Monday, January 13, 2014

அது என்ன?

இயேசு திருமுழுக்கு பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். அப்பொழுது, 'என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. (மத்தேயு 3:15-17)

'கங்காரு' என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? 'மன்னா' என்ற உணவுப்பொருளின் அர்த்தம் என்ன தெரியுமா? இந்த இரண்டின் அர்த்தமும் இதுதான்: 'அது என்ன?' பனி போல பாலைநிலத்தில் சிதறிக் கிடந்த உணவைப் பார்த்து இஸ்ராயேல் மக்கள் 'மன்னா?' (அது என்ன?) எனக் கேட்கின்றனர். அதுவே அதன் பெயராகிறது. குக் மற்றும் ஜோசப் பேங்க்ஸ் என்ற இரண்டு ஆங்கிலேயர்கள் ஆஸ்திரேலியாவின் காடுகளில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது விநோதமான விலங்கு ஒன்று எதிரே வருகிறது. ஒருவர் மற்றவரைப் பார்த்து 'குகு யாமிதிர்' என்ற மொழியில் 'கங்காரு?' (அது என்ன?) எனக் கேட்டனர். அதுவே அதன் பெயரானது.

சரி கங்காருக்கும், மன்னாவுக்கும், இன்றைய சிந்தனைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

இரண்டு வாரங்களுக்கு முன்பாக 'கங்காரு' பற்றிய டாக்குமன்டரி ஒன்றை யூடியூபில் பார்த்தேன். 'கங்காரு' என்ற பெயர் தமிழ்ப்பெயர் என்று அதில் சொல்லப்பட்டது. எனக்கு ஆச்சர்யம்? ஆசியக் கண்டத்தில் உள்ள தமிழ் ஆஸ்திரேலியாக் கண்டத்திற்குப் பயணம் செய்தது எப்படி? அறிந்து கொள்ள 'கூகுள்' செய்தேன். ஆச்சர்யத்தின் மேல் ஆச்சர்யம். 1980களில் ஏற்பட்ட புயலில் நம் காப்பிய நகரம் பூம்புகார் கடலுக்குள் மூழ்கியதை நாம் அறிவோம். மிகவும் சோகமான நிகழ்வு அது. லெமூரியாக் கண்டம் என்று சொல்லப்பட்டு நம்மையும் இலங்கையையும் இணைத்த ஒரே பகுதியும் கடலில் மூழ்கிவிட்டது. ஏறக்குறைய 3000-4000 ஆண்டுகளுக்கு முன்பாக (ஒருசிலர் 20000 ஆண்டுகள் என்கின்றனர்) இன்றிருக்கும் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மற்றம் தெற்காசியா அனைத்தும் இணைந்து ஒரே கண்டமாக இருந்ததாம். காலப்போக்கில் பல்வேறு காலநிலை மாற்றங்களால் கடல் பெருகி லெமூரியாக் கண்டம் அழிந்து ஆஸ்திரேலியா தனியாக, ஆப்பிரிக்கா தனியாக, ஆசியா தனியாக ஆகிவிட்டது. ஒருங்கிணைந்த கண்டமாக இருந்தபோது தமிழர்கள் எல்லா இடத்திலும் இருந்திருக்கின்றனர். இன்று நாம் அழைக்கும் ஆஸ்திரேலியாவில் வசித்த நம் தமிழர்கள் கங்காருக்கு வைத்த பெயர் 'மார்சூப்பி' (கொஞ்சம் செக்ஸியாக இருக்கிறது!). கங்காருவின் விலங்கியல் குடும்பத்தின் பெயர் Macropodidae ('macro-pod' = large foot). இந்தக் குடும்பத்தின் ஒரு இனம்தான் 'மார்சூப்பியல்' (marsupial): For more details see: http://en.wikipedia.org/wiki/Kangaroo. (இது ஆங்கிலப் பெயர்). இது ஒரு ஆங்கிலப் பெயர். அது எப்படித் தமிழாகும் எனக் கேட்கிறீர்களா? 

எந்த ஒரு தாயின் குட்டியும் அந்தத் தாயின் 10 அல்லது 15 மடங்கில் ஒரு மடங்கு என்பது இயற்கை நிர்ணயிக்கும் விதி. இது மனிதர்களுக்கும் பொருந்தம். நாம் பிறந்தபோது நம் தாயின் 10 அல்லது 15 மடங்கில் ஒரு மடங்குதாம். ஆனால் கங்காரு மட்டும் சற்று வித்தியாசம். பிறக்கும் போது தன் தாயின் மடங்கில் 300 அல்லது 400 ல் ஒரு மடங்கு தான் ஒரு குட்டி. ஒரு குட்டி பிறக்கும் போது ஒரு மண்புழு அளவிற்குத்தான் இருக்கும். பிறந்த அந்தக் குட்டிக்கு கண்கள் இருக்காது. இரண்டு புறமும் திறந்த ஒரு டியுப் மாதிரி இருக்கும். அந்தக் குட்டி பிறந்தவுடன் தன் மடியில் இருக்கும் பைக்குள் போட்டுவிடும் தாய் கங்காரு. ஏறக்குறைய 190 நாட்கள் அந்தப் பைக்குள் அமர்ந்து தாயின் மார்பை மட்டுமே சூப்பிக் கொண்டிருக்கும் அந்தக் குட்டிக் கங்காரு. அந்த 190 நாட்களில் அது புத்துயிர், புதிய உடல் பெறுகின்றது. இந்த இனப்பெருக்க நிகழ்வைக் காணும் தமிழர்கள் இதற்கு 'மார்சூப்பி' எனப் பெயரிட, அதுவே ஆங்கிலமயமாக்கப்பட்டு, இலத்தீன் மொழியில் அதன் விலங்கியல் பெயராகவே மாறிவிடுகிறது. எல்லா விலங்கியல் மற்றும் தாவரவியல் பெயர்களும் இலத்தீன் மொழியில் எழுதப்படுகின்றன என்பது நாம் அறிந்த ஒன்றே.

தமிழனின் பெருமைக்கு இது ஒரு சான்று. நாம் அன்பு செய்பவர்களை, நம்மை அன்பு செய்பவர்களைச் செல்லமாக 'மார்சூப்பி' என்று அழைத்துப் பார்க்கலாம்! 'ச்சீசீ வெட்கமாயிருக்கு!' என்று அவர்கள் வெட்கப்பட்டு முகம் மறைத்தால் கம்பெனி பொறுப்பாகாது! 

இப்போ நம்ம திருமுழுக்கிற்கு வருவோம். திருமுழுக்கை நாம் வழக்காமாக 'பெயரிடும் சடங்கு!' என அழைக்கிறோம். இப்போவெல்லாம் குழந்தைக்கு பிறந்தவுடன் மருத்துவமனையிலேயே பெயர் வைத்து விடுகிறார்கள். ஆனால் சில வருடங்களுக்கு முன்பாக 'குழந்தைக்கு பெயர் வைத்தாயிற்றா?' என்றால் 'திருமுழுக்கு கொடுத்தாயிற்றா?' என்றே பொருள். திருமுழுக்கின் போது பெற்றோருடன் இணைந்து நிற்கும் ஞானப் பெற்றோரை இன்றும் இலங்கைத் தமிழர் 'பெயரிடு பெற்றோர்' என்றே அழைக்கின்றனர். 

