Sunday, January 12, 2014

பொன், வெள்ளிக் கலன்கள் மட்டுமல்ல

ஒரு பெரிய வீட்டில் பொன், வெள்ளிக் கலன்கள் மட்டுமல்ல, மண் மற்றும் மரத்தாலான கலன்களும் உள்ளன. அவற்றுள் சில மதிப்புடையவை. சில மதிப்பற்றவை. ஒருவர் மதிப்பற்றவற்றிலிருந்து தம்மைத் தூய்மையாக வைத்துக்கொண்டால், அவர் மதிப்புக்குரிய தூய கலனாகக் கருதப்படுவார். அவர் எந்த நற்செயலையும் செய்ய ஆயத்தமாயிருப்பார். தம் தலைவருக்கும் பயனுள்ளவராயிருப்பார். எனவே நீ இளவயதின் இச்சைகளை விட்டு ஓடு. தூய்மையான உள்ளம், நீதி, நம்பிக்கை, அன்பு, அமைதி ஆகியவற்றை நாடித் தேடு. (2 திமோத்தேயு 2:20-22)

இன்றைய திருப்புகழ்மாலையில் சிறப்பு வாசகமாக உள்ளது இன்றைய நம் சிந்தனைப் பகுதி. 2006 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள அருட்சகோதரிகள் மற்றும் குருமாணவர்களுக்கு ஒரு வாரம் கருத்தரங்கு நடத்தச் சென்றிருந்தேன். அப்போது நான் தெரிந்து கொண்ட பகுதியும் இதுதான். இந்த மூன்று வசனங்களை மட்டும் வைத்து ஒரு வாரம் பேசுவீர்களா? என்று கேட்டார் ஒரு அருட்சகோதரி. ஒரு வாரம் என்ன ஒரு வருடம் கூடப் பேசலாம்.

இன்று கிரேக்க மொழித் தேர்வு எழுதிவிட்டு நானும் என் நண்பரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். 'ஆன்மா என்றால் என்ன?' என்று கேட்டார் என் நண்பர். நான் சொன்னேன்: 'ஆன்மா என்பது மனமோ, உயிரோ அல்ல. அது ஒரு தேடல். அது நம்மில் இருக்கின்றது. அது இருக்கும் வரை நாம் தேடுகிறோம். பணம், படிப்பு, பொருள், உறவு, நட்பு என அனைத்தையும் தேடுகிறோம். அதற்குக் காரணம் இந்த ஆன்மா. தேடல் முடிந்தவுடன் அது தான் வந்த இடத்திற்கே திரும்பிப் போய்விடுகிறது.'

பின் தனியாய் வீடு திரும்பிய போது யோசித்துக் கொண்டே வந்தேன். நம் தேடல் என்ன? நாம் எப்போது தேடுகிறோம்? நம்மிடம் இல்லாத ஒன்றையோ அல்லது நாம் தொலைத்த ஒன்றையோதான் தேடுகிறோம். கடந்த மாதம் குருக்களுக்கான மாத இதழ் ஒன்றில் ஒரு கட்டுரை வந்தது. 'மனைவி இல்லாத குறையை குருக்களுக்கு ஐபேட்களும், ஐபோன்களும் நிறைவேற்றி வைக்கின்றன' என எழுதியிருந்தார் ஆசிரியர். முதலில் சிரிப்பாக வந்தது: 'மனைவியிடம் செய்ய முடிகின்ற எல்லாவற்றையும் பாவம் ஐஃபோன்களிடம் செய்ய முடியாது! பாவம் ஆசிரியர் ரொம்ப இன்னசன்ட்' என நினைத்தேன். அவரின் வாதம் இதுதான்: 'மனிதர்கள் அனைவரும் அழகு, உண்மை, ஒருமை இந்த மூன்றையும் தேடுகின்றனர். இந்தத் தேடலில் அடிப்படையானது அன்பு. நாம் அன்பைத் தேடுகிறோம். ஆனால் நாம் தேடும் அன்பு நமக்குக் கிடைப்பதில்லை. அது கிடைக்கும் போது அது நமக்குத் தேவைப்படுவதில்லை. தன் நிர்வாணத்தை (உடல் மட்டுமல்ல, உள்ள நிர்வாணத்தையும்) ஏற்று அன்பு செய்யும் ஒருவர் கிடைத்தவுடன் அவரே ஒருவருக்கு உலகமாகிவிடுகின்றார். அவரே அழகு, உண்மை, ஒருமை என மாறிவிடுகிறார். இந்த பதில் அன்பு கிடைக்காதவர்கள் அதை பொருட்களில் தேடுகிறார்கள். ஒரு ஃபோன் கண்டிப்பாக மற்றவற்றை விட நல்லதாகவும் இருக்கின்றது. ஏதோ குறையுள்ளதாகவும் இருக்கின்றது. அந்த ஃபோனை ரசிப்பதை அவர் தன் அன்பிற்குரியவரை ரசிப்பதாக எடுத்துக்கொள்கிறது ஆழ்மனம். அன்பு செய்யப்படாத அருட்பணியாளரே அதிகப் பொருட்களை வைத்திருப்பார்' என நிறைவு பெறுகிறது கட்டுரை.

என்ன குழப்பமாக இருக்கிறதா? கட்டுரையும் குழப்பமாகத்தான் இருக்கிறது.

நம் சிந்தனைக்கு வருவோம்.

இன்று மாலை இந்தக் கட்டுரைதான் என் மனக்கண்முன் வந்துகொண்டே இருந்தது. எந்த ஒரு மதத்தின் அடிப்படை நம்பிக்கை. நம்பிக்கை இல்லையென்றால் அங்கே கடவுளும் கல்லாகி விடுகின்றார். ஒட்டுமொத்த மனிதர்களின் நம்பிக்கையில் கட்டப்பட்ட ஒரு அடித்தளம் இல்லா கட்டடத்திலா நான் இவ்வளவு நாள்கள் வாழ்ந்திருக்கிறேன்? குருத்துவத்தில் எப்போதும் 'வெறுமை' இருந்துகொண்டே இருக்குமா? இந்த வெறுமையை இறைவன் நிறைவேற்றுகிறார் என்று நாம் சொல்லிக் கொண்டேயிருந்தால் வெறுமை நிறைவேறி விடுமா? இந்தக் கேள்விகளோடு மாலைச் செபத்திற்குச் சென்றபோதுதான் இந்தப் பகுதி என் கண்ணில் பட்டது.

அன்பு என்பது பாத்திரம் போன்றது. எல்லா அன்பும் ஒன்றல்ல. சில பொன் போன்றவை. சில மண் போன்றவை. சில பாத்திரங்களை நாம் பூசையறையில் வைத்திருக்கின்றோம். சில பாத்திரங்களை நாம் கழிவறையில் வைத்திருக்கின்றோம். எல்லாம் ஒன்று என்று சொல்லி விட முடியாது. எல்லாவற்றுக்கும் ஒரு பயன்பாடு இருக்கத்தான் செய்கின்றது. எல்லாம் நம் தேவைகளை நிறைவு செய்கின்றன. ஆனால் மதிப்பு என்று வரும்போது அதிகம் அடிபடும் பாத்திமே மதிப்பு பெறுகிறது. வெறும் நாலைந்து அடிகள் வாங்குகின்ற கற்கள் வாசற்படிகளாக மட்டுமே பயன்படுகின்றன. ஆனால் ஆயிரமாயிரம் அடிகளை வாங்குகின்ற கற்களே சாமிகளாக மாறுகின்றன.

வெறுமை என்ற அடி ஒவ்வொரு நாளும் அடிக்கும் போது தான் அன்பின் வலி புரிகின்றது. அந்த அன்பின் வலியில் இறைவனின் அன்பு இன்னும் அர்த்தமுள்ளதாகத் தெரிகின்றது.

எனக்கு மிகவும் பிடித்த காணொளி:


1 comment:

  1. Anonymous1/12/2014

    இன்றையப் பகுதி கொஞ்சம் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.குருக்களை மையப்படுத்தி இருந்தது.புரிந்ததெல்லாம் அன்பு செய்ய மக்களின்றி தனிமைச்சிறையில் வாடும் குருக்களும் இருக்கிறார்கள் என்பதுதான்.என்னதான் கிறிஸ்துவுக்குள் ஐக்கியமாயிருப்பினும் உலகின் மத்தியில் வாழ்பவர்கள் தானே! இறைவன் அவர்கள் தனிமையைப் போக்கட்டும் என்று ஜெபிப்போம். காணொளி ரசிக்கும்படி இருந்தது.நன்றிகள் பக.

    ReplyDelete