Friday, January 24, 2014

நாங்களுமா பார்வையற்யோர்?

யோவான் நற்செய்தியிலேயே, ஏன் அனைத்து நற்செய்திகளிலுமே, நாடக நடையும் அதே நேரத்தில் இறையியல் கோட்பாடுகளும் நிரம்பி இருக்கும் ஒரே பகுதி இன்றைய நற்செய்திப் பகுதிதான். மற்ற நற்செய்தியாளர்களும் இயேசு பார்வையற்றவர்களுக்குப் பார்வையளிப்பதைப் பற்றி எழுதியுள்ளனர். ஆனால் யோவான் நற்செய்தியாளர் இந்நிகழ்வில் 'பார்வை பெறுதல்' என்பது 'இயேசு இறைமகன் என்பதை அறிந்து கொள்ளுதல்' என்ற புதிய இறையியிலை முன்வைக்கின்றார். இந்த நற்செய்தி இயேசுவுக்கும் - பார்வையற்ற மனிதருக்கும், பார்வையற்ற மனிதருக்கும் - பரிசேயருக்கும், பார்வையற்ற மனிதருக்கும் - இயேசுவுக்கும், பரிசேயருக்கும் - பெற்றோருக்கும், பரிசேயருக்கும் - இயேசுவுக்கும் என ஐந்து உரையாடல்கள் உள்ளன. பார்வையற்ற மனிதர் பார்வை பெறுகின்றார். பரிசேயர் பார்வை கொண்டவர்களாக இருந்தாலும் பார்வையற்றவர்களாக இருக்கின்றனர். பெற்றோர்கள் இடைப்பட்ட நிலையில் இருக்கின்றனர். இயேசு இறைமகன் என்ற நம்பிக்கை வருவதே பார்வை பெறுதலின் நிறைவு. 

இறைநம்பிக்கை தான் நாம் பெற வேண்டிய பார்வை. நம் மனம் அனைத்துக்கும் விடைகள் கண்டுபிடிக்க நினைக்கிறது. விடைகள் கிடைக்காவிட்டால் அது பொய்யானது எனவும் எண்ணிவிடுகின்றது. ஆனால் வாழ்வின் எல்லா வினாக்களுக்கும் விடைகள் கிடைப்பதில்லை. கிடைக்கின்ற விடைகளும் நமக்குத் திருப்தியளிப்பதில்லை. ஐம்புலன்களையும் தாண்டிய அறிவே நம்பிக்கை. நம்பிக்கை பல நேரங்களில் மேலோட்டமானது எனவும், தேவையற்றது எனவும் நாம் நினைக்கின்றோம். நம்பிக்கை ஒரு பயணம். 

இந்த நம்பிக்கைப் பயணத்தில் இன்று இந்த நற்செய்திப் பகுதியில் வரும் ஐந்து கேள்விகள் உதவுகின்றன என்று பார்ப்போமா?

1. 'இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?' பார்வையற்றவர் பார்வையற்று இருப்பதற்கு பாவம் தான் காரணம் என்று நினைக்கின்றனர் இயேசுவின் சீடர்கள். ஆனால் 'கடவுளின் செயல் வெளிப்படவே இப்படி இருக்கிறார்' என்று புதிய அர்த்தத்தைக் கொடுக்கின்றார் இயேசு. இந்து மதத்தில் வரும் 'கர்மா' என்ற சிந்தனைக்கு மாற்று இது. நாமும் பல நேரங்களில் நமக்கு வரும் துன்பங்கள் நாம் செய்த பாவத்தினாலும், நமக்கு வரும் இன்பங்கள் நாம் செய்யும் புண்ணியங்களாலும் வருகின்றன என நினைக்கின்றோம். ஆனால் இன்பமோ, துன்பமோ நம் வாழ்வின் நிகழ்வுகள் அனைத்தும் இறைவனின் மாட்சி வெளிப்படவே என்பதுதான் உண்மை. எந்த ஒரு நிகழ்விலும் இறைப்பிரசன்னத்தைக் காணும் ஒருவரால் மட்டுமே இறைநம்பிக்கை வரும். 'கல்லை மட்டும் பார்த்தால் கடவுள் தெரியாது.' 

2. 'அவர் எங்கே?' இது பரிசேயர்களின் கேள்வி. இயேசுதான் பார்வை அளித்தார் என்று பார்வைபெற்றவர் சொன்னவுடன் 'அவர் எங்கே?' என்று கேட்கின்றனர். ஆனால் அவரால் இயேசுவை அடையாளம் காட்ட முடியவில்லை. பரிசேயர்கள் இயேசுவை எதற்காகத் தேடுகிறார்கள்? அவரை ஏற்றுக்கொள்ளவா? இல்லை. அவர்மேல் ஓய்வுநாளை மீறிய சட்டத்திற்காகத் தீர்ப்பளிக்க. இன்று இயேசுவை நாம் எங்கே தேடுகிறோம்? எதற்காகத் தேடுகிறோம்? பல நேரங்களில் நாம் தேடும் கடவுள் உணவில் கரைந்திருக்கும் உப்பாகத்தான் இருக்கின்றார். உணவில் உப்பு தேடும் படியாக இருந்தால் அந்த உணவுப்பகுதி உவர்ப்பாகவே இருக்கும். உப்பு தன்னையே மறைத்தால்தான் உணவு சுவை பெற முடியும். இறைவனின் பிரசன்னமும் நம் வாழ்வில் காணக்கூடியதாக இருப்பதில்லை.

3. 'இவனுக்கு எப்படிக் கண் தெரிகிறது?' கண் தெரிந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத பரிசேயர் அவரின் பெற்றோரிடம் கேட்கும் கேள்வி இது. இந்தக் கேள்வியை நம் மூளையும் பல நேரங்களில் கேட்கும். 'கோயிலுக்கே போகாதா அவன் மட்டும் ஏன் இப்படி இருக்கிறான்?' 'எப்போதும் கோவிலேயென இருக்கும் நான் ஏன் இப்படி இருக்கிறேன்?' 'அது எப்படி?' 'இது எப்படி?' என்று கேள்வி கேட்பதால் நம் அமைதிதான் கெடுகிறது. அன்னை தெரசா சொல்வார்: 'வாழ்வில் நாம் மற்றவரை அன்பு செய்வதற்குப் பதில் அவரைக் குறித்து கேள்விகள் கேட்டே பழகிவிட்டோம்.' கேள்விகள் குறையும்போது நம்பிக்கை பெருகும். அன்பும் பெருகும்.

4. 'மானிட மகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா?' இயேசு பார்வையற்ற மனிதரிடம் கேட்கின்றார். 'தி ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன்ஸ்' என்ற நாவலில் வரும் கதாநாயகனிடம் (விஞ்ஞானி) திருத்தந்தையின் பதில்குரு ஒரு கேள்வி கேட்பார்: 'கடவுள் மேல் உமக்கு நம்பிக்கை உண்டா?' அதற்கு கதாநாயகன் சொல்வார்: 'நம்பிக்கை என்பது ஒரு கொடை. அதைக் கடவுள் மட்டுமே தரமுடியும். அவராக யாரைத் தேர்ந்து கொள்கிறாரோ அவருக்கே அது கிடைக்கும்'. ஆம். நம்பிக்கை என்பது கீழிருந்து மேலே செல்வது அல்ல. மேலிருந்து நம்மை நோக்கி வருவது. அதைக் கடவுளே நமக்குத் தர முடியும்.

5. 'நாங்களுமா பார்வையற்யோர்?' பரிசேயர்கள் இயேசுவைப் பார்த்துக் கேட்கும் கேள்வி இது. இயேசுவின் பதிலில் நம்பிக்கைக்கான தேடல் நிறைவு பெறுகிறது: 'நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால் உங்களிடம் பாவம் இராது!'. நம்பிக்கை என்ற பார்வை இல்லாத அனைவருமே பாவிகள் என்கிறார் இயேசு. 'இருட்டறையில் கறுப்புப் பூனையைத் தேடுவதுதான் நம்பிக்கை' என்பார் தாமஸ் அக்வினாஸ். அந்த நம்பிக்கையைத் தேடவும் ஒரு பார்வை தேவை. 'நான் பார்வை பெற வேண்டும்!' என்று இறைவனை நாம் கேட்போம். இறைவனை 'அப்பா' என்று அழைத்து, ஒருவர் மற்றவரை 'சகோதரன், சகோதரி' என்று அழைக்கும்போதுதான் நாமும் பார்வைபெற்றவர்கள்.

1 comment:

  1. Anonymous1/25/2014

    ''வாழ்வின் தடை களைத் தாண்டியெழ நான் பார்வை பெற வேண்டும்''....கீழே விழுந்துவிட்ட ஒருவனைக் கைதூக்கி விடும், நம்பிக்கையூட்டும் வார்த்தைகள். இந்த நம்பிக்கையென்னும்''கொடையை'' நமக்கும் இறைவன் அபரிமிதமாய்ப்
    பொழிய இரைஞ்சுவோம்.இறைவன் வழங்கும்.இந்தப் பார்வை/நம்பிக்கையைப் புது கோணத்தில்.எடுத்துரைத்த ஆசிரியருக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete