Thursday, January 16, 2014

ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாளர்கள்!

இப்போது சிறிது காலம், நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருறவேண்டியிருக்கும். அந்நாளிலே பேருவகை கொள்வீர்கள். அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள். (1 பேதுரு 1:6-7) (திருப்புகழ்மாலை, வியாழன் 1, மாலைப்புகழ்)

நேற்றைய தினம் Lilly Foundation என்ற அமெரிக்க கல்வியியல் 1996ல் வெளியிட்ட Grace Under Pressure: What Gives Life to American Priests என்ற அறிக்கையின் சுருக்கத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். அமெரிக்க நாட்டில் பல மாகாணங்களில் பணியாற்றும் குருக்களின் உணர்வு முதிர்ச்சியையும், அவர்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை உணர்வுகளையும் கேட்டறிந்து தொகுத்துள்ளனர் இந்த ஆய்வாளர்கள். அதில் ஒரு பகுதியின் தலைப்பு: மகிழ்ச்சி. குருக்கள் மகிழ்ச்சியாய் இருக்கிறார்களா? என்ற கேள்விக்கு 'ஆம்' என்னும் பதில் 14 சதவிகிதம் தான் தரப்பட்டுள்ளது. 86 சதவிகிதம் பேர் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறார்களா. அதற்கான காரணங்களாக அவர்கள் தருவது: 'குருக்களும் துறவியரும் நண்டுகளாக மாறிவிட்டனர் (நண்டுக்கதை தெரியுமல்லவா? ஒரு பாட்டிலில் நிறைய நண்டுகளைப் போட்டு அதை மூடாமல் வைத்துவிட்டாலும் ஆபத்தில்லை. ஏனெனில் ஒரு நண்டு முன்னேறுவதைப் பார்க்கும் அடுத்த நண்டு அதை திரும்பக் கீழேயே இழுத்துவிடுமாம்!), சிலர் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுகின்றனர், சிலருக்கு வேலைப்பளு, சிலருக்கு எதுவுமே நன்றாக நடப்பதில்லை, சிலர் எந்நேரமும் சுயபச்சாதாபப் படுகின்றனராம் - ஐயோ அப்படி ஆயிடுச்சே, இப்படி ஆயிடுச்சே மனநிலை, சிலர் தங்கள் வாழ்க்கை நிலையை மிக serious எடுத்துக்கொள்கின்றனர்'. இந்தக் காரணங்களால் மகிழ்ச்சி பறிபோகிறதாம்.

துறவு நிலை வாழ்க்கைக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே மகிழ்ச்சி மிக முக்கியமான ஒன்று. அழுதே பழக்கமாகிப்போன நமக்கு கொஞ்சம் வாய்விட்டுச் சிரித்தால் பயம் வந்து விடுகிறது. ஐயோ ரொம்ப சிரிக்கிறோமோ? சிரித்தால் திரும்ப அழுகை வருமோ? மகிழ்ச்சியாய் இருப்பதில் மிகவும் கஞ்சத்தனமாய் இருக்கிறோம்.

'இறைவன் நம்முடன் இருக்கிறார் என்பதன் அடையாளமே மகிழ்ச்சி' என்கிறார் பிரெஞ்சு மெய்யியலாளர் லெயோன் பிளாய். 

மகிழ்ச்சியின் ஊற்றுக்கண்கள் எவை?

1. கடவுள் என்னை அன்பு செய்கிறார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை. ஒரு அருட்பணியாளருக்கு இந்த நம்பிக்கை மிகவும் அவசியம். என்று இந்த நம்பிக்கை தளர்கிறதோ அன்றுதான் அவர் அந்த அன்பை மற்ற மனிதர்களிடமும், பொருட்களிடமும் தேடத் தொடங்குகின்றார்.

2. இறைப்பராமரிப்பின் மேல் நம்பிக்கை. நான் கல்லூரிக்குச் செல்லும் போது மெட்ரோவில் நிறையப் பேர் வயலின் மற்றும் கிட்டாரோடு பாடல்கள் பாடி பிச்சை எடுத்துக் கொண்டிருப்பர். சிலர் குழந்தைகளை வைத்துப் பிச்சையெடுத்துக் கொண்டிருப்பர். ஒவ்வொரு நாளும் இவர்கள் ஏதோ ஒரு நம்பிக்கையில்தானே இரவு தூங்கச் செல்கிறார்கள். நான் எனது படிப்பையும், தகுதிகளையும், திறன்களையும் நம்பும் அளவிற்குப் பல நேரங்களில் இறைப்பராமரிப்பை நம்புவதில்லை. 'விடுவது!' இன்னும் கடினமாகத்தான் இருக்கிறது.

3. இறைவேண்டல் அல்லது செபம். ஏனெனில் மகிழ்ச்சி ஒரு கொடை. அதைக் கடவுள்தான் கொடுக்க முடியும். 'கேளுங்கள், தரப்படும்!' என்றார் இயேசு. 'காத்திருங்கள், தரப்படும்' என்று சொல்லவில்லையே. சும்மா கேட்டத்தான் பார்ப்போமே. கிடைக்காது என நாமாக ஏன் நினைத்துக் கொள்ள வேண்டும்?

மகிழ்ச்சிக்கான தடைகள் எவை?

சுய பச்சாதாபம் (self-pity). அருட்பணியாளர்கள் பொதுவானவர்கள். அவர்கள் பலருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும். அவர்களைச் சுற்றிலும் எப்போதும் ஒரு நெருக்கம் இருந்து கொண்டே இருக்கும்: 'ஆயர்கள் அல்லது மறைமாவட்ட நிர்வாகம், தான் பணிபுரியும் மக்கள், தன் உடன் பணியாளர்கள், தன் சமூகம், தன் குடும்பம்' என அனைத்து நிலைகளிலும் நெருக்கப்படுகின்றார் அவர். அந்த நெருக்கத்தை சமாளிக்கத் தெரியாதபோது அல்லது முடியாதபோது, அதை இயல்பாகவும் சரியாகவும் கையாளாமல் போகும் போது, 'ஐயோ! நான் ஒன்னுக்கும் உதவாதவன். என்னால் யாருக்கும் பயனில்லை. என் வயதில் இருக்கும் அவனைப் பார். நன்றாகச் சம்பாதிக்கிறான். குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருக்கிறான்!' என்று தன்னையே நொந்து கொள்ளத் தொடங்குகின்றார் அவர். 

2. கவலை. ஒருமுறை எங்கள் பாடகர் குழுவில் உள்ள ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்த போது 'கவலை ஒரு பாவம்' என்றார் அவர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பின் அவரே விளக்கமும் சொன்னார்: 'வானத்துப் பறவைகளைப் பாருங்கள்! வயல்வெளி மலர்களைப் பாருங்கள்! என்று உருவகங்கள் சொல்லும் இயேசு கடைசியாக என்ன சொல்கிறார்? கவலைப்படாதீர்கள்! என்று தானே சொல்கிறார். அப்படியிருக்க நாம் கவலைப்பட்டால் அது கடவுளின் மேலும் இயேசுவின் மேலும் நம்பிக்கையில்லாமல் இருப்பதால்தானே அர்த்தம். அது பாவம்தானே!' அவரின் விளக்கம் எனக்குப் பிடித்திருந்தது. பல நேரங்களில் கவலை என்பது ஒரு பாவம் எனத் தெரியாமலே நானும் கவலைப்பட்டுக் கொண்டுதான் இருந்திருக்கிறேன். 

3. நம் மகிழ்ச்சி நமக்கு வெளியில் இருக்கிறது. இது ஒரு தப்பறையான கொள்கை. நமக்கு வெளியில் இருக்கும் எதுவும் நமக்கு மகிழ்ச்சியைத் தந்துவிடாது. அழகான மொபைல் ஃபோன் என்று அதைத் தடவிப் பார்த்து, பொத்தி பொத்தி வைக்கும் நான், அடுத்த நாள் அதன் பின்புறம் ஒரு சிறிய கோடு விழுந்தவுடன் மகிழ்ச்சியை இழந்து விடுகிறேன். ஓய்வான நேரங்களில் யாருடனவாது பேசலாம் என நண்பிகளுக்குப் ஃபோன் செய்து பேசும் போது இருக்கும் மகிழ்ச்சி, ஏதாவது பொது வழிபாட்டில் இருக்கும்போது அவர்கள் ஃபோன் அடிக்க அதுவே எரிச்சலாக மாறிவிடுகிறது. நண்பர்களோடு இணைந்து ஒன்றாக பியர் குடிப்பதும், உணவு அருந்துவதும் தரும் மகிழ்ச்சி, அடுத்த நாள் காலையில் hang-out ஆகி தலையை அழுத்தும்போது 'இனி குடிக்கவே கூடாது!' என்று தோன்றுகிறது. புத்தகங்கள், சினிமாக்கள், சந்திப்புகள், படிப்பு, வேலை எதுவும் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதில்லை. அதை நான்தான் எனக்குள்ளே தேடி எடுக்க வேண்டும்.

4. குறைகூறுவது. ஒரு சில அருட்பணியாளர்கள் எப்போதும் குறைகூறிக்கொண்டே இருப்பார்கள். எங்கள் கல்லூரியில் மாணவக் குருக்கள் கூறும் குறைகளைக் கேட்டுவிட்டு என் பேராசிரியர் ஒருவர் சொன்னார்: 'நீங்கள் ஆண்டவரின் இறுதி இராவுணவில் இருந்திருந்தால் அங்கேயும் இந்த மெனு சரியில்லை என்று தான் குறைசொல்வீர்கள்'. யாராவது ஒருவர் நமக்கு பரிசுப் பொருளோ பணமோ கொடுத்தால், 'இவர் தன் பணத்தால் என்னை வாங்க நினைக்கிறார்!' என்பார்கள். ஒன்றுமே கொடுக்கவில்லையென்றால் 'இந்தப் பங்குத் தளமே சரியில்லை. போன பங்குல எப்படி இருக்கும் தெரியுமா?' என்பார்கள். 

5. பொறாமை. அருட்பணியாளர்களுக்கு மற்ற அருட்பணியாளர்கள் மேல் இயல்பாக இருக்கும் ஒன்று இது. குறிப்பாக ஒரு பங்கில் வேலை செய்து விட்டு அந்தப் பங்கை விட்டு வெளியே வந்தவுடன் தனக்குப் பின் வரும் அருட்பணியாளர் அதே இடத்தில் ஒன்றுமே செய்யாமல் சும்மா ஓய்ந்திருக்கிறார் என்றால் ஒன்றுமில்லை. ஆனால் அதே அருட்பணியாளர் ஏதாவது வேலை செய்துவிட்டால் அவர்மேல் பொறாமை வந்து விடுகிறது. 'எவ்வளவு நாளைக்குச் செய்வான்?' என்றும் 'புது விளக்குமாறு நன்றாகத்தான் கூட்டும்!' எனவும் பேசத் தொடங்கிவிடுகின்றோம். இதைவிடப் பெரிய பொறாமை. நாம் நெருக்கமாய் இருந்த நபர்களிடம் அடுத்த அருட்பணியாளர் நெருக்கமாக இருக்கும்போதும் அல்லது அவர்கள் அந்தப் பணியாளர்களிடம் நெருக்கமாக இருக்கும் போதும் பொறாமை பற்றிக் கொள்கிறது. 'ஐயோ! நாம் கட்டிக் காத்தவர்கள் எல்லாம் இவர் பின்னால் போய்விடுவார்களோ!' எனக் கலங்குகிறோம். பொறாமைக்குக் காரணம் 'பாதுகாப்பின்மை'. என்னிடம் இருக்கும் 'பாதுகாப்பின்மைக்காக' ஒரு சிலரை 'பாதுகாப்பு' என வைத்திருக்கும் போது அது தளர்ச்சி அடையும்போது மகிழ்ச்சி ஓடி விடுகிறது.

இறுதியாக, அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு மேற்குறிப்போடு நிறைவு செய்கிறேன்:

அருட்பணியாளர்களே,

'யாரிடமும், எந்நேரமும், எங்கேயும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். அதுவே மகிழ்ச்சி. அதுவே சரி.' என எந்நேரமும் சொல்லிக் கொண்டிருக்கும் உலகத்தில் நீங்கள் வாழ்க்கை முழுவதும் மணத்துறவையும், கன்னிமையும் ஏற்கிறீர்கள்!

'நான் விரும்புவதை எந்நேரமும், எங்கும் செய்யலாம். நான் நினைப்பது கண்டிப்பாக நடக்க வேண்டும்' என்று சொல்லும் சமூகத்தின் நடுவில் நீங்கள் வாழ்க்கை முழுவதும் கீழ்ப்படிவதாய் வாக்கு தந்திருக்கிறீர்கள்!

'அதிகம் வாங்குவதிலும், அதிகம் சேர்ப்பதிலும் தான் மகிழ்ச்சி' என்று சொல்லும் கலாச்சாரத்தின் மத்தியில் நீங்கள் வாழ்க்கை முழுவதும் எளிமையைத் தழுவுவதாக வாக்களிக்கிறீர்கள்!

'பயன்பாட்டிலும், ஒருவரை அவரின் பயன்பாட்டைப் பொறுத்தும், அவர் வேலை செய்து சம்பாதிப்பதை வைத்தும் அளவிடும்' உலகில் நீங்கள் 'செபத்தில் நேரத்தைச் செலவிடுகிறீர்கள்'.

'என்னையே நான் பார்த்துக் கொள்வேன். யாரும் எனக்குத் தேவையில்லை. என் சுகம் தான் முக்கியம்' என்று கருதும் உலகில் நீங்கள் 'உங்கள் பெற்றோர், உடன்பிறப்புகள், நிலபுலன்கள் என அனைத்தையும் தியாகம் செய்கிறீர்கள்!'

'எல்லாம் உடனுக்குடன் என்று ஓடிக்கொண்டிருப்போர்' நடுவில் நீங்கள் இயேசுவின் அன்பைப் பற்றிப் பேசுகிறீர்கள்.

உலகின் பார்வையில் நீங்கள் ஒன்றுமில்லாதவர்கள்தாம்...ஆனால் நீங்கள்...மகிழ்ச்சியாளர்கள்!

உடலுறவின் உச்சத்திலும், எச்சத்திலும், வாங்குவதிலும், சேர்ப்பதிலும், சுயநலத்திலும், பயன்பாட்டிலும் இல்லாத மகிழ்ச்சியை நீங்கள் அன்பிலும், பொறுப்புணர்விலும், எளிய வாழ்விலும், இறைவேண்டலிலும், தாராள உள்ளத்திலும் கண்டுகொள்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்!

1 comment:

  1. Anonymous1/17/2014

    ஆசிரியரோடு சேர்ந்து நானும் அத்தனை ''அருட்பணியாளர்களை''யும் உளமாற மனமாற
    வாழ்த்துகிறேன்.நீங்கள் இவ்வுலகத்தின் மத்தியில் இருப்பினும் இவ்வுலகைச்சார்ந்தவர்கள அல்ல.இவ்வார்த்தைகளை வாழ்வாக்குவதில் உ ள்ள
    கஷ்டம் உங்களுக்குத்தான் புரியும்.உங்களைப் புரிந்து கொள்ளாதவர்களைப் பற்றியும் உங்கள் மேல் சேற்றை வாரி இறைப்பவர்பற்றியும் கவலைப்படாதிருங்கள்.நீங்கள் எல்லாம் காய்க்கும் மரங்கள்.கல்லடி படத்தான்.செய்வீர்கள்.பெருமை கொள்ளுங்கள்.இறைவன் உங்களையும் உங்களைச்சார்ந்த அனைத்தையும் நிறைவாக ஆசீர்வதிக்கட்டும்.மீண்டும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete