Saturday, January 18, 2014

நாம் அனைவரும் கோடீஸ்வரர்கள்தாம்!

மன வலிமை கொண்டவர்களாகிய நாம் வலுவற்றவர்களின் குறைபாடுகளைத் தாங்கிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். நமக்கு உகந்ததையே தேடலாகாது. அடுத்தவருடைய நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் செயல்பட்டு அவர்களுக்கு உகந்தவர்களாக வாழுங்கள். கிறிஸ்துவும் தமக்கு உகந்ததைத் தேடவில்லை. (உரோமையர் 15:13 திருப்புகழ்மாலை, வெள்ளி 1, மாலைப் புகழ்)

'நாம் அனைவரும் கோடீஸ்வரர்கள்தாம். ஆனால் இது நமக்குத் தெரியவில்லை. இதை நமக்குத் தெரியப்படுத்தியவர் 2000ஆம் வருடங்களுக்கு முன்பாக நம்மோடு வாழ்ந்த நாசரேத்தூர் இயேசு' என்று எழுதுகிறார் ஹார்லி என்ற நாவலாசிரியர். அவர் தொடர்ந்து இப்படி எழுதுகின்றார்: 'கோடி என்பது பணம் மட்டுமல்ல. மனமும் கோடியாக இருக்கலாம். நம்மையே ஒரு நிமிடம் உற்றுப் பார்ப்போமே. நம் கண்களின் அசைவு, நம் உடலின் இயக்கம், நம் உறவுகள், நமக்கு கொடுக்கப்பட்டுள்ள திறன்கள், நம்மில் வாழும் இறைவனின் ஆவி, நாம் ஒவ்வொரு பொழுதும் வாழ்வில் உணரும் ஆசீர்கள் ஆகிய அனைத்துமே நம்மைக் கோடீஸ்வரர்களாக மாற்றுகின்றன. 

நான் அடிக்கடி பார்க்கும் ஒரு வலைத்தளம்: simpletruths.com நல்ல நல்ல கருத்துக்களைத் தாங்கி வரும் வலைத்தளம் இது. நேற்றிரவு இதில் புத்தகத்தின் மதிப்புரையை வாசித்தேன். புத்தகத்தின் பெயர் 'The Richest Man in Town' (நகரில் உள்ள பெரிய பணக்காரர்). வி. ஜே. ஸ்மித் என்ற மேலாண்மை ஆசிரியர் எழுதியது. நம்மூர் ரிலையன்ஸ் ஃபரெஷ் மாதிரி அமெரிக்காவில் உள்ள ஒரு சங்கிலித் தொடர் கடையின் பெயர் வால்மார்ட். ஒரு வால்மார்ட் (Wal-mart) பல்பொருள் அங்காடியில் வேலைபார்த்த 'மார்ட்டி' என்பவரைத்தான் இந்தப் புத்தகத்தில் 'மிகப் பெரும் பணக்காரராகச்' சித்தரிக்கின்றார் ஸ்மித்.

வால்மார்ட் கடையின் ரசீது கொடுத்து பணம் பெறும் சாளரத்தில் அமர்ந்திருப்பவர் மார்ட்டி. ஒவ்வொருவருக்கும் ரசீது போட்டவுடன் எழுந்து சென்று அவர்களின் கைகளைக் குலுக்கி, புன்சிரிப்புடன் 'நீங்கள் வால்மார்ட்டிற்கு வந்ததற்கும், பொருட்கள் வாங்கியதற்கும் நன்றி. இந்த நாள் இனிய நாளாகட்டும்' என்று வாழ்த்துவார். இதில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? என்னவென்றால் வேறு யாரும் வால்மார்ட்டில் செய்ய மாட்டார்கள். இதை ஒருநாள் கவனித்த ஸ்மித் அவரைக் காண்பதற்காகவே அடிக்கடி அதே கடைக்கு வருகின்றார். மார்ட்டியின் சாளரத்தில் மட்டும் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிவதைக் காண்கின்றார். அவரின் வருகை மிக சீக்கிரமாக நட்பில் மலர்கிறது. ஒரு நாள் மாலையில் சாலையில் நடந்து செல்லும் போது, 'மார்ட்டி நீங்கள் இப்படிச் செயல்பட என்ன காரணம்?' எனக் கேட்கின்றார். மார்ட்டி அதற்கு தான் வாழ்க்கையில் தன் 30 ஆம் வயதில் ஒரு மூன்று முடிவுகளை எடுத்தாராம். அதை எப்போதும் கடைப்பிடிக்கிறாராம். அதுவே தனக்கு நிறைவைத் தருவதாகச் சொன்னார்.

மார்ட்டி என்ன சொன்னார்?

அவர் சொன்ன மூன்றை என் சிந்தனையோடு பகிரட்டுமா?

1. Relationships matter most in life. உறவுகள் தாம் வாழ்க்கையில் முதன்மையானவை. நாம் படிக்கும் படிப்பு, நாம் பார்க்கும் வேலை, நாம் மேற்கொள்ளும் பயணம், அலைச்சல், தேடல் அனைத்தும் நம்மை உறவிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். நாம் சம்பாதிக்கும் உறவுகளே நமக்கு வலுசேர்க்கின்றன. இதை என் வாழ்வில் நான் மிகவும் நன்றாகவே பார்த்துள்ளேன்.

என் அப்பா ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நல்ல வேலை. பணியாளர்களை மேற்பார்வை செய்யும் வேலை. ஆனால் அதில் அவருக்கு திருப்தி இல்லை. அவரது தாய் (தந்தையை 2 வயதிலேயே இழந்து விட்டார்!) தான் செய்த கூலி வேலையை வைத்து அவரை ஐந்தாம் வகுப்பு வரைதான் படிக்க வைத்தார். பின் எப்படியோ தன் முயற்சியில் தொழிலைக் கற்றுக் கொண்டு 14 வயதிலேயே டெக்ஸ்டைல் மில்லில் வேலை பார்க்கத் தொடங்கிவிட்டார். அவரின் பொழுதுபோக்கு கலை. கலை என்றால் நடனம், நாட்டியம், நாடகம், ஓவியம் என நினைக்க வேண்டாம். தான் செய்யும் எதையும் கலைநயத்தோடு செய்வார். தினமும் மாலை எங்கள் வீட்டில் சிறுவர் பட்டாளம் இருக்கும். அவர்களின் கிழிந்த நோட்டுப் புத்தகங்களைச் சரி செய்தும், புதிய புத்தகங்களுக்கு அட்டைகள் இட்டும், அதன் லேபிள்களில் அவர்களின் பெயரை எழுதிக் கொடுத்தும் அனுப்புவார். எவ்வளவு கிழிசலாகப் புத்தகம் வந்தாலும், எவ்வளவு கந்தலாக அவர்கள் புத்தகப் பைகள் வந்தாலும் (எங்கள் ஊரில் நான் பள்ளியில் படிக்கும்போது ஸ்கூல் பேக் என்றால் 'சொக்கலால் பீடி' வரும் துணிப்பைதான். இதே நிலை தான் என் உடன் பயின்றவர்களுக்கும். எங்கள் ஊரில் முதல் முதலாக ஸ்கூல்பேக் வாங்கியவன் 'ராஜாக்கண்ணு' - அவனின் இயற்பெயர் விஜயானந்த். ஆனால் அவர்களின் வீட்டின் நிலபுலன்களை வைத்து அவனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர் இது. அவன் ஸ்கூலிற்குப் போகும் போது அதை தொட்டுத் தொட்டுப் பார்ப்போம். அந்தச் சிவப்புக் கலர் பேக் இன்னும் என் நினைவில் இருக்கிறது. ஒருமுறை அந்த பேக் கிழிந்து விட, அவனுக்குக் கணிதம் சொல்லிக் கொடுக்கப்போன எனக்கு அதை கிப்டாகக் கொடுத்தார் அவனின் அம்மா. அந்தக் கிழிந்த பேக்கைச் சரிசெய்தவரும் என் அப்பாதான். ஏன் இந்த டைவர்சன்?) 

