Saturday, January 4, 2014

சொத்தில் எனக்குப் பங்கு வேண்டும்!

நான்கு மாதங்களாக விவிலியத்திலுள்ள கேள்விகளின் மேல் நம் சிந்தனையைப் பதித்தோம். 100 கேள்விகளின் பொருளைக் கண்டுள்ளோம். இந்த மாதம் முதல் விவிலியத்தின் நற்செய்திப் பகுதிகளைச் சிந்திக்கலாம்;. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். அதாவது நான் ஒவ்வொரு ஞாயிறும் நற்செய்திப் பகுதிக்கு மறையுரைக் குறிப்பு எழுத வேண்டும். அதற்கான தயாரிப்பாகவும் இதை அமைத்துக்கொள்ள விழைகிறேன். ஒவ்வொரு ஞாயிறு நற்செய்தியையும் பற்றிய சிந்தனையை நான் இந்த வலைப்பூவில் பகிரப் போகிறேன்.

இன்றைய தினம் நமக்கு மிகவும் பரிச்சயமான ஒரு நற்செய்திப் பகுதியோடு தொடங்குவோம்.

காணாமற்போன மகன் எடுத்துக்காட்டு!

ஊதாரி மகன் எடுத்துக்காட்டு எனப் பலரால் அறியப்படும் இந்த எடுத்துக்காட்டு உலகச் சிறுகதைகள் வரலாற்றில் மிக முக்கியமான இடம் பெறுகிறது. சிலர் தந்தையின் அன்பை மையப்படுத்தி 'ஊதாரித் தந்தை உவமை' என்றும், சகோதரனை மையப்படுத்தி  'ஊதாரி மகன் - காத்திருக்கும் தந்தை – கோபக்கார அண்ணன்' எனவும் அழைப்பர். பல நேரங்களில் பாவத்திலிருந்து மனமாற்றத்திற்கு அழைக்கும் உருவகமாகவும் இதை நாம் கேட்டிருப்போம். ஆனால் இயேசுவின் இந்த உருவகத்தின் நோக்கம் பாவமோ, மனமாற்றமோ அல்ல. மாறாக, 'இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறார்' எனக் குற்றம் சாட்டிய பரிசேயர், மறைநூல் அறிஞர்களுக்காக இயேசுவின் பதில்தான் இந்த உருவகம். ஒருவர் மற்றவரை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றார் இயேசு. இந்த உருவகத்தில் வரும் அனைத்து வார்த்தைகளும் உருவகங்களேஷ இளைய மகன் ஏற்புடையாதல் என்பது தொடக்கநூலில் தங்கள் தந்தையர்களுக்கு ஏற்புடையவர்களாகும் அனைத்து இளைய மகன்களையும் (ஆபேல், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு), வேற்று நாடு, இஸ்ராயேல் மக்களின் பாபிலோனிய அடிமைத்தனத்தையும்), பன்றிகள் யூத சிந்தனைக்கு அருவருப்பானதையும், தந்தையின் கட்டளைகளை மட்டும் கடைப்பிடிப்பதால் தான் தந்தையோடு உடனிருக்கிறேன் என நினைக்கும் மூத்த மகன் பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்களையும், தந்தையின் பணியாளர்கள் இறைவாக்கினர்களையும் உருவகப்படுத்துகின்றன. மேலும் மோதிரம், ஆடை, மிதியடிகள், கொழுத்த கன்று, விருந்து என பொருட்களும், நிகழ்வுகளும் அடையாளச் சொல்லாடல்களாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன.

'உங்களில் யார்...' எனத் தொடங்கும் மற்ற இரண்டு எடுத்துக்காட்டுக்களைப் போல அல்லாமல், 'ஒருவருக்கு...' எனத் தொடங்குகிறது இந்த எடுத்துக்காட்டு. 'ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்' எனத் தொடங்கும் முதல் வரி 'காயின் - ஆபேல்', 'இஸ்மயேல் - ஈசாக்கு', 'ஏசா – யாக்கோபு' மற்றும் 'மூத்த சகோதர்கள் - யோசேப்பு' என்னும் பழைய ஏற்பாட்டுப் புதல்வர்களை நமக்கு நினைவுபடுத்துகிறது. இந்தப் பட்டியலில் இளையவர்கள் இறைவனுக்கு ஏற்புடையவராகிறார்கள். 'இளைய மகன் ஏற்புடையவராதல்' என்ற பழைய ஏற்பாட்டுக் கருத்தியல் இந்த எடுத்துக்காட்டின் முதல் வரியில் நிழலாடுகின்றது. 

லூக்கா 15:11-32 வரை இருக்கும் இந்த எடுத்துக்காட்டை 15:11-24 மற்றும் 15:25-32 என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். 15:11-24 என்னும் முதல் பகுதியில் மூன்று உரையாடல்கள் உள்ளனஷ 1) இளைய மகனுக்கும் தந்தைக்கும் இடையே உரையாடல், 2) இளைய மகன் தனக்குள் பேசும் உரையாடல், 3) இளைய மகன் தன் தந்தையிடம் திரும்பும்போது பாவ அறிக்கை. 15:25-32 என்னும் இரண்டாம் பகுதியில் இரண்டு உரையாடல்கள் உள்ளனஷ 1) மூத்த மகனுக்கும், பணியாளருக்கும் இடையே உரையாடல், 2) தந்தைக்கும், மூத்த மகனுக்கும் இடையே உரையாடல்.

