திருமுழுக்கின்போது இயேசுவின்மேல் இறங்கி வந்த தூய ஆவியானவர் உடனடியாக அவரைப் பாலைநிலத்திற்கு அழைத்துச்செல்கின்றார் (காண்: மோசே விப 34:28, எலியா 1 அர 19:8). அலகையால் இயேசு சோதிக்கப்பட்ட நிகழ்வு ஒத்தமைவு நற்செய்திகளில் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. யோவான் நற்செய்தியாளர் இந்த நிகழ்வைக் குறித்து ஒன்றுமே எழுதாமல் அமைதி காக்கின்றார். மாற்கு நற்செய்தியாளர் 'பாலைநிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார். அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார். அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்' (மாற்கு 1:13) என்று ஒரே மூச்சாக எழுதி முடிக்கின்றார். மத்தேயு நற்செய்தியாளரும், லூக்கா நற்செய்தியாளரும் இயேசுவின் சோதனைகளை மூன்று எனக் குறிப்பிட்டாலும், அவர்கள் குறிப்பிடும் வரிசை ஒன்றிற்கொன்று முரண்படுகிறது (காண்: மத் 4:1-11 அப்பம் - கோவில் - மலை. லூக் 4:1-13 அப்பம் - நகரம் - கோவில்). மத்தேயு நற்செய்தியாளருக்கு முக்கியத்துவம் மலை – சீனாய் மலை மோசே, கார்மேல் மலை எலியா போல இயேசுவும் மலைமேலே. ஆனால் லூக்கா நற்செய்தியாளருக்கு முக்கியத்துவம் கோவில். எருசலேம் கோவிலில் தொடங்கும் தன் நற்செய்தியை எருசேலம் கோவிலிலேயே நிறைவு செய்கின்றார் லூக்கா. இரண்டுபேரின் நோக்கங்களும் வேறுபட்டதால் 'சோதனைகளை' வரிசைப்படுத்துவதிலும் வேறுபடுகின்றனர்.
நமக்கு கடவுள் ஏன் சோதனைகளை அனுமதிக்க வேண்டும்? கடவுளையே சாத்தான் சோதிக்கிறான் என்றால் கடவுளை விட அவன் மேலானவனா? எதற்காக இயேசு 'எங்களுக்குச் சோதனைகள் வேண்டாம்' என்று கற்பிப்பதற்குப் பதில் 'எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்' என்று இறைவேண்டலைக் கற்பிக்கின்றார். நன்மையும், அன்பும் உருவான எல்லாம் வல்ல கடவுள் ஏன் தீமையை அனுமதிக்க வேண்டும்? இந்தக் கேள்விகள் எல்லாம் நம் உள்ளத்தில் எழக்கூடியவை. நன்மை – தீமை என்பது மனிதரின் தொடக்கமுதல் இருந்துவரும் ஒரு தேடல். இந்தக் கேள்விகளுக்கு பதிலாக வருபவை அல்ல இயேசுவின் சோதனைகள். இதை ஒரு பாலைவன நிகழ்வாக மட்டும் பார்க்காமல் நம் உள்ளத்தில் நிகழும் நன்மைக்கும் - தீமைக்கும் எதிரான போராட்டமாகவும் பார்க்கலாம். 'ஏனெனில் நம் தலைமைக்குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல. மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர். எனினும் பாவம் செய்யாதவர்' (எபி 4:15).
'நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும.;' இயேசு தன் வாழ்நாள் முழுவதும் தனக்காக என்று எந்த அற்புதத்தையும் நிகழ்த்தவில்லை. ஆனால் இறுதி வரை மக்கள் அவருக்கு கொடுத்த சோதனையும் இதுதான்: 'நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா' (மத் 27:40). 'தனக்குப் போகத்தான் தானம்' என்பது பழமொழி. இயேசுவைப் பொறுத்தவரையில் 'தனக்கென்று எதுவுமில்லை' என்பதுதான் வாழ்க்கைத் தத்துவமாக இருந்தது. 'இந்தக் கல்லை அப்பமாக்கி உண்' என்று சொல்கின்ற அலகை இயேசுவின் ஆணவத்தை தூண்டலாம் என நினைக்கின்றது. 'நீங்கள் இதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள்' (தொநூ 3:5) என்று முதற்பெற்றோரை தோட்டத்தில் தூண்டிய அலகை இங்கே இயேசுவையும் தூண்டுகிறது. நாம் எது செய்தாலும், யாரைச் சந்தித்தாலும் நமக்குள் ஒளித்துக்கொள்கின்ற கேள்வி: 'இதைச் செய்தால், இவரை அன்பு செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்?' என்பதுதான். சுயத்தை அறுக்கக் கற்றுக்கொடுப்பதே இம்முதல் சோதனை.
'நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையதாகும்.' கடவுளா? செல்வமா? கடவுளா? பொருளா? கடவுளா? அலகையா? 'நீங்கள் கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்ய முடியாது' (மத் 6:24) என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு விளக்கம் தருவதே இச்சோதனை. இங்கே இயேசுவை சோதிக்கின்ற சாத்தான் 'deal or no deal' என்று கேட்கிறது. 'வாழ்வையும், சாவையும், ஆசியையும், சாபத்தையும் உனக்கு முன் வைக்கிறேன். நீயும் உனது வழித்தோன்றல்களும் வாழும் பொருட்டு வாழ்வைத் தேர்ந்துகொள்' (இச 30:19) என எதைத் தேர்ந்துகொள்ள வேண்டும் என்பதை இது நமக்குக் கற்பிக்கின்றது. மனிதர்களை பல நேரங்களில் அடிமையாக மாற்றும் ஒன்று அவர்களிடம் இருக்கும் சுதந்திரம்தான். 'இது வேண்டும், அது வேண்டாம்' என்று நம்மை முடிவெடுக்க வைக்கும் சுதந்திரமே பல நேரங்களில் நம் துன்பத்திற்கும் காரணமாக அமைகின்றது. தேர்ந்தெடுத்தபின் 'ஐயோ, தவறு செய்துவிட்டேன்' என்ற குற்றவுணர்வையும், 'அதை எடுத்திருக்கலாமோ?' என்ற கவலையையும் தருவது இந்தச் சுதந்திரம்தான். இன்று நாம் எதைத் தேர்ந்து கொள்கிறோம்?
'நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்.' இயேசுவை ஒரு கைப்பொம்மையாக மாற்ற நினைக்கிறது அலகை. 'கடவுளைக் கடவுளாக இருக்க விடு' என்று பதிலடி கொடுக்கின்றார் இயேசு. நாமும் பல நேரங்களில் கடவுளையும், கடவுளாக இருக்க விடுவதில்லை. மற்றவர்களையும், மற்றவர்களாக இருக்க விடுவதில்லை. 'நான் நவநாள் செய்கிறேன். என்னை இப்படி மாற்றுங்கள். எனக்குச் சொத்து கொடுங்கள்' என்று நாம் கடவுளையும் அவர் தன்மையிலிருந்து குதிக்கத் தூண்டுகிறோம். அல்லது 'நான் உன்னை எவ்வளவு அன்பு செய்தேன். எனக்கு ஒரு நன்றி சொன்னாயா? ஃபோன் செய்தாயா? நான் நல்லாயிருக்கேன்னாவது நினைச்சியா?' என்றெல்லாம் மற்றவர்களையும் குதிக்கச் சொல்கிறோம். அவரவருக்குரியதை அவரவருக்கு கொடுக்க வேண்டும் என்பதே இச்சோதனையில் இயேசுவின் போதனை.
'அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு அவரைவிட்டு (இயேசு) அகன்றது' (லூக் 4:13) – 'அப்பொழுது வானதூதர் அவரைவிட்டு (மரியா) அகன்றார்' (லூக் 1:38). இந்த இரண்டு இறைவாக்குகளையும் அருகில் வைத்துப் பார்த்தால் என்ன புலப்படுகிறது? வானதூதரும், அலகையும் நம்மை விட்டு அகல்கிறார்கள் என்றால் திரும்ப வரமாட்டார்கள் என்று அர்த்தம் அல்ல. இரண்டு பேருமே நம் வாழ்வில் தொடர்ந்து வருவார்கள். இயேசுவுக்கும் சோதனைகள் தொடர்ந்தன (காண். மத் 16:21-23, லூக் 22:42). நமக்கும் சோதனைகள் தொடரும். 'உங்களுக்கு வருகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல. கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார். சோதனை வரும்போது அதைத் தாங்கிக் கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார். அதிலிருந்து விடுபட வழி செய்வார்' (1 கொரி 10:13).
நமக்கு சோதனை வருகிறதென்றால் இறைவன் நம் சுதந்திரத்தை மதிக்கிறார் என்றுதான் பொருள்.இறைவன் விரும்பியிருந்தால் ஆதாமை விலக்கப்பட்ட கனியை உண்ண விடாமல தடுத்திருக்கலாம்.அவர் அப்படிச் செய்யவில்லை என்பதே முடிவை சம்பந்தப்பட்டவர் தான் எடுக்கவேண்டுமென அவர் விரும்புவதைக் காட்டுகிறது.சோதனையை ஜெயிப்பதோ அதற்கு பலியாவதோ நாம்தான் பொறுப்பெடுக்க வேண்டும்..அவரல்ல.ஆமா..எங்கிருந்து இப்படி முத்தான
ReplyDeleteபாடல்களைத் தேடித்தேடிப் போடுகிறீர்கள்? Hats off to U!