நிகழ்விற்கு வருவோம். நன்றாக வேலைக்குப் போய்க்கொண்டிருந்த என் அப்பா திடீரென்று வேலைக்குப் போவதை நிறுத்தி விட்டார். எங்க அம்மாவிற்குக் கோபம். அவங்க அம்மாவிற்குக் கோபம். எந்நேரமும் சண்டை நடக்கும். ஆனால் காலையில் குளித்து சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டு விடுவார். மாலையில் தான் வருவார். எங்கள் ஊருக்கு ஆறு கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஊர் சத்திரப்பட்டி. அங்கு துறைமடம் என்று ஒன்று உண்டு. சித்தர்கள் தங்கியிருந்து அருளுரை வழங்கிக் கொண்டிருப்பார்கள். மருத்துவம் செய்வார்கள். மருந்து தயாரிப்பார்கள். அவர்களோடு இருந்து ஓலைச்சுவடி கற்றுக்கொள்ள ஆரம்பித்தார் என் அப்பா. பழைய ஓலைச்சுவடிகளைப் பழுதுபார்க்கத் தொடங்கிய அவர் அவற்றைப் படிக்கவும் ஆரம்பித்து விட்டார். அங்கே வரப்போக இருந்தவர்களோடும் நன்றாகப் பழகிவிட்டார். ஒரு எட்டு ஆண்டுகள் இப்படி 'வேலையே செய்யாமல்' ஓட திடீரென்று ஒரு மாலை இறந்து விட்டார். 

அப்போது நான் புனேயில் படித்துக்கொண்டிருந்தேன். அலறியடித்து விமானம் பிடித்து ஊருக்கு வந்தேன். நானும் பறப்பேன் என்று விமானக் கனவு கண்ட எனக்கு முதல் விமானப் பயணமே என் தந்தையின் இறப்பிற்கு என்பதால் இன்னும் விமானப் பயணம் என்றாலே அழுகை வந்து விடுகிறது. அடக்கம் எல்லாம் முடிந்து எல்லோரும் சென்றவுடன் அந்தத் துறைமடத்தில் என் அப்பாவோடு பழகிய குருசாமி என்பவர் வந்தார். ரொம்ப நேரம் என் அப்பா என்னைப் பற்றி அவரிடம் சொன்னதையெல்லாம் சொன்னார். அப்போதுதான் நான் உணர்ந்தேன். என் அப்பா 30 வருடங்கள் பணியாற்றிய டெக்ஸ்டைல் நிறுவனத்திலிருந்து அவரின் இறப்பிற்கு ஒருவர் கூட வரவில்லை. வந்தவர்கள் எல்லாம் அவர் 8 வருடங்களில் சம்பாதித்த உறவுகள். அன்றிலிருந்து நான் யாரையும் 'ஏன் வேலை செய்யப் போகவில்லை?' என்றோ 'நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள்?' என்றோ கேட்பதில்லை. 'வேலைதான் எல்லாமா?' என்றுக் கேட்கத் தூண்டியவர் என் அப்பா. மேலும் இன்று வரை நான் படித்த படிப்பும், என் திறமைகளும் துணை நின்ற நேரங்களைத் தவிர நான் சம்பாதித்த நண்பர்களும், உறவுகளும்தான் துணைநிற்கின்றன என்னுடன். 'நாம் நமது கருத்தியல்களுக்காக நண்பர்களை இழப்பதை விட, நண்பர்களுக்காக கருத்தியல்களை இழப்பது மேலானது'.

2. Try to do a little more. எப்போதும் கொஞ்சம் அதிகமாகவே செய்யுங்கள். நம்மிடம் மற்றவர்கள் எதிர்பார்ப்பதை மற்றும் செய்வது கடினம் அல்ல. இன்னும் கொஞ்சம் அதிகமாகச் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, சாலையில் காரில் போகிறோம். பச்சை விளக்கு எரிகிறது. பச்சை விளக்கு எரிந்தால் போகலாம் சட்டப்படி. ஆனால் அப்போதுதான் ஒரு பாட்டி சாலையைக் கடந்து கொண்டிருக்கிறார். நாம் கொஞ்சம் நின்று அவரைக் கடக்க விடுவதுதான் கொஞ்சம் அதிகமாகச் செய்வது. இதையே இயேசு, 'உங்களை யாராவது ஒரு மைல் வரை வரக் கட்டாயப்படுத்தினால் இரு மைல் வரை செல்லுங்கள்' எனவும் 'யாராவது உங்கள் மேலாடையை எடுத்துக் கொள்ள விரும்பினால் உங்கள் அங்கியையும் கொடுங்கள்' எனவும் குறிப்பிடுகின்றார். வால்மார்ட்டில் பில் போடுவது என்பது எல்லாரும் செய்த வேலை. ஆனால் அதிலும் கொஞ்சம் அதிகமாகச் செய்கின்றார் மார்ட்டி. 'விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை' என்பார்கள். கொஞ்சம் அதிகமாக நேரம், ஆற்றல், பொருள் அனைத்தையும் அனைவருக்குக் கொடுத்துப் பார்க்கலாமே!

3. Only you can make yourself happy. நீ மட்டும்தான் உன்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும். மகிழ்ச்சி ஒவ்வொருவரும் தானாகத் தன் உள்ளே உணர வேண்டிய ஒன்று. தன்னிடம் இல்லாத ஒன்றைத் தேடுவதை விட தன்னிடம் இருக்கும் ஒன்றைக் குறித்து மகிழ்வது. 'என் பிள்ளைகள் என் பேச்சையே கேட்பதில்லை. எப்போதும் என்னுடன் சண்டை போடுகிறார்கள்!' என்று கவலைப்படுகிறீர்களா. 'பலருக்கு பிள்ளையே இல்லையே!' அவர்கள் மனம் எப்படிக் கஷ்டப்படும். 'கணவர் குடிக்கிறார்' எனக் கவலைப்பட வேண்டாம். குடிக்கிறவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள். குடிக்கிறவர்கள் தாம் பாசம் வைப்பார்கள். 'எந்நேரமும் விலைவாசி ஏற்றம், ஊழல் என்று கவலைப்பட வேண்டாம்'. பல நாடுகளில் போர்கள், வன்முறை, கண்ணீர். பிரகாஷ்ராஜ் இப்படிச் சொல்வார்: 'அனைவரையும் ஏமாற்றிப் பயமுறுத்திப் பிழைக்கும் அமெரிக்காவாய் இருப்பதைவிட, தன்மானத்தோடு வாழும் கியூபா நாடாக இருப்பது மேல்!'. நமக்கு வெளியில் மகிழ்ச்சி எப்போதும் இல்லை. எல்லாம் இருந்தும் மகிழ்ச்சி இல்லையென்றால் நாம் ஏழைகளே. எதுவுமே இல்லாமல் மகிழ்ச்சி இருந்தது என்றால் நாம் கோடீஸ்வரர்களே.

இந்த மார்ட்டி 2004 ஆம் ஆண்டு இறந்து விட்டார். இன்னும் அவர் வேலை பார்த்த இடத்தில் அவர் அமர்ந்த இருக்கையில் விளக்கொன்றை ஏற்றி உள்ளனர்.

'நாமும் கோடீஸ்வரர்களே. ஆனால் அது நமக்குத் தெரிவதில்லை'.

1 comment:

  1. Anonymous1/18/2014

    ''கொடுப்பதின் இன்பம் பெறுவதில் இல்லை'' நான் என் அனுபவத்தில் கண்டறிந்த
    உண்மை.நம்மைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது நம்மிடமுள்ள.பொன்னோ பொருளோ அல்ல.நாம் பிறருடன் பகிர்ந்து கொள்ளத் தயாராயிருக்கும் நம் இதயம்,உறவு,மகிழ்ச்சி,துக்கம்,வேதனை,நேரம்etc...etc..தான்.இவற்றைப் பகிர்ந்து கொள்ளத்தயாராயிருக்கும் அனைவரும் கோடீஸ்வரர்களே! இவ்வழி வந்த ஆசிரியரின் தந்தையும் வால்மார்ட் மூதாட்டியும் பின்பற்றப்பட வேண்டியவர்களே!

    ReplyDelete