருள்சாதனக் கொண்டாட்டங்கள் எவை?

- வழிபாட்டுத் தளங்களுக்கான என் செல்கை எப்படி இருந்தது?

- இந்த வழிபாட்டு ஆண்டு என்னில் விட்டுச் செல்லும் அருள் என்ன?

தளர்ந்தவற்றைத் தள்ளி வைத்து, மலர்ந்தவற்றை நம் மனங்களில் ஏந்தி புதிய வழிபாட்டு ஆண்டிற்குள் நுழையத் தயாராவோம்.

'மாரநாதா! என் ஆண்டவராகிய இயேசுவே, வாரும்!'

Thursday, November 29, 2018

அந்திரேயா

இன்றைய (30 நவம்பர் 2018) திருநாள்

அந்திரேயா

இன்று திருத்தூதர் அந்திரேயாவின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, 'மெசியாவைக் கண்டோம்' என்றார். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். (யோவான் 1:40-42)

அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, 'இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?' என்றார். (யோவான் 6:8-9)

கிரேக்கர் சிலர் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, 'ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்' என்று கேட்டார்கள். பிலிப்பு அந்திரேயாவிடம் அதுபற்றிச் சொன்னார். அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர். (யோவான் 12:20-23)

இந்த மூன்று வசனங்களையும் வாசிக்கும்போது என்ன தெரிகிறது? இந்த மூன்று நிகழ்வுகளிலும் பிரசன்னமாகி இருப்பவர் யார்?

'அந்திரேயா!'

யோவான் நற்செய்தியில் மட்டும்தான் இவரைப் பற்றிச் சொல்லப்படுகிறது. மற்ற நற்செய்தியாளர்கள் இவரின் பெயரை வெறும் திருத்தூதர்களின் பெயர்களில் ஒன்றாக மட்டுமே குறிப்பிடுகின்றனர் (காண்க. மத்தேயு 10:1-4, மாற்கு 3:13-19, லூக்கா 6:12-16). யோவான் மட்டுமே இவரைப் பற்றி எழுதக் காரணம் ஒருவேளை யோவானுக்கு நெருங்கிய நண்பராகக் கூட இவர் இருந்திருக்கலாம்.

மேற்காணும் மூன்று நிகழ்வுகளிலும் அந்திரேயா ஒரு நல்ல பி.ஆர். வாக இருக்கிறார். இயேசுவின் வாழ்வின் முக்கியமான கட்டங்களில் மூன்று பேரை அவரிடம் கூட்டி வந்து அறிமுகம் செய்கின்றார். 'ரெஃபரன்ஸ்' என்பது மேலாண்மையியலில் மிக முக்கியமான ஒன்று. நாம் டிவி, செய்தித்தாளில் அன்றாடம் நூற்றுக்கணக்கான விளம்பரங்களைப் பார்க்கின்றோம். அதில் வலம்வரும் பிரபலங்களும், மாடல்களும் நமக்கு தயாரிப்புகளை 'ரெஃபர்' செய்கிறார்கள் அல்லது 'அறிமுகம்' செய்கிறார்கள். 'அறிமுகத்தை' பொருத்தே அந்தத் தயாரிப்புகளின் விற்பனையும் இருக்கிறது. நம்மையறியாமலேயே நாமும் தினமும் பலவற்றை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறோம்: 'பட்டு எடுக்கணும்னா நல்லி சில்க்ஸ் போங்க!' 'நகை வாங்கணும்னா ஜோய் ஆலுக்காஸ் போங்க!', 'கறி தோசை சாப்பிடனும்னா கோனார் மெஸ் போங்க!', 'அந்தக் கடை பனியாரம் நல்லா இருக்கும்!', 'இந்த பிராண்ட் ஃபோன் நல்லா இருக்கும்!' என நாம் அனுபவித்ததை பிறருக்கு அறிமுகம் செய்து வைக்கிறோம்.

ஆக, அறிமுகம் செய்து வைப்பதற்கு முதல் தேவை அனுபவம். ஒரு தயாரிப்பை அல்லது சேவையை அல்லது ஒரு நபரின் உறவை நாம் அனுபவித்தால் தான் அதை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்ய முடியும். நபர்களை நாம் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் போது அனுபவம் இன்னும் அதிகத் தேவையாகிறது. அங்கே இரண்டு வகை அனுபவம் வேண்டும். அறிமுகப்படுத்தும் நபரையும் நாம் அறிந்திக்க வேண்டும். யாரிடம் அறிமுகப்படுத்துகிறோமோ அந்த நபரையும் அறிந்திருக்க வேண்டும். அந்திரேயாவுக்கு இந்த அனுபவம் நிறையவே இருந்திருக்கிறது போல. தன் சகோதரையும் அறிந்து வைத்திருக்கிறார். கூட்டத்தில் உட்கார்ந்திருந்த சிறுவனையும் அறிந்து வைத்திருக்கிறார். திருவிழாவிற்கு வந்த கிரேக்கர்களையும் அறிந்து வைத்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவையும் அறிந்து வைத்திருக்கிறார்.

இரண்டாவதாக, இன்றைக்கு இயேசுவை நான் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்வதை விட, மற்றவர்களை இயேசுவிடம் அறிமுகம் செய்ய வேண்டும். இயேசுவை நாம் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும்போதுதான் இந்த மனமாற்றம், கோயில் இடிப்பு, கொள்ளை போன்ற பிரச்சினைகள் எல்லாம் வருகின்றன. ஒரு சேஞ்சுக்கு, இருப்பவர்கள் இருப்பது போல இருக்கட்டும். ஆனா இவங்க எல்லாத்தையும் பற்றி நாம் இயேசுவிடம் பேசிப் பார்க்கலாமே! இவங்க எல்லாத்தையும் இயேசுவிடம் அறிமுகம் செய்து வைக்கலாமே!

