Wednesday, January 22, 2014

வேறு அரசர் இல்லை!

இயேசு தாம் உயிர்த்தெழுந்தபின் நாற்பது நாட்கள் மண்ணுலகில் தம் சீடர்களோடு இருந்துவிட்டு விண்ணகம் ஏறிச் செல்கின்றார். அவரை வானுலகில் வரவேற்க வானகத் தந்தை வானதூதர்களோடு காத்துக் கொண்டிருக்கிறார். தன் மகனைக் கண்டவுடன் ஓடிச் சென்று ஆரத் தழுவிக் கொள்கின்றார். 'வா! மகனே! வா! என் வலப்புறம் அரியணை உனதாகட்டும்!' என்று வரவேற்கின்றார். அந்நேரம் இயேசுவின் முகம் சற்று வாடியிருக்க தந்தை கேட்கின்றார்: 'என்ன மகனே? என்ன ஆயிற்று? நான் பூவுலகிற்கு அனுப்பியதில் உனக்கு எதுவும் வலி தந்ததா? சொல்! பெத்லகேமில் மாடடைக் குடிலில் பிறந்தது கஷ்டமாக இருந்ததா? எருசலேம் ஆலயத்தில் நீ தொலைந்து போனது கஷ்டமாக இருந்ததா? பாவிகளோடு நின்று யோர்தான் நதிக்கரையில் திருமுழுக்கு பெற்றது வலித்ததா? யூதேயா, கலிலேயா, சமாரியா எனப் பயணம் செய்து இறையரசைப் போதித்தது     கஷ்டமாக இருந்ததா? உன் சீடர்கள் உன் போதனை கடினமாயிருக்கிறது என்று விலகியபோது   கஷ்டமாக இருந்ததா? எல்லாருமே உனக்கு எதிராக எழுந்து உன்னைச் சிலுவையில் அறைந்தபோது உனக்குக் கஷ்டமாயிருந்ததா? இரண்டு கள்வர்களுக்கு மத்தியில் கள்வனைப்போல தொங்கியது உனக்குக் கஷ்டமாகயிருந்ததா? பின் ஏன் வாட்டமாயிருக்கிறாய்? சொல்.' சற்று நேரம் அமைதியாய் இருந்துவிட்டு இயேசு சொன்னாராம்: 'ஒன்றே ஒன்றுதான் கஷ்டமாயிருந்தது அப்பா. முத்தம். ஒரேயொரு முத்தம். அதுதான் எனக்குக் கஷ்டமாயிருந்தது. என்னோடு உண்டு, என்னோடு பயணம் செய்து, என்னோடு உறங்கிய என் நண்பன் ஒருவனின் முத்தம்தான் இன்னும் எனக்கு வலிக்கிறது.' 'நீ எனக்கு உரிமையானவன்' என்று சொல்லும் முத்தத்தை வைத்தே 'நீ எனக்கு உரிமையில்லை' என்று சொன்ன அந்த முத்தம் தான் இன்னும் வலிக்கிறது!

இன்று ஆண்டவரின் திருப்பாடுகளைக் கொண்டாடுகிறோம். நாற்பது நாட்கள் சிலுவைப்பாதைகள் செய்தும், நோன்பு இருந்தும், செபித்தும், பிறரன்புச் செயல்கள் வழியாகவும் இயேசுவின் பாடுகளை சிந்தித்தோம். அதில் பங்கேற்றோம். இன்றும் பெரிய சிலுவைப்பாதையில் சிந்தித்தோம். சிலுவையே இந்நாளில் நம் கண்முன் நிற்கின்றது.

யோவான் நற்செய்தியாளர் எழுதியபடி இயேசுவின் திருப்பாடுகளை வாசிக்கக் கேட்டோம். சிலுவை நமக்கு இன்று சொல்லும் ஒரே வார்த்தை: 'சாய்ஸ்' (தேர்வு). பிலாத்து மக்களிடம் 'இதோ! உங்கள் அரசன்!' என, அவர்கள் 'எங்களுக்கு சீசரைத் தவிர வேறு அரசர் இல்லை' என்று குரலெழுப்புகின்றனர். மனுமகனுக்குப் பதில் பரபாவைத் தேர்ந்து கொள்கின்றனர். இயேசுவின் தீர்ப்பில் இயேசுவைவிட இந்த உலகமே தீர்ப்பிடப்படுகின்றது. நாம் யாரைத் தேர்ந்து கொள்கிறோம்? சிலுவை என்பது தேர்ந்து கொள்தலே. இயேசுவின் வாழ்வில் சிலுவைக்கு இரண்டு அர்த்தம் இருக்கின்றது: 'என்னைப் பின்செல்ல விரும்புபவர் நாள்தோறும் தன் சிலுவையைத் தூக்கிக் கொண்டு வரட்டும்' என்று சொல்லும் போது இயேசு நம் வாழ்வில் அன்றாடம் நாம் தெரிந்துகொள்பவற்றை, நம் 'சாய்ஸை' சிலுவையெனக் குறிப்பிடுகின்றார். இரண்டாவதாக, மரத்தாலான சிலுவையை அவரே சுமக்கின்றார். சிலுவை என்பது மரம் மட்டுமல்ல. நம் வாழ்வும் கூடத்தான். நம் வாழ்வில் நாம் மேற்கொள்ளும் சாய்ஸ்கள் கூடத்தான். இயேசுவின் போதனைகள் அனைத்திலுமே ஒரு 'சாய்ஸ்' இருக்கும்: கடவுளா? செல்வமா? என்னும் சாய்ஸ். நேர்மையாளரா? பாவிகளா? என்னும் சாய்ஸ். நம்மைச் சார்ந்தவரா? நமக்கு எதிரானவரா? என்னும் சாய்ஸ். அகன்ற வாயிலா? இடுக்கமான வாயிலா? என்னும் சாய்ஸ். ஒளியா? இருளா? என்னும் சாய்ஸ். இவற்றில் நாம் ஏதாவது ஒன்றைத்தான் தெரிவு செய்ய முடியும். அப்படி நாம் தெரிவு செய்யும் ஒன்று நமக்குச் சிலுவையாகத் தெரிந்தாலும் அது நமக்கு மீட்பைக் கொண்டு வரும்.

ஒவ்வொரு பொழுதுமே நம் முன் சாய்ஸ் இருக்கின்றது: 'படிப்பா? ஆதித்யா டிவியா? - திருப்பலியா? கூடக் கொஞ்ச நேரக் குட்டித் தூக்கமா? - செபமா? சீரியலா? - உடல்நலமா? டாஸ்மாக்கா? - காலையில் வாக்கிங்கா? சுகர் கம்ப்ளைண்டா? - இப்படியாக நாம் ஒவ்வொரு பொழுதும் தெரிவு செய்கின்றோம். இரண்டும் வேண்டும் என்று சொல்ல முடியுமா? உடல்நலமும் வேண்டும், குடிப்பழக்கமும் வேண்டும் என்றால் சாத்தியமா? சத்தியமாக இல்லை.

பகைமை என்ற இடத்தில் அன்பையும், பழிக்குப் பழி என்ற இடத்தில் மன்னிப்பையும் தெரிவு செய்கின்றார் இயேசு. இன்று நாம் எப்படித் தெரிவு செய்யப் போகிறோம்?

Discriminate the lower from the higher. Embrace the higher and eliminate the lower. நம் முன் உள்ள இரண்டில் தாழ்ந்தது எது, உயர்ந்தது என்று முதலில் ஆராய வேண்டும். உயர்ந்ததைத் தழுவிக் கொண்டு, தாழ்ந்ததை விட்டுவிட வேண்டும். இ;ந்த முடிவில் மாற்றம் இருக்கக் கூடாது. உயர்ந்ததைத் தழுவிக் கொள்வதே சிலுவை. மகிழ்ச்சியோடு தழுவிக் கொள்ள வேண்டும். அல்லது துன்பத்தோடு விட்டு விட வேண்டும். இரண்டிற்கும் நடுவழி கிடையாது. தழுவிக் கொள்ளவும் மாட்டேன், விட்டு விடவும் மாட்டேன் என்பதும், தழுவியும் கொள்வேன், விட்டும் விடுவேன் என்பதும் சாத்தியம் அல்ல. 

சின்ன சின்ன விஷயங்களில் ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்க முடியாத இயேசுவின் சமகாலத்தவர் இருளைத் தேர்ந்து கொண்டு ஒளியை விட்டு விடுகின்றனர். 'அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். ஆனால் அவருக்குரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை!' என்னவொரு சோகமான இறைவசனம். பிலாத்து தன் அரியணையைக் காத்துக் கொள்வதை தன் சாய்ஸ் என நினைக்கிறான். தலைமைக் குருக்கள் தங்கள் பாரம்பரியத்தைக் காத்துக்கொள்ள விழைகின்றனர். சிலர் வேடிக்கை பார்க்கின்றனர். சிலர் கூச்சல் போடுகின்றனர். இந்தக் கூட்டத்தில் எல்லா வகை மக்களும் இருக்கின்றார்கள். இந்தக் கூட்டத்தில் நான் யார்? 

நாம் சரியானவற்றைத் தேர்வு செய்யாத போது முத்தமும் முள்ளாய்க் குத்தும்தானே!

1 comment:

  1. Anonymous1/22/2014

    ஆசையிலே பிறந்து ஆணவத்தில் தொடர்ந்து ஆடி அடங்கும் இந்த வாழ்க்கைக்கு நாம் கொடுக்கும் விலை கொஞ்சம் அதிகம்தான்.நெருப்பு சுடும் என்று தெரிந்தும் சுட்டுக்கொள்ளத் தயாராயிருப்பவர்கள் தாம் நம்மில் பலர்.விலக்கப்பட்ட கனியைத் தின்ற பெற்றோரின் வழி வந்தவர்தானே நாம்? ஆனால் அதையும் பொய்யாக்கி நமகக்கு வாழ்ளிக்க வந்தவரின் வழி செல்வோம்.நம் choiceல் தெளிவு காட்டுவோம்
    You tube வழியே வரும் பாடல்கள் அனைத்தும் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete