Wednesday, January 22, 2014

முடிந்ததா? விடிந்ததா?

பழைய ஏற்பாட்டில் இஸ்ராயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து மோசே தலைமையில் விடுதலை பெற்றவர்களாய் செங்கடலைக் கடந்து சென்றதையும், புதிய ஏற்பாட்டில் இயேசு இறப்பைக் கடந்து பாவத்தை அழித்து உயிர்த்ததையும் ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால்: 'எல்லாம் முடிந்தது என்று நினைத்தவர்களுக்கு விடிந்தது!' என்று சொல்லலாம். 

பின்னால் பாரவோனின் படைவீரர்கள். முன்னால் செங்கடல். இரண்டு பக்கம் சென்றாலும் அழிவு நிச்சயம். இச்சூழலில் 'எங்களை அழிக்கவா இங்குக் கூட்டி வந்தீர்!' என்று மோசேயைப் பார்த்து இஸ்ரயேல் மக்கள் பயத்தால் அலறியபோது, எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்தபோது அங்கே விடியச் செய்கின்றார் இறைவன். கடல் பிரிகின்றது. பாதை தெரிகின்றது. பாதம் நனையாமல் கடந்து செல்கின்றனர்.

முப்பது வருடங்கள் தம்மையே தயாரித்து, மூன்று வருடங்கள் பன்னிரண்டு சீடர்களோடு பட்டிகள் தோறும் பயணம் செய்து நோய்களைக் குணமாக்கி, பேய் பிடித்தவர்களுக்கு நலம் தந்து 'இறையரசு நெருங்கி வந்துவிட்டது!' என அறிவித்த ஒருவர், 'தாவீதின் மகனுக்கு ஓசான்னா!' என்று நாம் வாழ்த்துப்பாடிய ஒருவர், 'மெசியா வந்துவிட்டார். நம் துன்பமெல்லாம் அழிந்துவிட்டது!' என நாம் கனவு கண்டுகொண்டிருக்க இதோ சிலுவையில் மிகக் கொடூரமாய் இறந்து போனாரே! என்று புலம்பிக் கொண்டிருந்த சீடர்களுக்கும் இன்று விடியல். இயேசுவின் சீடர்களை விட அவரின் எதிரிகளே அவரின் உயிர்ப்பின் மேல் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆகையால்தான் கல்லறைக்குக் காவல் வைக்கத் துணிகின்றனர்.

பழைய ஏற்பாட்டு மக்கள் கடந்ததற்கு ஒரே உதாரணம்: 'நனைந்த தரை'. புதிய ஏற்பாட்டில் இயேசு கடந்ததற்கு ஒரே உதாரணம்: 'வெற்றுக்கல்லறை'. 'அவர் இங்கு இல்லை!' - இதுதான் அவருடைய கல்லறையில் அவராய் எழுதி வைத்த வாசகம். 'சீடர்கள் கண்டார்கள், நம்பினார்கள்' என்று விவிலியம் சொல்லும்போதும் 'வெற்றுக் கல்லறையையே' குறிப்பிடுகின்றது.

இன்றும் நம்மைக் கட்டி வைக்கும் ஒரு வார்த்தை இதுதான்: 'எல்லாம் முடிந்துவிட்டது! இனி ஒன்றுமில்லை!' நம் வாழ்வில் இழப்புகள் வரும்போதும், நம் உடல்நலம் தளரும்போதும், நமக்கு நெருக்கமானவர்கள் நம்மைவிட்டுப் பிரியும்போதும், தொழிலில் நஷ்டம் வரும்போதும், குடும்பத்தில் பிரச்சினைகள் வரும்போதும், 'எல்லாம் முடிந்துவிட்டது!' எனப் புலம்புகின்றோம். இறைவனின் பார்வையில் முடிவு என்பதே இல்லை. எல்லாம் புதிய தொடக்கம்தான்.

இந்தப் புதிய தொடக்கத்தைக் காண முதலில் நமக்குப் புதிய கண்கள் வேண்டும். அந்தக் கண்களின் பெயர்தான் நம்பிக்கை. இயேசுவின் எதிரிகளும் அவருடைய கல்லறையை வந்து பார்த்திருக்கக் கூடும். அவர்களும் 'அவர் இங்கு இல்லை!' எனச் சொல்லியிருப்பார்கள். சீடர்கள் சொன்னதற்கும், அவர்கள் சொன்னதற்கும் வித்தியாசம் இதுதான்: 'நம்பிக்கை!'. கண்டார்கள். நம்பினார்கள். 'ஆண்டவராகிய கிறிஸ்து உயிர்த்தெழாவிட்டால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும், நாங்கள் அறிவிக்கும் நற்செய்தியும் வீண்!' என்கிறார் தூய பவுலடியார். இயேசுவின் உயிர்ப்பே நம் இறைநம்பிக்கையின் ஆணிவேர். அந்த நம்பிக்கைக்காக இன்று நன்றி கூறுவோம். இந்த நம்பிக்கை நமக்கு மனதளவிலும் வலுவூட்டுகிறது. 'அவர் கல்லறையில் இல்லை!' என்றால் எங்கே இருக்கிறார்? 'இதோ! நம் நடுவில் இருக்கின்றார்'. 'வாழ்பவரை இனி இறந்தோரிடம் தேடுவதேன்!' எங்கெல்லாம் வாழ்க்கை துளிர் விடுகின்றதோ, எங்கெல்லாம் மொட்டு விரிகின்றதோ, எங்கெல்லாம் உயிர் பிறக்கின்றதோ அங்கே அவர் இருக்கின்றார். அங்கே அவரைத் தேடுவோம்.

இதன் உட்பொருள் என்ன? நாம் கல்லறைகளாய் இருந்தால் இயேசு அங்கே இருப்பதில்லை. நாம் நம் பழைய கால வடுக்களையும், பாவங்களையும் பற்றிக்கொண்டு 'என் பாவமே! என் பாவமே!' எனப் புலம்பிக் கொண்டிருந்தால் அங்கே கடவுள் இருப்பதில்லை. நம் புன்சிரிப்பில் கடவுள் இருக்கிறார். பல நேரங்களில் உயிர்ப்பின் மகிழ்ச்சியைவிட வெள்ளியின் சிலுவைச் சோகத்தையே விரும்புகிறோம். இஸ்ரயேல் மக்களும் ஒரு கட்டத்தில் 'எகிப்தின் இறைச்சிப் பாத்திரங்கள் அருகே அமர்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!' எனத் தங்களின் இறந்தகாலத்தை நாடிச்செல்கின்றனர். அவர் உயிர்த்துவிட்டார். ஆகவே இனி நாம் பின்னால் பார்க்க வேண்டாம். முன்னால் பார்த்து நடப்போம்.

'இயேசுவின் உடலுக்கு நறுமணத்தைலம் பூச வந்த பெண்களும், சீடர்களும் உயிர்ப்பின் சான்றுகளாய் மாறுகின்றனர்'. அகுஸ்தினார் உயிர்ப்பைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: 'கல்லறையின் கல் புறட்டப்பட்டது இயேசுவை வெளியே கொண்டு வருவதற்கு அல்ல. மாறாக, சீடர்களை உள்ளே கொண்டு வருவதற்குத்தான்!' இன்றும் நாம் உயிர்த்த ஆண்டவரைப் பார்க்கும்போதெல்லாம் நமக்கு இதுதான் தோன்ற வேண்டும்: 'நாம் கண்டதை மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும்'. இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின் சீடர்கள் புத்துயிர் பெறுகின்றனர். 'கடவுள் நம்மோடு' என்று இறங்கி வந்த இயேசு 'கடவுள் நமக்காக' என ஏறிச் செல்கின்றார். 

எல்லாம் கடந்து விடும். சவுக்கடி, மறுதலிப்பு, சிலுவைத் துன்பம், தனிமை, ஏமாற்றம், சோகம். எல்லாம் நொடிப்பொழுதில் மாறிவிடும். 'முடிந்தது என்று நினைக்கும் போது அங்கே விடியும்'. இரவில் மடிந்த சூரியன் காலையில் எழுகின்றான். கிழக்கில் உதித்த சூரியனாய் இயேசு இன்றும் நம் நடுவில்.

1 comment:

  1. Anonymous1/23/2014

    உலர்ந்துபோன நெஞ்சங.களுக்கு உரமூட்டுவதாகவும் நைந்துபோன நெஞ்சங்களுக்கு நம்பிக்கையூட்டுவதாவும் அமைந்துள்ளது இன்றையப்பகுதி.அகுஸ்தினாரின் உயிர்ப்பு பற்றிய வார்த்தைகள் அழகான சிந்தனையைத் தூண்டுகின்றன.பொழுது சாய்வது புலர்வதற்குத்தான் என்ற .நம்பிக்கையை விதைத்த ஆசிரியருக்குப் பாராட்டு.

    ReplyDelete