Wednesday, November 28, 2018

தலைநிமிர்ந்து நில்லுங்கள்

இன்றைய (29 நவம்பர் 2018) நற்செய்தி (லூக் 21:20-28)

நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்

எருசலேம் அழிவைப் பற்றி இயேசு முன்மொழிவதன் தொடர்ச்சியை இன்றைய நற்செய்திப் பகுதியில் வாசிக்கின்றோம். இயேசு இறந்து உயிர்த்த 40 ஆண்டுகளுக்குப் பின் எருசலேம் நகரம் போரில் அழியத் தொடங்கியது. அந்தக் காலகட்டத்தில்தான் நற்செய்தி நூல்கள் எழுதப்பட்டன. ஆக, நற்செய்தியாளர்கள் தங்கள் கண்முன் நிகழ்ந்த நிகழ்வுகளை இயேசுவே இறைவாக்காக உரைத்ததாக எழுதியிருக்கலாம் என்பது பல ஆசிரியர்களின் கருத்து. ஏனெனில், போர் ஏற்படுத்தும் குழப்பம், தாக்கம், இழப்பு, கண்ணீர், பரிதாபம் அனைத்தையும் மிகவும் துல்லியமாகப் பதிவு செய்கின்றனர் நற்செய்தியாளர்கள் - குறிப்பாக, லூக்கா: 'கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை ... கூரான வாள் ... சிறை ... குழப்பம் ... அச்சம் ... மயக்கம்.'

மேலும், கிறிஸ்தவர்கள் 'பருஸியா' என்று சொல்லப்படும் இரண்டாம் வருகை மிக அருகில் இருந்ததாக எண்ணினர். ஆகையால்தான், 'கதிரவன் நிலாவில் அடையாளம், வான்வெளிக் கோள்கள் அதிர்தல்' என்று உருவகமாக உலக முடிவை அறிவிக்கின்றனர் நற்செய்தியாளர்கள்.

நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்நேரம் நாசா அனுப்பிய இன்சைட் விண்கலம் செவ்வாய் கோளை இப்போது படம் பிடித்து அனுப்பிக் கொண்டிருக்கும். இந்நேரம் அமெரிக்காவின் அப்பொல்லா-இரண்டு உண்மையிலேயே நிலவிற்குச் சென்றதா என இரஷ்யா ஆராய்ந்து கொண்டிருக்கும். கதிரவன், நிலா, விண்மீன், வான்வெளிக் கோள்கள் என அனைத்தும் இன்று மனிதர்களின் ஆராய்ச்சிப் பொருள்களாகிவிட்டன.

இன்னொரு பக்கம், இயேசு, லூக்கா, நம் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, நீங்கள், நான் என எல்லாவற்றிற்கும் அழியாத சாட்சிகள் யார் என்றால் இந்த கதிரவன், நிலா, விண்மீன்கள், மற்றும் கோள்கள்தாம் - 'அன்று வந்ததும் அதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா!'

இவை எல்லாம் நடக்குமா?

'இவை எல்லாம் நடக்குமா? நடக்காதா?' என்பது கேள்வி அல்ல.

மாறாக, இவை நடக்கும் போது எப்படி இருக்க வேண்டும்? என்பதுதான் கேள்வி.

'தலைநிமிர்ந்து நில்லுங்கள்'

இது ஒரு படைவீரர் சொல்லாடல். தலைநிமிர்ந்து நிற்கும் போர்வீரர் தயார்நிலையில் இருக்கிறார். விழித்திருக்கிறார். கூர்ந்து கவனிக்கிறார்.

ஆக, அந்த நாளை எதிர்கொள்ள 'தயார்நிலை,' 'விழிப்பு,' 'கூர்ந்து கவனித்தல்' அவசியம்.

இன்று நம் வாழ்வின் அன்றாட பிரச்சினைகளுக்கு - காய்ச்சல் போன்ற நோயில் தொடங்கி, மது போன்ற பழக்கங்கள் வரை - காரணம், நாம் தலைநிமிர்ந்து நில்லாததே.

நாம் தலை சாய்ந்து அல்லது தலை கவிழ்ந்து கிடக்கும்போதுதான் எளிதாக விழுந்துவிடுகிறோம். நம் பார்வை குறுகி, நாம் சரியாகப் பார்க்க முடியாமல் தவிக்கிறோம்.

இன்று, தலைநிமிர்ந்து நாம் சும்மா நின்றாலே நம்மை அறியாமல் ஒரு தன்னம்பிக்கை நம்மை தழுவிக்கொள்ளும். தன் மேல் நம்பிக்கை உள்ள ஒருவர் எதையும், யாரையும் எதிர்கொள்ள முடியும் - அது மானிடமகனின் வருகையாக இருந்தாலும்.


Tuesday, November 27, 2018

மனஉறுதியோடு

இன்றைய (28 நவம்பர் 2018) நற்செய்தி (லூக் 21:12-19)

மனஉறுதியோடு

இறுதிக்கால நிகழ்வு பற்றிய பதிவுகளை இந்த வாரம் வாசித்துக்கொண்டிருக்கிறோம்.

இன்றைய நற்செய்திப் பகுதி ஒரே நேரத்தில் எச்சரிக்கையாகவும், ஆறுதலாகவும் இருக்கிறது. எச்சரிக்கை, ஏனெனில் நம்பிக்கை கொண்ட நிலையில் நிறையத் துன்பங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஆறுதல், ஏனெனில் தலைமுடி ஒன்றுகூட விழாது.

எச்சரிக்கையிலிருந்து ஆறுதலுக்குக் கடக்க வைக்கும் மந்திரச் சொல் மனஉறுதி.

மனஉறுதியில் மாறாத அர்ப்பணமும் தெளிவான முடிவும் இருக்கும்.

Sunday, November 25, 2018

எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்

இன்றைய (26 நவம்பர் 2018) நற்செய்தி (லூக் 21:1-4)

எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்

கடந்த இரு வாரங்களுக்கு முன் ஞாயிற்றுக்கிழமை வாசித்த நற்செய்திப் பகுதியை நாம் இன்று மீண்டும் வாசிக்கின்றோம். எருசலேம் ஆலயத்தில் காணிக்கைப் பெட்டி அருகே அமர்ந்திருக்கின்ற இயேசு, வறுமையில் வாடிய ஒரு கைம்பெண் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டு, 'இந்த ஏழைக் கைம்பெண் எல்லாவற்றையும்விட மிகுதியான காணிக்கை போட்டிருக்கிறார் ... இவர் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டுவிட்டார்' என்று பாராட்டுகின்றார்.

மற்றவர்கள் தங்களிடம் உள்ள மிகுதியான செல்வத்திலிருந்து போட்டார்கள். அதாவது, முழுவதையும் போடவில்லை.

ஆனால், இக்கைம்பெண் எல்லாவற்றையும் போட்டுவிட்டார்.

வணிக அல்லது குடும்ப கணக்கு வழக்குப் பார்க்கிறவர்களுக்கு பரிச்சியமான ஒரு வார்த்தை 'பிஎஃப்' (ப்ராட் ஃபார்வர்ட்). அதாவது, முன்பக்கம் உள்ள வரவு செலவைக் கூட்டி, மீதம் இருப்பதை அடுத்த பக்கத்திற்கு எடுத்து எழுதுவதுதான் 'ப்ராட் ஃபார்வர்ட்'.

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபிஎம் கம்பெனியிலிருந்து வெளியேற்றப்பட்டவுடன், தானாகவே தன் நிறுவனத்தை ஒரு கார் ஷெட்டில் தொடங்குகின்றார். இப்படியாக புதியதாகத் தொடங்குவதை 'ஸ்டார்ட்டிங் ஃப்ரம் தெ ஸ்க்ராட்ச்' என்று சொல்கின்றோம். அதாவது, ஒரு கார் பொலிவாக இருக்கிறது என்றால், அதன் தொடக்கம் 'ஸ்க்ராட்ச்'. ஆனால், உண்மையில் இந்த வார்த்தை உருவானது கிரிக்கெட் அல்லது கோல்ஃப் விளையாட்டிலிருந்துதான். ஒரு பேட்ஸ்மேன் கிரீஸூக்குள் வந்தவுடன், தன் பேட்டை, தன் உடல் அளவைப் பொறுத்து அளந்து ஒரு கோடு கிழிப்பார். அந்தக் கோடுதான் ஸ்க்ராட்ச். தனக்கு முன் இருந்தவர் கிழித்த கோட்டிலிருந்து அவரால் விளையாட முடியாது. புதியதாக அவரே தொடங்க வேண்டும்.

இன்றைய நற்செய்தியில் வரும் ஏழைக் கைம்பெண் செய்தவை இரண்டு:

1. அவருடைய குடும்ப கணக்கு ஏட்டில் 'ப்ராட் ஃபார்வர்ட்' என்ற குறிப்பு கிடையாது. ஏனெனில் அவர் முழுவதையும் போட்டுவிட்டார். அவர் 'ஜீரோ பேலன்ஸில்'தான் தன் அடுத்த நாள் வாழ்வைத் தொடங்க வேண்டும்.

2. ஒவ்வொரு நாளையும் அவர் ஸ்க்ராட்சிலிருந்து தொடங்கினார்.

இவருடைய இந்தச் செயல்கள் நம் வாழ்க்கை மேலாண்மைக்குப் பயன்படுபவையாக இருக்கின்றன. எப்படி?

பல நேரங்களில் நாம் புதிய செயல்களை அல்லது நம் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் செயல்களைச் செய்ய முடியாததன் காரணம், நாம் ஒவ்வொரு நாளும் 'ப்ராட் ஃபார்வர்ட்' செய்தே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நான் கல்லூரியில் கற்பிக்கிறேனா? நேற்று விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறேன். நான் மருத்துவரா? நேற்று பார்த்த நபரிலிருந்து தொடங்குகிறேன். இப்படிச் செய்வதால் என் வாழ்வு இழுத்துக்கொண்டே போகும். புதியதாக என்னால் எதையும் செய்ய முடியாது.

மேலும், உறவு நிலைகளில் நாம் பழைய காயங்கள், வருத்தங்கள், ஏமாற்றங்கள், அவமானங்கள் ஆகியவற்றை மறுபடி ஃப்ராட் ஃபார்வர்ட் செய்து வாழும்போது, உறவு நிலைகள் மேலும் மேலும் கசந்துகொண்டே இருக்கும். ஆக, கைம்பெண் மாதிரி அன்றன்றுள்ளதை அன்றன்றே முடித்துவிட வேண்டும்.

அதே வேளையில், வாழ்வில் சில உறவுகளை நாம் இழக்கும்போது, சில பணிகளை நாம் விடுகின்ற சூழல் எழும்போது, 'என்னாலும் ஸக்ராட்சிலிருந்து தொடங்க முடியும்' என்ற நம்பிக்கை வேண்டும்.

ஒரு நாளாவது, இந்தக் கைம்பெண்ணைப் போல, என்னிடம் உள்ளது அனைத்தையும் அப்படியே மொத்தமாகப் போட்டுவிட்டு, புதிய நாளை, எந்தவொரு ப்ராட் ஃபார்வர்டும் இல்லாமல், ஸக்ராட்சிலிருந்து தொடங்க வேண்டும்போல இருக்கிறது.

ஆனால், அந்தப் பெண்ணிடம் இருந்த துணிச்சல் எனக்கு இல்லை.

அந்தப் பெண்ணின் துணிச்சலுக்குக் காரணம் அவருடைய மனச்சுதந்திரம். தன் வாழ்வைத் தான் வாழ்ந்தார். இழப்புக்கள் கூடக்கூடத்தான் மனம் அந்தப் பக்குவம் பெறும் என நினைக்கிறேன்.

Friday, November 23, 2018

அவர்கள் சாகமுடியாது

இன்றைய (24 நவம்பர் 2018) நற்செய்தி (லூக் 20:27-40)

அவர்கள் சாகமுடியாது

இன்றைய நற்செய்திப் பகுதியில் இயேசுவிடம் வருகின்ற சதுசேயர்கள், 'ஒரு பொண்ணும் ஏழு கணவர்களும்' என்ற நிகழ்வைக் குறிப்பிட்டு, 'உயிர்த்தபின் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்?' எனக் கேட்கின்றனர்.

சதுசேயர்கள் இந்தக் கதையை எங்கிருந்து கண்டுபிடித்தார்கள்? என நான் அடிக்கடி நினைப்பதுண்டு.

உயிர்ப்பு, வானதூதர்கள், மறுவாழ்வு பற்றி நம்பாத இவர்கள், தங்கள் நம்பிக்கையை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்ட உருவாக்கிய கதையாடலாகக்கூட இது இருக்கலாம். சதுசேயர்கள் இயேசுவின் சமகாலத்தில் விளங்கிய ஒரு சமயக் குழுவினர். இவர்களுக்கு அரசியலில் நிறைய ஈடுபாடு உண்டு. இவர்கள் 'சாதோக்' என்ற தலைமைக்குருவின் வழிமரபினர். குருக்களாக இருந்தவர்கள் மறுபிறப்பு பற்றி நம்பாமல் இருக்கிறார்கள். மேலும், சட்டம்-இறைவாக்கு-எழுத்து என்ற மூன்று பகுதிகளைக் கொண்ட 'தனாக்' என்ற எபிரேய விவிலியத்தின் முதல் பகுதியை - அதாவது, சட்டநூல்கள் 5 - மட்டும் ஏற்றுக்கொண்டவர்கள்.

இந்தப் பின்புலத்தில்தான் இயேசு அவர்களுக்கு சட்டநூல்களில் ஒன்றான விடுதலைப் பயண நூலிலிருந்து (3:6) எடுத்துக்காட்டு தருகின்றார்.

அவர்களுக்குப் பதில் தரும் இயேசு, 'உயிர்த்தெழும்போது திருமணம் செய்துகொள்வதில்லை' என்கிறார்.
'எதுக்காக கல்யாணம் முடிக்கிறோம்? என்றே பாதிப்பேருக்குத் தெரியவில்லை' என்று ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் புலம்புவார் எம்.ஆர். ராதா.

திருமணம் எதற்காக முடிக்கிறோம்?

இறந்துபோகும் மனிதர்கள் தாங்கள் இறவாதவர்கள் என்று மரணத்திற்குக் காட்டுவதற்காகவே திருமணம் புரிகின்றனர். இல்லையா?

இறப்பு நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம்மைத் தழுவிக்கொள்கிறது. இந்த இறப்பை ஏமாற்றும் ஒரு வழி, நான் இறக்குமுன் எனக்கு ஒரு வாரிசை உருவாக்கிவிடுவது. அவர் இறக்குமுன் அவர் அவருக்கான வாரிசை உருவாக்கிவிடுவார். ஆக, ஒரு மனிதர் இறந்தாலும் அவரின் வித்து இன்னொருவரில் வாழ்கிறது. இப்படியாக, இறப்பை ஏமாற்ற மனிதர்கள் கண்டுபிடித்த ஒருவழிதான், அல்லது இறவாமை என்னும் அனுபவம் தருவதே திருமணம். (இங்கே பெண்கள் வித்துக்கள் விதைக்கப்படும் விதைநிலம் என்று மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், அன்றைய புரிதல் அப்படித்தான் இருந்தது. குடும்ப ஆணின் வித்து நிலைக்க வேண்டும் என்பதற்காகத்தான், ஏழு ஆண்களும் ஒரு பெண்ணைத் திருமணம் முடிக்கின்றனர்).

இயேசுவின் புரிதலும் இதையொத்தே இருக்கின்றது. ஏனெனில், இறவாமைக்காக திருமணம் முடிக்கிறார்கள் என்றால், இறவாமை வந்துவிட்டால் திருமணம் தேவையற்றதாகிவிடுகிறது. ஏனெனில், ஒவ்வொருவரின் வித்தும் அவரவரிடமே வாழ முடியும்.

இயேசுவின் பதில் ஒரே நேரத்தில் நமக்குத் திருமணம் பற்றிய புரிதலையும், மறுவாழ்வு பற்றிய புரிதலையும் தருகின்றது. எப்படி?

எரியும் முட்புதரில் தன்னை மோசேக்கு வெளிப்படுத்துகின்ற கடவுள், 'நான் ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என அறிமுகம் செய்கின்றார். ஆக, நாம் இறக்கும்போது நம் வித்து இறைவனில் விதைக்கப்படுகின்றது. இறைவன் இறவாதவர். இவ்வாறாக, நாமும் அவரில் என்றென்றும் வாழ முடிகிறது.

இவ்வுலகில் நடக்கும் திருமணம் மறுவாழ்வின் இறவாமையை முன்னுரைப்பதாக இருக்க வேண்டும். திருமணத்தில் ஒருவர் மற்றவரின் வாழ்வு மட்டுமே முதன்மைப்படுத்தப்பட வேண்டும். சின்ன சின்ன விடயங்களில் கூட அடுத்தவரின் அழிவு முதன்மைப்பத்தப்படக் கூடாது. 'இக்கால வாழ்வு' குறுகியது. இக்குறுகிய காலத்தில் இனிமையாக வாழ்தல் நலம்.

மேலும், மணத்துறவு பற்றிய புரிதலையும் இங்கே காணமுடிகிறது.

மணத்துறவை மேற்கொள்பவர்கள் தாங்கள் விரும்பியே அதை ஏற்கின்றனர். ஆக, அவர்கள் மணத்துறவை தங்களை அழிக்கும் ஒரு சுமையாக பார்க்காமல், இவ்வுலகிலேயே, 'அவர்கள் வானதூதரைப் போல, கடவுளின் மக்களாய் இருப்பதாக உணர்ந்து,' தங்கள் வாழ்வை அவரில் விதைக்க வேண்டும்.

'வாழ்வோரின் கடவுளே' நம் கடவுள். இறப்பில் மெல்லிய வேலியைக் கடந்து நாம் இந்த வாழ்விலிருந்து, அந்த வாழ்விற்குச் செல்கின்றோம். இரண்டு பக்கமும் இருப்பது வாழ்வே.


Thursday, November 22, 2018

என்ன செய்வது?

இன்றைய (23 நவம்பர் 2018) நற்செய்தி (லூக் 19:45-48)

என்ன செய்வது?

நேற்றைய நற்செய்திப் பகுதியில் எருசலேம் நகரின் ஆலயத்தைப் பார்த்துக் கண்ணீர் விட்ட இயேசு, இன்றைய நற்செய்தியில் அதன் உள்ளே நுழைந்து, அங்கே விற்பனை செய்துகொண்டிருந்தவர்களை வெளியே துரத்துகின்றார். மேலும், ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வருகின்றார்.

இயேசு கோவிலில் செய்ததும், அவர் செய்வதும் தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மற்றும் மக்களின் தலைவர்களின் கண்களில் விழுந்த தூசியாக உறுத்துகிறது.

இந்த இடத்தில் லூக்கா அழகாக ஒன்றைப் பதிவு செய்கின்றார்: 'ஆனால் என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை.'

இயேசுவின் நாணயத்திற்கும் நன்மைத்தனத்திற்கும் இதைவிட வேறு சான்று தேவையில்லை என நினைக்கிறேன்.

இன்று காலை டுவிட்டரில் பவுலோ கோயலோ அவர்களின் வரி ஒன்றை வாசித்தேன்: 'வாழ்வில் வெற்றி அடைய ஒரே வழி: நீ உன்னிடமே பொய் சொல்லாதே!'

கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். எடுத்துக்காட்டாக, காலை 5 மணிக்கு நான் எழுவேன் என்று எனக்கு நானே சொல்லிவிட்டு, காலையில் 6 மணிக்கு எழும்போது நான் என்னிடமே பொய் சொல்கிறேன். சின்னச் சொல்லையே என்னால் காப்பாற்ற முடியாதபோது பெரிய சொல்லைக் காப்பாற்ற என்னிடம் தன்னம்பிக்கை இல்லாமல் போய்விடுகிறது. ஏனெனில், என் மூளை நான் எதைச் சொன்னாலும், 'இவன் பொய் சொல்கிறான்' என்று சொல்ல ஆரம்பிக்கும். அப்படி இருக்கும்போது, 1000 பேர் என்னை நம்பினாலும், என்மேல் எனக்கு நம்பிக்கை வராது. ஆனால், அதுவே நான் ஒன்றைச் சொல்லி அதை அப்படியே செய்தால் என் மூளை என்னை நம்ப ஆரம்பிக்கும். 'இவனுக்கு கறுப்பு என்றால் கறுப்பு, வெள்ளை என்றால் வெள்ளை, 1 என்றால் 1, 5 என்றால் 5' என்று தன்னம்பிக்கையை வளர்க்கும். அப்படி இருக்கும்போது, 1000 பேர் என்னை நம்பவில்லையென்றாலும், என் மனம் என்னை நம்பும். வேலையும் எளிதாக முடியும்.

இயேசுவிற்கும் நான் இதைப் பொருத்திப் பார்க்கிறேன்.

இயேசு ஒருபோதும் தன்னிடம் பொய் பேசியதே இல்லை.

'இது கோவில் என்றால் கோவில்' - அவ்வளவுதான் அவருக்கு. 'கோவில்தான், ஆனால் வியாபாரம் செய்யலாம்' என்று அவர் சொல் ஒன்று, செயல் மற்றொன்று என்று இல்லை. இயேசு அப்படி இருந்ததால்தான், தலைவர்கள், 'இவரை என்ன செய்வதென்று தெரியவில்லை' என்று யோசிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தனக்குத் தானே பொய் சொல்லாதவர்களை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது. அப்படியே அவர்கள் எதைச் செய்ய நினைத்தாலும் அவர்கள் தங்களை முழுவதும் நம்புவதால் வெகு எளிதாக அதிலிருந்து எழுந்துவிடுவர்.

என் வாழ்விலும், 'இவனை என்னை செய்வது என்றே தெரியவில்லையே?' என்று மற்றவர்கள் நினைக்கும்படி என் வாழ்வு இருக்கிறதா? என்பதுதான் என் கேள்வியாக இருக்கிறது.

