Tuesday, January 14, 2014

செங்கல் எறிந்து...

தான் புதிதாக வாங்கிய ஆடி காரின் மேல் அந்த இளைஞனுக்கு மிகவும் விருப்பம். அதைத் தன் குழந்தைபோலப் பாதுகாத்து வந்தான். ஒரு சிறு கோடு கூட அதில் விழுந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தான். ஒரு விடுமுறை நாள் அன்று காட்டுப்பகுதிக்குச் சென்று வரலாம் என்று காரில் புறப்படுகிறான். நகரத்தை விட்டு வெளியே வந்தவுடன் பாதை அகலமாகவும், போக்குவரத்து இன்றியும் இருக்கின்றது. தன் காரின் முழு வேகத்தையும் இன்று அனுபவிக்கலாம் என்று எண்ணி மிக வேகமாகப் பயணமாகிறான். திடீரென்று 'டமார்' என்று சத்தம். யாரோ காரில் எதையோ எறிந்தது போலத் தெரிய காரை நிறுத்திவிட்டு இறங்கிப் பார்க்கிறான். அங்கே ஒரு சிறுவன் நின்று கொண்டிருக்கிறான். 'அந்தச் சிறுவன் தான் செங்கலால் எறிந்திருக்க வேண்டும்' என்று எண்ணிக் கோபத்துடன் அவனை அடிக்க ஓடுகிறான். சிறுவன் இளைஞனின் காலைப் பிடித்துக் கொண்டு 'அண்ணா! மன்னித்து விடுங்கள். உங்கள் காரைச் சேதப்படுத்த வேண்டும் என எண்ணி நான் செங்கல் எறியவில்லை. கால் நடக்க முடியாத என் தம்பியை வீல் சேரில் வைத்துத் தள்ளிக்கொண்டு பள்ளிக்குச் செல்கின்றேன். இந்தப் பள்ளம் தட்டி வீல்சேர் கவிழ்ந்து விட்டது. என்னால் தூக்க முடியவில்லை. வலி தாங்காமல் என் தம்பியும் அழுதுகொண்டிருக்கிறான். எத்தனையோ கார்களை நிறுத்திப் பார்த்தேன். யாருமே நிற்கவில்;லை. ஆகையால் தான் செங்கலால் எறிந்தேன்.' அந்த இளைஞன் விழுந்து கிடந்த வீல் சேரைத் தூக்கிநிறுத்தி தம்பியைiயும் அமரச் செய்கின்றான். அவர்களைத் தன் காரிலேயே அமரச் செய்து அவர்களின் பள்ளிக்கூடத்தில் அவர்களை விட்டுவிட்டுத் தன் வீடு திரும்புகிறான். செங்கல் பட்டு கோடு விழுந்த காரின் முன்பகுதியை அப்படியே விட்டுவிடுகிறான். ஒவ்வொரு முறை அதைப் பார்க்கும்போதும் தான் தன் வேகத்தைக் குறைத்து மற்றவர்களைப் பார்க்க வேண்டும் என நினைத்துக் கொள்கிறான். வாழ்க்கை ஓட்டத்தில் நாம் வேகமாகச் செல்லும்போது நாம் நின்று நம்மைச் சுற்றிப் பார்க்காவிட்டால் கடவுள்தான் செங்கல் எறிந்து நம்மை நிறுத்த வேண்டும்!

'எல்லாரையும் போல நானும் ஒன்று' என்ற நிலையில் வாழ்க்கை ஓட்டத்தில் வேகமாக ஓடிக்கொண்டேயிருக்கிறோம். நம்மைச் சுற்றியிருக்கும் நம் உறவுகளையும், உலகத்தையும் பார்க்க நேரமில்லை. எங்கே போகிறோம்? எனத் தெரியாமலேயும் ஓடிக்கொண்டிருக்கிறோம். நாமே வேகத்தைக் குறைக்கவில்லையென்றால் யாராவது நம்மேல் செங்கல் எறிந்துதான் இன்று நம் வேகத்தைக் குறைக்க வேண்டும்.

Stop...God is doing Miracles for You...


1 comment:

  1. Anonymous1/14/2014

    வாழ்க்கைப் பந்தயத்தில் நாம் ஓடுகையில் வந்து விழுகின்றன பல செங்கற்கள்.....வியாதி,பிள்ளைகள்,உறவு வழியாக.இவைகளை.நம்மையும் நமமைச் சார்ந்தவர்களையும் ஆய்வு செய்ய உதவும் speed-breakகளாக்ப் பார்ககத்தூண்டுகிறது இன்றையப் பகுதி.You tube. வழியாக அருமையான பாடல்களைக் கேட்க உதவிய தங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete