Tuesday, January 7, 2014

மறுபடியும் பார்!

அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் (ஞானிகள்) புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும் வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது ... ... ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள். (மத்தேயு 2:9,12)

இன்று காலை 8:15 மணிக்கு எங்கள் ஆலயத்திற்குள் சென்றேன். எங்கள் பங்குத்தந்தையும் மற்றொரு அருட்பணியாளரும் பரபரப்பாக பீடத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். ஏன் இந்தப் பரபரப்பு என்று கேட்டேன்? வாசக நூலில் இன்றைய வாசகங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொன்னார்கள். அவர்கள் முன் திறந்த நிலையில் ஏழெட்டு வாசக நூல்கள் கிடந்தன. நான் பார்க்கட்டுமா? என்றேன். பார்த்தேன். எடுத்தேன். கொடுத்தேன். எப்படிக் கண்டுபிடித்தாய்? என்றார்கள். நான் சின்னதாகச் சிரித்தேன். அப்போது மற்றொரு அருட்பணியாளர் சொன்னார்: 'தேடினால் கிடைக்கும்!' அதற்கு பங்குத்தந்தை சொன்னார்: 'நாங்களும்தான் தேடினோம்! ஆனால் கிடைக்கவில்லை!'. நான் சொன்னேன்: 'ரொம்ப சிம்பிள். கிறிஸ்து பிறப்பிற்குப் பின் தானே திருக்காட்சி. அங்கே தேடுவதை விட்டு திருவருகைக்காலத்திலும், பாஸ்கா காலத்திலும், தவக்காலத்திலும் தேடினால் எப்படிக் கிடைக்கும்? கிறிஸ்து பிறப்பு வாசகத்தை எடுத்தேன். அதற்குப் பின் தான் இன்றைய வாசகம்.' 

இதுல இருந்து என்ன சொல்ல வாரோம்னா, தேடினது கிடைக்க வேண்டுமென்றால் அது இருக்குமிடத்தில் தான் தேட வேண்டும். அல்லது வீட்டுச் சாவியைத் தொலைத்து விட்டு தெருவிளக்கின் கீழ் முல்லா தேடியது போல ஆகிவிடும். ஏன் இங்கே தேடுகிறாய்? ஏனென்றால் இங்கே தானே வெளிச்சம் இருக்கிறது என்றாராம் முல்லா.

இன்று நாங்கள் மூன்று ஞானியர் தினத்தை வெகு சிறப்பாகக் கொண்டாடினோம். மூன்று ஞானியரில் ஒருவர் மட்டும் கறுப்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். நான் பார்த்த எல்லா இடங்களிலுமே இப்படித்தான் இருக்கின்றது. கறுப்போ, சிகப்போ அவர்கள் செயல் வெற்றியில் முடிந்ததா? முடிந்தது.

நான் இன்றைய நற்செய்தியை நிறைய முறை படித்திருக்கிறேன். ஆனால் இன்று இரண்டு விஷயங்கள் புதியதாக இருந்தன.

ஒன்று, நட்சத்திரம் இரண்டாம் முறை அவர்களுக்குத் தெரிகின்றது. முதல் முறை நட்சத்திரம் பார்த்தது எதார்த்தமாக இருக்கலாம். இரண்டாம் முறை அவர்கள் விரும்பியதால் பார்க்கின்றனர். செல்டிக் நாகரீகத்தில் ஒரு பழமொழி உண்டு: 'ஒருவரை நீ ஒருமுறை சந்தித்தால் அவரை மறுமுறை சந்திக்காமல் கூட போகலாம். ஆனால் ஒருவரை நீ இரண்டாவது முறை சந்தித்தால் நீ மறுபடி மறுபடி அவரைச் சந்திப்பாய்!'. 

இதே வழக்கத்தை நம் ஊர்க் கடை வியாபாரிகள் நன்றாகத் தெரிந்து வைத்துள்ளார்கள். ஒருமுறை நாம் ஒரு கடைக்குச் சென்றோமென்றால் மறுமுறை செல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் இரண்டாம் முறை சென்றுவிட்டால் தொடர்ந்து நாம் சென்றுகொண்டேதான் இருப்போம்.

ஞானிகள் இரண்டாம் முறை நட்சத்திரம் பார்க்கின்றனர். இன்று நாம் இரண்டாம் முறையும் பார்க்க வேண்டும்? விவிலியத்தில் பல இடங்களில் இதைப் பார்க்கலாம். இயேசு உயிர்த்தபின் மகதலா மரியாவும் மற்ற சீடர்களும் கல்லறைக்குச் சென்று பார்ப்பர். அங்கே இயேசு இல்லை. தோட்டக்காரர் போல இயேசு அங்கே நிற்பார். அவரிடம் மகதலா மரியா பேசிக்கொண்டிருப்பார். பின் மறுபடியும் இயேசுவைப் பார்த்தவுடன் 'ரபூனி' என்று கட்டிப் பிடித்துக்கொள்வார். முதல் முறை பார்த்தபோது அடையாளம் தெரியாத இயேசு இரண்டாம் முறை தன் காதலனாகவும், கடவுளாகவும் தெரிகின்றார். கட்டிப் பிடித்துக்கொள்கின்றார்.

நாம் திருமுழுக்கு பெறும்போது நம் பெற்றோர், ஞானப்பெற்றோர் நம் சார்பாக விசுவாச அறிக்கை செய்கின்றனர். வயது வந்த பின் நாமே விரும்பி அந்த விசுவாசத்தை ஏற்றுக்கொள்கின்றோம். இரண்டாம் முறை இயேசுவைப் பார்க்கும்போதுதான் உண்மையான விசுவாசம் பிறக்கின்றது. பல நேரங்களில் என் விசுவாசமும் குறைந்து போவதை உணர்கின்றேன். இன்று ஞானியர் எனக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம் இதுதான்: 'கண்ணா! மறுபடியும் பார்! நட்சத்திரம் தெரியும்! நம்பிக்கை தெரியும்! விசுவாசம் தெரியும்!'

இரண்டு, ஞானியர் பொன், தூபம், வெள்ளைப்போளம் காணிக்கை செலுத்தினார்கள் என்று வாசிக்கின்றோம். ஆனால் அவர்களின் உண்மையான காணிக்கை என்ன தெரியுமா? ஏரோதிடம் திரும்பிச் செல்ல மறுப்பதுதான். வாழ்வின் காரணியாம் இயேசுவைச் சந்தித்த ஒருவர் சாவின் காரணியாம் ஏரோதைச் சந்திக்க முடியாது. ஏரோதின் அதிகாரத்தை துட்சமாய் மதிக்கத் துணிகின்றனர் அவர்கள். எங்கிருந்து வந்திருக்கும் அவர்களுக்கு அந்தத் தைரியம்? பச்சிளம் குழந்தைகளைத் கொல்ல ஆளனுப்பிய ஏரோதுவிற்கு, இந்த மூன்று வயதான ஞானியரைக் கொல்ல ஆளனுப்ப எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்? ஒருமுறை தாங்கள் முன்வைத்த காலை பின்வைக்க மறுக்கின்றனர் ஞானியர். பல நேரங்களில் என்னிடம் இருக்கும் ஒரு கெட்ட குணம் இதுதான். காலை முன்வைத்தவுடன் சுற்றுமுற்றும் பார்த்து, 'அது நல்லா இருக்கிறதே! இது நல்லா இருக்கிறதே! திரும்புவோமா!' என்று குழம்பிப் போகிறேன். வாழ்வின் காரணியாம், ஒளியின் காரணியாம் கடவுளைச் சந்தித்த ஒருவருக்கு அழிவின் காரணியிடம், இருளின் காரணியிடம் நிச்சயம் வேலையில்லை.

தேங்க்ஸ் ஞானியரே!

1 comment:

  1. Anonymous1/07/2014

    எத்துணை ஆழமான உண்மைகளைத் தனக்கே உரித்தான.நகைச்சுவை.உணர்வோடு வெளிப்படுத்தியுள்ளார்.ஆசிரியர்.பல சமயங்களில் சில விஷயங்களை மனது ஏற்றுக் கொள்ள.மறுக்கிறது....அதுவிவிலியம் சம்பந்தப்பட்டது என்றாலும் கூட.ஆனால் என்னைப்.பொறுத்தவரை என் புத்திக்கு அப்பாற்பட்ட எல்லாமே விசுவாவாசத்துக்குட்பட்டதுதான்.அதை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டுமேயன்றி ஆராய்ச்சி செய்வது சரியல்ல.இன்று பல புது வார்த்தைகளை(எ.கா..வாழ்வின் காரணி) அறிமுகப்படுத்திய ஆசிரியருக்குப் பாராட்டும்....நன்றியும்......

    ReplyDelete