Sunday, January 19, 2014

கிணறுகள் காய்ந்தால்

சகோதர சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்டவர்கள். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். இந்த நிலையில் உறுதியாக நிற்க முழு முயற்சி செய்யுங்கள். இவ்வாறு செய்தால் நீங்கள் ஒருபோதும் தடுமாறமாட்டீர்கள். அப்பொழுது நம் ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் என்றும் நிலைக்கும் ஆட்சியில் பங்கேற்கும் உரிமை உங்களுக்கு நிறைவாக அருளப்படும். (2 பேதுரு 1:10-11, திருப்புகழ்மாலை, சனி 1, காலைப்புகழ்)

நான்கு நாட்களுக்கு முன் நான் மிகவும் அன்பு செய்த, அல்லது என்னை மிகவும் அன்பு செய்த உயிர்களில் ஒன்றான அரோரா பாட்டி இறந்து விட்டது. இரண்டு வாரங்களுக்கு முன் சமயலறையில் வழுக்கி விழுந்து தலையில் இரத்தம் உறைந்து பாவம் பாட்டி ரொம்ப கஷ்டப்பட்டு விட்டார்கள். ஆனாலும் முகத்தில் ஒரு மகிழ்ச்சி அவர்களுக்கு. ஒருநாள் அவர்களைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். 'நான் இறந்துவிட்டால் எனக்காக செபிக்க வேண்டாம் பாதர்!' என்றார். எனக்கு ஆச்சர்யம். 'ஏன்?' என்று கேட்டேன். 'பரிட்சைக்கப் போகுமுன் சாமி கும்பிட்டு போவதை விட படிச்சுட்டுப் போகணும்னு' நினைக்கறவ நான். 'கடவுள் கொடுத்த வாழ்க்கையை நல்லா வாழ்ந்திட்டேன். நன்றி சொல்றேன். என்ன தேர்வு வச்சாலும் நான் வெற்றி பெற்றிடுவேன்!'

என்ன ஒரு திடமான நம்பிக்கை.

வாழ்க்கையை நன்றாக வாழ்பவர்கள் இறப்பைப் பார்த்துச் சிரிக்க மட்டுமே செய்வார்கள்! அரோரா மரணத்தை நேருக்கு நேராக பார்த்தபோது கண்டிப்பாகச் சிரித்திருப்பார்.

இன்றைய நற்செய்தியில் மிக அழகான ஒரு நிகழ்வு உண்டு. திருமுழுக்கு யோவான் பாலைவனத்தில் இருக்கிறார். அவரிடம் இயேசு வருகின்றார்.

நம் வாழ்க்கை பாலைநிலத்தில் இருந்தால் எப்படி இருக்கும்? திருமுழுக்கு யோவான் காட்டுத்தேனும், வெட்டுக்கிளியும் சாப்பிட்டார் என வாசிக்கின்றோம். நாமும் பாலைவனத்தில் இருப்பதாக கற்பனை செய்து பார்ப்போமே. யாருமே நம்முடன் இல்லை. தொலைபேசி இல்லை. இணையம் இல்லை. எலக்ட்ரிக் பில் பற்றி கவலை இல்லை. எல்லாமே வெறுமையாய் இருக்கிறது. அந்த இடத்தில் இயேசு வருகிறார். இங்கே என்ன தோன்றுகிறது? 'நாம் பாலைவனமாய் இருந்தால் கடவுள் அங்கே நம்மைத் தேடி வருவார். மேலும், பாலைவனத்தில் யார் வந்தாலும் எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். எந்தப் பொருளும் யாரையும் மறைக்காது. இயேசு வருவதை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். ஊருக்குள் இருந்தால் தான், நம்மைச் சுற்றிப் பலர் இருந்தால்தான் கடவுள் வருவது நமக்குத் தெரிவதில்லை.

கொஞ்ச நாட்களாக எனக்குக் கடவுள் தன்னையே மறைத்துக்கொள்வதாகவே இருக்கின்றது. 'கிணறுகள் காய்ந்தால்' என்று ஒரு புத்தகம் வாசித்தேன் ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு. நம் கிணறு வற்றும் போது என்ன நடக்கும். ஒரு கிணறு தண்ணீர் நிறைய இருந்தால் எல்லாரும் அதைத் தேடி வருவார்கள். தண்ணீர் வற்றிவிட்டால் யாரும் வரமாட்டார்கள். அப்போது அந்தக் கிணறு என்ன நினைக்கும்? 'நான் நினைப்பது போல நீங்கள் இல்லை!' என்பதற்காக என்னிடம் யாரும் வருவதில்லை என்று நம்மைப் பார்த்துக் கேட்கும். 

கிணறு வெறுமையாய் இருந்தால் அதைத் தேடி வருபவர் அதன் உரிமையாளர் மட்டுமே. வாழ்க்கை என்ற கிணறு, மனம் என்ற கிணறு வெறுமையாகும்போது அதன் உரிமையாளராகிய கடவுளும் நம்மிடம் வருகிறார்.

1 comment:

  1. Anonymous1/19/2014

    பாலை வனத்தில் தனித்து விடப்பட்ட ஒருவரை இயேசு காணவந்தால்.....?? அழகான கற்பனை.அமைதியின் தெய்வத்தை இரைச்சலில் தேட முடியாது....இது முதியோர் வாக்கு.வெறுமையான மனம் என்பதை எதிர்மறையாகக் கொள்ளாமல்
    சலனமற்ற மனம் என்று பொருள் கொண்டால் அதைத்தேடியும் ஆண்டவன்
    வரலாமே!

    ReplyDelete