இயேசு இன்று புதிய பெயர் பெறுகிறார். 'இவரே மீட்பர்' (யசுவா - இயேசு) என்று பிறப்பின் போது பெயர் பெற்ற அவர் 'இவரே என் அன்பார்ந்த மகன்' என்ற புதிய பெயரைப் பெறகிறார். இந்தப் பெயர் மாற்றம் இயேசுவின் வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வருகிறது. 'நான் கடவுளின் மகன்' என்றால் அவர் என் தந்தை எனக் கடவுளை வானகத் தந்தை என அழைக்கின்றார். ஒருவர் மற்றவரைச் சகோதர, சகோதரிகளாகப் பாவிக்கின்றார். அவர் பெற்ற பெயர் அவரின் அடையாளத்தையே மாற்றுகிறது.

நாம் பெற்ற பெயர்கள் இன்று நம்மில் எந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றது?

இன்றைய நாளில் எனக்குப் பெயரிடும் பெற்றோராய் நின்ற என் சித்தப்பா – சித்தி (தூரத்துச் சொந்தம்) ஆல்பர்ட் - தெரசா என்ற நல்லுள்ளங்களை நினைத்து நன்றி சொன்னேன். எங்கள் வீட்டின் எல்லா இன்ப துன்பங்களிலும் பங்கேற்றவர்கள் இவர்கள். இவர்கள் எலிக்காக வைத்த மருந்தைத் தின்று உயிர்விட்டன எங்கள் வீட்டுக் கோழிகள். அது சண்டையில் முடியும் என்றால், இரு வீட்டாரும் சிரித்துக் கொண்டனர். எங்கள் வீட்டில் சமைக்க அரிசி இல்லாத நேரத்தில் இவர்கள் வீட்டில் சமைக்க அடுப்பே இல்லாமல் இருந்தது. இருந்தாலும் இவர்களின் முகத்தில் அன்றும், இன்றும் ஒரு நிறைவான சிரிப்பு இருக்கும். 'கூரை எரிந்து விட்டது. இனி நட்சத்திரங்கள் நன்றாகத் தெரியும்' எனச் சொல்லக் கூடிய நேர்மறை எண்ணம் கொண்டவர்கள் இவர்கள். கடந்த முறை விடுமுறையில் இவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். பிள்ளைகள் இங்குமங்கும் என இருக்கின்றனர். இவர்கள் முகத்தில் அதே புன்னகை. அதே நிறைவு. இன்று அவர்கள் எனக்குப் பெயரிட உடன் நின்றதை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

என் குருத்துவ முதல் நன்றித் திருப்பலி அன்று என் ஞானத்தந்தை ஆல்பர்ட் மைக் பிடித்துச் சொன்னார்: 'என் மகன் இன்று குருவாக நிற்பதைப் பார்க்கும் போது என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வருகிறது. இன்னும் என்னால் நம்ப முடியவில்லை இவன் குருவானதை! ஏன்னா எந்நேரமும் கங்காருக்குட்டி மாதிரி அவங்க அம்மா செல்வத்தின் மடியைப் பிடித்துக் கொண்டே திரிவான்!'

கங்காரு – மார்சூப்பி – செல்வத்தின் மடி – திருமுழுக்கு – ஏதோ தொடர்பு இருக்கிறதே!

To see the video of 'etymological explanation of kangaroo' please click here:


1 comment:

  1. Anonymous1/13/2014

    இயேசுவின் திருமுழுக்கின் போது விண்ணிலிருந்து வந்த அதே குரல் நம் ஒவ்வொருவருடைய திருமுழுக்கின் போதும் பெருமிதத்துடன் ஒலித்திருக்கும். நாம் அனைவருமே அவரின் அன்பான மைந்தர்கள்தானே.ஆசிரியர் தன்'பெயரிடும் பெற்றோர்' பற்றியும் அவர்கள் பின்னனி பற்றியும் ரொம்ப இயல்பாக கூறியுள்ள
    விதம அழகு.''Marsupians''....Vow! காரணப்பெயர்....you tube வழியே கிடைத்த அத்தனை தகவல்களும் very informative.ஆசிரியரின் முயற்சிக்கு நன்றி.

    ReplyDelete