இளைய மகனுக்கும் தந்தைக்கும் இடையே நடக்கும் உரையாடலின் தொடக்கம் 'சொத்தில் எனக்குப் பங்கு வேண்டும்!' சொத்தை ஒரு வீட்டில் எப்போது பிரிப்பார்கள்? வீட்டின் தலைவர் இறக்கும்போதுதான். இளைய மகனைப் பொறுத்த வரையில் தன் தந்தை இறந்து விட்டார். ஆகையால் தான் சொத்தில் பங்கு கேட்கின்றார். சொத்தைத் திரட்டிக்கொண்ட மகன், தொலைநாட்டிற்குப் பயணம் மேற்கொள்கின்றார். அங்குத் தாறுமாறாக வாழ்ந்து சொத்தையெல்லாம் அழிக்கின்றார். தாறுமாறாக அவர் வாழ்ந்த வாழ்க்கை எப்படி என்பதை மூத்த மகனின் வார்த்தைகள் நமக்குச் சொல்கின்றனஷ 'விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்தையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன்' என்கிறார் மூத்த மகன். நாடு முழுவதும் ஏற்படும் பஞ்சம் அவரின் வறுமையை அதிகமாக்குகின்றது. 'பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்' என்பது போல அடுத்தடுத்து துன்பங்கள். அந்நிய நாட்டில் அந்நியர் ஒருவருக்கு வேலைசெய்யச் செல்கின்றான். பன்றி மேய்க்கும் வேலை. பன்றிகளின் நெற்றுக்களே உணவு. இதில் இளைய மகனின் மூன்று அவமானங்களைப் பார்க்கலாம்ஷ முதல் அவமானம்ஷ யூதர் ஒருவர் புறவினத்தாருக்குக் கீழே வேலை செய்வது. இரண்டாவது அவமானம்ஷ அவரின் இழிதொழில். மூன்றாவது அவமானம்ஷ உண்ணும் நிலையில் தாழ்வு. இந்த நிலையில் அவரின் அறிவுத் தெளிகின்றார். 'அறிவுத்தெளிதல்' - இதுதான் இந்த எடுத்துக்காட்டின் மையம். 'தன்நிலை அறிவதே' அறிவுத்தெளிதல். தன் வீட்டுக் கூலியாளின் நிலையையும், தன் நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றார். புறப்பட்டுப் போகின்றார். அங்கே தந்தை வயலில் காத்திருக்கின்றார். வயல் வெளியில் காத்திருத்தல், கால்கடுக்க நிற்றல் யூத ஆணிடம், குடும்பத் தலைவரிடம் எதிர்பார்க்கும் ஒன்று அல்ல. ஆனாலும் தந்தை காத்திருக்கின்றார். காத்திருக்கும் தந்தை ஓடிவருகின்றார். முத்தமிடுகின்றார். இந்த முத்தம் தந்தையின் எல்லா வார்த்தைகளையும் சொல்லி விடுகிறது. 'அப்பா! கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன். இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவர்' என அறிக்கையிடுகின்றார். தான் நினைத்துப் பார்த்து தன்னோடு உரையாடும்போது, 'உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்' என்று சொல்லும் மகன் இந்த வார்த்தைகளைத் தன் தந்தையிடம் கூறவில்லை. அவர் அப்படிச் சொல்லிவிடுவாரோ என நினைக்கின்ற தந்தை முந்திக்கொள்கின்றார். 'ஆடை', 'மோதிரம்', 'காலுக்கு மிதியடி' என அணிவிக்கின்றார். இந்த மூன்றுமே மகனுக்குரிய அடையாளங்கள். கொழுத்த கன்றும் அடிக்கப்படுகின்றது. அங்கே வருகின்றார் மூத்த மகன். வயல் வெளியில் தன் அன்றாட வேலையை முடித்துவிட்டு வருகின்றார். அவரை எதிர்கொள்வது தந்தையல்ல, ஊழியர்கள். 'உம் தம்பி' வந்திருக்கிறார் என ஊழியர்கள் சொல்கிறார்கள். தந்தையிடம் 'உம் மகன்' எனச் சொல்கின்றார் மூத்த மகன். இறந்து போயிருந்தான், அவன் கிடைத்து விட்டான் என்பது மூத்த மகனின் சிந்தனையைத்தான் வெளிப்படுத்துகிறது. மூத்தவரின் மனதில் தம்பி இறந்து போய்விட்டார். சோகமாக நிற்கின்ற அவரைச் சந்திக்க வருகின்றார் தந்தை. 'எனக்கு ஓர் ஆட்டுக்குட்டியைக் கூட கொடுக்கவில்லையே!' என்று குற்றம் சுமத்துகின்றார். 'என்னுடையதெல்லாம் உன்னுடையதே' என நினைவூட்டுகின்றார் தந்தை. மூத்த மகன் வீட்டிற்குள் சென்றாரா? விருந்தில் பங்கேற்றாரா? இளைய மகன் அவரிடம் என்ன பேசினார்? அவர்கள் எப்படித் தொடர்ந்து வாழ்ந்தார்கள்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் வாசகர்கள் தான் பதில் சொல்ல வேண்டு;ம் என்பது போல முடிகின்றது கதை.

1 comment:

  1. Anonymous1/04/2014

    விவிலியத்தைப் பற்றி சிந்திப்பது வரவேற்க வேண்டிய விஷயமே.இன்றையப் பகுதியின் முடிவு பற்றி ஒரு வாசகி என்ற முறையில் என் கருத்து...கண்டிப்பாக வீட்டினுள்ளே சென்ற தன் அண்ணனிடமும் பாசத்தைக் காட்டியிருப்பார் தம்பியான இளையமகன்.எதிரே நிற்பவர் என்ன மன நிலையில் இருப்பினும் நம் அன்பினால் அவர்களை வென்று விடலாம்.இப்படித்தான் யோசிக்க வேண்டும்.இலையெனில் இந்த உவமை அர்த்தமற்றதாகிவிடும்.

    ReplyDelete