ஒரு இளம் ஜென் துறவி தன் வீட்டிலிருந்து ஆசிரமம் நோக்கிப் புறப்படுகின்றார். வழியில் ஒரு நீளமான ஆறு. ஆற்றைக் கடந்தால் தான் தன் ஆசிரமம் செல்ல முடியும். 'இப்படி ஒரு அபாயம் குறுக்கே இருக்கும்' எனத் தெரியாமல் ஏதாவது உதவி கிடைக்குமா எனச் சுற்றும் முற்றும் பார்க்கின்றார். 'இதற்கு மேல் காத்திருக்க முடியாது. வீடு திரும்பலாம்' என நினைத்துப் புறப்படும் சமயம் கரையின் அந்தப் பக்கத்தில் அவருடைய குரு நிற்பதைப் பார்க்கின்றார். அவரை நோக்கி இக்கரையிலிருந்து சப்தமிடுகிறார்: 'ஐயா, அக்கரைக்கு வருவது எப்படி எனக்குச் சொல்வீர்களா?' சிறிது நேரம் யோசித்துவிட்டு அக்கரையிலிருந்து குரு சொல்கின்றார்: 'மகனே, நீ நிற்பதே அக்கரையில் தானே!' இளைஞன் ஞானம் பெற்றான்.
ஒரு கரைக்கு அடுத்து கரை அக்கரைதான். அதைத் தெரிந்து கொள்வதே பெரிய ஞானம். உயிர்ப்பு என்ற அக்கரைக்குக் கடந்து சென்ற இயேசு இக்கரையில் நின்று இன்னும் பயந்து கொண்டிருந்த தம் சீடர்களைச் சந்திக்கின்றார். நீங்கள் நிற்கும் இக்கரையும் அக்கரையே என அவர்களுக்கு எடுத்துச் சொல்கின்றார். இன்றைய நற்செய்திப் பகுதியை (யோவான் 20:19-31) இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம்: முதலில் தம் சீடர்களுக்கு உயிர்த்த இயேசு தன்னையே வெளிப்படுத்துகின்றார், இரண்டாவதாக, தோமையாரைத் தொடுவதற்கு அனுமதிக்கின்றார். பல நேரங்களில் இன்றைய நற்செய்தியை வாசித்தவுடன் 'நம்பாத தோமையார்!' 'ஐயம் கொள்ளும் தோமையார்' எனவும் நாம் முடித்து விடுகிறோம். இன்றைய நற்செய்தியின் மையம் தோமையாரோ அல்லது அவரது சந்தேகமோ அல்ல. இன்றைய நற்செய்தியின் மையம் இயேசுவே.
1. இயேசுவின் உடனிருப்பு. 'கடவுள் நம்மோடு' என்று வந்த இயேசுவை 'கடவுள் நமக்காக' என்று மாற்றியது அவரது உயிர்ப்பே. சுவர்களையும், பூட்டிய கதவுகளையும் தாண்டி வருவதாலோ, பயந்து போன சீடர்களுக்குத் தன் காயங்களைக் காட்டினார் என்பதாலோ இயேசு உடனிருக்கிறார் என்ற நினைத்து விட முடியாது. அவரின் உடனிருப்பு அவர் தரும் 'தூய ஆவியில்தான்' இருக்கின்றது. 'அவர்கள் மேல் ஊதி தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;' என்கிறார் இயேசு. படைப்பின் தொடக்கத்தில் களிமண்ணால் செய்த ஆதாமின் மேல் ஊதி தன் ஆவியை உட்புகுத்துகின்றார் யாவே இறைவன். புதிய ஏற்பாட்டில் களி மண் போல் உறைந்து போயிருந்த தம் சீடர்கள் மேல் தன் ஆவியை ஊதுகின்றார் இயேசு. இனி அவர்கள் பழைய மனிதர்கள் அல்லர். புதியவர்கள். இயேசுவின் புதிய வாழ்வு அவர்களோடு இருக்கின்றது. அவர்களோடு இருக்கின்றது என்றால் அது நம்மோடும் இருக்கின்றது. 'ஒருவரின் மேல் ஆவி இறங்கியுள்ளது' என்று நாம் சொல்லும்போது 'அது அவரை ஆட்டுவிக்கும்' எனவும் நாம் அறிவோம். இயேசுவின் ஆவி நம்மேல் உள்ளதென்றால் அது நம்மைப் புது வாழ்விற்கு ஆட்டுவிக்கின்றதா. அல்லது அந்த ஆவியை நாம் ஆறப்போட்டு விட்டோமா?
2. 'நம்பிக்கையற்றவனாய் இராதே! நம்பிக்கை கொள்'. இயேசுவின் தாயுள்ளத்தை நாம் பார்க்கின்றோம். நம்மை மிகுதியாக அன்பு செய்பவர்களின் அன்பை நாம் புரிந்து கொள்ளாத போது அவர்கள் நம்மைப் பார்த்துச் சொல்வார்கள்: 'என் இதயத்தைத் திறந்து காட்டி நான் உன்னை எவ்வளவு அன்பு செய்கிறேன் என்று நிரூபி;க்க முடிந்தால் நான் எப்பவோ நிரூபித்திருப்பேன்!' இதே போலத்தான் இயேசு தம் சீடர்களின் மேல் இருந்த அன்பை, குறிப்பாக தோமையாரின் மேலிருந்த அன்பை நிரூபிக்கின்றார். 'உன் விரல்களை என் காயங்களில் இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு!' இயேசுவின் அன்பு திறந்து காட்டும் அன்பு. இயேசுவின் அன்பு தீர்ப்பிடாத அன்பு. 'நீங்கள்லாம் என்னை நம்பவே வேண்டாம்டா. உங்க விருப்பம் எதுவோ? அப்படியே செய்யுங்கள்!' என்று அவர் உதறித்தள்ளவில்லை. நாம் அன்பு செய்பவர்கள் நம் அன்பைப் புரிந்து கொள்ளாதபோது, நம்மை மற்றவர்கள் நம்பாதபோது நாம் அவர்களுக்குப் புரிய வைக்க முயற்சி செய்கிறோமோ? இயேசுவின் இந்தச் செயல்பாடு நம் உணர்வு முதிர்ச்சிக்கு ஒரு நல்ல பாடம்.
3. கொடை- கடமை. இந்த நற்செய்தியில் இந்த இரண்டும் உள்ளது. 'இயேசுவின் உடனிருப்பு' நம்மோடு இருக்கிறது என்ற வாக்குறுதி ஒரு கொடை. அதே போல அந்த உடனிருப்பை நாம் உலகறியச் செய்ய வேண்டும் என்பது நமது கடமை. கொடையை மட்டும் வைத்துக்கொண்டு ஓய்ந்திருப்பதும், ஓடிக்கொண்டே இருந்துவிட்டு உடனிருப்பை அறியாமல் இருப்பதும் ஆபத்துதான்.
4. தோமையார் நம் பிரதிநிதி. இயேசுவைச் சுற்றியிருக்கும் வட்டம் இன்று விரியத் தொடங்குகிறது. இரண்டாயிரத்து பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின் நாம் இருந்தாலும் இயேசுவைச் சுற்றியிருக்கும் ஒரு வட்டத்தில் தான் இருக்கின்றோம். நம் பிரதிநிதியாகவே தோமையார் இன்று இயேசுவின் உயிர்த்த உடலுக்குள் கையை இடுகின்றார். 'என் ஆண்டவரைச் சிலுவையில் அறைந்தபோது நீ அங்கு இருந்தாயா?' என்ற அழகிய ஆங்கிலப் பாடல் உண்டு. நாம்; இன்று உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்தாலும், காலத்தால் வெகுதூரம் பிரிக்கப்பட்டு நின்றாலும் இயேசுவின் சிலுவையின் போதும், அவரின் உயிர்ப்பின் போதும் நாம் இருந்ததுபோலவே நம் மனம் உணர்கின்றது என்றால் நாம் முதற்சீடர்களின் அனுபவம் பெற்றுள்ளோம் என்றே அர்த்தம்.
'நீ நிற்பதே அக்கரையில் தானே!'
அக்கரையில் இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருந்த இயேசுவை இக்கரைக்குக் கொண்டு வந்து அவர் உடனிருப்பை நமக்கு உணர்த்துவது நம்மேல் பொழியப்பட்டிருக்கும் பரிசுத்த ஆவிதான்.இந்த ஆவி நம்மில் இருந்தால் மட்டுமே நாம் மற்றவரிடமிருந்து தனித்து நிற்க முடியும்.ஏனெனில் அவர் தரும் கொடைகளின் தன்மை அப்படி.இவர் நம் உள்ளத்தில் உறைந்தால் நம்பிக்கையின்மை மறறும் பயம்...இவை நம்மைவிட்டுத் தள்ளியே நிற்கும் என்பதும் உறுதி.''Where U there?....'' கண்களைக் கசிய வைத்து விட்டது.
ReplyDelete