Monday, January 20, 2014

வந்து பாருங்கள்

அப்பெண் தன் குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் சென்று மக்களிடம், 'நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து பாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ!' என்றார். அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுவிடம் வந்தார்கள். (யோவான் 4:28-30)

இயேசுவின் பணி வாழ்வு யூதேயா, கலிலேயா மற்றும் சமாரியா போன்ற மூன்று இடங்களில் நடைபெறுவதாக அனைத்து நற்செய்தியாளர்களுமே எழுதுகின்றனர். பூகோள அடிப்படையில் பார்த்தால் யூதேயாவிற்கும் கலிலேயாவிற்கும் இடையே உள்ள பகுதியே சமாரியா. கிமு 732ல் அசீரியர்கள் இஸ்ரயேல் மீது படையெடுத்த அவர்களைத் தங்கள் நாட்டுக்கு அடிமைகளாகக் கடத்திச் செல்கின்றனர். அங்கிருந்து மீண்டு வந்த மக்கள் அசீரியர்களுடன் திருமண உறவிலும் ஈடுபடத் தொடங்குகின்றனர். இப்படியாக யூதர்களும், அசீரியர்களும் இணைந்து உருவானதுதான் சமாரிய இனம். யூத ரத்தத்தை மற்றவர்களுடன் கலந்ததால் மற்ற யூதர்கள் இவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்றும் தீட்டுப்பட்டவர்கள் எனவும் கருதினர். மேலும் சமாரியர்கள் யூத விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களை மட்டுமே தங்கள் விவிலியமாகக் கொண்டவர்கள். யூத மக்கள் இறைவனை எருசலேமில் வழிபட்டதுபோல சமாரியர்கள் கெரிசிம் என்ற மலையில் யாவே இறைவனை வழிபடுகின்றனர்.

இப்படியாக கடவுள் வேறு, விவிலியம் வேறு, தூய்மையில் குறைவு என இருந்த மக்களில் ஒருவரான சமாரியப் பெண்ணைச் சந்திக்கின்றார் இயேசு. இதில் இயேசு இரண்டு மரபுமீறல்களைச் செய்கின்றார்: ஒன்று, யூதர்கள் சமாரியர்களோடு பண்ட பாத்திரங்களில் கையிடுவதில்லை. ஆனால் இயேசு அதையும் மீறி சமாரியப்பெண்ணிடம் 'தண்ணீர்' கேட்கின்றார். இரண்டு, யூத ஆண்கள், இன்னும் அதிகமாக யூத ரபிக்கள் பெண்களிடம் பொதுவிடங்களில் பேசுவது கிடையாது. அதையும் மீறி பெண்ணிடம் உரையாடுகின்றார் இயேசு. 

யோவான் நற்செய்தியாளரின் இறையியல் பின்புலத்தில் பார்த்தால், யோவான் நற்செய்தியாளர் இயேசு ஒரு இறைவாக்கினர் என்பதை முதலில் நிக்கோதேமுவும் (யோவான் 3), பின் சமாரியப் பெண்ணும் (யோவான் 4), பின் கிரேக்கர்களும் (யோவான் 10), இறுதியாக பொந்தியு பிலாத்துவும் - உரோமையர் (யோவான் 18-19) கண்டுகொள்வதாக வடிக்கின்றார். இயேசு யோவான் நற்செய்தியில் ஒவ்வொரு வட்டமாகக் கடந்து செல்கிறார். 

நேரம் நண்பகல். அந்நேரத்தில் தண்ணீர் எடுக்க வருகிறார் சமாரியப்பெண். கிராமங்களில் வழக்கமாகத் தண்ணீர் எடுக்கப் பெண்கள் செல்லும் நேரம் காலை மற்றும் மாலை. அந்த நேரத்தில் வந்தால் மற்ற பெண்களைச் சந்திக்க நேருமோ என்ற நினைப்பில்தான் யாருமற்ற நேரத்தில் வருகிறார் இவர். இதனால் இவர் 'சற்று ஒருமாதிரியான' குடும்பத்தைச் சார்ந்தவராக இருக்கும் என ஒரு சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதற்கு அவர்கள் தரும் சான்று: 'அவர் ஐந்து கணவர்களைக் கொண்டவர்' (4:18). ஆனால் இந்த ஐந்து கணவர்கள் என்பவர்கள் 'ஐந்து கடவுளர்கள்' (காண் 2 அரசர்கள் 17:24). இவ்வாறாக இயேசுவும் சமாரியப் பெண்ணும் ஒரு பெரிய இறையியல் உரையாடலில் ஈடுபடுகின்றனர். உரையாடலின் இறுதியில் இயேசுவைக் உண்மைக் கடவுளாக, உண்மைக் கடவுளின் இறைவாக்கினராகக் கண்டுகொள்கின்றார் சமாரியப்பெண்.

இன்றைய நற்செய்தியின் மையமாக இருக்கும் வார்த்தை இதுதான்: 'நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன்!' இயேசுவைக் கண்டுகொள்கின்றார் சமாரியப்பெண். இன்று நாம் எழுப்பும் முதல் கேள்வி இதுதான். இன்று நாம் இயேசுவைக் கண்டுகொள்கின்றோமா? எப்படிக் கண்டுகொள்கின்றோம்? சாதாரண வழக்க நடையில் நாம் மற்றவர்களைப் பார்த்து 'என்ன கண்டுக்கவே மாட்றீங்க?' என்று கேட்போம். ஒருவருக்கு உரியதை ஒருவருக்குக் கொடுப்பதன் பெயர்தான் கண்டுகொள்வது. அரசாங்கம் மக்களைக் கண்டுகொள்வதேயில்லை என்றால் அரசாங்கம் மக்களுக்கு உரியதை மக்களுக்குக் கொடுக்கவில்லை என்பதுதான் அர்த்தம். இயேசுவுக்கு உரியதை இயேசுவுக்கு நாம் கொடுக்கிறோமா?

இயேசுவைக் கண்டுகொண்டவுடன் அவர் செய்தது 'தன் குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் ஓடுவதுதான்'. இயேசுவைக் கண்டவுடன் நாமும் நம் குடங்களை விட்டுவிட வேண்டும். வாழ்வுதரும் தண்ணீரைக் கண்டபின் இனி தாகமெடுக்கும் தண்ணீரால் பலனில்லை என்று நினைத்துத்தான் அவர் குடத்தை விட்டுவிட்டார் போலும். ஊருக்குள் சென்று அவர் சொன்னது இரண்டே வார்த்தைகள்தாம்: 'வந்து பாருங்கள்.' இதே வார்த்தைகளைத் தான் இயேசு தன்னைப் பின்தொடர்ந்து வந்த தன் முதற்சீடர்களிடமும் சொன்னார் (யோவான் 1:39). இன்று நாம் இயேசுவைப் பார்த்தபின் மற்றவர்களிடம் போய் இதே வார்த்தைகளைச் சொல்கிறோமோ? கிறிஸ்தவ மதம் இயேசுவுக்குப் பின் 100 ஆண்டுகளுக்குள் பயணம் செய்த அளவிற்கு அதற்குப் பின் வந்த 1900 ஆண்டுகள் பயணம் செய்யவில்லை. 100 ஆண்டுகளுக்குப் பின் நடந்ததெல்லாம், இன்றும் நடப்பதெல்லாம் 'நான் சரியா? நீ சரியா?' என்ற வாய்ச்சண்டைதான். கிறிஸ்து இன்று பிளவுபட்டு நிற்கின்றார். கிறிஸ்து இன்று ஒரு வியாபாரப் பொருளாகவும், நம் சண்டைகளுக்கு நாம் எடுக்கும் காரணியாகவும் மாறிவிட்டார். இந்த நிலையில் நாமே கிறிஸ்துவைப் பார்க்கவில்லை. நாம் யாரிடம் போய் 'வந்து பாருங்கள்' என்று சொல்ல முடியும்.

இயேசுவை நாம் 'போய்ப் பார்க்காததற்கு' இன்று என்னென்ன காரணங்கள் உள்ளன? அல்லது இயேசுவை நாம் எதற்காகப் போய்ப் பார்க்கிறோம்? நம்மைப் பாதுகாக்க வேண்டும் எனவும், நமக்குப் பணம் வேண்டும் எனவும், நமக்கு உடல்நலம் வேண்டும் எனவும், தொழில் பெருக வேண்டும் எனவும் கேட்கின்றோமே நம்மைப் படைத்த அவருக்கு இவையெல்லாம் தேவை என்று தெரியாதா என்ன? மேலும் இயேசுவைப் போய்ப் பார்க்க முடியாத அளவிற்கு இன்று நம் வேலைப்பளு அதிகரித்துவிட்டது. இன்று யாரைக் கேட்டாலும் சொல்கின்ற வார்த்தைகள் 'நேரமேயில்லை!' நமக்கு இன்று எதற்குமே நேரமில்லை? உடல்நலமில்லாதவரைப் போய்ப்பார்க்க நேரமில்லை, உற்றவர்களின் திருமணத்திற்குச் செல்ல நேரமில்லை, படிக்க நேரமில்லை, உடல்நலத்தைக் கவனிக்க நேரமில்லை. ஓடிக்கொண்டேயிருக்கிறோம். யாருமில்லாத நண்பகலாக நாம் நம்மையே தனிமைப்படுத்தும்போதுதான் இயேசுவைக் காண முடியும்.

இன்று யாரெல்லாம் நம்மைப் பார்த்து 'வந்து பாருங்கள்' என்று கூறுகின்றார்கள். நம் உலகம் வர்த்தக விளம்பர உலகம். ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், சினிமா, விளையாட்டு, பொழுதுபோக்கு என அனைத்தும் நம்மை 'வந்து பாருங்கள்' என அழைக்கத்தான் செய்கின்றன. இன்று நாம் யார் பின்னால் போகின்றோம். 

இயேசுவை அடையாளம் கண்ட சமாரியப்பெண் முதல் பெண் சீடராக மாறுகின்றார். இறைவார்த்தையிலும், அருளடையாளங்களிலும் இயேசுவை அடையாளம் காணும் நாம் நம் வாழ்விடங்களிலும், பணியிடங்களிலும் அவருக்குச் சான்று பகரும் சீடர்களாக மாறுகின்றோமா? அல்லது அவரை வழிபடும் வெறும் பக்திமான்களாக இருக்கின்றோமா?

1 comment:

  1. Anonymous1/20/2014

    விவிலியத்தில்'ஒரு'மாதிரியான பெண் என்று சித்தரிக்கப்பட்டவள்தான் இந்த 'சமாரியப்பேண்' ஆயினும் இயேசுவை'அவள்.தான் 'இறைமகன்' என்று உரக்கக்.கூறுகிறார் உலகத்துக்கு.நாமும் கூட இம்மண்ணின் மைந்தர்களையும் நித்தியமற்ற லௌகீக நாட்டங்களையும் விட்டு' தூய்மை' குறைந்த இப்பெண்ணைப்பின்பற்றி இயேசுவைக்காண்போம்....நாம்.கண்ட இயேசுவை இந்த
    அவனிக்கும் எடுத்துரைப்போம்.

    ReplyDelete