Saturday, January 11, 2014

கண்கள் அனைத்தும்!

பின்னர் இயேசு அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, 'நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று' என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, 'இவர் யோசேப்பின் மகன் அல்லவா?' எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர். (லூக்கா 4:20-22)

இயேசு தான் வளர்ந்த ஊரான நாசரேத்தூர் வருகின்றார். தன் வழக்கப்படி செபக்கூடத்தில் போதிக்கின்றார். அவரின் போதனையைக் கேட்டு அனைவரும் வியந்து போகின்றனர். லூக்கா நற்செய்தியாளர் இதைப் பற்றிக் குறிப்பிடும்போது 'கண்கள் அவர் மேல் பதிந்திருந்தன' என எழுதுகின்றார். 

'கண்களை ஒருவர் மேல் பதிய வைத்தால் என்ன?' 'கண்களை ஒருவர் மேல் நாம் எப்போது பதிய வைக்கிறோம்?'

நாம் ஒருவரின் மேல் அதிக அக்கறை காட்டும்போதும், ஒருவரை அதிகமாக வியந்து பார்க்கும்போதும், நாம் ஒருவரைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும்போதும் மற்றவரின் மேல் கண்களைப் பதிய வைக்கிறோம். நாசரேத்தூர் மக்கள் இயேசுவின் மேல் கண்களைப் பதிய வைத்தது எதற்காக? அக்கறையிலா? வியப்பினாலா? அல்லது சந்தேகத்தினாலா? 

இன்று இயேசுவின் மேல் நாம் எதற்காகக் கண்களைப் பதிய வைக்கின்றோம்.

இறைவன் நம்மேலும் கண்களைப் பதிய வைக்கின்றார். இதற்கு அழகான உருவகம் தருகின்றார் மலாக்கி இறைவாக்கினர்: 'அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர் போலும் கண்களைப் பதிய வைத்து அமர்ந்திருப்பார்' (மலாக்கி 3:3). வெள்ளியைத் தூய்மைப்படுத்துவது எப்படி தெரியுமா? பொற்கொல்லர் (வெள்ளிக்கொல்லர்!) வெள்ளித் துண்டை நெருப்பில் போட்டுவிட்டு அதையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். சரியான நேரத்தில் அதை வெளியே எடுத்து விட வேண்டும். கொஞ்சம் முந்தி எடுத்தால் வெள்ளி தூய்மையாக இருக்காது. கொஞ்சம் பிந்தி எடுத்தால் வெள்ளி நெருப்பில் கரைந்துவிடும். சரியான நேரம் என்றால் என்ன? நெருப்பில் இருக்கும் வெள்ளி ஒரு கட்டத்தில் முகம் பார்க்கும் கண்ணாடி போல மாறும். தன் முகம் தெரியும் பக்குவம் வந்தவுடன் பொற்கொல்லர் வெள்ளியைப் பத்திரமாக எடுத்துவிடுவார்.

இன்று இறைவன் நம்மேல் தன் கண்களைப் பதியவைத்துள்ளார். அவரின் கண்கள் நம்மேல் என்றால், நம் கண்களும் ஒருவர் மற்றவர்மேல் இருக்கட்டும்!

Let us fix our eyes on him. More in the video:


1 comment:

  1. Anonymous1/11/2014

    இதயத்தில் சுரக்கும் கருணையை எதிரே இருப்பவருக்குப் புரியவைப்பது நம் விழிகள்."அவரை'' நோக்கிப் பார்த்தவர்கள் மீட்படைந்தனர் என்று நம்புகிறோம்.நம் கண்களைப் பார்ப்பவர்களுக்கு நாம் கொடுப்பது என்ன? அது எதையும் எதிர்பாராத
    ''கருணை நிறை நேசம்''என்றால் நன்றாக இருக்குமே!ஆமா, ஆசிரியரே,ஒரு உண்மையான பொற்கொல்லர் ரேஞ்சுக்கு பொன்னை/வெள்ளியைப் புடமிடுவது பற்றி வகுப்பே நடத்தி விட்டீர்களே, சபாஷ்!

    ReplyDelete