என்னிடம் நானே பொய் சொல்லும்போது மற்றவர்கள் என்னை எளிதில் வீழ்த்திவிட நானே அதற்கு வழி அமைத்துக் கொடுத்துவிடுவேன்.

என்னிடம் நான் பொய் பேசும்போது அது எப்படி இருக்கும் என்பதை இன்றைய முதல் வாசகம் (காண். திவெ 10:8-11) உருவகமாகச் சொல்கிறது (அது சொல்லப்படும் சூழல் வேறு!).

'வாயில் தேனைப் போல இனித்தது. ஆனால், தின்றபோது என் வயிற்றில் கசந்தது.'

'5 மணிக்கு எழுகிறேன்' எனச் சொல்லிவிட்டு, '6 மணிக்கு' எழுந்தால் அது தேனைப் போல இனிக்கும். ஆனால், கொஞ்ச நேரத்தில் வயிற்றில் இறங்கியவுடன் - நாள் நகர நகர - அது கசக்கும்.

இயேசு தனக்குத் தானே உண்மையாய் இருந்ததால் இன்றைய நற்செய்தி இப்படி முடிகிறது: 'மக்கள் அனைவரும் அவர் போதனையைக் கேட்டு அவரையே பற்றிக் கொண்டிருந்தனர்.' அதாவது, இயேசுவின் உதடுகளில் தொங்கிக் கொண்டிருந்தனர்!

Wednesday, November 21, 2018

கண்ணீர்

இன்றைய (22 நவம்பர் 2018) நற்செய்தி (லூக் 19:41-44)

கண்ணீர்

கஜா புயல் தாக்கிச் சென்ற பகுதிகளைப் பற்றிய காணொளிகளைப் பார்க்கும்போதெல்லாம் மக்கள் எழுப்பும் அழுகைக் கூக்குரல் இரண்டு நிலைகளில் இருக்கிறது:

ஒன்று, 'ஐயோ, எங்களுக்கு இப்படி ஆகிவிட்டதே' என்பது. இந்த அழுகையில் அவர்களின் சோகம், இழப்பு, கலக்கம் அனைத்தும் தெரிகிறது.

இரண்டு, 'ஐயோ, இந்த அரசு இப்படி இருக்கிறதே' என்பது. இந்த அழுகையில் அரசின் கையாலாகாத நிலையும், அதை எண்ணிய கோபமும் தெறிக்கிறது.

இன்றைய நற்செய்திப் பகுதியில் 'இயேசு அழுதார்' என்று வாசிக்கிறோம். இயேசுவின் அழுகை, மேற்காணும் இரண்டு வகையும் தாண்டி, ஒருவகையான பரிவு அல்லது கருணையை வெளிப்படுத்தும் அழுகையாக இருக்கிறது.

இயேசு இரண்டு நிகழ்வுகளில் கண்ணீர் வடித்ததாக நற்செய்தியாளர்கள் பதிவு செய்கின்றனர்: ஒன்று, லாசரின் கல்லறையின் முன் (யோவா 11:35), இரண்டு, இன்றைய நற்செய்திப் பகுதி.

கல்லறையின் முன் நின்று அழுத இயேசு இறந்துபோன தன் நண்பன் லாசருக்காக அழுதிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அவருக்குத் தெரியும் லாசரை உயிர்ப்பிக்கலாம் என்று. ஆனால், இறப்பு என்ற எதார்த்தம்தான் அவருடைய அழுகைக்குக் காரணமாக இருந்திருக்கும். 'இன்று நான் உயிர்க்கச் செய்யும் லாசர் மீண்டும் இறப்பானே' என்ற ஆதங்கமும், இறப்பின்முன் அவர் உணர்ந்த கையறுநிலையும்தான் அவருடைய கண்ணீருக்குக் காரணமாக இருந்திருக்கும்.

எருசலேம் நகரத்தைப் பார்த்து இயேசு அழுத நிகழ்வை எடுத்துக்கொள்வோம்.

'இயேசு எருசலேம் நெருங்கி வந்ததும் கோவிலைப் பார்த்து அழுதார்' என லூக்கா பதிவு செய்கிறார். கோவிலைப் பார்த்து யாராவது அழும்போது வழக்கமாக அழுபவர் தன்னை முன்னிறுத்தி அழுவார். எடுத்துக்காட்டாக, எனக்கு தாங்க முடியாத கஷ்டம் வருகிறது என வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில் கோவிலின் முன் நின்று நான் அழும்போது, அங்கே நான் என் கஷ்டத்தை நினைத்து அல்லது என் இயலாமையை நினைத்து நான் அழுகிறேனே தவிர, 'கோவில் இப்படி இருக்கிறதே' என நான் அழுவதில்லை.

ஆனால், இயேசுவின் அழுகை கோவிலை மையப்படுத்தியதாக இருக்கிறது.

'இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக் கூடாதா?' எனக் கேட்கிறார் இயேசு. 'எருசலேம்' என்ற பெயரிலேயே 'சலேம்' அல்லது 'சலோம்' ('அமைதி') ஒளிந்திருக்கிறது. அமைதிக்குரிய வழி என இயேசு சொல்வது மெசியாவின் வருகையை அறிந்துகொள்ளுதலைக் குறிக்கிறது. ஆகையால்தான், 'அறிந்திருக்கக் கூடாதா?' எனக் கேட்கின்ற இயேசு, 'கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்துகொள்ளவில்லை' என்கிறார்.

இதற்கு இடையில் இயேசு சொல்கின்ற அனைத்தும் - பகைவர்களின் முற்றுகை, அழிவு, தரைமட்டமாக்கப்படுதல் - அனைத்தும் கிபி 70ல் பேரரசர் டைட்டஸ் அவர்களால் நடந்தேறுகிறது. அன்று இழந்த எருசலேம் ஆலயத்தின் மாட்சி அதன்பின் அதற்கு வரவே இல்லை. ஆகையால்தான், இன்றும் யூதர்கள் எருசலேமின் மேற்குச் சுவர்மேல் விழுந்து அழுகின்றனர்.

இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

'அமைதிக்குரிய வழியை நான் அறிகிறேனா?' என்ற கேள்விதான் அது.

அந்த வழி எது? கடவுள் என்னைத் தேடி வருவது.

ஒவ்வொரு நிகழ்வுகளிலும், நபர்களிலும் அவர் என்னைத் தேடி வருகிறார்.

நான் அவரைக் கண்டுகொள்ளாதபோது அவர் இன்றும் எனக்காகக் கண்ணீர் வடிக்கிறார்.

Tuesday, November 20, 2018

அர்ப்பணம்

இன்றைய (21 நவம்பர் 2018) நற்செய்தி (மத் 12:46-50)

அர்ப்பணம்

இன்று நாம் கன்னி மரியாளை அவரது பெற்றோர் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த நாளை நினைவுகூர்கிறோம். இந்த நினைவு கொண்டாடப்படாத இடத்தில் நற்செய்தியாக லூக் 19:11-28 வாசிக்கப்படும்.

நம் சிந்தனைக்குத் திருநாளின் வாசகங்களை எடுத்துக்கொள்வோம்.

நீண்ட நாள்கள் குழந்தைப்பேறு இல்லாத சுவக்கீன்-அன்னா தம்பதியினர் தங்களுக்குக் கடவுளால் கிடைத்த மரியாளை அவரது மூன்றாம் வயதில் எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணம் செய்தனர் என்று யாக்கோபின் முதற்நற்செய்தி (ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி) கூறுகிறது. மேலும், பிறந்த போதும், பிறந்த பின்னும் அவர் எந்த பாவ மாசுமின்றி இருந்தார் என்று மரியாளின் பிறப்பு நற்செய்தி  நூல் (இதுவும் ஏற்றுக்கொள்ளப்படாத நூலே) பதிவு செய்கிறது.

எருசலேம் ஆலயத்தில் ஆண் தலைப்பேறுகள் மட்டுமே அர்ப்பணம் செய்யப்பட்டதை மற்ற நற்செய்தி நூல்களும், ஐந்நூல்களும் சொல்கின்றன. இந்தப் பின்புலத்தில் மரியாளின் அர்ப்பணம் வித்தியாசமாகத் தெரிகிறது.

மேலும், இந்த நிகழ்வைத்தான் 'இறைவனின் தாய் இறை இல்லம் நுழைந்த நாள்' என்று கீழைத்திருச்சபை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறது.

'அர்ப்பணம்' என்பதன் ஆங்கிலச் சொல்லின் (டெடிகேட்) மூலச்சொல்லை ஆராயும்போது, 'டெ,' 'டிகாரே' என்ற இரண்டு சொற்களிலிருந்து அது வருகிறது. அதாவது, 'ஒன்றை சத்தம் போட்டுச் சொல்லி ஒதுக்கி வைப்பது' தான் 'டெடிகாரே' அல்லது 'டெடிகேட்'. ஆக, ஆலயத்தில் அர்ப்பணம் செய்யப்படும் குழந்தையை, அக்குழந்தையின் பெற்றோர்கள், சத்தம் போட்டு, 'இது ஆண்டவருக்கான குழந்தை' என்று அறிவிக்கிறார்கள். அந்த நேரம் முதல் அக்குழந்தை ஆண்டவருக்கானது என்றாகிவிடுகிறது.

இந்த நாள்களில் நம் அண்டை வீடுகளில் நிறையப் பேர் ஐயப்பன் மற்றும் முருக கடவுளர்களுக்கு தங்களை நேர்ந்துகொண்ட மாலை அணிந்துகொள்வார்கள். மாலை அணிந்துவிட்டவரை அனைவரும் 'சாமி' என்று அழைப்பர். அவரின் பெயரைச் சொல்லி யாரும் கூப்பிட மாட்டார்கள். 'டேய் மாடசாமி, டீ வாங்கிட்டுவா' என்று அதட்டும் மேலதிகாரிகூட, நாற்பது நாள்களுக்கு, 'சாமி டீ வாங்கிட்டு வாங்க' என்பார். மனைவி கணவன் அருகில் வரமாட்டார். கணவருக்கென்று தனி தட்டு, டம்ளர், இலை, பாய் என இருக்கும். இவர் அணிந்திருக்கும் மாலை இவரின் அர்ப்பணத்தின் அடையாளமாகவும், 'இவர் அர்ப்பணிக்கப்பட்டவர்' என்று மற்றவர் அறிந்துகொள்வதற்கு வசதியாகவும் இருக்கிறது.

இவ்வாறாக, ஒன்று குறுகிய காலத்திற்கோ அல்லது நீண்ட காலத்திற்கோ அர்ப்பணம் செய்யப்படும்போது, 'அது எதற்காகவோ அதற்காக மட்டுமே' என்ற நோக்கு கூர்மைப்படுத்தப்படுகிறது. மரியாளும், தன் குழந்தைப் பருவம் முதல், கடவுளின் திருவுளம் நிறைவேற்ற அர்ப்பணிக்கப்படுகிறார். ஆக, மரியாள் இயேசுவின் தாய் என்ற நிலைக்கு உயர்ந்தது அவர் இயேசுவைப் பெற்றெடுத்த நிலையைவிட, இறைத்திருவுளம் நிறைவேற்றும் இந்நிலையிலேதான்.

இதையொட்டியே இன்றைய முதல் வாசகத்தில் (செக் 2:10-13), எருசலேம் வந்து சேரும் அனைவரும் 'அவருடைய மக்களாய் இருப்பார்கள்' என்று அனைவருக்குமான அர்ப்பண நிலையை எடுத்தியம்புகிறார்.

நாம் எதற்காக அல்லது யாருக்காக வேலை செய்கிறோமோ அவருடையவராகிறோம்.

எதற்காக அல்லது யாருக்காக எனத் தெரிந்து கொள்வதே அர்ப்பணம்.

Monday, November 19, 2018

சக்கேயு

இன்றைய (20 நவம்பர் 2018) நற்செய்தி (லூக் 19:1-10)

சக்கேயு

கதைமாந்தர்களை பெயர் சொல்லி அறிமுகம் செய்வதைவிட அவர்களின் உடல், மனப் பண்புகளைச் சொல்லி அறிமுகம் செய்வது லூக்காவின் இலக்கியத்திறத்திற்கு ஒரு சான்று.

'சக்கேயு பார்க்க விரும்பினார்,' 'சக்கேயு குட்டையாய் இருந்தார்' என்ற இரண்டு சொல்லாடல்கள் வழியாக சக்கேயு என்னும் கதைமாந்தரை நாளைய நற்செய்தி வாசகப் பகுதியில் அறிமுகம் செய்கிறார் லூக்கா. சக்கேயுவின் விருப்பத்திற்கு முதல் தடையாக இருந்தது அவரின் உடல் அமைப்பு என்பதால் இரண்டையும் ஒரே தொனியில் சொல்கின்றார் லூக்கா.

'சக்கேயு' என்ற பெயர் எந்த வார்த்தையிலிருந்து வந்தது என்று ஆராயும்போது, அறிஞர்கள் இரு வார்த்தைகளைக் குறிப்பிடுகின்றனர்: 'சக்கார் யாவே' ('கடவுள் நினைத்தார்' அல்லது 'கடவுளை நினைப்பது'), 'சக்கா யாவே' ('கடவுள் மட்டும்' அல்லது 'கடவுளின் தூய்மை'). இரண்டு வார்த்தைகளுமே சக்கேயுவுக்குப் பொருந்துவதாக இருக்கிறது: 'கடவுள் நினைத்தார்' - ஆகையால்தான், சக்கேயு ஏறி நின்ற மரத்திற்கு அருகில் வருகின்ற இயேசு, அண்ணாந்து பார்த்து, 'விரைவில் இறங்கி வா, உமது வீட்டில் நான் தங்க வேண்டும்' என்கிறார்.

மற்ற வீடுகளுக்கு (மார்த்தா-மரியா, பரிசேயர், தொழுநோயாளர் சீமோன்) உணவருந்தச் செல்லும் இயேசு இங்கே தங்கச் செல்கின்றார். இதைக் கூர்ந்து கவனித்தால் சக்கேயுவின் செயல்களை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இயேசு தங்குவதற்குத் தடையாக இருந்தவை சக்கேயுவின் வீட்டுப் பொருள்கள். அதாவது, 'கடவுள் மட்டுமே' எனப் பெயர் கொண்டிருந்த ஒருவர், 'கடவுளோடு சேர்த்து மற்றவற்றையும் வைத்திருந்தார்.' ஆகையால்தான், கடவுள் வந்தவுடன் மற்றவற்றைக் கழிக்கின்றார்: 'ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன். எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்.'

இயேசுவும், 'இன்று இந்த வீட்டுக்கு மீட்பு உண்டாயிற்று' என்கிறார். ஆச்சர்யமாக இருக்கிறது. ஏனெனில் மீட்பு என்பது பொருளாதார வழக்கில் பிணைத்தொகை. வீட்டில் உள்ள பாதிச் சொத்து போனவுடன் இயேசு 'மீட்பு' வந்துவிட்டது என்கிறார். பகிர்தலும், சுரண்டல் அகற்றுதலும்தான் மீட்பு என உணர்த்துகின்றார் இயேசு.

இப்படியாக, சர்கார் படம் பார்த்துவிட்டு வந்து வீட்டில் உள்ள விலையில்லா மிக்ஸி, ஃபேனை உடைத்ததுபோல, இயேசுவைப் பார்த்துவுடன் தன் வீட்டில் உள்ள விலையில்லாப் பொருள்களை எல்லாம் வீசி எறிகிறார் சக்கேயு.

இதெல்லாம் சரி!

இயேசு விருந்து முடிந்து சென்றபிற்பாடு, தன் சொந்த வீட்டுக்குப் போயிருந்த சக்கேயுவின் மனைவி வுPட்டிற்குத் திரும்பியிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

'ஏன்யா, போனா போகுதுன்னு எங்க அப்பாவோட இன்ஃப்லவன்ஸ் பயன்படுத்தி உனக்கு சுங்கத்துறையில் வேலை வாங்கிக் கொடுத்து, உன் சம்பாத்தியத்து வழி வகுத்தால், வர்ற போறவங்களுக்கெல்லாம் எல்லாத்தையும் தூக்கிக் கொடுப்பியா? நானும், என் பிள்ளைகளும் என்ன செய்ய முடியும். நீயும் போ அந்த ஆளு கூட' என்று அனுப்பியிருப்பார்.

இருந்தாலும்,

'கடவுளே போதும்' என்ற பெயர் கொண்ட சக்கேயு அவரின் பின்னாலேயே சென்றிருப்பார்.

சுபம்.